திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 50 ஏரிகளை புனரமைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தின் அடிப்படையில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டது. 50 ஏரிகளிலும் பணி நடந்து கொண்டிருக்கிறது என மாவட்ட கலெக்டரான சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ். அறிக்கை அனுப்பியிருந்தார். இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டும் முதல்வர் பழனிசாமி, அந்தப் பணிகளை மேற்பார்வையிடுமாறு குடிமராமத்து திட்டத்தின் சிறப்பு அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ்.ஸை அனுப்பி வைத்தார்.

collector

குடிமராமத்து பணிகளின்படி விவசாயிகளைக் கொண்ட குழுவிற்குத்தான் அரசு நிதியளிக்கும். அவற்றின் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேங்க வழி செய்யப்படும். இதுதான் நடைமுறை. திருவள்ளூரில் அமுதா ஐ.ஏ.எஸ்.ஸை அழைத்துக்கொண்டு கலெக்டர் சுந்தரவல்லி குடிமராமத்து திட்டம் நிறைவேற்றும் இடங்களுக்குச் சென்றார்.

ஏரிகள் பலவும் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி கட்டடங்களாக காட்சி அளித்தன. அதைப் பார்த்த அமுதா முகம் சுளித்தார். ""குறைந்தபட்சம் கட்டிடங்கள் இல்லாத பகுதிகளையாவது மேம்படுத்தி தண்ணீர் தேங்க வைக்க முடியும்'' என கலெக்டர் சுந்தரவல்லி சொன்னார். அதைக் கேட்டு கோபமடைந்த அமுதா, "குடிமராமத்து பணிகளுக்கான தொகை பெற்ற விவசாயிகள் கமிட்டி எங்கே?' என கேட்டார். ஏரியில் குடிமராமத்து நிதியைப் பெற்ற விவசாயி என ஒரு தனி நபரை காட்டினார். "நீங்கள் எப்படி ஒரு தனிப்பட்ட நபருக்கு நிதியை தர முடியும்?' என அமுதா சீறியுள்ளார்.

""2015 சென்னை வெள்ளத்தின்போது அமுதாவுடன் இணைந்து நின்று செயல்பட்ட சுந்தரவல்லி, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றினார், இப்போது மாறிவிட்டார்' என்கிற அரசு ஊழியர்கள், "காலை அலுவலகம்வரும் சுந்தரவல்லி மதியம் தூங்கச் சென்றுவிட்டு ஐந்து மணிக்குத்தான் வருவார். அலுவலகத்தில் யாருமில்லாத நேரத்தில் நள்ளிரவுவரை வெயிட்டான ஃபைல்களையும் ஆட்களையும் கவனிக்கிறார்'' என்கிறார்கள் கலெக்டர் அலுவலக ஊழியர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்