Skip to main content

கர்ஜனை! -இளையவேள்’ ராதாரவி(81)

(81) அம்மாவா? சினிமாவா?

கே.பாலசந்தர் சாரின் கவிதாலயா நிறுவனம் ரஜினி சாரை ஹீரோவாக வைத்து "நான் மகான் அல்ல'’படத்தை எடுக்கத் திட்டமிட்டதும்... கே.பி.சார் என்னை ஆபீஸிற்கு கூப்பிட்டு, ""இந்தப் படத்துல உனக்கு முக்கியமான வேஷம்டா. ஹீரோவுக்கு நண்பனா இருந்து, வில்லனா வர்ற கேரக்டர்''’என்றார்.

நானும் மகிழ்ச்சியோடு நடிக்க ஒப்புக்கொண்டேன்.

"நான் மகான் அல்ல'’படத்திற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார். அவரைப் பார்க்கச் சொன்னார் கே.பி.சார்.

நான் எஸ்.பி.எம்.மை சந்தித்தேன். அப்போதுதான் நான் முதன்முதலாக அவரை நேரில் பார்க்கிறேன்.

என்னுடைய கேரக்டர் சம்பந்தப்பட்ட சில ஸீன்களைச் சொன்னார்.

""சார்... அதுக்குப் பின்னாடி என்னோட கேரக்டர் என்ன ஆகுது? ஃபினிஷிங் சொல்லுங்க சார்'' என்றேன் நான்.

""புதுசா என் படத்துல நடிக்க வர்ற நடிகன்கிட்ட டீடெய்லா நான் கதை சொல்ற வழக்கமில்ல''’என்றார்.

எனக்கு ‘சுருக்கென்றது.

""நான் புதுசா பண்ற டைரக்டர்கள்கிட்ட முழுக்கதையும் கேட்கிற பழக்கம் இருக்கு. முதன்முதல்ல நான் உங்க டைரக்ஷன்ல நடிக்கப்போறதால... நீங்க எனக்கு புது டைரக்டர்தான்''’என்றேன்.

தொடர்ந்து கால்ஷீட் சம்பந்தமாக பேச்சு வந்தது.

எஸ்.பி.எம். சார் ஒரு தேதியைச் சொல்லி... ""இந்த தேதியிலிருந்து கால்ஷீட் வேண்டும்''’என்றார்.

radharavi

என் அம்மா தனலட்சுமி அம்மாள் முதன்முதலாக வெளிநாடு சென்று, என் சகோதரிகளைப் பார்த்துவிட்டு... அந்தத் தேதியில்தான் சென்னை திரும்புகிறார். அம்மாவை ஏர்போர்ட் சென்று அழைத்துவர ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். மற்றவர்களுக்கு இது சாதாரண ஒரு நிகழ்வாகத் தெரியலாம். ஆனால்... இது அம்மா சென்ட்டிமென்ட். நான் அம்மாமீது ரொம்ப அட்டாச்டாக இருப்பவன். அதனால்...

""சார்... அந்த தேதியில அம்மாவை ரிஸீவ் பண்ணணும். அதனால மறுநாள்லருந்து ஷூட்டிங் வர்றேன்''’என்றேன்.

""சினிமா முக்கியமா? அம்மா முக்கியமா?''’என்றார் எஸ்.பி.எம்.

""சினிமா முக்கியமானதுதான். ஆனா... "சினிமாவா? அம்மாவா?'ன்னா... எனக்கு எங்கம்மாதான் சார் முக்கியம்''’எனச் சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.

""டேய்... டேய்...''’எனக் கூப்பிட்டார் கே.பி.சார்.

""இல்ல சார்... நான் இந்தப் படத்துல நடிக்க தோதுப்படாது''’எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

சினிமா உலகில் ‘ரொம்ப அமைதியானவர்’ எனப் பெயரெடுத்தவர் எஸ்.பி.முத்துராமன் சார். ஆனால்... சூழ்நிலையைப் பாருங்கள்... அவருடன் எனக்கு மோதல்.

ரகு ஹீரோவாக நடித்த படம் "குயிலே குயிலே'. இந்த ரகுதான் பிறகு, கரண்’என பெயர் மாற்றிக்கொண்டவர்.

நண்பர்கள் கே.ஆர்.செல்வராஜ், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர் மூலம் ஏற்கெனவே எனக்கு கரண் பரிச்சயமாகியிருந்தாலும், இந்தப் படத்தில் சேர்ந்து நடித்தபோது நல்ல நண்பரானார். "ருத்ரதாண்டவம்'’ படத்திற்குப் பிறகு... இதில் மீண்டும் சுமித்ராவுடன் நடித்தேன்.

கரணை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் நான் மெம்பராகச் சேர்த்தேன். அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் பெரிதாக அமையாத காலத்தில்... டப்பிங் பேசியதன்மூலம் கிடைத்த வருமானம்தான் அவரின் குடும்பத்திற்கு உதவியது.

முக்தா சீனிவாசன் சார் இயக்கத்தில் "நடிகர் திலகம்' சிவாஜி அப்பா, பிரபுமாவுடன் ‘"இரு மேதைகள்'’படத்தில் நடித்தேன். அது எங்க வாசு அண்ணன் மறைந்த நேரம். அதனால் நான் தாடி, மீசையை மழித்திருந்தேன். ஆனால்... கேரக்டருக்கு தாடி, மீசை தேவைப்பட்டது. “"தாடியும், மீசையும் ஒட்டிக்கோ'’என்றார் முக்தா சீனிவாசன் சார். அதற்கு முன்புவரை சொந்த தாடி, மீசையுடன் நடித்துவந்த நான்... "இரு மேதைகள்'’படத்திலிருந்து இன்றுவரை ஒட்டுத்தாடி, மீசையுடன்தான் பெரும்பாலும் நடித்து வருகிறேன். எப்போதும் மீசை, தாடி இல்லாமல் இருக்கும் ஸ்டைலுக்கு மாறினேன்.

டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் கதை சொல்லும்போது... தான் சொல்கிற கதைக்கேற்ற பழைய சினிமா பாடல்களைப் பாடி... கதையைச் சொல்லுவார்.

"வைதேகி காத்திருந்தாள்'’படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க என்னிடம் கதை சொல்லவந்தார். ஹீரோ விஜயகாந்த்.

""ரவி... அம்பிகாவையே...’"என்ன நடிக்கிற நீ? நீயெல்லாம் நடிக்க வந்துட்ட?'னு கிண்டல் பண்ணுவார் சுந்தர்ராஜன். அது மாதிரி உன்னை ஒருவேள கிண்டல் பண்ணினா கோவிச்சுக்காத''’’ என விஜிமா என்னிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

சுந்தர்ராஜன் என்னிடம் பழைய பாடல்களைப் பாடி... கதையைச் சொன்னார்.

படப்பிடிப்பு துவங்கியது.

படத்தில் என்னோட அறிமுக காட்சியே... காலில் செருப்பு மாட்டுவதுதான்.

நான் காலில் செருப்பை மாட்டும்போது... “"யோவ்... ஒழுங்கா செருப்பு மாட்டுய்யா... நீயெல்லாம் நடிக்க வந்துட்ட... உங்களுக்கெல்லாம் நான் நடிப்புச் சொல்லித்தர வேண்டியிருக்கு'’என்றார்

உடனே நான்... ""சார்... இதெல்லாம் அம்பிகாகிட்ட வச்சுக்கங்க... என்கிட்ட வேணாம்''’என்றேன்.

""நான் அப்படித்தான்யா பேசுவேன். ஒரு புளோவுல அப்படித்தான் வரும்''’என்றார்.

""புளோவுல வரலாம். இருந்தாலும் அப்படிப் பேசாதீங்க''’என்றேன்.

இன்னொரு காட்சியில்... ஒரு இளம்பெண்ணை இழுத்துக்கிட்டுப் போவேன். நான் டயலாக் பேசின பிறகுதான்... கதைப்படி அந்தப்பெண் என் தங்கை என்பது ஆடியன்சுக்குத் தெரியும். அந்தப் பெண்ணை இழுத்துட்டுப் போய்... "என்னோட எச்சப்பால குடிச்ச நாய் நீ'’ என டயலாக் பேசவேண்டும்.

இந்த ஸீனை நடித்துக் காண்பித்தார் ஆர்.சுந்தர்ராஜன். அவருக்கு எப்போதும் கடவாயில் லேசாக எச்சில் வழியும். எனக்கு டயலாக் சொல்லித் தரும்போது... தன் உள்ளங்கையால் கடவாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடியே... டயலாக்கைச் சொன்னார்.

"இப்படி நடி'’என்றார்.

நானும் அவரைப்போலவே... என் உள்ளங்கையால் கடவாயை துடைத்தபடி... அந்த டயலாக்கைச் சொன்னேன்.

""யோவ்... எனக்கு எச்சில் ஒழுகுதுனு துடைச்சிக்கிட்டேன். உனக்குமாய்யா ஒழுகுது?''’எனக் கேட்டார்.

நான் சிரித்துவிட்டேன்.

"வைதேகி காத்திருந்தாள்'’ படம் வெளியான அதேநாளில் இராம.நாராயணன் சார் இயக்கத்தில் நானும், ரவீந்தரும் நடித்த பக்கா கமர்ஷியல் படமான "காவல் கைதிகள்'’படமும் வெளியானது.

சென்னையில் வெலிங்டன் தியேட்டரில் ‘"காவல் கைதிகள்'’ படமும், மிட்லேண்ட் தியேட்டரில் ‘"வைதேகி காத்திருந்தாள்'’ படமும் வெளியானது.

"காவல் கைதிகள்'’ படத்திற்கு கூட்டம் அள்ளுது. ‘"வைதேகி காத்திருந்தாள்'’ படத்திற்கு சுமாரான ஓபனிங்தான். ஆனால்... லேட் பிக்-அப் ஆகி... பட்டையைக் கிளப்பியது "வைதேகி காத்திருந்தாள்'.

"வைதேகி காத்திருந்தாள்'’படம் எனக்கும் நல்ல புகழைத் தந்தது. அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்...

திடீர் என ஒருநாள் நண்பர் "நிழல்கள்'’ரவி எனக்கு போன் செய்தார்.

""ரவி... தெலுங்குல "வைதேகி காத்திருந்தாள்'’ படத்தை எடுத்துக்கிட்டிருக்காங்க. நீ தமிழ்ல செஞ்ச கேரக்டரை நான் தெலுங்குல பண்றேன். நீ அந்த கேரக்டர்ல தோளை ஆட்டி ஒரு ஸ்டைல் பண்ணுவியே... அதேபோல பண்ணச்சொல்லி... "வைதேகி காத்திருந்தாள்'’டிவிடிய ஓடவிட்டு... ‘"இதுபோல பண்ணு... இதுபோல பண்ணு'னு புரொடியூஸரும், டைரக்டரும் தெலுங்குலயே சொல்லி டார்ச்சர் பண்றாங்கப்பா''’என்றார்.

அந்த அளவு புகழ் கிடைத்தது நான் செய்த ‘வெள்ளிக்கிழமை ராமசாமி’ கேரக்டர்.

("தமிழ்ல நடிக்கிற கன்னட நடிகன் என்னை டம்மிபண்ணச் சொன்னா... அதையே நீங்களும் என்கிட்ட சொல்றதா?'’என படப்பிடிப்பிலிருந்து கோபத்துடன் வெளியேறினேன்)

கல்லூரிக் குறும்பு!

சட்டக்கல்லூரியில் படிக்கும்போது இன்டர் காலேஜ் போட்டியில் கலந்துகொண்டோம். அப்போது எத்திராஜ் கல்லூரியிலிருந்து மாணவிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்தினர். மேடை முன்பாக நானும் நண்பர்களும் நின்றுகொண்டு ஜாலியாக கலாட்டா செய்தோம். அப்போது சக மாணவனான என் நண்பன்... நடிகர் நாகராஜசோழன் (கமலுக்கு "தேவர் மகன்'’என்கிற டைட்டிலைத் தந்தவர்) ரோஜாப்பூக்களுடன் மேடையேறி... நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த மாணவிகளுக்கு கொடுத்தான். மேடை முன்பு நின்றிருந்த நான்... ""பாடுறவங்களுக்கும் ஒரு பூ கொடுடா''’என கத்தினேன். அவனும் கொடுத்தான்.

சில வருடங்களுக்குப் பின்... நான் சினிமாவில் வளர்ந்துகொண்டிருந்த நேரம்... "ரூபாய்க்கு மூன்று கொலை'’என்கிற நாடகத்தில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடித்தேன். நாடகம் பார்க்க ரஜினி சார், தன் மனைவியுடன் வந்தார்.

நாடக இடைவேளையின்போது தம் அடிக்க... மேடையின் பின்பக்கம் ஒதுங்கினேன். ரஜினியும் அங்கே வந்தார். பின்னாலேயே அவரின் மனைவியும் வந்தார். ஏற்கெனவே ரஜினி சாரை எனக்கு தெரிந்திருந்தாலும்... மிக அருகாமையில் பார்த்துப் பேசியது அப்போதுதான்.

திருமதி லதா... என்னையே உற்றுப் பார்த்து... ""நீங்க...''’என்றார்.

""ஆமாம்... இன்டர்காலேஜ் போட்டியில் சட்டக்கல்லூரி சார்பா கலந்துக்கிட்டேன் அப்போ...''’என்றேன்.

""அதான்... இதுக்கு முன்ன பார்த்த மாதிரி இருந்ததேனு கேட்டேன்...''’என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்