தமிழக காங்கிரசின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரிக்கு எதிராக, வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்திற்கு வந்தால் வெடிகுண்டு வீசுவோம் என்ற மிரட்டலும், மகிளா காங்கிரஸ் அணியினரின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் அல்வா நகரை தகிப்பில் தள்ளியிருக்கிறது.
நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரசின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரனின் தலைமையிலான கோஷ்டி, நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழக அளவில் வலுவானது. கட்சி மட்டத்தில் அசைக்கமுடியாத சக்தியாயிருப்பவர். நாங்குநேரி தொகுதியில் வட்டார காங்கிரஸ் தலைவர்களை ரூபி மனோ கரன் நியமிக்க, உட்கட்சி பாலிடிக்ஸ் காரணமாக அந்த பொறுப்பாளர்களை கே.எஸ்.அழகிரி நீக்கினார். காரணமே சொல்லப்படாமல் நீக்கியது ரூபி மனோகரன் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பைக் கிளப்பியதால், கடந்த ஆண்டு சத்தியமூர்த்தி பவனில் அழகிரியின் ஆட்களுக்கும், ரூபியின் ஆதரவாளர்களுக்குமிடையே அடிதடி, மோதல் ஏற்பட்டதில், காங்கிரஸ் மகிளா அணியின் ஜோஸ்வா, குளோரிந்தாள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமான ரூபியின் ஆதரவாளர்கள், தலைவர் அழகிரியை திருநெல் வேலி மாவட்டத்திற்குள் வர அனுமதிக்க மாட்டோம் என சவால் விட்டனர்.
இந்தச் சூழலில்தான் நவம்பர் 25 அன்று திசையன்விளையில், நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லைக்கு வந்தார். இத்தகவலை முன்பே கேள்விப்பட்ட காங்கிரசின் கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர், "எங்களுக்கு நீதிவேண்டும். நெல்லை வரும் காங்கிரஸ் தலைவர் அழகிரி, வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கக்கூடாது. மீறி வந்தால் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'' என்றும், மற் றொரு தரப்போ, "தலைவர் வந்தால் வெடிகுண்டு வீசுவோம்'' என்றும் அதிரடி மிரட்டல் விடுத்தது.
அன்றைய தினம் பாசறைக் கூட்டத்திற்காக நெல்லை வந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நெல்லையைத் தவிர்த்துவிட்டு திருக்குறுங்குடி யிலுள்ள ஒருவரின் பங்களாவில் தங்கிவிட்டு, மறுநாள் திசையன்விளை வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை மாநாட்டிற்கு வந்திருக்கிறார். அழகிரியோடு, எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்ற பயிற்சிப் பட்டறை மாநாட்டிற்கு, தொகுதி எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லையாம். டோட்டலாக அவர்கள் புறக் கணிக்கப்பட்டுள்ளனராம்.
இதனால் ஆத்திரமான காங்கிரஸ் மாநில மகளிரணியின் பொதுச்செயலாளர் குளோரிந்தாள் மற்றும் மாநில இணை பொ.செ. வான கமலா உள்ளிட்டோர், 50க்கும் மேற்பட் டோரை திரட்டிக்கொண்டு, கே.எஸ்.அழகிரி வரவிருக்கிற நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அனைவரும் கருப்புச்சேலை கட்டிக்கொண்டு, கையில் கருப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தனக்கெதிரான போராட்டம் என்பதால் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியோ பாசறைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அப்படியே கிளம்பிச் சென்றுவிட்டார். இதனிடையே, அழகிரி நெல்லை வந்தால் வெடிகுண்டு வீசுவோம் என மிரட்டல் விடுத்த நாங்குநேரி வட்டார காங்கிரஸ் துணைத்தலைவரான அன்புரோஸ், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அழகிரிக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்தியதற்காக கமலா, குளோரிந் தாள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை கிழக்கு மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் அனுப்பிய நோட்டீஸ், கொந்தளிப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது. இதுகுறித்து கே.பி.கே.ஜெயக்குமா ரிடம் கேட்டபோது, "சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப் பட்டு அவரது பெயரும் அழைப்பிதழில் போடப் பட்டுள்ளது. ராஜா, வெடிகுண்டு வீசுவோம் என்கிறார். தலைவர் வந்தா திரும்பிப் போக முடியாது என்கிறார் செல்லப்பாண்டியன். ரீமா பைசிலோ, தலைவர் வந்தா மறிப்பேன். கருப்பு கொடிகாட்டுவேன் என்கிறார். மாவட்டக் கழகத் தில் ஆர்ப்பாட்டம் என்று கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் தொடர்புடைய ஆறு பேர்களை சஸ்பென்ட் செய்துள்ளோம்'' என்கிறார்.
ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசின் மாநில மகளிர் அணி இணை செயலாளரான கமலா, "இங்க வட்டார தலைவர் தேர்வுல மகளிரணிக்கான இட ஒதுக்கீட்டப் பின்பற்றல. நியாயம் கேட்டு சத்திய மூர்த்தி பவன் போனப்ப நாங்க தாக்கப்பட்டோம். அதுக்கு நீதியில்ல. சட்டமன்ற உறுப்பினரும், அவரும் சேர்ந்து போடுற பூத் கமிட்டி ஏற்கப்படல. அவர் சட்டமன்ற உறுப்பினர அனுசரிக்கல. வெளி மாவட்ட நிர்வாகிகளப் போட்டிருக்காங்க. எங்கள அடிச்சி வெரட்டுன அவரு, எங்க இடத்துக்கு வரக்கூடாது. அவரையும் மாவட்டத் தலைவரையும் மாத்தணும். அதுக்கான போராட்டம் தான் இது'' என்கிறார் குரலை உயர்த்தி.
பாராளுமன்றத் தேர்தலுக்கு வெகுதூர மில்லை. ஆனால் தமிழ்நாடு காங்கிரசிலோ உள்கட்சி விவகாரமும், கொந்தளிப்புகளும் அடங்குவதாயில்லை!
-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்