டகிழக்கு பருவமழை துவங்கிவிட்டாலே கூடவே டெல்டா மாவட்ட விவசாயம் பாழாய்ப் போவதும், விவசாயிகள் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கைவைப்பதும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடிசைவாழ் மக்களின் அழுகுரலும் தொடர்கதையாகிவிட்டது. டித்வா புயல் மழையிலும் அப்படித்தான் நடந்துள்ளது. 

Advertisment

இலங்கை கடலோரப்பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டித்வா புயலாக மாறி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இரண்டு நாள் இடைவிடாமல் கனமழையாகத் கொட்டித்தீர்த்தது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால், மயிலாடு துறை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்த தோடு கடலோர மாவட்டங்களில் தரைக்காற்றும் வீசியதால் ஆங்காங்கே குடிசைகளும், மரங்களும், மின்கம்பங்களும் விழுந்து சேதங்களை ஏற்படுத்தியது. 

Advertisment

சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி சீர்காழி அடுத்துள்ள சென்பதனிருப்பைச் சேர்ந்த பிரதாப் என்கிற இளைஞர் உயிரிழந்தார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஆலமன்குறிச்சியைச் சேர்ந்த முத்துவேல் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து நான்கு பேர் சிக்கினர். அதில் முத்துவேலுவின் மகள் ரேணுகா என்கிற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல நாகை மாவட்டம் வெண்மணச்சேரியை சேர்ந்த சரோஜாவின் வீடு இடிந்து பரிதாபமாக இறந்துபோனார். ஆங்காங்கே கால்நடைகளும் மழையின் தாக்கத்தைத் தாங்கமுடியாமல் இறந்துள்ளன. வேதாரண்யம் பகுதியிலுள்ள பத்தாயிரம் ஏக்கரில் அமைந்துள்ள உப்பளங்கள் ஏரிகளைப் போல மாறிக்கிடக்கின்றன.

கடலோரமுள்ள நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வேதாரண்யம், தலைஞாயிறு, ஒரடியம்பல்லம், எட்டுக்குடி, வாய்மேடு, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளிலும் வாய்க்கால் களிலும் ஆகாயத்தாமரை மண்டிக்கிடப்பதால் தண்ணீர் வடியமுடியாமல் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.

Advertisment

delta-farmers1

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான தரங்கம்பாடி, திருக்கடையூர், செம்ப னார்கோவில், கீழையூர், சீர்காழி, கொள்ளிடம், பட்டவர்த்தி, பாண்டூர், கொற்கை உள்ளிட்ட பல பகுதிகளிலும் விவசாயிகள் தண்ணீர்வடியாமல் பெருத்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வயல்களில் தண்ணீர் வடிய வழியின்றித் தேங்கியிருப்பதால் சாகுபடி செய்யப்பட்டிருந்த இளம்நெற்பயிர் முழுவதும் அழுகும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் ஒருசில நாள் மழை தொடர்ந்திருந்தால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் அழிந்திருக்கும் என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் கூறுகையில், "இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மழை. தென்மேற்குப் பருவமழை காலத்திலேயே டெல்டா மாவட்டங்கள் அழிவைச் சந்தித்து விட்டன. குறுவை அறுவடை சமயத் தில் தொடர்ந்து பெய்த மிக கன மழையால் அறுவடை செய்யமுடி யாமல் எங்களின் வாழ்வாதாரமே அழிந்தது. அப்போது அரசு கணக் கெடுப்பு நடத்துகிறோம் என்கிற கண்துடைப்பு நாடகத்தை நடத்தி முடித்தது. நெல் கொள்முதல் செய் வதில் தாமதம்செய்து பல இடங்களில் நெல்மணிகள் முளைத்து அழிந்தன. மத்திய அரசு ஈரப்பதத்திற்காக குழு அனுப்பி வழக்கம்போலவே நாடகத்தை நடத்தி விட்டு கடைசியில் கைவிரித்து அதிர்ச்சியளித்தனர். 

எப்போதுமே அக்டோபரில் பெரிய அளவில் மழையிருக்காது. குறுவை அறுவடையும், சம்பா சாகுபடி பணிகளும் நடக்கும். நவம்பர், டிசம்பரில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையை ஓரளவு தாங்கும். ஆனால் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்தே கனமழை பெய்துவருகிறது. குறுவையையும் அழித்து சம்பாவையும் அழித்து எங்களை கடனாளிகளாக்கிவிட்டது. தற்போது பெய்த டித்வா புயலால் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே டிஜிட்டல் முறையைத் தவிர்த்து, பழைய முறைப்படி கணக்கெடுப்புப் பணிகளை அரசு தொடங்கவேண்டும். வாய்க்கால் களிலுள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அகற்றி தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்கவேண்டும். நெற்பயிர்களுக்குக்கான காப்பீட்டு தேதியை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு செய்யவேண்டும்'' என்கிறார்.

delta-farmers2

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கைபரப்புச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், "நாகையை எப்பவுமே வடிகால் மாவட்டம் என்று தான் சொல்லுவார்கள். கர்நாடகாவில் மழை பெய்தாலும் அந்த தண்ணீர் இங்குதான் வரும். எப்பவுமே மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், அப்படித்தான் இந்த மழையிலும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆறுதல்கூட சொல்லவில்லை என்பதுதான் வேதனை. ஒவ் வொரு ஆண்டும் தொண்டை கிழியக் கத்து கிறோம். மழைக்கு முன்பே வடிகால்களை முறையாக தூர்வாரச் சொல்லி மன்றாடுகிறோம். அலட்சியம் காட்டுவதால் ஒவ்வொரு வருடமும் பேரழிவைச் சந்திக்கிறோம். கடைமடைப் பகுதி யான நாகையில் முல்லியாறு, பாண்டவைஆறு, கடுவையாறு, வெட்டாறு, முடிகொண்டான் ஆறு, மற்றும் காவிரியின் கிளை ஆறுகளின் பாசன வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் நாணல், ஆகாயத்தாமரை, வெங்கா யத் தாமரை, புல்பூண்டு செடிகளை முறையாக தூர்வருவதில்லை. இதனால் பயிர்கள் மூழ்கி அழுகி விட்டன. திருமலைராஜன் ஆறு, முதலியாறு, தேவநதி உள்ளிட்ட ஆறுகளின் வழியாகத்தான் தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆனால் அந்த ஆறுகளின் கடல் முகத்துவாரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளில்கூட தூர்வாரலை. குறுவையில் நல்ல விளைச்சல் கண்டு, அறுவடை செய்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தேக்கத்தால் பாதிப்பை சந்தித்தோம். தற்போது நெற்பயிர் விளைவதற்கு முன்பே நீரில் மூழ்கி பாதிப்பை சந்திக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கும் பகுதிகளை கணக்கெடுக்கும் அரசும், அதிகாரிகளும் அடுத்த ஆண்டு அந்த அழிவு நடக்காமலிருப்பதற்கு ஏன் வழிவகை செய்ய மறுக்கிறார்கள் என்பது புரியலை. இந்த அழிவுகளுக்கு அரசும், அதிகாரிகளும்தான் காரணம், வடிகால் முறையாக தூர்வாரப்படாமல் பெரிய மோசடியே நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்கவேண்டும்'' என்கிறார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூரைச்சேர்ந்த விவசாயி மணவாளனோ, "ஒவ்வோராண்டும் பாச னத்திற்காக ஜூன் மாதம் மேட்டூர் அணையி லிருந்து தண்ணீர் திறக்கப்படுகின்றது. பிப்ரவரி மாதத்திலேயே தூர்வாரும் பணியைத் தொடங்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால் தண்ணீர் திறக்கும் சமயத்தில்தான் தூர்வாரும் பணியைத் தொடங்குறாங்க, தூர்வாருவதற்கு ஒதுக்கும் நிதியில் வாய்க்கால் ஷட்டர்கள் கட்டுமானப் பணிகளை செய்யுறாங்க. இதனால் எந்தப் பணியும் முழுமையாக நடப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் இயற்கையால் மட்டும் இல்லாமல் அரசின் அலட்சியத்தாலும் நாங்கள் அழிகிறோம்'' என்கிறார். 

delta-farmers3

திருவாரூர் மாவட்டம் மேலமணலியைச் சேர்ந்த விவசாயி சாலமன் கூறுகையில், "விவசாயத் தால எந்தவிதமான லாபமும் கிடையாது. தொ டர்ந்து நஷ்டம்தான் வருது. ஆனால் இதைவிட்டா எங்களுக்கு வேறு கதியும் இல்ல. ஒவ்வொரு முறையும் தொடர்ந்து பயிருக்கும், நெல்லுக்கும் இன்சூரன்ஸ் செய்யுறோம். அரசாங்கமோ இன்சூரன்ஸ் கிடைக்கக் கூட வழி செய்யமாட்டேங்குது.  உதவி செய்யும்னு நினைத்தால் அரசும் கைவிரிக்குது. குழுவுல கடன்வாங்கி அவங்க எங்க ரத்தத்த முழுசா உறிஞ்சிட்டாங்க. கூட்டுறவுல கடன் கிடைக்கிறதில்ல. உயிர்மட்டும்தான் எங்களிடம் மிச்சம்'' என்று கலங்குகிறார்.

மன்னார்குடியை அடுத்துள்ள முத்துராமன் கூறுகையில், "இந்த அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயி களுக்கு எந்தவித நிவாரணமும் கொடுக்க மாட்டேங்குது. பெரிய பெரிய பாதிப்பு களைச் சந்திச்சிட்டோம். அவ்வப்போது கணக்கெடுப்பு நடத்துவாங்க, அரசு அதிகாரிங்க வருவாங்க பார்ப்பாங்க. அரசாங்கத் துக்கு எழுதிக்கொடுக்கிறோம்னு சொல்லுவாங்க. அதனால எந்த பலனும் இல்ல. ஒரு போகம் அழிஞ்சா பரவால்ல, தொடர்ந்து அழியிறோம். ஆனால் அரசு மனமிரங்கி நிவாரணம் வழங்க முன்வரமாட்டேங்குது''’என்கிறார்.

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத் தின் மாநில தலைவர் கா.ராசபாலன் கூறுகையில், "தற்போது பெய்த மழையால் கிராமங்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துகிடக்கிறது. விவசாய பயிர்கள் முழுவதும் முழுகி பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்படுகிற நிதி, ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாருவதற்குப் பதிலாக ஒப்பந்தக்காரர்களின் உயர்வுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கிறது. பயிர் பாதிப்பு கணக்குகளை காலதாமதப்படுத்தினால் விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே பாதிப்பு கணக்குகளை பத்து தினங்களுக்குள் ஊராட்சிகள்தோறும் ஊர் நிர்வாகக் குழு முன்னிலையில் கணக்கெடுப்பு நடத்தி, டிசம்பர் 20ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணத் தொகையை வழங்கவேண்டும்'' என்கிறார்.

மழை பாதிப்புகள் குறித்து துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின், “"கனமழை இதுவரை 20,000 ஹெக்டேர் பரப்பளவு பயிர்களை நீரில் மூழ்கவைத்துள்ளது. வெள்ளம் வடிந்ததும் இதுதொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும்'' என்றார்.