பரப்பளவில் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண் டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி சுதந்திர தின விழாவின்போது நிறைவேற்றி வைத் தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாகின. அதற்கான தொடக்க விழா நவம்பர் 28-ந்தேதி திருப்பத்தூரிலும், இராணிப்பேட்டையிலும் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவித்தது ஆம்பூர் வழக்கறிஞர்கள் சங்கம். இரவோடு இரவாக அச்சங்கத்திடம் பேசும் விதத்தில் பேசி அதனை கைவிட செய்தார்கள் காவல்துறை அதிகாரிகள். "கறுப்புக்கொடி காட்ட முயன்றது ஏன்?' என ஆம்பூர் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த தமிழ்வேலிடம் கேட்டபோது, ""ஆம்பூர் நகரம், தாலுகா திருப்பத்தூர் மாவட்டத்தோடு இணைந் துள்ளது. ஆம்பூர் நகரத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை. அதோடு, ஆம்பூர் நகரத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. 35 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்து, 1 லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். இதனை மேம்படுத்தவில்லை. ஆனால் புதியதாக வாணியம் பாடியில் ஒரு மருத்துவமனையை திறந்து அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதேபோல், ஆம்பூர் தாலுகாவில் இருந்த 22 கிராமங்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா, குடியாத்தம் தாலுகாவோடு இணைத்துள்ளார்கள். அந்த கிராமங்கள் ஆம்பூர் நகரோடு நெருக்க மானது. அப்படியிருக்க அதனை தூரமாக உள்ள தாலுக்காவோடு இணைத்து வேறு மாவட்ட மாக்கியுள்ளனர். இதனை கண்டித்தே போராடு கிறோம்'' என்றார்.
ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன் (தி.மு.க.) தலை மையில், வழக்கறிஞர்கள், வர்த்தக பொதுநல சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் என பல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆம்பூர் நகரில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என நவம்பர் 27-ந்தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருளிடம் கோரிக்கை மனு தந்தனர். நவம்பர் 28-ந்தேதி திருப் பத்தூர் மாவட்டம் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், வாணியம்பாடியில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது ஆம்பூர் மக்கள், வழக்கறிஞர் சங்கம், வர்த்தகர்கள் சங்கம், பொதுநலச்சங்கங்கள் என அனைவரையும் அதிருப்தியடைய செய்துள்ளது.
வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வான தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர்கபில் நிர்பந்தத்தால்தான் கோட்டாச்சியர் அலுவலகம் வாணியம்பாடியில் அமைந்தது. ஆம்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மேம்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது. ""புதிய மாவட் டம் உருவாகியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு புறம் வேதனையாக உள்ளது. இப் போது எங்கள் ஊரை புறக்கணிக் கிறார்கள்'' என புலம்புகிறார்கள் ஆம்பூர் மக்களும், பொது நல அமைப்பினரும்.
இதுபோல, வேலூரில் இருந்து பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் உருவாகப்போகிறது என்கிற தகவல் பரவியதுமே, ஆற்காடு மாவட்டமாக பெயர் மாற்றி அறிவிக்க வேண்டும் என ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் தலைமையில் அனைத்து தரப்பினரும் ஊர்வலம் நடத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு தந்தனர். அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என அரக்கோணம் பகுதி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் கடையடைப்பு, போராட்டம் நடத்தினர். ஆனால் இராணிப்பேட்டை மாவட்டம் என்றே அறிவித்தது தமிழக அரசு. இந்த இராணிப்பேட்டையை உள்ளடக்கிய அரக்கோணம் பகுதி வியாபாரிகள், பொதுநலஅமைப்புகள், வேலூர் மாவட்டமாக இருந்தபோதும் அரக்கோணம் தனித்து இருந்தது. இராணிப்பேட்டை மாவட்டமாக அறிவிக்கப் பட்டபோதும் அரக்கோணம் தனித்து உள்ளது. அரக்கோணம் மாவட்டமாக அமைக்க வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையை புறந்தள்ளியதால் நவம்பர் 28 எங்களுக்கு கறுப்பு தினம்' எனச்சொல்லி அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பாக்கிவிட்டது.
இதையெல்லாம் உணர்ந்த காவல்துறை, தொடக்க விழாவுக்கு முதல்வர் வந்து செல்லும் பாதையில் யாராவது கறுப்புக்கொடி காட்டிவிடக்கூடாது, எதிர்ப்பு குரல் கொடுத்துவிடக்கூடாது என திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் பயண பாதையில் 4 ஆயிரம் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது.
-து.ராஜா