பா.ஜ. ஆட்சியில் ஒரு சங்கராச்சாரியாருக்கு பிரச்சனை என்பதை நம்பமுடிகிறதா?

Advertisment

உத்தரகாண்டின் ஜோஷிபீட சங்கரமடத்தின் தலைவர் அவிமுக்தேஷ்வரானந்தா சரஸ்வதி. முந்தைய சங்கராச்சாரியாரான சுவாமி சொரூபானந்த சரஸ்வதியின் மறைவுக்குப் பின் இவர் மடத்தலைவராக வந்தார். இவருக்கும் பா.ஜ.க.வுக்கும் ஏனோ சில உரசல்கள் தொடர்ந்து நீடித்துவந்தன. மற்ற சங்கராச்சாரியார்களைப் போல, பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்களுடன் உடன்படாமல் சுயேட்சையாக சில கருத்துகளைப் பேசிவந்தார்.

Advertisment

பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை விழா 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதுகுறித்து அவிமுக்தேஷ்வரானந்தா, "இதனால் அரசியல்மயப்படுத்தப்பட்ட இந்துக்கள்தான் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான இந்துக்கள் மகிழ்ச்சியடைய வில்லை' என கருத்துத் தெரிவித்திருந்தார். அதேபோல கோவில் பணிகள் முழுமையடையாமல், பிராண பிரதிஷ்டை நடை பெறாத நிலையில், ராமர் கோவிலுக்கு மோடி சென்றதையும் சாஸ்திரத்துக்கு விரோதமானது என விமர்சித்திருந்தார்.

2024-ல் ராகுல் காந்தி நாடாளுமன்ற உரையொன்றின் போது, “"தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு மற்றும் பொய்களை இருபத்துநான்கு மணி நேரமும் பரப்புகிறார்கள். இங்கே அமர்ந்திருப்பவர்களில் பலர் உண்மையான இந்துக்கள் இல்லை''’என விமர்சித்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஜோஷிமட சங்கராச்சாரியரான இவர்... “"ராகுல், இந்துக்கள் குறித்து எதுவும் தவறாகக் கூறிவிட வில்லை''’எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

அதேபோல பசுமாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு எதிராகப் பேசும்போது, "லக்னோ பூங்காக்களில் யானை சிலை இருக்கிறது. இதை யானை என்பார்கள். இதனால் நடக்க முடியுமா? கிளையை முறிக்க முடியுமா…? அதேபோல பசு இறைச்சி விற்பனையைத் தடுக்காதவர்கள் அவர்கள் பிரதமராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந் தாலும் உண்மையான இந்துவாக இருக்கமுடியாது''’எனப் பேசியது சர்ச்சையானது.

இதுபோன்ற முந்தைய சர்ச்சைகளால் சங்கராச் சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தாவிடம் உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு கடும் கோபத்தில் இருந்தது. இந்நிலையில் ஜனவரி 18-ஆம் தேதி, மௌனி அமாவாசை தினம். அன்று பிராயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, சில சடங்குகளைச் செய்வது நல்லது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதற்காக வருகைதந்த அவிமுக்தேஷ்வரானந்த் தடுத்துநிறுத்தப்பட்டார். போலீசுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட அவரும் அவரது சீடர்களும் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

sankara1

உத்தரப்பிரதேச அரசு, "ஜோதிஷ் பீடத்தின் சங்கராச் சாரியார் யார் என்பது குறித்து 2020 முதலே உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. அது முடிவுக்கு வரும்வரை அவிமுக்தேஷ்வரானந்த் சங்கராச்சாரியார் பட்டத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? அப்படி சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஆவணம் இருந்தால் காட்டுங்கள் எனக் கேட்டிருந்தது. அதை அவிமுக்தேஷ் வரானந்தா காட்டியபோதும் காவல்துறை ஏற்றுக்கொள்ள வில்லை.

"உங்களை ஏன் மேளாவிலிருந்து தடுத்து திருப்பியனுப்பக்கூடாது?' என அரசு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்ப, பதிலுக்கு அவிமுக்தேஷ்வரானந்தா 8 பக்க பதிலை அனுப்பி, நோட்டீஸை திரும்பப்பெறக் கோரினார். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்தார்.  இது பழங்கால மரபுகளில் தலையிடுவது என்றும், அரசுக்கும் காவல்துறைக்கும் சங்கராச்சாரியார் யார் என முடிவுசெய்ய உரிமை இல்லை என்றும் கூறினார்.

"சங்கராச்சாரியார் அல்லாத ஒருவர் ஏன் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்துகிறார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். பூரியின் சங்கராச்சாரியார் இங்கு இருக்கிறார், அவருக்கு ஒரு முகாமும் உள்ளது. அவரது முகாமிற்கு அருகில், மற்றொரு பூரி சங்கராச்சாரியாரான அதோக்ஷஜா னந்த் தேவ் தீர்த்த மகாராஜ், கோவர்தன் பீட சங்கராச்சாரியாரின் பெயர்ப் பலகையும் உள்ளது. பூரியில் எப்படி இரண்டு சங்கராச்சாரியார்கள் இருக்க முடியும்?''’என்று கேள்வியெழுப்பினார். இதையடுத்து அவிமுக்தேஷ்வரானந்தா 48 மணி நேரமாக அந்த இடத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், "சங்க ராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா வுக்கு தன் ஆதரவைத் தெரிவித்துள்ள துடன், "சங்கராச்சாரியாரிடம் யோகி அரசு மன்னிப்புக் கேட்கவேண்டும்'' என குரல்கொடுத்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பவன் கெரா, "பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக' குற்றம்சாட்டினார். "ஒரு காலத்தில் முஸ்லிம்களிடம் "ஆவணங்களைக் காட்டுங்கள்' என்று கேட்டவர்கள், இப்போது இந்து மதத்தின் உயர்மட்டத் துறவியிடமும் அதையே கேட்கிறார்கள். அவர் அரசாங்கத்தை கேள்வி கேட்காதவரை, ஒரு சங்கராச்சாரியாராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இப்போது அவரிடமிருந்து ஆவணங்கள் கேட்கப் படுகின்றன'' என்று விமர்சனத்தை முன்வைத்தார்.

ஆக, இந்துக்களுக்கு ஆதரவான அரசானாலும்கூட, அரசினை கேள்வி கேட்டாலோ, அதிகாரத்தைக் கேள்வி யெழுப்பினாலோ சங்கராச்சாரியாராக இருந்தாலும் இடது கையில்தான் டீல் செய்வோம் என நிரூபித்திருக்கிறது யோகி அரசு என விமர்சனம் எழுந்திருக்கிறது.