அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் 23-ம் தேதி கட்சியின் தலைமைக் கழகத்தில் நடந்து முடிந்தது. ""தேர்தல் கமிஷன் நடைமுறைப்படி வருடத்திற்கு ஒருமுறை செயற்குழு கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி நடத்தப்பட்டது என சொல்லப்பட்டாலும் அதில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை'' என்கிறார்கள் செயற்குழுவில் கலந்து கொண்டவர்கள்.
செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதுசூதனன் எடுத்த எடுப்பிலேயே அ.தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி பூசலை சுட்டிக் காட்டினார். ""ஓ.பி.எஸ். அணியும், இ.பி.எஸ். அணியும் ஒன்று சேரும் போதே வழிகாட்டு குழு அமைக்கப்படும். அதில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி தரப்படும் என்றும் முடிவு செய்தோம். அதை நம்மால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. தமிழகம் முழுவதும் கட்சிப் பொறுப்புகளில் யாரை கொண்டு வருவது என்பதில் ஒரு பெரிய போட்டியே நடத்தியது. இவையெல்லாம் செய்திகளாகி கட்சிக்குள் ஓ.பி.எஸ்.சுக்கும், இ.பி.எஸ்.சுக்கும் சண்டை நடக்கிறது என பறந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டைகளுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும். இதில் யார் பெரியவர் என ஈகோ பார்க்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்'' என பேசிக் கொண்டிருக்கும் போதே ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாச்சலம் எழுந்தார். அவரும் செங்கோட்டையனும் சசிகலா அணியைச் சேர்ந்தவர்கள். எடப்பாடி முதல்வர் பதவியேற்கும்போதே சசிகலா உறவினர் திவாகரனிடம் செங்சும் தோப்புவும் மந்திரி பதவி வேண்டி கோரிக்கை வைத்தனர். திவாகரன் இருவருக்காகவும் பேசினார். ஆனால் செங்ஸ் மட்டுமே மந்திரியானார். தோப்பு தனிமரமானார்.
ஆகட்டும் பார்க்கலாம் என அதே மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணனையும் மந்திரியாக்கினார் எடப்பாடி. இதனால் வெறுத்துப் போன தோப்பு செயற்குழுவில் இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என வந்தார். தோப்புவின் இந்த பிடிகளை தெரிந்து கொண்ட எடப்பாடி சைகை காட்ட தோப்புவை மற்ற செயற்குழு உறுப்பினர்கள் அமர வைத்தனர். டீல் பேசி முடித்தனர். உடனே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஜெ.வின் சமாதி கட்டுமானம் மற்றும் ஹைலைட்டாக பாரத ரத்னா விருதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெ. ஆகியோருக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் எடப்பாடி பேசினார். ""வருகின்ற திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாம் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும். நமது கட்சி பலமாக உள்ளது. நாம் கருத்து வேறுபாடுகளை களைந்து உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்'' என பாசிட்டிவாகவே பேசினார். மதுசூதனன் சொன்ன கோஷ்டி விவகாரங்களை தொடவில்லை.
அடுத்து பேசிய ஓ.பி.எஸ்.சின் பேச்சு உணர்ச்சிபூர்வமாக இருந்தது. ""என்னைப் பொறுத்தவரை கட்சி முக்கியமா? ஆட்சி முக்கியமா? என்றால் எனக்கு கட்சிதான் முக்கியம். கட்சியின் தேவைக்காக என்னை ராஜினாமா செய்ய சொன்னால் நான் இப்பொழுதே ராஜினாமா செய்வேன். நான் மட்டுமல்ல மூத்த அமைச்சர்களும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலில் கட்சியை வெற்றிபெற செய்ய வேண்டும். நிர்மலா சீதாராமன் என்னை அவமானப்படுத்தினார். என் தம்பிக்கு செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க போனேன். நிர்மலா அ.தி.மு.க.வை அவமானப்படுத்தினார்'' என்றார்.
செயற்குழுவில் பேசிய வைத்தியலிங்கமும் கே.பி.முனுசாமியும் மத்திய அரசுக்கு தமிழக அரசு பணிந்து போவதாக பேச, அதற்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி, ஜெ. வழியில் எதிர்க்க வேண்டிய விஷயத்தை எதிர்ப்பதாக கூறினார். இதனிடையே ராஜன் செல்லப்பா எஸ்.டி.கே. ஜக்கையன், தோப்பு ஆகியோர் மீண்டும் எழுந்து ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு மரியாதை இல்லை. ஜெ. ஒவ்வொரு ஒ.செ.வுக்கும் மெடிக்கல் சீட் வரை வாங்கித் தருவார். இப்பொழுது அரசு கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என பேச முயற்சித்தனர். அவர்களை எடப்பாடி அடக்கினார்.
தேர்தல் வேலை பார்க்க சீனியர்கள் பதவி விலக வேண்டும் என ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்கியிருப்பது தன்னை நோக்கித் தான் என்பதால் டென்ஷனில் இருக்கிறார் இ.பி.எஸ்.
-தாமோதரன் பிரகாஷ், அருண்பாண்டியன்