வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வுரிமையைப் பறிக்கும் 8 வழி பசுமை வழிச்சாலையை எதிர்த்து, விவசாயிகளும் பொதுமக்களும் நித்தமும் ஆர்ப்பாட்டம், கதறி அழுது போராட்டம், தீக்குளிப்பு, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி என பல வழிகளிலும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எங்கே எழவு விழுந்தாலும் நில அளவீடு சீக்கிரம் முடியணும் என கோட்டையிலிருந்து வருவாய்த்துறை அதிகாரிகளை விரட்டியதன் விளைவு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 123 கி.மீ. தூரத்தை மின்னல் வேகத்தில் அளந்து முடித்துவிட்டார்கள்.
இந்த 123 கி.மீ. தூரத்திற்குட்பட்ட செங்கம், கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி, தாலுகாக்களில் உள்ள சிறுகலாம்பாடி, மேப்பத்துறை, சி.நம்மியந்தல், நயம்பாடி, முத்தனூர், ஆத்துறை, பனை ஓலைப்பாடி, படிஅகரம், அத்திப்பாசி, அயோத்தியாபட்டணம், காஞ்சி, தென்னகரம் உட்பட 19 கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த ஏரியாவின் எல்லைப் பகுதியை மட்டும் பெண்டிங் வைத்துவிட்டு, மற்ற ஏரியாக்களில் நில அளவீட்டை முடித்துவிட்டனர்.
மற்ற கிராமங்களுக்கு கடந்த 07-ஆம் தேதி, மூன்று டி.எஸ்.பி.க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட போலீஸ் படையுடன், வருவாய்த்துறை அதிகாரிகளும் இன்ஃப்ரா டெக் ஊழியர்களும் சென்றனர். மூர்க்கமாக எதிர்ப்பவர்கள் யார், சமாதானத்துக்குப் பணியாமல் முரண்டு பிடிப்பவர்கள் யார் என்பதை உளவுத்துறை மூலம் லிஸ்ட் வாங்கிவிட்டதால், சி.நம்மியந்தலைச் சேர்ந்த சுரேஷ், பிரதாப், சூசைராஜ் உட்பட 10 பேர், மேப்பத்துறையைச் சேர்ந்த விவசாயிகள் 2 பேர் என மொத்தம் 12 பேரை கொத்தாக அள்ளிக் கொண்டு பறந்தது போலீஸ்.
எதிர்ப்பவர்களை தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு, மீதியிருப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி, தாங்கள் வந்த நோக்கத்தை கச்சிதமாக முடித்துவிட்டுச் சென்றனர். அப்படிச் செல்லும்போது, “""நிலத்தை அளக்கவிடாம டார்ச்சர் பண்ணீங்கல்ல, இப்ப உங்க நிலத்துல எத்தன மரம் இருந்துச்சு, என்ன பயிர் போட்டிருந்தீங்க, இதுக்கெல்லாம் கணக்குப் பண்ணி இழப்பீடு தரப்போறது நாங்க. பணம் வாங்க வரும்போது நாங்க யார்னு காட்றோம்'' என ஓப்பனாகவே மிரட்டல் விடுக்கிறார்கள் வருவாய்த்துறை அதிகாரிகள். எல்லாம் பக்காவாக முடிந்த பின்தான் அந்த 12 பேரையும் ரிலீஸ் செய்தனர்.
இளைச்சவனைப் பார்த்தா எகிறி அடிக்கும் எடப்பாடி போலீஸ், வலுத்தவனைப் பார்த்தா பம்மிப் பதுங்குவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 8 வழிச்சாலையை எதிர்த்து, திருவண்ணாமலையில் தினகரனின் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக 05-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை வந்த தினகரன், கிரிவலப் பாதையில் படுத்திருந்த மூக்குப் பொடிச் சாமியாரிடம் ஆசி வாங்கினார். தினகரன் கட்சியின் மா.செ.க்களான எஸ்.ஆர்.தர்மலிங்கம், ஏழுமலை ஆகியோர் ஏற்பாட்டில், எட்டாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டு வந்துவிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த டி.டி.வி, ""2017 நவம்பர் மாசம், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு, தமிழக அரசு எழுதிய கடிதத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கான கோரிக்கையே கிடையாது. ஆனா மூணே மாசத்துல -அதாவது 2018 பிப்ரவரி மாசம் 25-ஆம் தேதி 8 வழிச்சாலையை கேட்டு, அதுக்காக 10 ஆயிரம் கோடியும் ஒதுக்குறாரு எடப்பாடி. இதுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?'' என சரவெடி வெடித்துவிட்டுக் கிளம்பினார் தினகரன்.
தினகரனுக்கு சல்யூட் அடித்து வழி அனுப்பிய போலீஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டெல்லி பாபு மீது பாய்ந்தது. 8 வழிச்சாலைத் திட்ட அரசாணையை எரித்து ஜூன் மாதம் கருப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்ததற்காக, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை, தரதரவென இழுத்து கைது செய்திருக்கிறார் செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி. நான் முன்னாள் எம்.எல்.ஏ. என டெல்லி பாபு சொன்னபோதும் மோசமாக நடத்தியிருக்கிறது காவல்துறை. அதேபோல் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இந்த 8 வழிச்சாலையை மட்டுமல்ல, தமிழகத்தில் எதைப்பற்றிப் பேசினாலும் கருத்து தெரிவித்தாலும் மிரட்டல் அடக்குமுறையை ஏவி வருகிறது எடப்பாடி சர்க்கார். கடந்த 06-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை -சி.ஐ.டி.காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கருத்தரங்கம் நடந்தது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு, எடப்பாடி அரசை காரசாரமாக வெளுத்துக் கட்டினார்.
இதையடுத்து கவிக்கோ அரங்கம் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாகக் கூறி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அரங்கத்தின் உரிமையாளர் முஸ்தபா மீது சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார். அதற்கடுத்ததாக, பத்திரிகையாளர் அருள் எழிலன் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபாவேசத்தை "பெருங்கடல் வேட்டத்து' என்னும் ஆவணப்படம் மூலம் பதிவு செய்துள்ளார். மாநகர போலீசின் கடுமையான மிரட்டலையும் மீறி, உரிய அனுமதியுடன் அதே கவிக்கோ அரங்கில் ஆவணப்பட வெளியீடு கடந்த 08-ஆம் தேதி நடந்தது.
அரசின் கண்காணிப்பு பார்வைக்கு தீவிரமாக உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான். ஜெ. ஆட்சியின் போதிலிருந்தே போலீசின் அடக்குமுறையை துணிந்து எதிர்த்து நிற்கும் இவர்களை தற்போது வளைத்து மடக்கி கைது செய்து வருகிறது எடப்பாடி அரசு. மதுரையில் விஜயரங்கன், ஆசையன் ஆகிய இருவரும் கைது என்ற பெயரில் போலீசால் கடத்தப்பட்டுள்ளனர். இதுபோலவே விருத்தாசலத்தைச் சேர்ந்த கணேஷ், வினாயகம் இருவரும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் அதிகாரத்தினர் மீதான நடவடிக்கை மூலம் உரிமைக்குரல் எழுப்பும் மக்கள் மீது அடக்குமுறை தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது எடப்பாடி அரசு.
மிரட்டலும் உருட்டலும் பல டிசைன்களில் வெளிப்பட்ட வண்ணம்தான் இருக்கிறது. அதில் ஒரு டிசைன்தான், 8 வழிச்சாலைக்காக நிலம் கொடுக்கும் உரிமையாளர்களிடம் சட்டப்பூர்வ விசாரணை என்ற பெயரில் நடந்த சம்பிரதாய விசாரணை. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 பிரிவு 3(சி) (1)-ன் கீழ் விசாரணையை நடத்தியுள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி, மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் காப்புக்காடு வரையில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இப்படி கைப்பற்றப்படும் நிலங்கள் மொத்தமும் புன்செய் நிலங்கள் என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தனர் வருவாய்த்துறை அதிகாரிகள். இந்த விளம்பரத்தின் படி, மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, சின்னக்கவுண்டாபுரம், வெள்ளியம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 169 பட்டாதாரர்கள் சட்டப்பூர்வ விசாரணைக்கு கடந்த 06-ஆம் தேதி அழைக்கப்பட்டனர். ஆனால் வந்திருந்த 101 பேரில் ஐந்து பேர் மட்டுமே ஆட்சேபணை இல்லை என்றும் மற்றவர்கள் நிலம் கொடுக்க சம்மதமில்லை என்றும் கூறிவிட்டனர். மொத்தம் நான்கு மணி நேரத்தில் விசாரணை நடத்தி, நிலம் கொடுக்க அனைவருக்கும் சம்மதம் என பதிவு செய்துவிட்டுக் கிளம்பிவிட்டனர் அதிகாரிகள்.
விசாரணையின்போது சில விவசாயிகள், தங்களின் பிள்ளைக்கு அரசு வேலை வேண்டும் என்றபோது, அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி ஒருவரை நாம் சந்தித்தபோது, நில எடுப்புக்கான இழப்பீடு எவ்வாறு, எவ்வளவு வழங்கப்படும் என்பதை துல்லியமாக சொன்னார். ஆனால் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியோ, இழப்பீட்டுத் தொகை நான்கு மடங்கு என அள்ளிவிட்டிருந்தார்.
8 வழிச்சாலை அக்கப்போர் இப்படி இருக்க, சேலம்-உளுந்தூர்பேட்டை என்.ஹெச். 68 திட்டத்திற்காக நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
-து.ராஜா, இளையராஜா