அடிமை எடப்பாடி... அமைதிப்படை பன்னீர்செல்வம்!
""எங்க வீட்டு விஷேசங்களில் சாம்பார் வாளி தூக்கியவர்'' என அமைச்சர் காமராஜையும், ""காய்கறி விற்பவர்கள்கூட பேசாத மொழியில் சட்டசபையில் பேசுபவர்'' என எடப்பாடியையும் ""அ.தி.மு.க.வில் என்னால் அறிமுகமான அமைதிப்படை பன்னீர்செல்வம்'' என ஓ.பி.எஸ்.சையும் கடந்த ஜூலையில் மன்னார்குடி கூட்டத்தில் தாளித்தார் டி.டி.வி.
இதைக் கேட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சைவிட அதிக கொதிநிலைக்குப் போனவர் உணவுத்துறை அமைச்சரான காமராஜ்தான். ""அதே இடத்துல கூட்டம் போடுறோம், தினகரனை வெளுத்து வாங்குறோம். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை செப்டம்பர் 01-ஆம் தேதி மன்னார்குடியே ஸ்தம்பிக்கணும்''’என தனது ஆதரவாளர்களான ஒ.செ.க்களை உசுப்பேற்றிவிட்டார் காமராஜ்.
படு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கிய ஒ.செ.க்கள் ஆள் சேர்க்கும் வேலைகளில் தீயாய் வேலை செய்தனர். திருவாரூரில் நடக்கவிருந்த கூட்டத்தை மன்னார்குடிக்கு மாற்றும் ஐடியாவைக் கொடுத்ததே தினகரனுக்கு எதிராக கச்சை கட்டும் அவரது தாய்மாமா திவாகரன்தானாம். அவரும் தன் பங்கிற்கு பல உதவிகள் செய்ய, களை கட்டியது மன்னார்குடி. அ.தி.மு.க.வின் மாநாடு ரேஞ்சுக்கு மன்னை நகரெங்கும் விண்ணை முட்டும் அளவுக்கு அலங்கார வளைவுகள், ஃப்ளக்ஸ் போர்டுகள், கொடிகள் என திமிலோகப்பட்டன. பொதுக்கூட்ட பிரம்மாண்ட மேடைப் பணிகளை, காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார் கர்மசிரத்தையாக செய்தார்.
பன்னீர்செல்வம் வருவதற்கு முன்பாக "காவிரி' ரெங்கநாதன் தலைமையில் விவசாயிகளை அழைத்து வந்து மேடையேற்றி சால்வை போட்டு கீழிறக்கிவிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்த பலரும் தினகரனையும் அவரது கட்சியில் உள்ள மன்னார்குடி எஸ்.காமராஜையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர். ஒரு சிலரோ, "வாடகை சைக்கிளில் பத்து பசங்களோடு, பெண்கள் நிற்கும் இடமாகப் பார்த்துப் போனவர்' என தினகரனைக் குறி வைத்து ஒருமையில் தாக்கினர். இரவு 7:40-க்கு கூட்ட மேடையில் ஏறினார்.
ஓ.பி.எஸ். இருந்த உற்சாகத்தில் மைக் பிடித்த அமைச்சர் காமராஜ், “""நானும் கட்சி நடத்துறேன்னு சொல்லிக்கிட்டு, தினமும் ஒரு பொய்யைக் கூறி பிழைப்பு நடத்துகிறார். அவர் எம்.பி.யாக இருந்தபோது நானும் சையதுகானும் எம்.பி.யாக இருந்தோம். அப்போது தினகரன் பண்ணிய வேலைகளை அம்பலப்படுத்தினால், அவரால் வெளியில் நடமாடவே முடியாது. ஆர்.கே.நகர் 20 ரூபாய் டோக்கன் பருப்பெல்லாம் திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வேகாது'' என தினகரனை எகிடுதகிடாக பொளந்து கட்டினார் காமராஜ்.
கடைசியாக மைக் பிடித்த ஓ.பி.எஸ்., ""1980-ல் பெரியகுளம் 18-ஆவது வார்டு பிரதிநிதியா கட்சிக்கு வந்து 1997-ல் நகரசபை தலைவரானேன். கட்சியில் 22 வருசம் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபோது, தினகரன் யு.கே.ஜி. மாணவன். பெரியகுளம் பக்கமே தினகரன் வரக்கூடாது, பார்லிமெண்டுக்கும் போகக்கூடாது என உத்தரவிட்டார் ஜெயலலிதா. அந்த உத்தரவின் ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். தூக்கி வளர்த்த மாமன்கூட சண்டை, கூடப்பிறந்தவர்களுடன் சண்டை என எல்லோரிமும் தினகரன் சண்டை போட்டதால, அங்க ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சுட்டாங்க.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்னை முதலமைச்சராகச் சொன்னது திவாகரன் சார்தான். "அய்யய்யோ ஒங்க குடும்பத் தொல்லை தாங்காது... ஆளவிடுங்க சாமி'ன்னு சொல்லியும் வற்புறுத்துனதாலதான் சி.எம். ஆனேன். ஒருகட்டத்துக்கு மேல தாங்கமுடியாமத் தான் தர்மயுத்தம் ஆரம்பிச்சேன். ஜெயலலிதாவுக்கே துரோகம் பண்ணியவர்தான் தினகரன்''’’ பட்டாசாக வெடித்தார் ஓ.பி.எஸ்.
இதையெல்லாம் கேட்டா சும்மா இருப்பாரா தினகரன், 02-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், காவிரியில் தண்ணீர் வந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காததால், எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டனக் கூட்டம் போட்டார். கூட்டத்தில் பேசிய தினகரனோ ""அடிமை பழனிச்சாமி, அமைதிப்படை பன்னீர்செல்வம் ஆட்சியில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை'' என ஆரம்பித்து சகட்டுமேனிக்கு ஓ.பி.எஸ்.சை விளாசித் தள்ளினார். அமைச்சர் காமராஜின் சாம்பார் வாளிக் கதையை மீண்டும் ஞாபகப்படுத்தியதுடன், கட்சிக்காரர் ஒருவரின் வேட்டியைத் திருடி கட்டிக்கொண்டவர்தான் இந்த அமைச்சர் என போட்டுத் தாக்கிவிட்டு... தமிழ்நாட்டில் இன்னைக்கு நடப்பது பி.ஜே.பி. மந்திரிசபைதான் என்பதையும் மறக்காமல் சொன்னார்.
ஏட்டிக்குப் போட்டி கூட்டங்கள் நடந்தாலும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பதற்காக இப்போதே களத்தில் இறங்கியுள்ளது தினகரன் டீம். நகர் முழுவதும் சுவர்களில் குக்கர் சின்னத்தை வரைந்து தள்ளிவிட்டனர். இதுபோக வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு பட்டுவாடா கணக்கும் கட்சி நிர்வாகிகளைக் கவனிக்கும் கணக்கும் நடந்து வருகிறது. இதே ஃபார்முலாதான் திருப்பரங்குன்றத்திலும் நடந்துவருகிறது.
திருவாரூர் தொகுதியைப் பொறுத்தவரை தினகரன் டீமில் குடவாசல் ராஜேந்திரன், கடலைக் கடை பாண்டியன், நகர்மன்ற மாஜி சேர்மன் ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம். திருப்பரங்குன்றத்தில் கா.காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரையை நிறுத்தும் ஐடியாவில் உள்ளாராம் தினகரன்.
-க.செல்வகுமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-09-04/ops-ttv-t.jpg)