"கோவிட் 19' நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் நிலையில், அவர்களுக்குப் பயன்படுத்தப்படும் "ரெம் டெசிவர்' ஊசி மருந்து தட்டுப்பாடு, உயிரிழப்புகளை அதிகமாக்குகிறது. மருந்து உற்பத்தியை அதிகமாக்கவும், அதற்கான வரியை ரத்துசெய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, மருந்து நிறுவனங்களும் "ரெம்டெசிவர்' விலையைக் குறைத்துள்ளன. ஆனாலும், தட்டுப் பாடும் -அதிக விலைக்கான விற்பனையும் தொடர்கிறது.
"ஹெட்ரோ ஹெல்த் கேர்' நிறுவனம் கோவிபார் (ரெமௌ டெசிவிர்) மருந்தை அதிகபட்சமாக ரூ.3,490/-க்கு விற்கிறது. அதே மருந்து "கேடிலா ஹெல்த் கேர்' நிறுவனம், ரெம்டெக் 100 எம்.ஜி (ரெம்டெசிவிர்) மருந்தை மிகக்குறைந்த விலைக்கு ரூ.8,99க்கு விற்பனை செய்கிறது. ஆனால் தற்போதுள்ள தட்டுப்பாட் டால் இதைவிடக் கூடுதல் விலையில் தான் கிடைக்கிறது. ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி அதிக விலைக்கு விற்ற கர்நாடக மாநிலத்தவர் இருவரும், உத்திரப்பிரதேசத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
""தற்போது தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவுவதால், அதில் சுமார் ஆறாயிரம் பேருக்கு "ரெம்டெசிவர்' மருந்து தேவைப்படும். ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டோஸ் வீதம் தொடர்ந்து ஆறு நாளைக்கு ஆறு டோஸ் என்று கணக்கிட்டால் 36 ஆயிரம் டோஸ் தேவை. ஆனால் நமக்கு மொத்தமே ஆறாயிரம் டோஸ்தான் கிடைக்கிறது. தமிழக மருத்துவக் கிடங்கில் இருந்த ஒன்றரை லட்சம் டோசும் தீர்ந்துவிட்டதால், கையிருப்பில் உள்ளதை முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே செலுத்து கின்றனர். பாதிக்கப் பட்ட மருத்துவர்களுக்கே மருந்து கிடையாது'' என்கிறார் பெயரைத் தவிர்க்கச் சொன்ன ஒரு மருத்துவர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மெடிக்கல் ரெப் அகஸ்டின், ""நோய்த் தொற்று தீவிரத்தால், வழக்கமாக சப்ளை செய்யப்படும் மருத்துவ மனைகளுக்கே எங்களால் வழங்க முடிய வில்லை. காரணம் எங்களுக்கே ஸ்டாக் வரவில்லை''’என்றார்.
சென்னையைச் சேர்ந்த "மிடி ஸ்டார் ஹெல்த் கேர்' மருந்து ஸ்டாக்கிஸ்ட்டான புவனேஷ்வரனிடம் பேசினோம். ""தமிழகத்தைப் பொருத்தவரை முப்பது ஸ்டாக் கிஸ்ட்கள்தான் இதை வாங்கி சப்ளை செய்துவருகிறோம். சில தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய் கின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு எங்கள் தேவை நூறு டோஸ் "ரெம்டெசிவர்' என்றால் அதில் பத்து முதல் பதினைந்து டோஸ்கள்தான் கிடைக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பை அதிகப்படுத்தி வருவதால் கூடிய விரைவில் நிலைமை சீராகிவிடும்'' என்றார் நம்பிக்கையாக.
சென்னை குரோம்பேட்டை "ரெலா மருத்துவமனை'யின் கொரோனா சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் ஜிம்மி பிரபாகரன் நம்மிடம், ""கடந்த ஆண்டு இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் உருமாறிய கொரோனாவின் இரண்டாவது அலையானது ஒரேநாளில் 3 லட்சத்தைத் தொடுகிறது. கொரோனா வைரஸ் ரத்தத்தை உறைய வைத்துவிடும் தன்மைகொண்டது. தொற்று ஆரம்பித்த மூன்றாவது, நான்காவது நாளில், வைரஸ் தன் உற்பத்தியை அதிகரிக்கும். பத்தா வது நாளில் பலமடங்கு அதிகரிக்கும். கொரோனா வைரஸ் உடலில் அதிகரிப்பதைக் கட்டுப்படுத் தும் தன்மை "ரெம்டெசிவர்' மருந்துக்கு உண்டு. அதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளால் நிலைமை மாறும்'' என்றார்.