தமிழக சட்டமன் றத்தில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நடந்த காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டா லின், "இந்த மண் ணின் ஆதிக்குடி களை இழிவுபடுத் தும் அடையாள மாக காலனி என்ற சொல் பதிவாகி யிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டா மைக்கான குறியீடாகவும், வசைச்சொல்லாகவும் மாறியிருப்பதால் இனி இந்த சொல்லை, அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிவித்தார்.
கல்வி நிலையங்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தொடர்ந்து அரசுக்கு குட்டுவைக்கிறது. மற்றொரு புறம், ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. இந்நிலையில்தான், "காலனி' என்ற சொல்லை நீக்கிவிட்டாலே சாதித் தீண்டாமை களையும், ஒடுக்குமுறைகளையும் ஒழிக்க முடியாது என்ற அதிருப்தி குரல்களும் கிளம்பியிருக்கின்றன.
இதுதொடர்பாக, தென்மண்டல பொதுக் காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்க பெண் கள் துணைக்குழுவின் அமைப்பாளர் ஷோபனாவிடம் கேட்டோம். "ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள், குடியேற்ற நாடு களை "காலனி நாடு கள்' என்றழைத்த னர். காலப்போக் கில், "காலனிக்காரன்' அல்லது "காலனி பசங்க' என்று சொன்னாலே, அது பட்டியல் சமூகத்தினரைக் குறிக்கும் சொல்லாக உருவாகிவிட்டது. காலனி என்ற சொல்லை மட்டும் நீக்குவதால் எந்த பிரயோஜன மும் இல்லை. பட்டியல் சமூகத்தினருக்கு ஆதரவாக அரசு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்வதற் கான அறிவிப்பாகவே கருதுகிறோம். வேங்கைவயல், வடகாடு சம்பவங்களில் புகாரளித்த பட்டியல் சமூகத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் நிலையில்தான் காவல்துறை செயல்படுகிறது எனில், தமிழக அரசின் நிர்வாகம் சரியில்லை என்றுதானே பொருள்? மக்கள் மனநிலையில் மாற்றம் வர வேண்டுமென்று விரும்பும் தமிழக அரசு, முதலில் தங்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சாதி மாநாடுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்'' என்றார் ஷோபனா.
ஆத்தூரைச் சேர்ந்த "மக்கள் முன்னேற்றம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜலிங்கத்திடம் பேசினோம். "தொல்குடி மக்களான ஆதி திராவிடர் சமூகத்தினரை காந்தி, "ஹரிஜன்' என்றழைத்தார். அம்பேத்கரிய இயக்கங்கள் தலித்துகள் என்றும், திராவிட இயக்கங்கள் ஆதிதிராவிடர்கள் என்றும் அழைத்தன. 90களுக்குப் பிறகு பட்டியலின மக்களை, காலனிக்காரன் என்று பொதுவெளியில் குறிப்பிட ஆரம்பித்தனர். இன்னும் ஒரு சாரார் மிக நாகரிகமாக "கவர்ன்மென்ட் பிராமின்' என்கிறார்கள். சில காட்சி ஊடகங்கள், "புள்ளிங்கோ பசங்க' என்றும் பட்டியலின இளைஞர்களை குறியீடு செய்கின்றன. காலனி, சேரி என்ற சொற்கள் உண்மையில் கெட்ட வார்த் தைகள் அல்ல. ஆனால் பொதுப்புத்தியில் இந்த சொற்கள் சாதியத் தீண்டாமையோடுதான் பிணைக்கப்பட்டிருக்கிறது.
பூணூல் மாட்டிக்கொண்டாலே எப்படி ஒருவர் பார்ப்பனர் ஆகிவிட முடியாதோ, அதேபோல பொதுவெளி யிலும், ஆவணங்களிலிருந்தும் காலனி என்ற சொல்லை நீக்குவதாலேயே பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கும் சாதியத் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. கல்வியோடு நிலமும், உற்பத்தி முறையும் எப்போது பட்டியல் சமூகத்தினரிடம் வருகிறதோ அப்போதுதான் தீண்டாமை ஒழியும்.'' என்கிறார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட முன்னாள் பொருளாளர் ரவீந்திரநாத் கூறுகையில், ''எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே, தந்தை பெரியாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, தெருக்கள், ஊர்களின் பெயர்களில் முன்னொட்டாகவும், பின்னொட் டாகவும் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என உத்தரவிட் டார். ஆனால் அந்த உத்தரவு சரியாக செயல்படுத்தப்படவில்லை.
தமிழக அரசின் உன்னதத் திட்டமான இல்லம் தேடிக் கல்வித் திட்டம், குடியிருப்புகள் வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டாரத்தில் பறையன் காட்டானூர், பறையன் காட்டுவளவு, மேச்சேரி வட்டாரத்தில் ஆதிதிராவிடர் காலனி, அருந்ததியர் காலனி, ஏ.டி.காலனி, ஆதிதிராவிடர் தெரு, மேட்டு சக்கிலியர் தெரு என நேரடியாக சாதிகளின் பெயர்களைத் தாங்கிய ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. பட்டியல் சமூகத்தினர், அவர்களின் குடியிருப்புகளின் பெயர்களைச் சொல்லி அழைக்கும்போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பிற இடைநிலைச் சாதியினரும் இப்பகுதிகளில் பணியாற்றத் தயங்குகின்றனர். எனவே, காலனி என்ற சொல்லை நீக்குவதோடு, பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளை பொதுப்பெயரிட்டு அழைக்கலாம் அல்லது வார்டு எண் குறிப்பிடலாம்.'' என்கிறார் ரவீந்திரநாத்.
நாமக்கல் மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் ஜோதிபாசு கூறுகையில், ''ஒடுக்கப்பட்ட சாதியினரை, ஆரம் பத்தில் நேரடியாக சாதிப்பெயரைச் சொல்லி அழைத்தனர். பின்னர் சேரிக்காரர்கள் என்றும், நவீன காலத்தில் காலனிக்காரர்கள் என்றும் அழைக்கின்ற னர். சாதிய கீழ்மைப்படுத்துதல் என்பது நில உடைமையை அடிப்படையாகக் கொண்டதுதான். பட்டியல் சமூகத்தினர் இன்னும் பெரிய அளவில் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும்போதும், நகரமயமாக்கமும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையை குறைக்கச் செய்யலாம். மற்றபடி, காலனி என்ற சொல்லை நீக்குவதென்பது வாக்கு வங்கிக்கான செயல் அல்லது சிலரை திருப்திப்படுத்துவதற்கான வேலைதான்.'' என்றார்.
காலனி என்ற சொல்லை நீக்கிவிட்டு வேறு எந்த பொதுப்பெயர் சூட்டினாலும் பட்டியல் சமூகத்தினர் மீதான ஒடுக்குமுறை தொடரவே செய்யும். தீண்டாமைக்கு எதிரான தீவிர போரை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.