தமிழ்நாட்டில் ஆளும் ஆட்சிக்கு எதிராக, வாய்க்கு வந்ததைப் பேசி அவ்வப்போது குட்டு வாங்கிக்கொள்வது எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் வழக்கமான செயல். அதுபோல், இந்த முறையும் அப்படி பேசி வைக்க, வேட்டையாளருக்கு ஆதரவாக வனச்சட்டத்தினை மீறுகிறதா எதிர்க்கட்சி என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்திலும் அண்டை மாநிலத்திலும் பல்வேறு காரணங்களால் யானைகள் தொடர்ந்து பலியாகிவருகின்றன. இப்படி யானைகள் பலியாவதற்கான பல காரணங்களில் ஒன்று அவற்றின் இயற்கையான வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாளர் களால் கையகப்படுத்தப்படுவது. அப்படி கையகப்படுத்தப்பட்ட இடத்தை வனத்துறை யுடன் இணைந்து தமிழக அரசு மீட்டிருக்கும் விஷயத்தை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை விமர்சிக்கமாலாவது இருந்திருக்கவேண்டும் என்று வன ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர்.
கடந்த 10-05-2024 அன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியிலிருந்த, யானை வலசைப் பாதை ஆக்கிரமிப்பினை வனத்துறையினர் அகற்றினர். முறையாக மூன்று முறை நோட்டீஸ் வழங்கியும் கண்டுகொள்ளா ததால், உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்ட வனத்துறையினர், மணல் திட்டிலுள்ள ஆக்ரமிப்பினை அகற்ற முற்பட்டனர். இந்த நிலையில், வீட்டிலிருந்தவர்கள் வெளியேற மறுக்கவே போலீஸ் உதவியுடன் அவர்களை அப்புறப்படுத்தியது வனத்துறை. அப்பொழுது, அந்த வீட்டிலுள்ளவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது.
இந்த விஷயத்தில் என்ன நடந்தது? ஏது நடந்தது? என விசாரிக்காமலேயே ஆளும்கட்சியை விமர்சிக்க ஒரு விவகாரம் கிடைத்ததாகக் கருதி, "தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட தி.மு.க. அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம். மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம்கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு தி.மு.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்' என தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி.
அவரைத் தொடர்ந்து உண்மை விஷயத்தை அறியாமலேயே தங்கள் பங்குக்கு அ.ம.மு.க., பா.ஜ.க. தரப்பும் தி.மு.க.வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது.
தருமபுரி மாவட்ட வனத்துறையோ இவ்விஷயத்தில் தங்களது தரப்பை நியாயப் படுத்த, "தருமபுரி மாவட்ட வனக் கட்டுப் பாட்டிலுள்ள பென்னாகரம் வனச்சரகத்திற்குட் பட்ட பேவனூர் காப்புக்காட்டில், ஒகேனக்கல் அருகே மணல் திட்டு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டாய் மற்றும் சிறிய ஓட்டு வீட்டினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், கூடுதல் தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு வனச்சட்டத்தின் படியும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படியும், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடுமே அகற்றினர்.
ஏனெனில் இந்தப் பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும், யானை உள்ளிட்ட வன விலங்கு களின் வலசைப் பாதையாக இருப்பதாலும், வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டு வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும், வனப்பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணன் எனபவர் பூர்வகுடி அல்ல! அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளைநிலங்களும், வீட்டு மனையும் இருக்கும்போது வனப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தார். அகற்றும் போது சிலர் நாடகமாட சர்ச்சையானது'' என விளக்கமளித்து சர்ச்சை வீடியோவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
"இந்த விளம்பரம் தேவையா? என நகைச்சுவை நடிகர் செந்திலை, கவுண்டமணி கலாய்ப்பதுபோல், "நமக்கு இது தேவையா..? ஆக்கப்பூர்வமாய் அறிக்கை விடலாமே..?' என்பது போல் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கலாய்த்துவரு கின்றனர் நெட்டிசன்கள்
______________
சி.எஸ்.ஐ.க்கு சொந்தமான இடத்தில் மோசடி!
சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடம், முறைகேடாக தனியாருக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்த செல்வராஜ், "கடந்த 45 வருடமாக செயல்பட்டுவரும் சி.எஸ்.ஐ. அமைப்பின் சென்னை பேராயரான பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மே 14ஆம் தேதி நடைபெறும் பேராயருக்கான தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர். தற்போது பேராயர் இல்லாத காரணத்தால் செயலாளராக அகஸ்டின் பிரேம்ராஜ், துணைத்தலைவராக ஜெயசீலன் ஞானோதயம், பொருளாளராக டாக்டர் கொர்னாலிஸ் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். பேராயர் தேர்தலில் போதகர் பால் பிரான்சிஸ் போட்டியிடுகிறார். கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் சி.எஸ்.ஐ. அமைப்புக்கு சொந்தமான 109 கிரவுண்ட் இடத்தில் 2000 சதுர அடி நிலத்தை, ஸ்ரீசக்ரா என்டர்பிரைசஸ் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு, பொருளாளர் கொர்னாலிஸ் மற்றும் போதகர் பால் பிரான்சிஸ் இணைந்து, செயலாளர் அகஸ்டின் பிரேம்ராஜ், துணைத்தலைவர் ஜெயசீலன் ஆகியோரின் கையொப்பமில்லாமல் மோசடியாக லீசுக்கு வழங்கியுள்ளனர். சி.எஸ்.ஐ.க்கு சொந்தமான இடத்தை லீசுக்கு வழங்க, பேராயருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பேராயருக்கான தேர்தல் நடக்கும் நேரத்தில் மோசடியாக லீசுக்கு விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப் பட்டுள்ளதை விசாரிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக போதகர் பால் பிரான்சிஸை தொடர்புகொண்டபோது, மீட்டிங்கிலிருப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார்.
-அரவிந்த்
படங்கள்:எஸ்.பி.சுந்தர்