நமது ‘நக்கீரன்’ இதழின் வாசகர்களுக்கு வணக்கம்!
ஒரு நடிகராக, ஒரு டைரக்டராக, ஒரு தயாரிப்பாளராக நீங்கள் என்னை அறிந்திருப்பீர்கள்.
காரணம்... எனக்கான அந்த அடையாளங்களைத் தந்தது மக்களாகிய நீங்கள்தான்.
நக்கீரன்’இதழில், எனது சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை பற்றிய எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவே நான் "நினைவோ ஒரு பறவை'’ என்ற தலைப்பில் எழுதவிருக்கிறேன். இதற்காக ‘நக்கீரன்’ வாரமிருமுறை இதழுக்கும், ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் தேங்ஸ்!
கூழாங்கல் தின்னும் பறவைகள் போல...!
இது... வலுக்கட்டாயமாக உங்களை நிறுத்தி வைத்து, வக்கணையாக அட்வைஸ் சொல்கிற தொடரல்ல.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்களின் இலக்கை எட்டிப் பிடிக்க பட்ட, படுகிற நஷ்டங்கள் -லாபங்கள் ஒவ்வொரு விதமானவை.
நான் எழுதும் என் சினிமா உலக அனுபவத்தை படிக்கிறபோதே என் நஷ்ட -லாபங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அந்தளவு ஜாலியாகவே உங்களுடன் எனது அனுபவங்களை எழுதுகிறேன்.
இது ஏதோ ஒருவகையில் உங்களுக்கு எண்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். கூடவே உங்களுக்கு சில சேதிகளையும் தரும்.
எங்கோ ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, பெருநகரத்தில் நுழைந்து, சினிமாவில் நுழைவதற்கு முன்பே "உலக நாயகன்' கமல்ஹாசன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அஸோஸியேட் அனந்து சார், ஓவியரும் நடிகருமான சிவகுமார் சார் உள்ளிட்டவர்களின் நட்பில் இணைந்து, "இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் சீடனாகி, "மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், "நடிகர் திலகம்' சிவாஜி ஆகியோருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றேன்.
எம்.ஜி.ஆரை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் சாரின் "சத்யா மூவீஸ்' தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு, அஜீத், விஜய் இப்படி ஏகப்பட்ட நட்சத்திரங்களுடனான அனுபவம்...
மொத்தத்தில்...
"எம்.ஜி.ஆர் முதல் எஸ்.டி.ஆர் வரை' என்றும், "ராதிகா முதல் ஜோதிகா வரை' என எனது திரை அனுபவங்களைச் சொல்லலாம். இதை ஒரு "எதுகை', "மோனை'க்குத்தான் சொல்லியுள்ளேன். இவர்களைத் தாண்டி இன்றைய பல நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என என் அனுபவம் பெரிது. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் இயங்கிக்கொண்டிருக்கும் நான்... இன்று ஆயிரம் படங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் நடிகனாக இருந்துகொண்டிருக்கிறேன்.
என்னை ஊருக்குச் சொல்லிய சினிமாவுக்கு நன்றி சொல்லி, அந்தப் பெருமிதத்தோடு இந்தத் தொடரை எழுதுகிறேன்!
பொதுவாக பறவைகள் என்பது ஸ்லிம்மான உடல்வாகு கொண்டே இருக்கும். (தீக்கோழியும் பறவை இனம்தான். அது 150 கிலோ இருக்கும். ஆனால் அது பறக்க முடியா வகையைச் சேர்ந்த பறவை.)
இயற்கையிலேயே சிறிய வயிறுதான் பறவைகளுக்கு உண்டு. அதுக்கு தொப்பை கிடையாது. உணவைச் சேமித்து வைக்கும் பையும் கிடையாது. கொஞ்சம் சாப்பிட்டதும் உடனே வயிறு நிரம்பிவிடும். வயிறு நிரம்பியதும் மீண்டும் பறக்க ஆரம்பித்துவிடும். பறப்பதால் மீண்டும் பசிக்கும். அதனால்தான் பறவைகள் அடிக்கடி உணவு உட்கொண்டபடியே இருக்கும். ஆக உணவு தேடுவதே பறவையின் மெயின் டூட்டி.
மனுஷனும் செவிக்கு உணவு தேடிக்கிட்டே இருந்தால்தான் புதுப் புதுச் சிந்தனைகள் வரும்னு சொல்வாங்க. என்னளவில் எனக்கான தேடலுடன்தான் இருக்கிறேன் இப்போதும்.
பழம் தின்னும் பறவைகள் பழம் தின்றதுமே ஓரிரு சிறு கூழாங்கற்களையும் தெரிந்தே தின்னும். வயிற்றுக்குள் போன பழத்தின் கடினமான விதைகளை நொறுக்கி ஜீரணம் செய்வதற்காக இப்படிச் செய்யுமாம்.
அதுபோலத்தான் தேடலின்போது நாம் தேடியதெல்லாம் கிடைத்துவிடாது. நாம் தேடாத, தேட விரும்பாத, கசப்பான, ஜீரணிக்கவே முடியாத அனுபவங்களும் கிடைக்கும். அதை பழம்தின்னிப் பறவையின் டெக்னிக் போல, அடித்து நொறுக்கிவிட்டு... போய்க்கிட்டே இருக்கணும்.
டைட்டில் போட்டாகிவிட்டது.
அடுத்த இதழில் இருந்து படத்த போட்ருவோம்...
"அச்சு ஊடகம்' எனும் அகண்ட வானவெளியில் என் மனமெனும் நினைவுப் பறவையும் தன் அனுபவங்களை பகிரவிருக்கிறது.
நன்றி!
இப்படிக்கு
மனோபாலா
(பறவை விரிக்கும் சிறகை)