(8) பார்த்தோம்... ஆனா பேசல!

"சூரியகாந்தி'’ படப்பிடிப்பில் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனின் உதவியாளராக இருந்து, முத்துராமனுக்கும், ஜெயலலிதாவுக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை சொல்லிக் கொடுத்த துருதுருவென இருந்த டீன்ஏஜ் பையனான கமல்ஹாசன் மீதுதான் என் கவனம் நின்றது.

"சிவப்பாகவும், அழகாகவும் இருக்கிறவங்கதான் சினிமாவில் நடிக்க முடியும்' என்கிற காலகட்டம் அது.

"பார்க்க வசீகரமாக இருக்கிற கமல்ஹாசன் ஏன் சினிமாவில் நடிக்காம, டான்ஸ் அசிஸ்டெண்ட்டா இருக்காரு?'’ என வடபழநி விஜயா கார்டனிலிருந்து, மைலாப்பூர் சோலையப்பன் தெருவிலுள்ள எனது அறைக்கு நடந்துவரும் நேரத்தில் கமல் பற்றியே யோசித்துக்கொண்டு வந்தேன்.

Advertisment

manobala

முதன்முதலாக பார்க்கும் போதே கமலின் அறிவையும், திறமையையும் உணர முடிகிறது. அப்படிப்பட்ட கமலே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டுதான் சினிமாவில் இருக்கிறாரென்றால், நமக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கேள்வியும் என்னைக் குடைந்தது.

சினிமா ஆசை பிடித்த நான் ஏன் இப்போது ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன்? நான் ஊரில் இருக்கும்போதே, ‘"ஆனந்த விகடன்'’ புகழ் ஓவியர் மாயாவின் ஓவிய பயிற்சிப் பள்ளியில் தபால் மூலம் ஓவியப் பயிற்சி தருவதாக விளம்பரம் வந்தது. அதே போல புகழ்பெற்ற ஓவியர் கோபுலுவின் சித்திரப் பயிற்சிப் பள்ளியிலும் தபால் மூலம் பயிற்சி தருவதாகவும் விளம்பரம் வந்தது. நான் தபால் மூலமே அந்த பள்ளிகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்க முடியும். ஆனால், நான் ஏன் சென்னைக்கு வந்து அரசு கல்லூரியில் சேர்ந் தேன். சென்னையில் இருந் தால்தான் சினிமா உலகில் நுழைய முயற்சிக்க முடியும். முதலில் சினிமாவில் ஏதோ ஒரு துறையில் நுழைந்துவிட்டால், பிறகு நாம் விரும்பும் துறைக்கு மாறிவிடலாம். அதுபோலத்தான் கமல்ஹாசன் இப்போது சினிமாவில் டான்ஸ் அஸிஸ்டெண்ட்டாக இருக்கிறார். நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார். அது அமையும் போது, நிச்சயம் பெரிய நடிகராக உயருவார்... -இப்படி கமல் பற்றி என்னைக் குடைந்த கேள்விக்கு, எனக்குள்ளேயே பதிலையும் கண்டுகொண்டேன்.

நடிகர் சிவக்குமார் சார், சென்னை அரசு ஓவியக் கல்லூரியில் படித்தவர்தான். இப்போது நான் அந்தக் கல்லூரியில் ஐந்தாண்டுகள் பெயிண்ட்டிங் படித்து வருவதால் சிவக்குமார் சாரை அவ்வப்போது போய் பார்ப்பேன்.

"யாரு சார் கமல்ஹாசன்? நடிக்கிறத விட்டுட்டு, டான்ஸ் அசிஸ்டெண்ட்ட்டா இருக்காப்ல?''’என ஆதங்கப்பட்டேன்.

"அது சீனிவாசன் பையன்''’என்றார் சிவக்குமார்.

"ஏதோ எங்க பக்கத்து வீட்டு சீனிவாசன்' என்பதுபோல அவர் சொன்னார்... எனக்கு பிடிபடவில்லை.

"ஆழ்வார்பேட்டைல, எல்டாம்ஸ் ரோடு கார்னர்ல இருக்கிற பெரிய்ய வீடுதான் அவங்க வீடு'’என்று அட்ரஸ் சொன்னார்.

அன்றிலிருந்து, நான் கல்லூரி முடிந்து எனது மைலாப்பூர் அறைக்கு நடந்து செல்லும் போதெல்லாம் ஆழ்வார்பேட்டை கமல் வீட்டிற்குப் போய் ‘கமலைப் பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் நான் போகிற நேரமெல்லாம் ‘கமல் ஷூட்டிங் போயிருப்பதாகவே’பதில் சொல்வார்கள்.

தினசரி ஆழ்வார்பேட்டை கமல் வீட்டிற்குப் போனதால், கமலின் நண்பரான (இன்றைய நடிகரும், இயக்குநருமான) சந்தானபாரதி எனக்கு பரிட்சயமானார். நானும், சந்தானபாரதியும் நெருங்கிய நண்பர்களானோம். அவரின் வீட்டிற்கும் போவேன்.

சந்தானபாரதியின் அப்பா எம்.ஆர்.சந்தானம் அந்தக்கால நாடகத்திலும், சினிமாவிலும் நடிகராக இருந்தார், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதன்முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி'’மற்றும் "மர்மயோகி'’உள்ளிட்ட எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

manobala

"வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்',’"பாசமலர்'’ஆகிய படங்களில் நடிகர்திலகம் சிவாஜியுடன் நடித்துள்ளார்.

அண்ணன் -தங்கை பாசத்திற்கு இன்றள வும் உதாரணமாகச் சொல்லப்படும் "பாசமலர்'’ படத்தைத் தயாரித்தவர் எம்.ஆர்.சந்தானம். அவரின் மகனான சந்தான பாரதியுடன் என் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்தது.

"ஏம்ப்பா... கமல்ஹாசன் ஏன் நடிக்காம டான்ஸ் அசிஸ்டெண்ட்டா இருக்காரு? தி.ஜானகிராமன் எழுதிய ‘"அம்மா வந்தாள்'’ கதையை படமா எடுத்தா, இளம் நாயகனா கமலும், வயது முதிர்ந்த பெண்ணாக லட்சுமியம்மாவும் நடிச்சா அருமையா, பொருத்தமா இருக்குமே''” என சந்தானபாரதி யிடம் எனது அபிப்ராயத்தைச் சொன்னேன்.

"இதை நீ கமல்ஹாசன் கிட்டவே சொல்லு''”

"எனக்கு அவர்கூட பழக்கமில்லை''”

"வா... நான் கூட்டிப் போய் அறிமுகப் படுத்துறேன்''’எனச் சொல்லி என்னை, கமல் வீட்டுக்கு அழைத்துப் போனார். ஆனால் நாங்கள் போன நேரம் கமல் அவுட்டோர் ஷூட்டிங் போயிருந்தார். இருப்பினும் கமலின் அண்ணன் சாருஹாசனை அறி முகப்படுத்தி வைத்தார். நான் ஓவியக் கல்லூரியில் பெயிண்டிங் படிப்பதை அறிந்து, மகிழ்ச்சியடைந்தார். சாருஹாசனின் துணைவியார் மன்னியும் என்னிடம் அன்பாக பேசினார்கள்.

சந்தானபாரதி மூலம் திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த (இன்றைய பிரபல கேமராமேன்) பி.சி.ஸ்ரீராமுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. மணியும் நண்பரானார். நண்பர் மணி தான் இன்று புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மணிரத்னம். கமல் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த "உணர்ச்சிகள்', "சிறை'’படங்களை இயக்கி, பின்னாளில் புகழ்பெற்ற டைரக்டரான ஆர்.சி.சக்தியையும் அங்குதான் சந்தித்தேன். கமலின் நண்பர்கள் வட்டத்தில் இப்போது நானும் சேர்ந்தேன்.

ஆழ்வார்பேட்டை வீட்டுக்கூடத்தில் உட்கார்ந்து சதா சினிமாவைப் பற்றியே சலிக்காமல் பேசிக்கொண்டிருப்போம். கமலின் ஆழ்வார்பேட்டை வீடு எங்களின் சரணாலய மாகவே அமைந்தது.

டைரக்டர் கே.பாலசந்தர் சாரோட அசோஸியேட் அனந்து சார், கமல் வீட்டுக்கு வழக்கமா வருவார். அனந்து சார்தான் சென்னையில் இருக்கிற ஜெர்மன் நாட்டு கலாச்சார மையமான மேக்ஸ்முல்லர் பவனுக்கும், அமெரிக்க தூதரக கலாச்சார மையத்துக்கும் என்னை அடிக்கடி கூட்டிட்டுப் போய், அங்கே திரையிடப்படுற உலக சினிமா படங்களை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

சென்னையில் இப்போது செம்மொழிப் பூங்கா இருக்கிற இடத்தில் டிரைவ்-இன்- உட்லண்ட்ஸ் ஹோட்டல் இருந்தது. கார்ல உட்கார்ந்தபடியே ஆர்டர் பண்ணி சாப்பிடலாம் இந்த ஹோட்டலில். பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இந்த ஹோட்டலுக்கு வருவாங்க.

"நாம தரையில உட்கார்ந்து திரையில பார்த்த நட்சத்திரங்கள்லாம் இதோ.... கண்ணு முன்னாடி நிக்கிறாங்களே'னு பார்க்கப்... பார்க்க பரவசமா இருக்கும்.

"சூரியகாந்தி'’படத்துக்குப் பின்னாடி, கமல்ஹாசனை இந்த ஹோட்டல்ல பார்த்தேன். ஆனா அவர் பிஸியா இருந்ததால் அறிமுகமாகிக்க முடியல.

கமலைத் தேடிவந்த எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு

(பறவை விரிக்கும் சிறகை)