dd

(44) பணமும், பயமும்!

Advertisment

தாசிரியர் கலைமணி உருவாக்கிய "பிள்ளை நிலா'’கதையை நான் இயக்கினேன். கலைமணியின் தம்பி பெருமாள் தயாரித்தார். மோகன், நளினி, பேபி ஷாலினி, ஜெய்சங்கர், ராதிகா உள்ளிட்டோர் நடித்தார்கள்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

வழக்கமாக ஒவ்வொரு சினிமா கம்பெனிகளிலும் படத்துக்கோ, கம்பெனிக்கோ எந்த வகையிலும் பிரயோஜனப்படாத ஆட்கள் சிலர் இருப்பாங்க. அப்படி தேவையில்லா ஆட்கள் இங்கவும் இருந்தாங்க.

Advertisment

அவங்க என்ன போட்டுக் கொடுத்தாங்களோ தெரியாது... என்கூட பேசுவதையே கலைமணி நிறுத்திட்டார்.

டயலாக் எழுதின பேப்பர்களை மட்டும் கொடுத்துவிடுவார். அவ்வளவுதான்.

ff

"நம்மளோட திறமையை படமா பார்த்திட்டு கலைமணி சார் பேசட்டும்'’என நினைத்துக்கொண்டு, கடுமையாக உழைத்தேன்.

"மனோபாலாவை வைத்து படம் பண்றவங்களுக்கு நான் உடனே கால்ஷீட் தர்றேன்'’ என தனது பிஸியான ஷெட்யூலிலும் அறிவித்தார் நடிகர் மோகன். ஆனாலும் பஞ்சு அருணாசலம், கோவைத்தம்பி என பிஸியான தயாரிப்பாளர்களாக இருந்த யாருமே, எனக்கு வாய்ப்புத் தர முன்வராத போது, கலைமணிதான் என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார். அந்த விளக்கு தான் இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

அதனால் "பிள்ளை நிலா'’ படத்தை பெரும் வெற்றிப்படமாக ஆக்க வேண்டும் என கடுமையாக உழைத்தேன். "சிறந்த டெக்னீஷியன்’என பெயரெடுக்க வெண்டும்' என்கிற சுயநலத்துடன் உழைத்தேன்.

எனக்கும் ஹாரர் படங்களுக்கும் சம்பந்தமில்லை. எங்க பாரதிராஜா சாரிடம் கூட "சிகப்பு ரோஜாக்கள்'’முடிந்த பிறகுதான் அஸிஸ்டெண்ட்டாக சேர்ந்தேன். இருப்பினும் தேர்ந்த ஹாரர் பட டைரக்டர் போல படத்தை ஸீன் பை ஸீன், ஷாட் பை ஷாட் கவனத்தோடு உருவாக்கினேன். என் உதவியாளராக இருந்த பெருமாள், இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருந்ததால், சுதந்திரமாக படப் பிடிப்பு நடத்த முடிந்தது.

கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லாத அந்தச் சமயத்திலேயே காட்சியில் இடம் பெறும் பொருட்கள் சுற்றிச் சுழலுவதாக பார்வையாளனுக்கு த்ரில் ஏற்படுத்தும்படி படத்தை உருவாக்கினேன்.

இந்தப் படத்திற்கு சத்யராஜ் கொடுத்த ஒத்துழைப்பையும் சொல்லியே ஆக வேண்டும். "நூறாவது நாள்' படத்திற்குப் பிறகு சத்யராஜின் சினிமா கெரியர் பிஸியா இருந்தது. ஒரே நாளில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவரை சந்தித்து ‘"பிள்ளை நிலா'’ படத்தில் "ஜப்பானிஷ் எக்ஸார்ஸ்ஸிட் மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்கணும்'’ என கேட்டுக் கொண்டேன்.

"நடிக்கிறேன்'னு ஒப்புக்கொண்டார். ஆனால் கால்ஷீட் எப்போது தருவார்? என்பது தெரியாமலேயே இருந்தது.

"நடுராத்திரிக்கு மேல ஒரு மணிக்கு வர்றேன். மூணு மணி வரைக் கும் நடிக்கிறேன். ரெண்டு மணி நேரம் கால்ஷீட் ஓ.கே.வா?''’எனக் கேட்டார் சத்யராஜ்.

சினிமாவில் தனி மனிதனால் மட்டுமே எதுவும் சாத்தியமில்லை. எல்லா ருமே ஒத்துழைப்பு செய்தால்தான் ஆச்சு. கூட்டு முயற்சிதான் வெற்றியைத் தரும்.

முழுப்படமும் தயாராகி டபுள் பாஸிடிவ் ரெடி.

கலைமணி படம் பார்த்து ஒப்பீனி யன் சொல்லவேண்டும்.

கலைமணி வந்து படம் பார்த்தார்.

நான் திக்... திக்... மனநிலையில் தியேட்டருக்கு வெளியே நிற்கிறேன்.

படம் முடிந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதமாக என்னுடன் பேசமால் இருந்த கலைமணி, படம் பார்த்துவிட்டு வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

"டைரக்டரே பிரமாதம்... பிய்ச்சிட் டீங்க. நான் பேப்பர்ல எழுதினதை பிரமாதமா காட்சிப்படுத்தீட்டீங்க. பேனா இருக்குனு பேப்பர்ல என்ன வேணாலும் எழுதலாம். நாக்கு இருக்குனு வாயால என்ன வேணாலும் சொல்லலாம். அதை விஷுவலா கொண்டு வந்துட்டீங்களே அது தான் பெரிசு. ‘"வாய்ஸ் ட்ராவல் ஆகுது'னு பேப்பர்ல எழுதிக் கொடுத்தேன். ஆனா, அதுக்காக டப்பிங்ல ரொம்ப மெனக்கட்டு அதை படத்துல கொண்டு வந்துட்டீங் களே...''” என மிகவும் பாரட்டினார்.

தயாரிப்பாளருக்கு பிடித்த மாதிரி படம் எடுத்திடலாம். ஆனா... கதாசிரியருக்கு பிடித்த மாதிரி படம் எடுக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். எப்படி எடுத்தாலும் அந்தக் கதையை எழுதின கதாசிரியர்கள் குறை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாங்க.

ஆனால் கதாசிரியரும் திருப்தி ஆகிற அளவுக்கு படத்தை இயக்கிய என்னை நானே மெச்சிக் கொண்டேன்.

படம் வெளியானது.

அதிரி புதிரி ஹிட்!

த்ரில்லர் -ஹாரர் படங்களை பொதுவாக ஃபேமிலி யோடு வந்து பார்க்க விரும்ப மாட்டார்கள். ஆனால் ‘"பிள்ளை நிலா'வின் தரம் ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வந்தது.

இந்த வெற்றியால் கிட்டத்தட்ட 16 புதிய பட வாய்ப்பு கள் என்னை அட்வான்ஸ் பணத்தோடு முற்றுகையிட்டன.

சாப்பிட காசில்லாமல், ஒரு சிறு பட வாய்ப்புகூட இல்லாமல், தங்க சரியான இடமில்லாமல் அலைந்துகொண்டி ருந்த என் நிலைமை மாறியது "பிள்ளை நிலா'’படத்தால்.

ஆனால் நான் வந்த சான்ஸையெல்லாம் ஒப்புக்கொள்ள வில்லை, கிடைத்த அட்வான்ஸையெல்லாம் வாங்கிப் போட்டுக்கொள்ளவில்லை. எனக்குப் பயம்தான் வந்தது.

ஜெயிக்கிறது முக்கியமில்லை... அதை தக்க வைக்கிறதுதானே முக்கியம்.

மணிவண்ணன் மாதிரி நான் வர்ற வாய்ப்பையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கொடுக்கிற அட்வான்ஸ் பணத்தையெல்லாம் வாங்கிப் போட்டுக்கொள்ளவில்லை.

காரணம்... மணிவண்ணன் ஸ்டைல் வேறு.

வர்ற வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு, அப்புறமாக தயாரிப்பாளர்களை சமாளிப்பான். எனக்கு அந்தப் பழக்க மில்லை. அதனால் பயமாக இருந்தது.

இதையறிந்த கலைமணி, “"நீங்க வர்ற வாய்ப்புகளை ஏத்துக்கிட்டு, அட்வான்ஸ்களை வாங்கிப் போடுங்க... ஒண்ணும் ஆகாது. அப்புறம் எப்பத்தான் வீடு வாசல் வாங்க முடியும்?''” என்றார்.

"எனக்கு வீடு வாசல் வாங்குற ஐடியாவெல்லாம் இருந்ததில்லை. திரையுலகில் நீண்ட காலத்திற்கு லைம் லைட்டில் இருக்க வேண்டும்' என்கிற ஆசை மட்டுமே எப்போதும் இருந்தது.

என் படங்களின் ஆஸ்தான ஸ்டில் போடோகிராஃபர் ஸ்டில்ஸ் ரவி, எனது டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பினார்.

யாருடைய கல்யாணத்திலும் இப்படி நடந்திருக்காது, யாருடைய கல்யாணமும் இப்படி நடந்திருக்காது.

ஆனால் என் கல்யாணத்தில் அடுக்கடுக்காய் நடந்த பல சம்பவங்கள் இருக்கே....

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்