(42) துரத்தியது துயரம்!

பாண்டிபஜாரில் ரோட்டுக் கடையில் ஒரு ரவா தோசை வாங்கி, நிறைய சாம்பாரை ஊற்றி, சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்....

"டைரக்டரே''” என்று ஒரு குரல்.

Advertisment

நம்மள டைரக்டரேனு மதிச்சு கூப்பிடுறது யாரு? வெக்காளியம்மன் என்னோட பிரார்த்தனைக்கு உடனே செவி சாய்ச்சிட்டாளா?’ என மனசுக்குள் எண்ணியபடி... திரும்பிப் பார்த்தேன்..... கதாசிரியரும், தயாரிப்பாளருமான பி.கலைமணி நின்றிருந்தார். அவருக்கு இந்த மாதிரி சாலையோர உணவகங்களில் சாப்பிடுவது ரொம்பவும் பிடிக்கும். நான் கிட்டத்தட்ட ஒரு தோசையை சாப்பிட்டு முடித்த தட்டுடனேயே அவர் அருகில் போனேன்.

"சார்''

"என்னங்க டைரக்டரே... எப்படி இருக்கீங்க?''

Advertisment

என்னை டைரக்டரே என அவர் திரும்பத் திரும்பச் சொல்ல... என் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.

"இருக்கேன் சார்... ஏதோ இருக்கேன்... வாய்ப் புத் தேடித்தான் அலைஞ்சுக்கிட்டிருக்கேன்''”

"நீங்க எதுக்குங்க வாய்ப்புத் தேடி அலையணும்? உங்களை வச்சித்தான் என்னோட அடுத்த படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன். முன்ன விட்டதெல்லாம் பிடிக்கப் போறேன். என்னோட அடுத்த பட டைரக்டர் நீங்க தான்''’எனச் சொல்லியபடியே "இதை வாங்கிக்கங்க'' எனத் தன் கையிலிருந்த ஐம்பது ரூபாயை என்னிடம் கொடுத்தார்.

அந்த ரூபாயை வாங்கி என் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.

"வெக்காளியம்மா... எனக்கு வழியக் காட்டிட்டியா...''’ என முணுமுணுத்தபடி என் சட்டைப் பாக்கெட்டில் ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டேன்.

dd

மனசு நிறைவா இருந்தது. ஆனால் வயிறு இன்னும் நிறையவில்லை.

"டைரக்டரே.... இன்னொரு தோசை சாப்பிடுறீங்களா?'' எனக் கேட்டார்.

வாய் வேணாம்னு சொல்லச் சொல்லுது. வயிறு வேணும்னு சொல்லச் சொல்லுது.

கடைசியில் வழக்கம்போல வயிறு ஜெயித்தது.

"சாப்பிடலாம் சார்'' என்றேன்.

ஒன்றுக்கு இரண்டு தோசையாக வாங்கிக் கொடுத்தார். வயிறு முட்ட சாப்பிட்டு முடித்தேன்.

"எங்க தங்கியிருக்கீங்க?''

"திருவள்ளுவர் சாலையில தான் ரூம்''

"வாங்க போலாம்''’என்றார்.

இருவரும் பேசிக்கொண்டே எல்டாம்ஸ் ரோட்டுக்குப் பின்புறமுள்ள திருவள்ளுவர் சாலையில் நான் தங்கியிருந்த அறைக்கு வந்தோம். என் அறையில் தங்கியிருந்த நண்பர் எம்.எஸ். மதுவையும் பார்த்து நலம் விசாரித்த கலைமணி, கிளம்பும் போது.... "நாளைக்கி காலைல ஆபீஸுக்கு வாங்க''’எனச் சொல்லிவிட்டு சைக்கிள் ரிக்ஷா பிடித்து கிளம்பினார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகுதான் எனக்கு நினைவே வந்தது... ‘காலைல வரச் சொன்னாரு. எங்க வந்து பார்க்கணும்னு கேட்காம விட்டுட்டோமே’ என யோசனையாக இருந்தது.

என் கையில் ஐம்பது ரூபாயைக் கொடுக்கும் போது ‘ஏற்கனவே விட்டதை உங்க மூலமா பிடிக்கப் போறேன்’ எனக் கலைமணி சொன்னது நினைவுக்கு வந்தது.

(நான் ஏற்கனவே தொடரில் சொன்ன விஷயத்தை இங்கே மீண்டும் நினைவுபடுத்துகிறேன்)

என் முதல் படமான "ஆகாய கங்கை' படப்பிடிப்பிற்காக பெங்களூரு போயிருந்தபோது, என்னைதான் தயாரிக்கும் படத்திற்கு டைரக்டராக ஒப்பந்தம் செய்ய வந்த கலைமணி, "ஆகாய கங்கை'’கதாசிரியரான மணிவண்ணனைப் பார்த்ததும் அவரிடம் அட்வான்ஸ் கொடுத்து, அவரை டைரக்டராக புக் பண்ணினார். அதுதான் "கோபுரங்கள் சாய்வதில்லை'’படம்.

காலையில் வெள்ளன என எழுந்து குளித்துத் தயாராக இருந்தேன்.

நண்பர் மது அதிகாலையிலேயே கிளம்பி வெளியே போய்விட்டார்.

அட்ரஸ் கேட்காம விட்டுட்டீயே’ என என்னை நானே கடிந்துகொண்டே இருந்த நேரத்தில்.... வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா நின்றிருந்தது. அருகே ஒரு சந்து வழியாக கலைமணி நடந்து வந்தார்.

"சார்... வாங்க...''” என்றேன். அவருக்கு காஃபி வாங்கித் தர என்னிடம் காசு இல்லை. அப்படியே வாங்கித் தருவதாக இருந்தாலும் நேற்று அவர் கொடுத்த ஐம்பது ரூபாயைத்தான் மாற்றணும். அதற்கு என் மனசு இடம் கொடுக்கவில்லை. இந்த அட்வான்ஸ் ரூபாயை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்ததால்...நோட்டை முறிக்கவில்லை.

"வாங்க டைரக்டரே... நேத்திக்கே சொன் னேனே... நீங்க தான் என் படத்துக்கு டைரக்டர்னு. ஆபீஸுக்கு வரச் சொன்னேனே... இன்னும் வராம இருக்கீங்களே...''“ என்றபடி சைக்கிள் ரிக்ஷாவில் ஏறச் சொன்னார். அவரும் ஏறிக்கொண்டார்.

ராயப்பேட்டையில் சிவாஜி ஃபிலிம்ஸ் ஆபீஸுக்கு பக்கத்தில் கலைமணி ஆபீஸ்.

ஆபீஸுக்குள் போனோம்.

என்னைப் பார்த்ததும் கலைமணியின் பார்ட்னர்களுக்கெல்லாம் "திக்'குனு ஆகிவிட்டது.

கலைமணி கூடச் சேர்ந்து, படத்துக்கு பூஜை போடுறதுக்கான வேலைகளில் இருக்கிறாங்க பார்ட்னர்கள். இந்த நேரத்தில் என்னை அங்கே பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்க அவங்க.

"இதுதான் நாம படம் பண்ணப் போற ஆபீஸா?'’ என நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.

பார்ட்னர்கள் திகைத்தபடி கலைமணியையே பார்த்தார்கள்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கதாசிரியர் "டைரக்டரே... நீங்க என்ன பண்றீங்கன்னா... வாசல்ல நாம வந்த சைக்கிள் ரிக்ஷா நிற்குது. அதுல ஏறிப் போய், எல்லையம்மன் காலனியில இருக்க எல்லையம்மன் கோவிலுக்குப் போய் நல்லா சாமி கும்பிட்டுட்டு வாங்க. அப்புறமா பேசிக்கலாம்’என்றார்.

அதன்படியே கிளம்பி கோவிலுக்கு வந்தேன்.

எல்லையம்மனை மனமுருகக் கும்பிட்டேன்.

"வெக்காளியம்மா எனக்கு ஒரு நல்ல வழிய காட்டிட்டம்மா'’என வெக்காளியையும் நினைத்துக் கொண்டு, மீண்டும் ரிக்ஷாவில் ஏறி ஆபீஸ் வந்தேன்.

சாப்பாடு ரெடி பண்ணியிருந்தார்கள்.

அப்போது கலைமணியின் தம்பி பெருமாள் என்னிடம் வந்து "வாங்க டைரக்டரே... இன்னொரு ஆபீஸ் இருக்கு. அங்க போய்ட்டு வந்திடுவோம்''’என்றார்.

"எதுக்கு இன்னொரு ஆபீஸ போய் நாம பார்க்கணும்? இதுதானே நாம வொர்க் பண்ணப்போற ஆபீஸ்?''’என யோசித்தேன்.

"வாங்க டைரக்டரே''’எனப் பெருமாள் அழுத்தம் கொடுத்ததால்... அவருடன் கிளம்பினேன்.

எல்லையம்மன் காலனியில் நான் முன்பு பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்க டைரக்டர் பாரதிராஜாவின் ஆபீஸ் அருகிலேயே ஒரு சின்ன ஆபீஸ் இருந்தது. அதுதான் பெருமாளின் ஆபீஸ்.

"டைரக்டரே.... என்னடா இப்படி சொல்றாங்களேனு தப்பா நினைக்கக் கூடாது...''

பெருமாள் அப்படிச் சொன்னதும், குழப்பமாகி அவரைப் பார்த்தேன்.

"அண்ணனோட சேர்ந்து படம் தயாரிக்கப்போற மூணு பார்ட்னர்களும் ‘மனோபாலா டைரக்ஷன்னா வேணாம்... மணிவண்ணன் தான் டைரக்ட் பண்ணணும்னு சொல்லீட்டாங்க. இந்த ஆபீஸும் மணிவண்ணன் டைரக்ஷன்ல ஒரு படம் தயாரிக்கிறதுக்காகத்தான் போட்டிருக்கோம். ஆனா... அண்ணன் சொன்னதை மறுக்க முடியாது. அதனால நீங்க இங்க இருந்துக்கங்க. நாம ஒரு படம் பண்ணுவோம். அந்த ஆபீஸுக்கு நீங்க போக வேண்டாம்'' என்றார் பெருமாள்.

என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எழுந்து வேகவேகமாக வெளியே வந்தேன். ஏதோ ஒரு ஆவேசம்... பக்கத்தில்தானே நான் பல வருடங்களாக பார்த்துவரும் எல்லையம்மன் கோவில். ஒரு தேங்காயை வாங்கி... சுக்கு நூறாகும் ஆவேசத்தோடு சாமிக்கு உடைத்தேன்.

எப்படி பழநி மலையடிவாரத்தில் ஒரு சபதம் செய்தே னோ... அப்படியே எல்லையம்மன் முன்னாடியும் ‘நான் டைரக்ட ராகாம உன் கோவிலுக்கு வரமாட்டேன்’ என சபதம் செய்தேன்.

நான் அலுவலகத்திலிருந்தே வெளியேறிய வேகத்தைப் பார்த்து, மிரண்டு போன பெருமாள், என் பின்னாலேயே ஓடி வந்து.... "வாங்க சார்... கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க''’எனச் சொல்லி சமாதானப்படுத்தி, ஆபீஸுக்கு அழைத்துச் சென்றார்.

பெருமாளே பாண்டிபஜார் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்தார். கோபம் அதிகமான நேரத்துல நிறைய சாப்பிடுவோம்.

(‘பருத்தி வீரன்’ படத்துல ரொம்ப கோபமான முத்தழகி நிறைய சாப்பிடுவா. இதை ரொம்ப அழகா காட்சிப்படுத்தி யிருப்பார் டைரக்டர் அமீர்.)

நிறைய சாப்பிட்டேன்.

மறுபடியும் ஒரு கேள்விக்குறி என் முன்னால்.....

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்