mm

(40) தலையெழுத்தை மாற்றும் தலையீடு!

Advertisment

பாக்யராஜோட "அந்த ஏழு நாட்கள்' படத்தைத் தயாரித்த நாச்சியப்பன் தயாரிப்பில், கார்த்திக்-சுஹாஸினியை வைத்து, டைரக்டராக என் முதல் படம் "ஆகாய கங்கை' படத்தை இயக்கி முடித்தேன்.

டபுள் பாஸிடிவ் பார்த்தும், படம் சிறப்பாக இருப்பதாக யூனிட்டே சொல்லியும்கூட, "படத்துல ஏதோ குறையுது... பாக்யராஜ்கிட்ட போகணும்' என்றார் தயாரிப்பாளர்.

"அறிமுக டைரக்டரோட படத்துல பெரிய டைரக்டர் தலையிட்டா, அறிமுக டைரக்டருக்கு சிக்கல் வரும்' என நான் எவ்வளவோ சொல்லியும், "கதாசிரியர் கலைமணிகிட்ட ஆலோசனை கேட்கலாமே...' என்று சொல்லியும், பாக்யராஜிடம் படத்தைக் காட்டிவிடுவதில் உறுதியாக இருந்தார்.

Advertisment

பாக்யராஜைப் போய்ப் பார்த்தோம்.

பாக்யராஜ், அவரோட உதவியாளர்கள், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் இருந்தாங்க.

"இன்னொரு டைரக்டரோட படத்துல நாம தலையிடுறது நல்லா இருக்காது' என பாக்யராஜிடம் சொன்னார் பாண்டியராஜன்.

"மனோபாலா முதல் படம்

பண்ணீருக்காரு. அவரோட ஸ்டைல்ல பண்ணீருப்பாரு. இதுல நான் தலையிட்டா சரியா வராது''’என நாச்சியப்பனிடம் பாக்யராஜ் சொல்லிவிட்டார்.

பாக்யராஜ் அப்படிச் சொல்லி என்ன பண்ண? "நீங்க எனக்காக ஏதாவது செய்யணும். ‘"அந்த ஏழு நாட்கள்'’மாதிரி இதையும் வெற்றிப் படமாக்கித் தரணும்''’என்றார் தயாரிப்பாளர்.

தயாரிப்பாளரின் வற்புறுத்தலுக்காக படத்தோட டபுள் பாசிடிவ் பார்த்த பாக்யராஜ், "படம் சீரியஸா இருக்கு. கவுண்டமணியும், எஸ்.என்.பார்வதியும் படத்துல இருந்தும், காமெடி மிஸ்ஸாகுதே''’எனச் சொல்லி கவுண்டமணியை வச்சு, ஏழெட்டு ஸீன் எழுதிக் கொடுத்தார்.

"என் படத்தில் பாக்யராஜ் தலையிடுவதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை'’என்பதை பாக்யராஜும் உணர்ந்துகொண்டார். "பாக்யராஜுக்கும் தலையிட விருப்பம் இல்லை' என்பதை நானும் தெரிந்துகொண்டேன். ஆனாலும் நிர்ப்பந்தத்திற்காக எழுதித் தந்தார்.

mmm

அதுல என்னன்னா... எல்லாமே டபுள் மீனிங் டயலாக்.

வேண்டா வெறுப்பா அந்த ஸீன்களை படமாக்கினேன்.

"எதுக்குப்பா ஒரு நல்ல படத்துல இப்படிப்பட்ட டயலாக்கையெல்லாம் வச்சு காமெடி எடுக்குறீங்க?''’என கவுண்டமணி கேட்டார், எஸ்.என்.பார்வதியம்மாவும் கேட்டாங்க.

ஆனா... "டபுள் மீனிங் காமெடி வேணும்'னு அடம்பிடிச்சு, ஷூட்டிங் ஸ்பாட்டுலயே நிக்கிறார் புரொடியூஸர். ஒளிப்பதிவாளர்கள் ராபர்ட்-ராஜசேகர் விருப்பமில்லாமத்தான் எடுத்துக் கொடுத்தாங்க. அந்த காமெடி ஸீன்களையெல்லாம் படத்தில் சேர்த்தாச்சு.

பின்னணி இசை சேர்ப்பிற்காக படம் பார்த்த இளையராஜா, அந்த பாக்யராஜ் எழுதிச் சேர்த்த காமெடி ஸீன்களுக்கு விழுந்து, விழுந்து சிரிக்கிறார்.

எனக்குன்னா ‘திக்...னு ஆகிவிட்டது.

காரணம்....

"இளையராஜா ஒரு படத்தைப் பார்த்து காறித் துப்பிட்டுப் போனா அந்தப் படம் சூப்பர் ஹிட்டா ஓடும். ஒரு படத்தை ரசிச்சார்னா ஓடாது' -இது, பாரதிராஜா படங்கள்ல வொர்க் பண்ணும்போது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்.

படம் வெளியாச்சு.

தோல்விப் படமா அமைஞ்சது.

ஆனா... படம் எடுத்துக்கிட்டிருக்கும்போதே, ஒவ்வொரு ஏரியாவும் நல்ல விலைக்கு விற்பனை ஆகிடுச்சி.

"அறிமுக டைரக்டரோட படத்துக்குள்ள ஆளாளுக்கு ஆலோசனை சொல்லி குதறி எடுத்தா, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்' என்பதற்கு நான்தான் உதாரணம்.

என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிட்டது.

ரெண்டு வருஷம்... படாத அவமானம் இல்லை... படாத கஷ்டம் இல்லை. சாப்பாட்டுக்கே மிகுந்த சிரமப்பட்டேன்.

அப்போது என் நண்பர் சிவாதான் கைகொடுத்தார். ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில்தான் வீடு. காலைல டிபன்லருந்து, அவங்க வீட்டுலதான். சிவாவோட மனைவி ரொம்ப தங்கமானவங்க.

"மனச தளரவிடாதீங்க. நாங்களே ஒரு படம் தயாரிக்கிறோம். நீங்க டைரக்ஷன் பண்ணுங்க''’எனச் சொன்னார்.

சொன்ன மாதிரியே சிவா தன் நண்பருடன் பார்ட்னராகச் சேர்ந்து கம்பெனி தொடங்கி னார். கார்த்திக்கை ஹீரோவாக வைத்து தொடங்கிய அந்தப் படம் "தூரத்துப் பச்சை.' கார்த்திக்குடன் சுஹாஸினி, அப்போது வெளிவந்த "சங்கராபரணம்'’படம் மூலம் பிரபலமாகியிருந்த துளசி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

கைக்கு பணம் எப்பப்ப வருதோ... அப்பப்ப ஷூட்டிங் வைப்பார் நண்பர் சிவா.

இதுக்கு மத்தியில... "16 வயதினிலே'’படத்தைத் தயாரித்த எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு கதாசிரியர் எம்.எஸ்.மது மூலமாக வந்தது.

கோடம்பாக்கம் பாலத்திற்குக் கீழே ஒரு இடத்தில், தான் தற்செயலாகச் சந்தித்தேன் மதுவை. நிறைய விஷயங்களைப் பேசினார். அவரை என்னுடைய அறையில் தங்கவைத்தேன்.

ராஜ்கண்ணு தயாரிப்பில் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்குப் பெயர் "பொண்ணு பிடிச்சிருக்கு.'’

பாரதிராஜாவின் "மண் வாசனை'’ படத்தில் அறிமுகமான பாண்டியன்-ரேவதி ஜோடியை இந்தப் படத்திலும் நடிக்க வைக்க தயாரிப்பாளரிடம் போராடினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

"பாண்டியன் ஏதோ வளையல் விக்கிறவனாம்... அவனை வச்சு படம் எடுக்கணுமா?'’என்று கேட்டார்.

"புதுமுகங்களை நல்லா பயிற்சி கொடுத்து நடிக்கவைப்பார் பாரதிராஜா. ட்ரெய்ன்-அப் ஆனவங்களை நடிக்க வைப்பதில் சிக்கல் இருக்காது'’என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

வேறொருத்தரை ஹீரோவாக நடிக்க வைக்கச் சொன்னார். ஹீரோயினாக தெலுங்கிலிருந்து ஒரு புதுமுகத்தை நடிக்க வைத்தேன்.

முதல் நாள் படப்பிடிப்பு.

பொதுவாக ஒரு டைரக்டர், தான் எடுக்கிற காட்சி சரியாக வராவிட்டால், அதில் நடிப்பவர்கள் எதிர்பார்த்தபடி நடிக்காவிட்டால், ரீ-டேக் போவார்கள்.

நானும் ரீ-டேக் போனேன். ஆனால் ஹீரோ- ஹீரோயினால் சரியாக நடிக்க முடியவில்லை.

"இன்று முழுக்க பயிற்சி கொடுத்துவிட்டு, நாளையிலிருந்து நடிக்க வைக்கலாம்' என நானும், கேமராமேன் ரவிபாபுவும் முடிவு செய்தோம். அவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, இரவு ஹோட்டலுக்கு வந்து தூங்கினோம்.

காலையில் பார்த்தால் ஒட்டுமொத்த யூனிட் ஆட்களையும் காணவில்லை. விசாரித்தபோது... பேரதிர்ச்சியும், பெருத்த அவமானமும் காத்திருந்தது எனக்கு.

(பறவை விரிக்கும் சிறகை)