(36) எம்.ஜி.ஆர். சொன்ன அட்வைஸ்!

"அலைகள் ஓய்வதில்லை'’படம் பார்த்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ’"சாதி மத பேதத்தோட வலியைச் சொல்ற இந்தப் படத்தை நாமதான் தூக்கிட்டுப் போகணும்' என்றார்.

ஒரு பேச்சுக்குத்தான் புரட்சித் தலைவர் அப்படிச் சொல்றாருனு நினைச்சேன். ஆனா... நிஜமாவே அதைச் செய்தார்.

1981-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பல்வேறு திரைப்பட விருதுகள் "அலைகள் ஓய்வதில்லை'’படத்திற்கு தரப்பட்டது.

Advertisment

"சிறந்த படம் முதல் பரிசு' விருது ஆர்.டி.பாஸ்கருக்கும், "சிறந்த இயக்குநருக்கான' விருது பாரதிராஜாவுக்கும், "சிறந்த இசை யமைப்பாளர்' விருது இளையராஜாவுக்கும், "சிறந்த பாடலாசிரியர்' விருது வைரமுத்து வுக்கும், "சிறந்த ஒளிப்பதிவாளர்' விருது பி.கண்ணனுக்கும், "சிறந்த கதாசிரியர்' விருது மணிவண்ணனுக்கும், "சிறந்த புதுமுக நடிகர்' விருது கார்த்திக்கிற்கும், "சிறந்த புதுமுக நடிகை' விருது ராதாவுக்கும் கிடைத்தது. எட்டு விருதுகளை அள்ளியது "அலைகள் ஓய்வதில்லை'. அத்துடன் மக்களும் இந்தப் படத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். இன்றளவும் "அலைகள் ஓய்வதில் லை'யின் தாக்கம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

"அலைகள் ஓய்வதில்லை'’ சூப்பர்ஹிட் ஆனதால் மறுபடியும் எங்க டைரக்டர் பாரதிராஜா ஃபுல்ஸ்விங் ஆயிட்டார்.

பிரகாஷ்னு ஒரு புரொடியூஸர். அவருக்கு எங்க டைரக்டரோட "சிகப்பு ரோஜாக்கள்'’படம் மேல் ஒரு கிக். அதுபோல ஒரு த்ரில்லர் படம் எடுக்கணும்னு டைரக்டர்கிட்ட வந்தார். கமல் உடனே கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படம்தான் ‘"டிக் டிக் டிக்'.

Advertisment

இந்த த்ரில்லர் படத்தோட படப்பிடிப்பு நடந்துக்கிட்டிருக்கும் போதே, "அலைகள் ஓய்வதில்லை'’தெலுங்கு பதிப்பு ஆஃபர் வந்தது.

"சீதகோகா சிலகா'’என்ற பெயரில் கார்த்திக்கை அவரின் சொந்தப் பெயரான முரளி என்கிற பெயரில் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகம் செய்தோம். "கல்லுக்குள் ஈரம்'’ படத்தில் எங்க டைரக்டருக்கு ஜோடியாக நடிச்சிருந்த அருணா தான் தமிழில் ராதா நடித்த நாயகி கேரக்டரில் நடித்தார்.

"ரீ-மேக்' என்பதால் பட வேலை சீக்கிரமே முடிந்தது.

மீண்டும் "டிக் டிக் டிக்'’வேலையைத் தொடங்கினோம்.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எனக்கு டைரக்டராகும் வாய்ப்பு கிடைக்க... எங்க டைரக்டரின் ஆசிர்வாதத் தோடு "ஆகாய கங்கை'’படத்தை இயக்கச் சென்றுவிட்டேன். இந்தப் படத்தில் கார்த்திக், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்தனர்.

"அலைகள் ஓய்வதில்லை'’படம் அதிரி புதிரியாக ஹிட்டடித்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்... படத்தின் 175-வது நாள் விழா எடுக்கப்பட்டது. முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு, படத்தின் நட்சத்திரங்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஷீல்டு கொடுக்கிறார்.

எல்லாருமே விழா நடப்பதற்கு முன்பே விழா அரங்கிற்குள் சென்றுவிட்டார்கள்.

ரொம்ப லேட்டா போனது படத்தின் ஹீரோ கார்த்திக்கும், நானும்தான். அதுவும் எவ்வளவு லேட் தெரியுமா? தலைவர் ஷீல்டெல்லாம் கொடுத்துட்டு பேசிக்கிட்டிருக்கார். நானும், கார்த்திக்கும் திருட்டுத்தனமாக மேடைப்பக்கமாக நுழைகிறோம்.

எம்.ஜி.ஆர். அதை கவனித்துவிட்டார் போல. படம் பற்றி பேசிக்கொண்டிருந்தவர் டாஃபிக்கையே மாற்றி, "நேரத்தின் அருமை'’குறித்து பேச ஆரம்பித்து விட்டார்.

"நேரம் ரொம்ப முக்கியம். திரு.முத்துராமன் அவர்களின் புதல்வன் கார்த்திக்கிற்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், ஒரு நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டால், முடிந்த அளவு குறித்த நேரத்துக்குள் வந்துவிட வேண்டும்... புரியுதா? அது யாரு? உங்க படத்து டைரக்டரா?''’என எம்.ஜி.ஆர் கேட்க...

dd

"ஆமாம்''’ என நான் தலையாட்டுகிறேன்.

எனக்கு மண்டையெல்லாம் வேர்த்துக் கொட்டுகிறது.

"ரெண்டு பேரும் மேல வாங்க''’என்றார்.

மேலே போனோம்.

கார்த்திக்கிற்கு ஒரு ஷீல்டைக் கொடுத்தார்.

நான் அவர் முகத்தையே பார்க்கவில்லை. தடாலென அவர் காலில் விழுந்து வணங்கிட்டு, எழுந்திரிச்சேன்.

எனக்கு ஒரு ஷீல்டைக் கொடுத்தார்.

நான் வாங்கிக்கொண்டு திரும்ப... என் தோள்பட்டையை பிடித்து இழுத்து, தன்னுடன் நிறுத்தினார் பாருங்க...! அங்கே இருந்த எல்லா கேமராக்களும் ஃபிளாஷ் மழை பொழிந்தது. தன்னைச் சார்ந்தவர்கள், தன்னுடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்களை வீட்டில் பெருமையாக மாட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் இப்படி செய்வார் எம்.ஜி.ஆர். அதிலும் பிரபலமானவர்கள் விருது பெறும்போது மின்னும் பத்திரிகை கேமரா ஃபிளாஷ்கள், சாதாரணக் கலைஞர்கள் விருது வாங்கும்போது கண்டுகொள்ளாது. அதனாலேயே எம்.ஜி.ஆர். இந்த டெக்னிக்கை கையாளுவார்.

புரட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள், அதை பெருமையாக தங்களின் வீட்டு வரவேற்பு அறையில் தொங்கவிடுவார்கள்.

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி:ஞானம்

________________

நான் தேடி அலையும் ஒரு புகைப்படம்!

"புரட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அதை பெருமையாக தங்களின் வீட்டு வரவேற்பு அறையில் தொங்கவிடுவார்கள். பார்க்கிறவர்கள்...

“"நீங்க எம்.ஜி.ஆர் கூட போட்டோவெல்லாம் எடுத்திருக்கீங் களா?'’என கேட்கிறபோது ஒரு பரவசம் கிடைக்குமே.

புரட்சித் தலைவர் எனக்கு ஷீல்டு தந்த புகைப்படத்தை எத்தனையோ கேமராக்கள் அந்த விழாவில் பதிவு செய்தது. ஆனால்... ஒரு போட்டோகூட என் கைக்கு கிடைக்கவில்லை.

நான் எழுதி வரும் "நினைவோ ஒரு பறவை'’தொடரை படிக்கிறவர்களில், "அலைகள் ஓய்வதில்லை'’நிகழ்ச்சியை படமெடுத்த புகைப்படக் கலைஞர்கள் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு ‘நக்கீரன்’ மூலமாக ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

புரட்சித் தலைவர் எனக்கு ஷீல்டு தந்த புகைப்படம் உங்களிடம் இருந்தால் ஒரு பிரதி எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்கிற உதவிக்கு உரிய மரியாதை செய்வேன்'' என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.