(35) எம்.ஜி.ஆரின் எடிட்டிங் சென்ஸ்!
"அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கு மூன்றுவிதமான க்ளைமாக்ஸை விவாதித்தோம்.
1. காதலர் ஜோடியை மதம் பிரிப்பதால், இருவரும் இறந்துவிடுவதுபோல் முடிவு வைப்பது.
2. கதைப்படி கார்த்திக்கின் தாயாராக வரும் கமலா காமேஷ் வெறித்துப் பார்க்க... அலைகள் பிரீஸாக ஆவது. இதன் மூலம் ’"நல்லதோ, கெட்டதோ... ஏதோ ஒன்று நடந்திருக்கிறது காதல் ஜோடிக்கு...'’என பார்வையாளர்களின் யூகத்திற்கே முடிவை விடுவது.
3. காதல் ஜோடி தங்களின் காதலுக்கு இடையூறாக இருக்கும் தங்களின் மத அடையாளங்களை துறந்துவிட்டு, புதிய வாழ்க்கையை நோக்கி பயணிப்பதாக காண்பிப்பது.
இந்த மூன்று க்ளைமாக்ஸில் துன்பியல் முடிவான மனமொத்த காதல் ஜோடி மத வேற்றுமைக்கு பலியாவது... அதாவது தற்கொலை செய்து கொள்வது என்கிற கதை முடிவை வைக்க டைரக்டர் தீர்மானித்தார் ஆனால் முதல் க்ளைமாக்ஸும், இரண்டாவது க்ளைமாக்ஸும் எனக்குப் பிடிக்கவில்லை.
விச்சு (கார்த்திக்) தன் மத அடையாளமாக தான் அணிந்திருக் கும் பூணூலை அறுப்பது, மேரி (ராதா) தன் மத அடையாளமான சிலுவையுடன் கூடிய சங்கிலியை அறுப்பது. இதன் மூலம் அந்த ஜோடி மத அடையாளம் துறந்து, தங்கள் காதல் பயணத்தை தொடரும் க்ளைமாக்ஸ்தான் எனக்குப் பிடித்திருந்தது.
"எந்த க்ளைமாக்ஸ்யா சரியா இருக்கும்?''’என டைரக்டர் என்னிடம் கேட்டபோது, "மத அடையாளம் துறக்கும் க்ளை மாக்ஸ் தான் சரியாக இருக்கும், பரபரப்பாகவும் இருக்கும்'' என்றேன். "யோவ்... நீ ஒரு ஐயர் வீட்டுப் பயலா இருந்துக்கிட்டு, பூணூலை அறுக்கிறதை எப்படிய்யா ஏத்துக்கிற?''’என வியப்போடு கேட்டார்.
"கதைக்கு அதுதான் பொருத்தம்''’என்றேன் நான்.
மக்கள் தொடர்பாளர் சித்ரா லட்சுமணனுக்கும் மத அடையாளத்தை துறக்கும் க்ளைமாக்ஸ் பிடித் திருந்ததால்... "இந்த க்ளைமாக்ஸை வைங்க. படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸா இருக்கும்'’என்றார்.
சித்ரா லட்சுமணன் ஏதாவது யோசனை சொன்னால் அதை பரிசீலனைக்கு உடனே எடுத்துக் கொள்வார் டைரக்டர்.
"இந்த கருத்தை கண்டிப்பா பாரதிராஜா எடுத்துக்கமாட் டார்'னு தெரியிற விஷயங்கள்ல சித்ரா லட்சுமணன் கருத்தே சொல்லமாட்டார்.
ஆனா நாங்க எல்லாவிதமான கருத்துக்களை யும் சொல்லித்தான் ஆகணும். ஏன்னா, டைரக்ஷன் துறைல இருக்கோமே... மனசுல தோணுனதையெல் லாம் சொல்லிட்டு, டைரக்டரிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது எங்களுக்குப் பழகிப்போனது.
டைரக்டருக்கும் இந்த க்ளைமாக்ஸ் மீது ஈர்ப்பு இருந்தது. அதனால் பரிசீலனையில் எடுத் துக்கொண்டார். எந்த க்ளைமாக்ஸ் வைப்பதானா லும் உடனே வைப்பதற்குத் தோதாக, மூன்று விதத் திற்கும் பொருந்தக்கூடிய ஷாட்டுகளை முட்டம் கடற்கரையில் படம் பிடித்துக்கொண்டு வந்தோம்.
ஏகோபித்த முறையில் மத அடையாளம் துறக்கும் க்ளைமாக்ஸே படத்தில் வைக்கப்பட்டது.
படத்தின் பின்னணி இசை அமைப்பதற்காக முழுமையாக படத்தைப் பார்த்த இளையராஜா, படம் பிடிக்காத அதிருப்தியுடன் விருட்டென எழுந்து போய்விட்டார்.
எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், "நிழல்கள் படம் சிறப்பாக இருப்பதாக இளைய ராஜா சொன்னார். ஆனால் அந்தப் படம் ஓடல. இப்போ இந்தப் படம் அவருக்குப் பிடிக்கல. அதனால் ஓடும்'’ என நாங்கள் சென்ட்டிமெண்ட் நம்பிக்கையில் இருந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இனிமையான பாடல்களும், பாரதிராஜா டச் நிரம்பிய இதமான காதல் காட்சிகளும், எதிர்பாராத க்ளைமாக்ஸும் படத்திற்கு ஆதரவாக அமைந்தது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் எங்க டைரக்டர் பாரதிராஜா, "அண்ணே... அண்ணே...''’என மிக உரிமையுடன் பழகினார்.
"நான் ராமாவரம் தோட்டத்துல இருக்கேன்''”
"முதலமைச்சர் கூட சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்''
"அண்ணன்கூட பேசிக்கிட்டிருக்கேன்''”
"நான் தோட்டத்துக்குப் போய் அண்ணனை பார்த்துட்டு வந்துடுறேன்...''”
"அண்ணே... இன்னும் அரை மணி நேரத்துல அங்க வந்துடுறேண்ணே...''’என எம்.ஜி.ஆருக்கு போன் செய்வார்.
அடிக்கடி இப்படி சொல்லிக்கொண்டிருப் பார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சருடன் இவ்வளவு நட்பா பழகினார் டைரக்டர். புரட்சித்தலைவரும், "பாரதி... பாரதி'’என அழைத்து டைரக்டருடன் பிரியமாக பழகினார்.
(முதலமைச்சரைப் பார்க்க டைரக்டர் போகும்போதெல்லாம் சித்ரா லட்சுமணனும் உடன் செல்வார். அதனால் முதலமைச்சருடன் சித்ரா லட்சுமணனுக்கும் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நட்பின் அடிப்படையில்தான் சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் சிவாஜி நடித்த ‘"ஜல்லிக்கட்டு'’படத்தின் நூறாவது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார். அந்த விழாவில் தான் சிவாஜிக்கு எம்.ஜி.ஆர். முத்தம் கொடுத்தார். அதுதான் எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சியாகவும் அமைந்தது.)
"அலைகள் ஓய்வதில்லை’படத்தை இன்னும் பெரிய லெவ லில் எடுத்துச் செல்ல வேண்டுமானால், எப்படியாவது "அலை கள் ஓய்வதில்லை' படத்தை முதலமைச் சரை பார்க்க வச்சிட ணும்'’என முயற்சித்துக் கொண்டிருந்தார் டைரக்டர். புரட்சித் தலைவரும் சம்ம தித்துவிட்டார். அப்போது நடிகர் சங்க வளாகத்திற்குள் ஒரு ப்ரிவியூ தியேட்டர் இருந்தது. அங்குதான் அவர் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படம் பார்த்த முதல்வர் எம்.ஜி.ஆர்., டைரக்டரை அழைத்து “"சிறப்பு... ரொம்ப சிறப்பா இருக்கு. பிரமாதமா இருக்கு. பாரதி.... ஜாதி இல்ல, மதம் இல்லங்கிறத எவ்வளவு அழகா சொல்லீருக் கீங்க. இந்தப் படத்தை எல்லா மட்டத்துலயும் கொண்டுபோய்ச் சேர்க்கிற மாதிரி, படத்தை நாம தூக்கிவிடணும்...'’என முதல்வர் சொல்லிக் கொண் டிருக்க... டைரக்டர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி.
"இந்தப் படத்துக்கு மூணு க்ளைமாக்ஸ் வச்சிருந்தீங்களோ?'’என புரட்சித்தலைவர் கேட்க...
டைரக்டருக்கு திக்குனு ஆகிடுச்சு.
"ஏன்... ஏன்... அப்படி கேட்குறீங்க?''”
"சில ஷாட்களைப் பார்த்தா அப்படித் தோணுது. ஒரு அம்மா... ‘ஏதோ நடக்கப் போகுதுங்கிற மாதிரி ஒரு பார்வை பார்க்குறாங்க. அந்த ஷாட் ரொம்ப நீளமா இருக்கு. ‘அந்தம்மா ஏதோ செய்யப்போறதா’ ஆடியன்ஸுக்கு தோண வாய்ப்பிருக்கு. அதனால் அந்த ஷாட்டோட லெந்த்தை கம்மி பண்ணிக்கங்க'’என்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர் அப்படிச் சொன்னதும் எங்களுக்கு ரொம்ப பிரமிப்பா ஆயிடுச்சு.
எங்க கதை இலாகாவுக்கும், டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டுக் கும் தெரிஞ்ச விஷ யம்... அதை புரட் சித் தலைவர் எவ் வளவு நுணுக்கமா கணிச்சிருக்கார் பாருங்க. இதன் மூலம் "எம்.ஜி.ஆர் எந்த அளவு எடிட் டிங் சென்ஸோட இருதிருக்கிறார்'னு பாருங்க.
அதனாலதான் ‘எம்.ஜி.ஆர் சாரோட எடிட்டிங் திறமை பற்றி பல இடங்களில் பல பிரபலங்கள் பேசிக் கும்போது எனக்கு அது வியப்பா இருக் காது. ஏன்னா... அவ ரோட எடிட்டிங் கூர்மையை ‘"அலை கள் ஓய்வதில்லை'’ப்ரிவியூவில் நேரடியா பார்த் தேனே.
"சாதி, மதம், பேதத்தோட வலியைச் சொல்ற இந்தப் படத்தை நாமதான் தூக்கிட்டுப் போகணும்'னு ஒரு பேச்சுக்குத்தான் புரட்சித் தலைவர் சொல்றாருனு நினைச்சேன். ஆனா... நிஜமாவே அதைச் செய்தார்.
அதுபத்தி அடுத்த அத்தியாயத்துல சொல்றேன்...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்
________________
விட்ட இடத்திலேயே புடி!
இளையராஜாவின் அண்ணனும், ‘"அலைகள் ஓய்வதில்லை'’படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றிருந்தவருமான ஆர்.டி.பாஸ்கருக்கு மணிவண்ணனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை.
"நிழல்கள்னு ஒரு கதையைச் சொல்லி, என் நண்பன் பாரதியை தோல்வியடைய வச்ச ஆளாச்சே...'’என்கிற கோபம்.
"நிழல்கள்'’படத்திற்குப் பின் ‘"அலைகள் ஓய்வதில்லை'’படத்தை பாரதிராஜா எடுத்தார். இதன் கதை மணிவண்ணன் எழுதியது.
"மனோபாலா, என்னய்யா... உங்க டைரக்டருக்கு என்னாச்சு? ‘நிழல்கள்’ படத்துக்கு கதை எழுதுன மணிவண்ண னை இந்தப் படத்துக்கும் கதை எழுத வச்சிருக்கான் பாரதி. இது எப்படிய்யா சரியா வரும்?'’என டென்ஷனாக கேட்டார்.
"பாஸ்கரண்ணே... இந்தக் கதை அருமையான காதல் கதைண்ணே. விட்ட இடத்துலதான புடிக்கணும். ‘"நிழல்கள்'’ மூலம் மணிவண்ணனால் விட்டதை, மணிவண்ணனை வச்சே இந்தப் படத்துல புடிப்பார் பாருங்க''’என்று சமாதானம் செய்தேன். "அலைகள் ஓய்வதில்லை'’ படத்திற்குப் பின் பாரதிராஜாவின் அலைகள் ஒருபோதும் ஓயவில்லை. அது பேரலையாகவே தொடர்ந்தது.