gg

(33) கதைக்கும், கப்பக் கிழங்கிற்கும் என்ன சம்பந்தம்?

Advertisment

"அலைகள் ஓய்வ தில்லை'’ படத்திற்காக ’"ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடல் பதிவு நடந்து முடிந்த தும், இளையராஜாவின் அண்ணனான தயாரிப்பாளரும், பாரதிராஜாவின் ஊர்த் தோழனுமான ஆர்.டி.பாஸ்கர் என்னிடம் வந்தார்.

நான்தான் அவரோட நச்சரிப்பு தாங்காமல் சிவாஜி- ஜெயலலிதா நடித்த "எங் கிருந்தோ வந்தாள்'’கதையையே புது கதைபோல் சொல்ல, அவரும் "ரொம்ப நல்லாருக்கு' ’எனச் சொல்லியிருந்தாரே.

"ஆயிரம் தாமரை மொட் டுக்கள்'’பாடல் பதிவானதும்... "ஏன் மனோபாலா, இந்தப் பாட்டு கதையில எந்த இடத் துல வருது?''’என கேட்டார்.

Advertisment

"அண்ணே... ராஜா சார் பாட்ட போட்டுக் கொடுத்திட் டாரு. உங்க ஃப்ரெண்டு பாரதி ஷூட்டிங் ஸ்பாட்டுல எப்படி தோணுதோ... அதுக்கேத்த மாதிரி கதையில சேர்த்துக் குவார்''’என சொன்னேன்.

முட்டம் கடற்கரை!

ஒரு பாறையில் அலைகள் முட்டி முட்டி நீர்த் திவலை களை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தது. இயறகையின் அந்த ஆர்ப்பாட்டம் பேரழகாக இருந்தது.

படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தோம்.

"டான்ஸ் மாஸ்டர் வந்தாச்சா?''’என டைரக்டர் கேட்டார்.

"மதுரை வந்து, அங்கருந்து கிளம்பிட் டாங்க சார்... வந்துருவாங்க''’என்றேன்.

"இங்க வா, அங்க பாறை தெரியுது பார்... பாறையோட முனை வரைக்கும் அப்படியே கைவீசிக்கிட்டு நடந்து போ''’என்றார்.

பாறைக்கு அந்தப் புறம் கேமரா யூனிட் இருந்தது. நான் டைரக்டர் சொன்னபடியே நடந்தேன்.

"எடுக்கப் போகும் பாடல் காட்சிக்கான விஷுவல் எப்படி இருக்க வேண்டும்' என்று பார்ப்பதற்காக என்னை அப்படி நடக்கச் சொன்னார். அந்தப் பாடல்தான் ‘"புத்தம் புது காலை... பொன்னிற வேளை'’என்கிற இனிமையான பாடல்.

அதற்குள் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவும், அவங்களோட டீமும் வந்துட்டாங்க. இந்தப் பாடலுக்கு சில ஷாட்டுகளை எடுத்த டைரக்டர், "அடுத்த பாடலை படமாக்கலாம்' எனச் சொல்லி ‘லொகேஷன் சேஞ்ச் பண்ணச் சொன்னார்.

அதுதான் ஹீரோ கார்த்திக்கிற்கு முதல் பாட்டு... "வாடீ ஏங் கப்பக் கெழங்கே'’பாடல்.

சரோஜா மாஸ்டரோட உதவியாளர் டி.கே.எஸ்.பாபுதான், கார்த்திக்கிற்கு அந்தப் பாடலுக்கான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் களைச் சொல்லிக் கொடுத்தார்.

இந்தப் படத்திற்கு முதலில் ஹீரோ வாக தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்த தீபக், ஏதோ ஒரு ஆர்வத்தில் நடிக்க சம்மதித்தாலும், அவனது விருப்பம்... நடிப்பை விட, நன்றாக படித்து வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பதாகவே இருந்தது. படத்தில் ஹீரோவுக்கு முதல் நண்பனாக தீபக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் டைரக்டர்.

"வாடீ ஏங் கப்பக் கெழங்கே'’பாடல் எடுத்துக்கொண்டிருந்தபோது லஞ்ச் பிரேக் டைம்மில் ஆர்.டி.பாஸ்கர் வந்தார்.

பாடலைக் கேட்ட பாஸ்கர், "பாலா, என்னப்பா... இப்படி ஒரு பாட்டை எடுக்குறீங்க? இந்தப் பாட்டை எப்ப ரெக்கார்ட் பண்ணுனீங்க?''’என கேட்டார்.

"நீங்க ஊருக்குப் போயிருந்தீங்கள்லண்ணே... அப்பதான் ரெக்கார்டு ஆச்சு''”

"கதையில ஹீரோ சித்தபிரமை பிடிச்சவன்னு சொன்னீங்க. இது என்னவோ, ஒரு பொண்ணை வம்பிழுத்து பாடுற பாட்டு மாதிரி இருக்கே? நீ என்கிட்ட சொன்ன கதைக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தமேயில்லாம இருக்கே...?''”

"என்னண்ணே நீங்க, வேகாத வெயில்ல வந்துருக்கீங்க... முதல்ல போய் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. சாயங்காலமா விவரமா சொல்றேன்''’என அவரை அனுப்பி வைத்தேன்.

அன்றைய படப் பிடிப்பு முடிந்து சாயங் காலமாக டைரக்டரின் ரூமிற்குப் போனேன்.

"சார்... நாளைக்கி காத்தால எந்த லொகே ஷன் போகணும்?''’என கேட்டேன்.

தாமரைக் குளம் தெரியுமா?”

"தெரியும் சார்... இங்கதான் நிறைய இருக்கே''”

"தாமரை பூத்திருக்க குளமா பார்த்து போக ணும். நூறு, இருநூறு பூவாவது குளத்துல இருக்கணும்...''”

"சார்... அங்க என்ன எடுக்கப் போறோம் சார்?''”

"ஸாங்தான்''”

"ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஸாங்கா... அதுல நிறைய கோரஸ் இருக்கு. தோழிப் பெண்களும் ஆடுறது மாதிரிதான், நான் டான்ஸர்ஸை வரவைக்கட்டுமா? நைட் பஸ் ஏறினா.... காலைல இங்க வந்துடுவாங்க''”

"அதெல்லாம் வேணாம்யா... லொகேஷன்ல போய் பார்த்துக்கலாம். நிறைய பூத்திருக்க தாமரைக் குளமா கண்டுபிடிச்சு வை''’என்றார்.

ஆர்ட் டைரக்டர் கமலசேகர் பத்தி இந்த இடத்தில் நான் குறிப்பிடே ஆகணும். டைரக்டர் கூட ‘"பதினாறு வயதினிலே'’ படத்திலிருந்து ஒர்க் பண்ணிட்டு வந்தார். இப்ப கமலசேகர் உயிரோட இல்ல. ஆனா... அவரோட ஞாபகம் மட்டும் எனக்குள்ள பசுமையா இருந்துக்கிட்டே இருக்கு.

டைரக்டர் தன்னோட மனசுல என்ன நினைக் கிறாரோ... அதை கச்சிதமாக, கலை வேலைப்பாடு மூலம் கொண்டு வந்துவிடுவார் கமலசேகர்.

நிறைய தாமரைகள் பூத்த ஒரு அழகான குளத்தை கண்டுபிடிச்சு, டைரக்டர்கிட்ட சொல்லியாச்சு. டைரக்டர் வந்து கரையில் உட்கார்ந்து, கேரா கண்ணோட பார்க்குறார்....

gg

திடீரென அவர் முகம் பிரகாசமாகிறது.

"யோவ்... குளத்துல இருக்க இந்த தாமரைப் பூக்களெல்லாம் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கணும், உற்சாகத்துல குதிக்கணும், நீந்தணும்... மொத்தத்துல மனுஷங்க தண்ணிக்குள்ள குதிச்சதும் செய்ற மூவ்மெண்ட்ஸ்களையெல்லாம் இந்த தாமரைப் பூக்களும் செய்யணும். அந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்''’என விவரித்த டைரக்டரின் முகம் மேலும் மேலும் பிரகாசமானது.

எங்க முகம்தான் இருண்டு போச்சு...

"என்னாது... தாமரைப் பூ ஓடணும்... உட்கார ணும்... பேசணும்... நீந்தணுமா?''’ என நினைத்து மலைப்பாக இருந்தாலும், அடுத்த நொடியே நாங்களும் ஆர்வமானோம். டைரக்டர் சொல்வதுதானே எங்களுக்கு வேத வாக்கு...

இருந்தாலும், "டைரக்டர் சொல்வதை எப்படி செய்து காட்டுவது' என்கிற யோசனையுடன் நானும், கமலசேகரும் உட்கார்ந்திருந்தோம். அப்படியே கண் களை அலைபாய விட்டோம்... ஒரு வீட்டில் வாழை மரம் கட்டப்பட்டிருந்தது. முந்தின நாள் அந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்திருப்பது தெரிந்தது.

அந்த வாழை மரத்தைப் பார்த்ததும் எங்கள் இருவருக்கும் ஒரு ஐடியா.

நேராக அந்த வீட்டுக்குப் போனோம்.

வீட்டில் இருந்த பெண்மணியிடம் "அத்தாச்சி... இந்த வாழை மரத்துலருந்து மட்டை உரிச்சிக்கலாமா?'’எனக் கேட்டோம்.

"எடுத்துக்கங்க. விசேஷம் முடிஞ்சிருச்சு. வாழைத் தண்டு வேணும்னாலும் தாராளமா எடுத்துக்கங்க'’என்றார்.

"எங்களுக்கு மட்டைதான் வேணும்''’என சொல்லிவிட்டு, சுமார் ஏழு அடி உயரமிருந்த அந்த வாழை மரத்தின் தடிமனான பட்டைகளை இருவரும் உரித்து எடுத்துக்கொண்டு வந்தோம்.

அப்போதெல்லாம் பால்பாயிண்ட் பேனா கிடையாது பரவலாக. இங்க் பேனாதான்.

பேனாவால் வாழை மட்டை முழுக்க சிறு சிறு துவாரங்களைப் போட்டு, தண்டுடன் தாமரை மலரைப் பிடுங்கி, அதை வாழை மட்டை துவாரத்தில் நுழைத்தோம் நானும், கமல சேகரும். அதை டைரக்டரிடம் காட்டினோம்.

வியப்பாகப் பார்த்தவர், "என்னய்யா பண்ணப் போறீங்க?''’எனக் கேட்டார்.

"இப்பப் பாருங்க...” என நானும், மணிவண்ணனும் தாமரைப் பூ கோர்க்கப்பட்ட வாழை மட்டையை ஆளுக்கொரு முனையில் பிடித்துக் கொண்டு, குளத்திற்குள் இறங்கினோம். முழுக்க சகதி. ஆனால் டைரக்டர் திருப்திதானே எங்களுக்கு முக்கியம்.

அப்படியே சேற்று நீருக்குள் மூழ்கிய இருவரும், தாம்ரைப் பூ வாழை மட்டையை அப் படியும், இப்படியும் அசைத்துக் காட்டினோம். பிறகு தலையை வெளியே தூக்கிப் பார்த்தோம்.

டைரக்டர் முகத்தில் ரொம்பவும் திருப்தி. “"இதுதான்யா... இதத்தான்யா எதிர்பார்த்தேன்'' என உற்சாகமாகச் சொன்னபடி... ஒளிப்பதிவாளர் பி.கண்ணனை அழைத்து தாமரைப் பூ அசைவுகளை... அதாவது நாங்கள் நீரில் மூழ்கியபடி வாழை மட்டையை அசைத்ததை, அழகிய தாமரைப் பூக்களின் அசைவுகளாக படம் பிடிக்கச் சொன்னார்.

"எனக்கு தமிழும் தெரியாது, இங்கிலீஷும் தெரியாது'’என தெலுங்கில் சொன்ன ஒரு நடிகை... பின்னாளில் தென்னிந்திய சினிமாவையே கலக்கு கலக்குனு கலக்கினார்.

அது யாரு?

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்