dd

(27) முறியடிக்கப்படாத சாதனை!

புதிய வார்ப்புகள்’ தெலுங்கு ரீ-மேக்கான "கொத்த ஜீவிதலு' படத்தில் சுதாகரின் நண்பன் ஹரிபிரசாத்திற்கு முன்பே கொடுத்திருந்த வாக்குப்படி அவரையே ஹீரோவா ஆக்கினார் டைரக்டர். ஹீரோயினாக ரதி நடித்த வேடத்தில் ரதியே நடிச்சா வேலை ஈஸியா முடியும்தான். ஆனால் "நிறம் மாறாத பூக் கள்'’படப்பிடிப்பில் ரொம்பவே கால்ஷீட் குளறுபடி செய்து விட்டார் ரதி. அதனால் அந்தத் தெலுங்குப் படத்திற்கு வேறொரு புது கதாநாயகியை நடிக்க வைக்க முடிவு செய்தார் எங்க டைரக்டர் பாரதிராஜா.

Advertisment

யார் அந்த கதாநாயகி?

கமல்ஹாசன் வீட்டுக்கு டைரக்டரும், நானும் போயிருந் தோம் சில விஷயங்களைப் பேசுவதற்காக.

அப்போது காலேஜ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தார் ஒரு பெண்.

Advertisment

நான் டைரக்டரிடம் “"சார்... இந்தப் பொண்ணு எப்படி இருக்கு பாருங்க?''’எனக் கேட்டேன்.

"அய்யய்யோ... நீ என்னய்யா சொல்ற? இந்த வீட்டுப் பொண்ண...''”

"ஆமாங்க.... இது சாருஹாசன் அண்ணாவோட பொண்ணுதான். சுஹாசினின்னு பேரு. ஏற்கனவே டைரக்டர் மகேந்திரன் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'ல’ அறிமுகப்படுத்தவிருக்கார். பெங்களூர்ல வச்சு ‘"பருவமே புதிய பாடல் பாடு'னு ஜாகிங் பண்ண வச்சு... ஒரே ஒரு பாட்டு மட்டும் எடுத்திருக்காரு மகேந்திரன்.

"அவ கேமராவுமன் ஆகணும்னு பிடிவாதமா இருக்கா. நீ வந்து நடிக்க வைக்கணும்னா எப்படி?'' என சாருஹாசன் சொல்ல...

"அண்ணா... நடிக்க வைங்களேன்'' என கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கினேன்.

சுஹாசினிக்கு கிடைச்ச மிகப்பெரிய வாய்ப்பு என்னன்னா... பெரிய டைரக்டரான மகேந்திரனால் தமிழ் சினிமாவுலயும், இன்னொரு பெரும் டைரக்டரான பாரதிராஜாவால் தெலுங்கு சினிமாவுலயும் ஒரே நேரத்தில் அறிமுகமானதுதான்.

அறிமுகம் இப்படி பிரமாதமாக அமைந்ததால்... மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பிஸியான கதாநாயகியாக ஆகிவிட்டார். சுஹாசினியின் நடிப்புத் திறமை அவரை தனித்துவமான நாயகியாக உயர்த்தியது.

manobala

தெலுங்கில் டாப் ஹீரோயின் ஆகிவிட்டார். தமிழில் விசு சார் படங்களுக்கு அழைத்து வரப்படுவார். நான் இயக்கிய படங்களுக்காகவும் அவ்வப்போது சுஹாசினியை தமிழுக்கு கொண்டு வருவேன். பாலசந்தர் சார் படங்களிலும் முத்திரை பதிப்பார் சுஹாசினி.

"நிறம் மாறாத பூக்கள்' படத்திற்கு வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். மிகப்பெரிய எழுத்தாளர். ஆனால் வசனத்தை மொத்தமாக எழுதிக் கொடுத்துவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரமாட்டார். சென்னையிலேயே இருந்துவிடுவார்.

ஆனால் எங்க டைரக்டருக்கோ ஸ்பாட்டில் டயலாக் ரைட்டர் ஒருத்தர் இருந்தே ஆகணும். அதனால் நானும் அஸிஸ் டெண்ட் டைரக்டரான ரங்கராஜனும் காதல் போர்ஷன், காதல் ஃபெயிலியர் ஆகும் போர்ஷன், விஜயன்-ராதிகா எமோஷனல்... இதற்கெல்லாம் டயலாக் எழுதினோம்.

உடனே டைரக்டர், "உங்க ரெண்டு பேர் பெயரையும் உதவி- வசனம்னு டைட்டில்ல போடவா?'' என கேட்டார்.

"அதெப்படி சார். அவர் எவ்ளோ பெரிய ரைட்டர். அவருக்கு நாங்க உதவியதா பேர் போட்டுக்கிறது மரியாதை இல்ல சார்''னு மறுத்துட் டோம்.

டைரக்டர் ஸ்ரீதர் படத்திற்காக அமெரிக்கா கிளம்புவதால் நான்கு நாட்கள் மட்டுமே ரதி கால்ஷீட் கொடுத்தார். அந்த இழுபறியிலும் ரதியின் காட்சிகள் "லவ்வபிள்' ஆக எடுக்கப்பட்டது. ரதியின் கேரக்டரும் ஆடியன் ஸை மிகவும் "டச்' பண்ணிவிட்டது.

"நிறம் மாறாத பூக்கள்' படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வசூல்ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது.

"16 வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "சிகப்பு ரோஜாக்கள்', "புதிய வார்ப்புகள்' மற்றும் "நிறம் மாறாத பூக்கள்' என தொடர்ச்சியாக ஐந்து சூப்பர்ஹிட் படங்களைத் தந்த பெருமையைப் பெற்ற இயக்குநர் ஆனார் எங்க டைரக்டர் பாரதிராஜா.

manobala

இன்றளவும் முறியடிக்கப்படாத ரெக்கார்டு இது.

"பாரதிராஜாவின் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கே சினிமா இண்டஸ்ட்ரி யில் பெரும் மரியாதை ஏற்பட்டது' என்றால் பாரதிராஜாவுக்கு இண்டஸ்ட்ரியிலும் மக்களிடத்திலும் எவ்வளவு புகழ், செல்வாக்கு இருந்தது என்பதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியுமா என்ன?

"என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணித் தாருங்கள்' என ஆளாளுக்கு எங்க டீமுக்கு ஹோட்டல்களில் ரூம் போட்டிருந்தார்கள். நடிகை ஸ்ரீப்ரியா கூட, எங்க டைரக்டர் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, டைரக்டருக்கு சோழா ஹோட்டலில் ரூம் போட்டுக் குடுத்திருந்தாங்க.

இப்படி ஒரு மாஸ் பீரியடில்தான் பாரதிராஜாவின் ஹேர் நிறம் மாறியது.

ஆமாம்... தலைமுடிக்கு முழுக்க கருப்புச் சாயம் பூசினார். அவரின் சுருள் முடிக்கு அது மிக அழகாக இருந்தது. அத்துடன் பல வண்ண ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வெள்ளை நிற பெல்பாட்டம் பேன்ட், வெள்ளை நிற முழுக்கை சட்டை, வாட்ச் அணிந்து பேன்ட்டுக்குள் சர்ட்டை இன் பண்ணிக் கொண்டார். கருப்பு ஷூ அணிந்தார்.

சினிமா துறையிலும், பொது மக்களிடமும் அவருக்கு இருந்த புகழ் அவரின் கருத்த மேனியில் மேலும் மினுமினுப்பை உண்டாக்கியது.

இதனால் எங்க டைரக்டரைப் பார்க் கிற சீனியர் சினிமா ஆட்களும், நண்பர் களும் "பார்க்கிறதுக்கு நிஜ ஹீரோ மாதிரி இருக்க' என ஏத்திவிட்டனர். இதனால் "ஹீரோவாக நடிக்கவேண்டும்' என்கிற ஆசை டைரக்டருக்கு வந்தாச்சு.

"பெங்களூர்ல இருந்து ஒரு நண்பர், என்கூட பார்ட்னரா படம் தயாரிக்க வர்றார். அந்தப் படத்தை நான் டைரக்ட் பண்றேன், நீ ஹீரோவா நடி'' என பாராதிராஜா படங்களின் கேமராமேனும் பாரதிராஜாவின் நண்பருமான நிவாஸ் சொல்ல...

பாரதிராஜா ஹீரோவான கதை...

(பறவை விரிக்கும் சிறகை)

படங்கள் : உதவி:ஞானம்