(22) சப்பாணி மாப்பிள்ளையும், கூத்துக் கலைஞனும்!
நானும் சந்திரசேகரும் (நடிகர் வாகை சந்திரசேகர்) நண்பர்கள். "திரை வானம்' என்கிற பத்திரிகையில் நான் பகுதி நேரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். கைச் செலவுக்கு காசு வேணுமே... அதுக்காகத்தான். பாரதிராஜாவிடம் உதவியாளராக சேரும் வாய்ப்பு அமைந்ததால் நான் பத்திரிகையிலிருந்து விலகிவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்துகொண்டிருந்த, சந்திரசேகரை சேர்த்துவிட்டேன். அந்த உதவியை சந்திரசேகர் மறக்கவில்லை. அந்த நட்பு எங்களுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது.
தன்னோட நடிப்புத் திறமையை வளர்த்துக்கிறதுக்காக "வைரம்' நாடக சபாவில் சேர்ந்திருந்த சந்திரசேகருக்கு அங்கு நடிகர் பெரியகருப்பத் தேவர் அறிமுகமானார். (இப்போ ரணசிங்கம்னு ஒரு படம் எடுத்தாரே டைரக்டர் விருமாண்டி. அவர் பெரியகருப்பத் தேவரோட மகன்)
பெரியகருப்பத் தேவர் கணீர் குரலில் பாடும் திறமை கொண்டவர். சந்திரசேகரோ கணீர் குரலில் பேசக் கூடியவர். நிறைய நாடகங்கள்ல பார்க்கிறப்போ சந்திரசேகர் குரல், கலைஞர் குரல் போல... கலைஞர் பேசுற மாதிரியே அழுத்தமாவும், உச்சரிப்பு சுத்தமாவும் இருக்கும். பின்னாளில் சினிமாவில் கலைஞர் வேஷத்தில் நடித்திருக்கிறார்.
வெளியூரில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த சந்திரசேகர், என்னைப் பார்ப்பதற்காக வந்தார்.
"புதிய வார்ப்புகள்'’படத்தின் படப்பிடிப்பிற்காக நாங்கள் நாளை சென்னை கிளம்புகிறோம்’ என்கிற தகவலை அவரிடம் சொன்னதுதான் தாமதம்...
"என்னப்பா நீ... பாரதிராஜா எங்க ஏரியாக்காரர். அவர் படத்துல நான் இருக்க வேணாமா?''’எனக் கேட்டார்.
"விளையாடுறியா நீ? எல்லா கேரக்டருக்கும் ஆர்டிஸ்ட் புக் பண்ணி, திங்கள் கிழமைலருந்து ஷூட்டிங் நடக்கப்போகுது. இப்ப வந்து வேஷம் கேட்கிற? ஒண்ணு செய்... பாரதிராஜா நாளை மறுநாள் கார்லயோ, ரயில்லயோதான் கிளம்புறார். அதுக்குள்ள நீ அவரைப் போய்ப் பார்த்திடு. ஏதாவது செய்வார். நீ கருமாத்தூர்காரன்ங்கிறது டைரக்டருக்கு நல்லாவே தெரியும். எப்படியாவது உனக்கான ஒரு கேரக்டர கன் ஃபார்ம் பண்ணிட்டு வந்துடு'' என்றேன்.
இது போதாதா?
ஊரிலிருந்து கிளம்பி வந்த பெட்டி யோடவே, தேனாம் பேட்டை எல்லையம்மன் காலனிக்கு, டைரக்டர் ஆபீஸுக்கு போய் டைரக் டரை பார்த்திட்டார்.
"வாய்யா சேகரு... டிராமவுல பிஸியா நடிக் கிறியாமே? இப்ப எதும் டிராமா இல்லையா?''”
"அத விடுங்க. நான் எப்ப கிளம்பணும்னு மட்டும் சொல்லுங்க?''”
"எப்ப கிளம்பணுமா? எங்க கிளம்பணும்கிற?''”
"ஒங்க ஷூட் டிங்குத்தான். நீங்கதான் நாள மறுநாள் கிளம்புறீங்களாமே? நானும் வந்துடுறேன். அதுல ஏதாவது ரோல போட்டுக் குடுங்க... நடிக்கிறேன்''”
"ரோல... போட்டுக் குடுக்கவா? டேய்... இந்தப் படத்துல மேக்ஸிமம் எல்லா ரோலுக்கும் ஆர்ட்டிஸ்ட் புக் ஆகியாச்சுடா. எந்த ரோலுமே இல்லியே...?''”
"இருக்கும் பாருங்க''”
"ம்... ம்... ம்.... சப்பாணி மாப்பிள்ளை ஸீன் ஒண்ணு இருக்கு. அதுவும் ஒரே ஒரு ஸீன்தான் சேகரு. அதுல எப்படி?''”
"ஒரு ஸீனோ, ஒரு ஷாட்டோ... ஒங்க படத்து மூலமா நான் அறிமுகமாகணும் அம்புட்டுத்தான்.... இன்னைக்கே எனக்கு டிக்கெட் போட்டு ஏத்திவிட்டாலும் சரி, இல்ல நாளைக்கி ஒங்ககூட கூட்டிப் போனாலும் சரி. அங்க போயிட்டா பாலா என்னை பார்த்துக்குவான்''”
"பாலான்னா?''”
"மனோபாலாதான்...''”
"ஓ... மனோபாலாவ உனக் குத் தெரியுமா? அவன்தான் உன்ன பத்திவிட்டானா இங்க?''”
"அப்படினும் சொல்ல லாம்...''”
"அப்படித்தான். அவன் தான் உன்ன பத்திவிட்டிருக் கான். அதான் இம்புட்டு துணிச்சலான பெட்டி படுக்கையோட வந்திருக்க. ‘"டைரக்டர்கிட்ட கேளு... ஏதாவது நிச்சயம் செய்வார்'னு சொல்லீருப்பான். அவனைப் பத்தி எனக்குத் தெரியாதா? சரி வந்துட்ட.... பஸ்ல டிக்கெட் போடச் சொல்றேன். நீ தேனிக்கு வந்துரு''’என டைரக்டர் சொல்லிவிட்டார்.
சிகாமணி, மூர்த்தி இவங்க ரெண்டு பேர்களும் தான் டைரக்டர் ஆபீஸில் புரொடக்ஷன் இன்சார்ஜ். அவர்களிடம் பஸ் டிக் கெட்டிற்கான பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பி விட்டார் சந்திரசேகர்.
சந்திரசேகர் படப்பிடிப்பு ஏரியாவிற்கு வந்துவிட்டார்.
கதாநாயகி ரதியை மணந்துகொள்ள பெண் பார்க்க வரும் சொந்தக்கார சப்பாணி மாப்பிள்ளையாக காலை சவட்டி சவட்டி வயல் வெளியில் கே.கே.சௌந்தருடன் நடந்து வருவார்.
அந்தக் காட்சியின் தொடர்ச்சியாக ரதியின் வீட்டிற்குள் நுழைந்து காலைக் கழுவுவார்.
"அழகான அழகி ரதிக்கு ‘இவனா மாப்பிள்ளை?'’என்கிற எரிச்சலை படம் பார்ப்பவர்களுக்கு உண்டாக்கும் விதமாக ‘"மாமா... சாணிய மிதிச்சிட்டேன்'’ எனச் சொல்லிக் கொண்டே கால் கழுவ வேண்டும்.
இதை நிஜம் போலவே செய்திருப்பார் சந்திரசேகர். மல்ட்டி டேலண்ட் ஆர்டிஸ்ட்டுன்னா அது சந்திரசேகர்தான். பொதுவா டிராமா ஆர்ட்டிஸ்ட்டா இருந்து சினிமாவுக்கு வர்றவங்க பிளாட்டிங் பேப்பர் மாதிரி. அப்படியே கண் முன்னால நிறுத்துவாங்க கேரக்டரை. வசன உச்சரிப்பும் பிரமாதமா இருக்கும். எஸ்.எஸ்.ஆர். வசன உச்சரிப்பையும், நடிப்பையும் ரசிக்கிற மாதிரி ரசிக்கலாம் சந்திரசேகர் நடிப்பை.
"புதிய வார்ப்பு கள்'’படத்தில் சப்பாணி மாப் பிள்ளை கேரக்டரே கிடைக்குமோ, கிடைக்காதோ என கடைசி நேரத்தில்தான் அமைந்தது சந்திரசேகருக்கு. அப்படியிருக்கையில் அந்தப் படத்திலேயே.... சப்பாணி மாப்பிள்ளை கேரக்டருக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத இன்னொரு கேரக்டரும் கிடைத்தது அவருக்கு.
ஆமாம்...
தேனியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதே... டைரக்டரின் மனதில் க்ளைமாக்ஸிற்கு வலுச் சேர்க்கும் விதமாக ஒரு கூத்துப் பாடல் நிகழ்ச்சி நடப்பதுபோல காட்டும் யோசனை வர... உடனே சென்னை கிளம்பி வந்து, இளையராஜா இசையில் ஒரு கூத்துப் பாடலை பதிவு செய்துகொண்டு மறுநாளே வந்துவிட்டார்.
கங்கை அமரன் எழுதிய அந்த ‘திருவிழா கூத்துப்’ பாடலை இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் மூவரும் பாடியிருந்தார்கள்.
கதையில் வந்த, எல்லா கேரக்டர்களும் இந்தப் பாடலில் காட்சியில் ஆங்காங்கே இருப்பார்கள். ஒரு பக்கம் கூத்து நிகழ்ந்துகொண்டிருக்க... ரதி பாதியிலேயே எழுந்து வீட்டுக்குப் போக.... அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களையும் கூத்துக் காட்சிகளின் ஊடே காண்பிப்பார் டைரக்டர். இந்த உத்தி அப்போது மிகவும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் பாடலில் கூத்துக் கட்டும் கலைஞனாகவும் சந்திரசேகரை நடிக்க வைத்தார் டைரக்டர்.
தனது முதல் படத்திலேயே இரண்டு கேரக்டர்களைத் தந்து, தன் வாழ்வில் ஒளியேற்றி வைத்ததாக இன்றும் மேடைகளில் பாரதி ராஜாவை நன்றியுடன் குறிப்பிடுவார். இன்றளவும் எனக்கும், சந்திரசேகருக்குமான நட்பு மெருகு குலையாமல் நீடித்துக்கொண்டிருக்கிறது.
"தம்தன தம்தன தாளம் வரும்...'’ பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ். மற்றபடி ‘புதிய வார்ப்புகள்’ ஷூட்டிங் முழுக்க முடிந்தது. இந்தப் பாடலை தேனி ஆற்றுப் படுகையில் மணல் மேடுகளிலும், அங்குள்ள ஒரு பழமையான பரந்து விரிந்த ஆலமரத்தி லும், வீரபாண்டி ஆற்றோரமும் எடுக்க முடிவானது.
இதற்கிடையே ‘"வருவான் வடிவேலன்'’ படத்துடன் படத் தயாரிப்பை நிறுத்தியிருந்த கிருஷ்ணா பிக்ஸர்ஸுக்கு ‘"நிறம் மாறாத பூக்கள்'’ படத்தை எடுத்துத் தர ஒப்புக்கொண்டிருந்தார் டைரக்டர். அதனால் அந்தப் பட வேலையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி.
"புதிய வார்ப்புகள்'’ படத்தின் எடிட்டிங் மற்றும் பிரிண்டிங் வேலைகளைக் கவனிக்க சென்னை வந்துவிட்டோம். அப்படியே "நிறம் மாறாத பூக்கள்'’ படத்திற்கான ஒரு பாடலையும் ரெக்கார்டிங் செய்துகொண்டு விஜயன், ராதிகாவுடன் கொடைக்கானல் செல்லவும் திட்டமிட்டோம்.
பாரதிராஜாவின் ட்ரெண்ட்டான வெள்ளுடுப்பு தேவதைகள் சுவாரஸ்யத்தைச் சொல்கிறேன்...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்