gg

(21) பாரதிராஜாவின் கதாநாயகி!

தேனி அருகே ஜம்புலிபுதூரில் பாரதிராஜா தயாரித்து, இயக்கிய ‘"புதிய வார்ப்புகள்'’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கு.

Advertisment

மதியத்துக்கு மேல ஸாங் ஷூட்டிங்தான் கண்ட்டினியூ ஆகப்போகுது. அதனால் மத்த ஆர்டிஸ்ட்டெல்லாம் ரூமுக்கு போகலாம்” எனச் சொல்லியும்.... “நாங்களும் இங்கேயே இருக்கோம். ஷூட்டிங் பார்க்கிறோம்’எனச் சொல்லிவிட்டார்கள் ஆர்ட்டிஸ்ட்டுகள்.

அந்த அளவுக்கு ஸ்பாட்டில் சுவாரஸ்யங் களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

என்னை அழைத்த டைரக்டர்.... "பாலா நீ ஒண்ணு செய். நாளைக்கு ஸ்கூல் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப் போறேன். டீச்சர்ஸ்ல ஒருத்தரா நடிக்க நான் சொல்ற ஒரு லேடிய கூட்டிட்டு வரணும். அவங்க யாருன்னா... நான் ஊர்ல நாடகங்கள்ல நடிக்கும்போது அந்த வீட்டுல இருந்த நாடக நடிகைதான் எனக்கு ஜோடியா நடிச்சாங்க. கோயிலுக்கு எதிர்க்கதான் அவங்க வீடு இருக்கு. அவங்களையும் ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணீட்டா திருப்தியா இருக்கும். நீ போய் விஷயத்தைச் சொல்லி, சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஷூட்டிங் வர முடியுமா?னு சொல்லி கேட்டுட்டு வா''’என்றார்.

Advertisment

நான் போய் அந்த நாடக நடிகையிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

மாலை ஐந்து மணி இருக்கும்...

ஒரு வில்லு வண்டி வந்தது. திரையெல்லாம் போட்டு மூடியிருந்தது. லேசாக திரை விலக... ஒரு கை மட்டும் தெரிந்தது. கை விரல்களெல்லாம் மருதாணி பூசப்பட்டிருந்தது. ஆர்வமும், ஆச்சரியமும் தாங்காமல் பார்க்கிறோம்.

ஃபுல் மேக்-அப் மற்றும் அலங்காரங்களுடன் அந்த நாடக நடிகை இறங்கினார்.

கோயில் நிகழ்ச்சிகளுக்கு கலை மற்றும் இறைச் சேவைக்காக வழிவழியாக வருகிற இனத்துப் பெண்மணி அவர். அதனால் அவருக்குரிய இயல்புப்படி முழு ஒப்பனையில் வந்திருந்தார் அந்தப் பெண்மணி.

பார்த்ததும் டைரக்டரின் மூஞ்சி மாறிவிட்டது.

"டேய்.... நான் இயல்பான சினிமா எடுக்க லாம்னு வந்திருக்கேன். இந்தம்மா என்னடா இப்படி மேக்-அப்ல வந்து இறங்குது?''’என ஷாக் ஆகிவிட்டார்.

"நீங்கதான சார் சொன்னீங்க.... நாடகத்துல உங்களுக்கு ஜோடியா நடிச்ச கதாநாயகினு. நீங்க சினிமாவுல டைரக்டரா இருக்கிறீங்க. அந்தம்மா உங்களை சினிமாவுல ஹீரோவா இருக்கிறதா நினைச்சிருக்காங்க. அதான்... பத்து வருஷத்துக்கு முன்னாடி மேடையில ஜோடி போட்ட ஹீரோகூட இப்போ சினிமாவுல ஜோடி போடப் போறோம்னு நினைச்சு வந்திருக்காங்க''’என்றேன் சிரிப்பை அடக்க மாட்டாமல்.

"இருக்கிற எரிச்சல்ல நீ வேற ஏண்டா கூடுதல் எரிச்சல கிளப்புற?''’ என என்னை திட்டிய டைரக்டர், “இந்த மாதிரியெல்லாம் மேக்-அப் போடாம, இதை கலைச்சிட்டு, வீட்டுல இருக்கிற மாதிரி, ஒரு நூல் புடவை கட்டிக்கிட்டு, ஒத்தச் சடை போட்டுக்கிட்டு, நெத்தியில சின்னதா ஒரு பொட்டு வச்சிக்கிட்டு வரச் சொல்லு. முக்கியமா அந்த காதுல மாட்டிக்கியிருக்க பெரிய தொங்கட்டானை கழட்டச் சொல்லு. சின்னதா ஒரு தோடு போதும். நம்ம காஸ்ட்யூமர்ட்ட சொல்லி, ஒரு கருகமணி மாலை வாங்கிக் கொடுத்து, அதை கழுத்துல போட்டுக்கச் சொல்லு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.... ஸ்பாட்டுக்கும், அவங்க வீட்டுக்கும் கூப்பிடு தூரம்தான். அதனால் வண்டியிலயெல்லாம் வரக்கூடாது. நடந்து வரணும்னு சொல்லீட்டு வா''’என்றார்.

ff

நான் அந்தம்மாவிடம் சொன்னேன்.

"அப்படியா?! மேக்-அப்பெல்லாம் வேணாமா? நாங்கள்லாம் மேக்-அப் இல்லாம வெளியில கிளம்ப மாட்டோமே''’என்றார்.

"இல்லம்மா.... நீங்க சார் கூட டிராமாவுல ஆக்ட் பண்ணீருக்கீங்களாம். அதனாலதான் தான் தயாரிக்கிற படத்துல நீங்களும் ஒரு ஸீன்லயாவது இருக்கணும்னு நினைக்கிறார். அதனால நீங்க வீட்டுல இருக்கிற மாதிரியே நூல் புடவைல வாங்க போதும்''’என்றேன். அந்தம்மா வந்த வண்டி அவரின் வீடு நோக்கி திரும்பியது.

பதிலே சொல்லாம போகுது அந்தம்மா. அது எங்க திரும்ப வரப் போகுது. இப்ப சக டீச்சர் கேரக்டருக்கு இந்த ஊர்ல யாரைப் பிடிக்கிறது’ என நான் குழம்பிக் கொண் டிருந்தபோதே... அரை மணி நேர இடைவெளியில் மிக எளிமையாக, அழகாக, ஒரு கிராமத்து பள்ளிக்கூட டீச்சரைப் போலவே திரும்பி வந்தார் அந்தம்மா. அதுவும் நடந்தே வந்தார்.

டைரக்டருக்கு திருப்தி! டீச்சர்களுள் ஒருவராக ஒரு ஸீனில் நடிக்க வைத்தார்.

கதைப்படி கிராம பள்ளிக்கூட ஆசிரியர் களான பாக்யராஜும், உஷாவும் மெயின் ரோட்டி லிருந்து, தாயமங்கலம் கிராமத்திற்கு ஓரிரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஒரு இடத்தில் இரு புறமும் வழி பிரியும். எந்தப் பக்கம் போக வேண்டும் என வழியில் போவோரிடம் விசாரிக்க வேண்டும்.

ஒரு ஆடு மேய்ப்பவனிடம் விசாரிக்க வேண்டும். அதற்கு ஆடு மேய்ப்பவன் சொல்லும் பதில் வெகு ஜன கிராம மக்களின் அறியாமையான மன நிலையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

ஆட்டு மந்தை ரெடி. ஆடு மேய்ப்பவன் யார்?

என்னையே பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர், "பாலா இங்க வா'’என அழைத்தார்.

ஒரு கருப்பு போர்வையை என்மீது போர்த்தி விட்டு, வேட்டி ஒன்றை எடுத்து, முழங்கால் வரை ஏத்திக் கட்டிவிட்டு, கையில் ஒரு நீளமான கம்பையும் கொடுத்து "நீ தான் ஆடு மேய்க்கணும்' என்றார்.

"பாக்யராஜும், உஷாவும் எதிரே வருவாங்க. உன்கிட்ட ஊருக்கு எப்படி போகணும்னு கேட்பாங்க.‘"இந்த ஊருக்கு புதுசா வந்திருக்க வாத்தியாரா?'னு பாக்யராஜ்கிட்ட கேட்கணும். ஆமாம்’பார். "ஊர்ல ஒரு பயல ஆடு மாடு மேய்க்க விட மாட்டீங்களே'னு சொல்லிட்டு போய்ட்டே இரு'' என்றார். திடும்னு என்னை நடிக்கச் சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"சார்... நான் நடிக்கிறதா? எனக்கு அதுலயெல்லாம் ஆர்வம் இல்லை சார்''

"யோவ்... நடிய்யா... நான் சொல்றேன்ல. பாக்யராஜவே நடிக்க வச்சிருக்கேன். உன்னை நடிக்க வைக்க முடி யாதா?''னு சொல்லி, என்னை ஆடு மேய்ப்பவ னாக நடிக்க வைத்தார்.

நானும் சந்திர சேகரும் (நடிகர் வாகை சந்திரசேகர்) நண்பர்கள். திரைவானம் என்கிற பத்திரி கையில் நான் பகுதி நேரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். செலவுக்கு காசு வேணுமே. அதனால் இப்படி மாலை நேரத்தில் சில மணி நேரம் பத்திரிகையில் வேலை செய்வேன். நான் ஓவியக் கல்லூரியில் படித்தவன். ஓவியக் கலை அறிந்தவன் என்பதால் ரெண்டு மூணு ரூபாய் தினசரி கிடைக்கும். அது கைச் செலவுக்கு ஆகும்.

நான் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேரும் வாய்ப்பு அமைந்ததால் பத்திரிகையிலிருந்து விலகிவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்த, நல்ல நாடக அனுபவம் கொண்ட சந்திரசேகரை சேர்த்துவிட்டேன். அந்த உதவியை சந்திரசேகர் மறக்கவில்லை. அந்த நட்பு எங்களுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது.

அதை இன்றளவும் சொல்லிக் கொண்டிருக் கிறார் சந்திரசேகர்.

முதல் படத்திலேயே இரண்டு வேஷம்!

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்

பேரு வச்சது யாரு?

என்னோட ஒரிஜினல் பெயர் பாலசந்தர். டைரக்டர் பாலசந்தர் படங்களில் நடித்த என் நண்பர் கமல், தன் குருவுக்கு மரியாதை தரும் விதமாக என்னை பாலசந்தர் என்று அழைக்காமல் ‘ஃபேவர் லூபா’ என்று அழைப்பார். அதாவது ‘பாலு’ என்பதை திருப்பி வாசித்தால் லூபா.

சினிமா வட்டாரத்திற்குள் நான் நுழைந்த சமயம் என்னை எல்லோரும் பாலா’என்று கூப்பிடுவார்கள். பாலசந்தர் என இயற்பெயரிலேயே இருக்கலாம் என நினைத்தாலும், ஏற்கனவே சினிமாவில் வீணை எஸ்.பாலசந்தரும், கே.பாலசந்தரும் டைரக்டர்களாக இருக்கிறார்கள் என்பதால் பெயரை மாற்ற விரும்பினேன்.

நான் கொஞ்சம் மனோதத்துவம் படித்தவன். அந்த மாதிரி கதைகளிலும் ஆர்வம் உண்டு. இது என் நண்பர்கள் சிலருக்கும் தெரியும். பிரபல பத்திரிகையாளர் பிலிமாலயா எம்.ஜி.வல்லபன் தான் "மனோபாலானு பெயர் வைத்துக் கொள்' என்றார். அந்தப் பெயர் எனக்கும் பிடித்திருந்ததால் வைத்துக் கொண்டேன். அரசு கெஜட்டிலும் சட்டப்படி என் பெயர் மனோபாலா தான்.

புனை பெயரே அதிகாரப்பூர்வமான பெயராக ஆகியது.