(18) கண்ணதாசனை கண்ட பிரமிப்பு!
இளையராஜாவின் மெட்டுக்கு, கண்ணதாசன் பாட்டெழுத வருவதாக எங்க டைரக்டர் பாரதிராஜா சொன்னதும், நான் சிலிர்த்துப் போனேன். கண்ணதாசன் என் கனவு நாயகனாச்சே... சும்மாவா!
கவிஞரைப் பார்க்கப்போகிற சந்தோஷத்தில் முக்கியமான விஷயத்தை கோட்டை விட்றக் கூடாதே... அதனால் எங்க டைரக்டரிடம் “"சார்... ஹீரோயின் ரத்தியைக் கூட்டிக்கிட்டு என்னை லொகேஷன் போகச் சொன்னீங்க. ஆனா... ஹீரோ யார்?னு சொல்லலையே?''’எனக் கேட்டேன்.
"அதெல்லாம் பார்த்துக்கலாம்யா... ஹீரோவ கண்டுபிடிச்சிடலாம்''’என்றார்.
"என்ன சார் இது? நாளைக்கி நைட் கிளம்பி, மறுநாள் வைகை டேம் ஏரியாவுக்கு போகணும்னு சொல்றீங்க? திங்கட்கிழமை நல்ல நாளு. அன்னேலருந்து ஷூட்டிங் போகணும்னு சொல்றீங்க. ஊட 24 மணி நேரம்தான் இருக்கு. ஹீரோ யார்?னு தெரிஞ்சாதானே காஸ்ட்யூம் எடுக்கணும், கெட்-அப் போட்டுப் பார்த்து சரி பண்ணனும்...''’என்றேன்.
"அதை விடுய்யா... பார்த்துக்க லாம்யா''’என்றார்.
நானும் "சரி'னு கிளம்பிட்டேன். ‘"ஹீரோ யாருங்கிறதுல ஏதோ ஒரு முடிவுலதான் டைரக்டர் இருக்கார். ஆனா என்ன முடிவுனுதான் தெரியல. நாம இப்பத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கோம். ஒரு லிமிட்டுக்கு மேல டைரக்டர்கிட்ட கேள்வி கேட்க முடியாதில்லையா'’ என நினைத்துக் கொண்டேன்.
என்னோட கனவு நாயகன் கண்ணதாசன் வந்தார் பாருங்க... ஓங்கு தாங்கு அவ்வளவு கம்பீர உருவமா வந்து நின்னார். எங்க டைரக்டரிடம், "“என்ன சிச்சுவேஷன்?'’ எனக் கேட்டார்.
"ஒரு கிராமத்து ஸ்கூல் வாத்தியாருக்கும், அதே ஊர்ல இருக்க ஏழை வீட்டுப் பெண்ணான, நாயனக்காரர் மகளுக்கும் காதல். வாத்தியாரோட கனவுல டூயட் ஸாங். விஷுவல்ஸ்ல ஸ்கூல் குழந்தை களையும் கொண்டு வர்றோம். இந்த ஸாங் முழுக்க அவுட்டோர்லதான் எடுக்குறோம்'’என சூழலைச் சொன்னார் டைரக்டர்.
"ட்யூனைப் பாடுங்க''” என கவிஞர் சொல்ல, பாட்டின் பல்லவிக்கான மெட்டை தத்த காரத்தில் பாடி மீட்டினார் ராஜா.
அஞ்சே நிமிஷம் தான். அப்படியே படபடவென பல்லவியா வந்து கொட்டுது கவிஞரிடமிருந்து.
பொதுவாகவே கண்ணதாசனின் உதவியாளராக பஞ்சு அருணாச்சலம் வருவார். அன்றைக்கு இராம.கண்ணப்பன் வந்தார். கவிஞர் கொட்டுகிறார் வார்த்தை களை அருவியாக. அதை கண்ணப்பன் எழுதுகிறார்.
எத்தனை பல்லவி... அப்பப்பா!
சரணத்தை பாடச் சொன்னார் கவிஞர். பாடினார் ராஜா.
கிட்டத்தட்ட பதினைந்தி லிருந்து இருபது சரணங்களுக்கு சொற்களை கோர்த்தார்.
"இப்படியெல்லாம் கூட அசுரத்தனமா எழுதுவாங்களா?'’என கவிஞரைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும், பரபரப்பும் ஏற்பட்டது.
"சரி நான் கிளம்பலாமா?''’எனக் கேட்டார். எங்க டைரக்டர் திருப்தி தெரிவித்ததும் கிளம்பினார். பின்னாடியே புரொடக்ஷன் மேனேஜர், கவிஞருக்கான பேமண்ட்டை எடுத்துக் கொண்டு போனார்.
கவிஞரைப் பார்த்தது, அவரது கவித்திறன்... இதெல்லாம் கண் முன்னாடி பார்த்த பிரம்மையிலிருந்து, நான் மீளமுடியாமல் இருந்தேன். இப்பவும் அந்த பிரமையோடதான் இருக்கேன்.
மெட்டு ஏற்கனவே ரெடி. பாடல் இப்போது ரெடி.
"பாடுறதுக்கு இப்ப யார் அவய்லபிளா இருக்காங்க?' என பார்த்ததில் மலேசியா வாசுதேவனும், எஸ்.ஜானகியும் கிடைக்க... அவர்களை வரவழைத்தாகிவிட்டது.
தேவையான பல்லவியையும், சரணங்களையும் பிரதி எடுத்தாகிவிட்டது.
பல்லவியில்....
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை”
என கதாநாயகி பாடுவதாகவும், சீதையை கண்டு கொண்டதாக கதாநாயகன் பாடுவதாகவும் எழுதியிருந்தார்.
சுமார் 18-20-ல் இருந்து மூன்று சரணங்கள் தேர்வு செய்யப்பட்டது.
"பழம் நழுவி பால்ல விழுந்து, அது நழுவி தேன்ல விழுந்த மாதிரி'’ என ஒரு பொன் மொழி உண்டு. இது கிராமங்களில் எளிமையாக கையாளப்படும் இரட்டிப்பு மகிழ்ச்சியை குறிக்கும் சொல் வழக்கு.
அந்த எளிமையான வார்த்தைகளை நாயகி பாடுவதாக மெட்டுக்கேற்ப லட்டு போல் கண்ணதாசன் கோர்த்த விதம் இருக்கே... அடடா!
"பாலிலே பழம் விழுந்து, தேனிலே நனைந்ததம்மா'’என எழுதினார்.
எளிமையான சொல்லாடல் கொண்ட பாடல்தானே எளிமையான மக்களுக்கும் நெருக்கமாக இருக்கும்.
காத்துன்னா அடிக்கும், தோகை அதுல ஆடும். அதையும்கூட, "தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா'’என நாயகன் குரலாக உருவகப்படுத்திவிட்டார் கண்ணதாசன்.
பிரதி எடுக்கப்பட்ட முழுப்பாடலையும் நான் ஜானகியம்மாவிடமும், மலேசியா வாசுதேவனிடமும் கொடுத்தேன். அவர்களும் தங்கள் கையெழுத்தில் அதை பிரதி எடுத்துக் கொண்டிருக்க...
ரெக்கார்டிங் ஸ்டுடியோவின் பெரிய ஒலித் தடுப்பு கண்ணாடி வழியாக எங்க டைரக்டர் கூப்பிடுவது தெரிந்தது.
உள்ளே போனேன்.
"நம்ம ராஜன் இப்ப எங்கய்யா இருப்பான்?''”
"ரூம்ல உட்கார்ந்து டயலாக் எழுதிக் கிட்டிருக்காரு சார்... ஏன் சார்?''”
"ஸ்டில் போட் டோகிராபர் லட்சுமி காந்தன் இருக்காருல்ல... அவரைக் கூட்டிக்கிட்டு ஆபீஸ் போ. ராஜனை ஒரு வேட்டியும், கட்டம் போட்ட சட்டையும், பெரிய கண்ணாடியும் போட்டு, கைல ஒரு குடையும், ஒரு பெட்டியும் கொடுத்து... வெளியூர்லருந்து புது ஊருக்கு வேலையில் சேர வந்த வாத்தியார்னு சொல்லி, அதுக்கு தகுந்த மாதிரி, நம்ம ஆபீஸ்ல வச்சே ஸ்டில் எடுத்து, பிரிண்ட் போட்டு கொண்டாய்யா...''”
"என்னாது... ராஜனை ஸ்டில் எடுக்கணுமா? என்ன சார் சொல்றீங்க?''”
"யோவ்... எனக்குத் தெரியும்யா, நீ போய்யா நான் சொல்றேன்... போய்யா''’என்றார் டைரக்டர்.
டைரக்டர் சொன்னதைக் கேட்டு, எனக்கு கொஞ்சம் நேரம் எதுவுமே பிடிபடவில்லை.
நேரே போட்டோகிராபரிடம் வந்தேன்.
"போகலாமா லட்சுமிகாந்தன்?''”
"ஹீரோவா...? யாரு...? எங்க போகணும்?''”
"நம்ம ஆபீஸுக்குத்தான்''”
"ஏன்? ஹீரோ அங்கயே வந்துடுறாரா?''”
"இல்ல... ஹீரோ நாலைஞ்சு நாளா அங்கதான் இருக்காரு?''”
"நம்ம ஆபீஸ்ல இருக்காரா? யாரது?''”
"ராஜன்தான்''”
"நம்ம ராஜனா?''”
"ஆமா... அவரைத் தான் வாத்தியார் கெட்-அப் போட்டு ஸ்டில் எடுத்துவரச் சொல்றார் நம்ம டைரக்டர்.''”
"விளையாடாதப்பா! படத்துக்கு ஒரு ஹீரோ தேடிக்கிட்டிருக்காரு டைரக்டர். ராஜன் ஒரு ரைட்டர். ரைட்டரை எப்படிப்பா ஹீரோ வாக்க முடியும்? விளையாடாத பாலா.''”
"அட... நிஜமாத் தான் சொல்றேன்.''”
-இப்படி நான் சொன்னதும், ஷாக்கான லட்சுமிகாந்தன், அடுத்துச் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?
"டைரக்டருக்கு பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிருச்சா?''”
பாக்யராஜ் ஹீரோவான கதையையும், நானும் நடிகனான கதையையும் பார்க்கலாமா?
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்