(16) குருவிடம் கூட்டி வந்தேன் சீடரை!
"சார்... நான் திரைப் படங்களை மொழி பேதமில்லாமல் பார்க்கிறவன்! தமிழ்- ஆங்கிலம்- இந்தி- கன்னடம்- தெலுங்கு- மலையாளம்- பெங்காளி- இப்படி பல மொழிகள் வர்ற படங்களையும் பார்ப்பேன். சினிமா ரசிச்சு பார்க்கிற ஒரு ஆடியன்ஸா நான் சொல்றேன். இப்போ நீங்க செலக்ட் பண்ணி வச்சிருக்க கதை... அதுவும் மனோஜ் கிரியே ஷன்ஸ்ங்கிற பேரில் நீங்க முதன்முதலா தயாரிக்கிற துக்காக செலக்ட் பண்ணி வச்சிருக்கிற கதையை படமா எடுத்தா ஓடாது சார்.''
இப்படி பாரதிராஜா என்கிற பெரிய டைரக்ட ரிடம், அதுவும் அவரிடம் உதவி இயக்குநராக கமல் ஹாசன் ரெக்கமெண்ட்டில் சேர வந்த நான் எந்த அடிப்படையில் பாரதி ராஜாவைப் பார்த்த இரண்டே மணிநேரத்தில் இப்படி வெளிப்படையாகப் பேசினேன்?
சினிமாவை நான் நேசித்த தீவிரமும், பாரதிராஜா மீது எனக்கிருந்த மதிப்பும்தான் என்னை அப்படிச் சொல்ல வைத்தது.
"சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் ஹோட்டல் பேரராக நடித்த கண்ணாடி போட்டவர், பாரதிராஜாவுக்கு மிக உறுதுணையாக இருந்தார் என்பதை ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் பேசிக்கொண்டதை நான் கேள்விப்பட்டி ருந்ததால்தான், "அந்த கண்ணாடிக்காரர் எங்க சார்?'' என நான் கேட்க...
"எங்களுக்கிடையே ஐடியா லஜி சரிப்பட்டு வரல... துரத்திட்டேன். இப்ப அவன் தனியா படம் பண்ணப் போறானாம்'' -எனச் சொன்னார் பாரதி ராஜா.
"தப்பா எடுத் துக்காதீங்க சார்... பாக்யராஜைப் பார்த்தாலே அறிவுஜீவி மாதிரி தெரியுது. ஸ்டோரி நாலெட்ஜ் அதிகம் உள்ளவர் மாதிரி தெரியுது. உங்களோட படங்கள்ல அவர் உங்களுக்கு ரொம்ப சப்போர்ட் டிவ்வா இருந்தாரு. இண்டஸ்ட்ரியில சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நீங்க தயாரிக்கப் போற முதல் படத்துல பாக்யராஜும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். உங்க யோசனை என்ன?ன்னு சொல்லுங்க. எனக்கொண்ணும் இல்ல சார். கமல்ஹாசன் கார் என்னை இங்க இறக்கிவிட்டுட்டுப் போயிருச்சு! நீங்க எனக்கு ஆட்டோவுல போறதுக்கு காசு கொடுத்தீங்கன்னா... அவர் எங்க இருக்காரு?ன்னு தெரிஞ்சுக்கிட்டு, கையோட அவரை கூட்டிட்டு வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசினீங்கன்னா சரியாயிடும். என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் அது ஒரு லிமிட் வரைக்கும்தான் இருக்கும். பாக்யராஜுக்கும் குருநாதர் பக்தி இருக்குமில்ல சார். உங்களுக்கு உங்க சிஷ்யன் மேல பிரியம் இருக்கு. வெளிப் படையா பேசிட்டா எல் லா சங்கடமும் உடைஞ்சி போயிரும்ல! அதுக்காகத் தான் சார் சொல்றேன்... நான் அவரை எப்படியாவது இங்க கூட்டிட்டு வந்திடுறேன்''
-என நான் சொல்லச் சொல்ல... புன்னகையோடு என் னைப் பார்த்த பாரதிராஜா, "சரிய்யா... அவன் சுதாரா ஹோட்டல்லதான் ரூம் போட் டிருக்கான். போய் கூட்டி வர்றியா?'' என்றார்.
"சுதாரா எங்க சார் இருக்கு?''
"தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போஸிட்ல இருக்கு! அவன் சென்ட்டிமென்ட்டா அங்கதான் ரூம் போடுவான். போய் பார்த்து, "நான் கூப்பிட்டேன்'னு சொல்லி கூட்டி வாய்யா'' என்றார்.
பாம்குரோவ் ஹோட்டலி-ருந்து சுதாரா ஹோட்டலுக்கு ஆட்டோவில் கிளம்பினேன்.
"நம்மள யாரு?னு பாக்யராஜுக்கு தெரியாது. "பாரதிராஜா அஸிஸ் டெண்ட்'டுன்னு சொல்லிக்க முடியாது! அஸிஸ்டெண்ட்டா சேரத்தான் வந்துருக்கோம். அப் படி இருக்கும்போது அவரு நம்ம கூட வருவாரா?' என யோசனை ஓடினாலும், "குருநாதர் கூப்பிட் டனுப்பினார்'னு சொன்னா சிஷ்யன் வரமாட்டாரா என்ன?' என நினைத்துக் கொண்டேன்.
சுதாரா ஹோட்டல்!
ரிஷப்சனில் "பாக்யராஜை பார்க்கணும்''னு சொன்னேன்.
மாடிக்குப் போகச் சொன் னாங்க. பாக்யராஜ் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தேன்.
சப்பணாங்கால் போட்டு அமர்ந்து மடியில் தலையணை வைத்து, தலையணை மேல் ரைட்டிங் பேட் வைத்து எழுதிக்கொண்டிருந்தார் பாக்ய ராஜ். (இப்படி எழுதுவதுதான் பாக்யராஜின் கலை. இன்றும்கூட அப்படித்தான் எழுதுகிறார்)
பாக்யராஜின் அருகில் அமர்ந்து இன்னொருவரும் எழுதிக் கொண்டிருந்தார்.
"சார்'' எனக் கூப்பிட்டேன். நிமிர்ந்து பார்த்தார் பாக்யராஜ்.
அவரை நேரில் பார்ப்பதற்கு முன்பாக என் மனதில் "அவர் ஒரு அறிவுஜீவியாக, ஸ்டோரி நாலெட்ஜ் உள்ளவராக இருப்பார்' என்று கணித்திருந்தேன்.
நேரில் பார்த்தபோது என் கருத்து மேலும் உறுதியானது. பாக்யராஜ் நிறைய படிப்பவர் என்றும் அவரின் கண்ணாடி தோற்றம் சொன்னது.
"சார்... என்னை பாரதிராஜா அனுப்பி வச்சார்'' என்றேன்.
"நீங்க யாரு?'' என்று கேட்டார்.
"இன்னிக்குத்தான் சார் அவர்கிட்ட வேலைக்கி சேர்ந்தேன். மிஞ்சிப்போனா டூ அன்ட் ஆஃப் ஹவர் இருக்கும் சார் அவர்கிட்ட சேர்ந்து!''
"சரி... இப்ப என்ன?''
"உங்களை டைரக்டர் கூட்டிவரச் சொன்னாரு'' என்றேன்.
இடது கை விரல்களால் இடது பக்க கண் கண்ணாடி ஃபிரேமை உயர்த்திவிட்டபடி "என்னையா? என்னை ஏன் கூட்டிவரச் சொன்னாரு? அவருதான் "எனக்கு பிடிக்கலே'னு சொல்லி என்னை வெளிய அனுப்பிச்சிட்டாரே'' என்றார்.
"சார்தான் கூட்டிவரச் சொன்னார்.''
"அது வந்துங்க... நமக்கு சரிப்படாதுங்க'' என அவருக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டே போக...
"அதில்லைங்க... வாழைப் பழத்துல ஊசி ஏத்துறமாதிரி டைரக்டர் திட்டின தையே நினைச்சுக்கிட்டிருந்தா சரியா வருமா? குருநாதர் திட்றது நம்மளோட நல்லதுக்குனு நினைச்சுக்கிட்டா மனஸ்தாபம் ஏன் வரப்போகுது. உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதி கிடையாது. இருந்தாலும் மனசில தோணுனதைச் சொல்றேன். டைரக்டர் சொந்தப் படம் ஆரம்பிக்கிறாரு. நீங்க அவருக்கு அஸோஸியேட்டா வொர்க் பண்ணிருக் கீங்க. அவரோட சொந்தப் படத்துலயும் கூட இருந்து நாமெல்லாம் சேர்ந்து ஒர்க் பண்ணலாம். படம் ஜெயிச்ச பின்னாடி, நம்ம டைரக்டர் ஒரு புரொடியூஸராகவும் ஜெயிச்ச பின்னாடி... அந்த சந்தோஷத் தோட நீங்க தனியா படம் பண்ணலாம். "உங்க சொந்த தயாரிப்புல பாக்யராஜ் சார் கூட இருக்கணும்'கிற என்னோட அபிப்ராயத் தைச் சொன்னேன். "நீயே போய் கூட்டிவா'ன்னு ஆட்டோவுக்கு காசு கொடுத்து அனுப்பினார்! ஆட்டோ கீழே வெயிட் பண்ணுது! "நம்ப டைரக்டர்'னு நினைச்சு வாங்க'' என்றேன்.
"டைரக்டர் கூப்பிட்டிருக்கார்' என்பது பாக்யராஜுக்கு வேதவாக்காக ஆனது!
நிமிடநேரம்கூட யோசிக்காமல் கிளம்பியவர், தான் அருகில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவரிடம், "நீ பார்த்துக்க'' எனச் சொல்லிவிட்டு கிளம்பினார் என்னுடன்.
பாக்யராஜுடன் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர் பின்னாளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த டைரக்டர்! அவர் யார் என்பதைப் பிறகு சொல்கிறேன்.
ஒரு வரிக் கதை... மூன்றே நாளில் முழு ஸ்கிரிப்ட்... அசத்திய பாக்யராஜ்!
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி : ஞானம்