dd

(38) கமல் கொடுத்த தைரியம்!

Advertisment

மல்ஹாசன், ராதா, மாதவி, சொப்னா நடிப்பில் எங்க டைரக்டர் பாரதிராஜா எடுத்த "டிக்... டிக்... டிக்...'ஒரு த்ரில்லர் படம். அந்தச் சமயம் வெளிநாட்டிலிருந்து புதுவிதமான சவுண்ட் எஃபெக்ட் ட்ராக்குகள் வந்திருந்த நேரம்.

அதிலிருந்து வித்தியாசமான சத்தங்களை படத் துக்கு பயன்படுத்தலாம் என்பதால், நான் எடிட்டிங் கில் போய் உட்கார்ந்து ஒலிச் சேர்க்கையை கேட்டு, செலக்ட் செய்து கொண்டிருந்தேன்.

ஒருபுறம் ஷூட்டிங், இன்னொரு புறம் இந்த வேலை என நான் தூங்காமல் கொள்ளாமல் வேலை செய்துகொண்டிருந்தேன். எனக்கு மட்டுமில்லை மணிவண்ணன், ரங்கராஜ் ஆகி யோருக்கும் சரியான வேலைதான்.

Advertisment

நாங்கள் மூணுபேருமே தூக்கத்துக்கு ஏங்கினோம். அவ்வப்போது ஒருவர் மாத்தி ஒருவர் ஷூட்டிங் நடக்கும்போது, எங்காவது ஓரமாய் அரை மணி நேரம் தூங்கிவிட்டு வருவோம். அன்றைக்கு நாங்க மூணு பேர்களுமே அசந்து தூங்கிவிட்டோம்.

அதிகாலை நான்கு மணிக்கு ஷூட்டிங் நடந்து கொண்டி ருக்கிறது. நாங்களெல்லாம் போய் படுத்திட்டோம் என்பது கமல்ஹாசனுக்குத் தெரியும். கிளாப் அடிக்கக்கூட ஆள் இல்லை.

"எங்கய்யா ஒரு பயலையும் காணோம்?''’என டைரக்டர் கேட்க... இதைக் கவனித்த கமல், ’எங்கள் மீது டைரக்டர் கோபப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தானே முன்வந்து, "பாவம் பசங்க தூங்கட்டும்'’என எண்ணி, “"பசங்க... ரெஸ்ட் ரூம் போயிருப்பாங்க... வந்துருவாங்க''’எனச் சொல்லி, கிளாப் போர்டை கையில் எடுத்து, பதினைந்து ஷாட்களுக்கு கமல்ஹாசனே கிளாப் அடிச்சிட்டு, நடிச்சிருக்கார்.

கமல் சார்தான் எங்களை காப்பாத்திவிட்டார்.

ஐந்தரைமணி வாக்கில் நைசாக ஒவ்வொருவராக வந்து ஜாய்ண்ட் அடிச்சிட்டோம். அன்றுதான் "டிக்... டிக்... டிக்...'’படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு!

ஷூட்டிங் முழுக்க முடிந்ததும் ஆபீஸுக்கு வந்து நானும், மணிவண்ணனும் தூங்க ஆரம்பித்தோம். ஒருநாள் முழுக்க தூங்கியே கழித்தோம்.

மறுநாள் காலை... நானும், மணிவண்ணனும், ரங்கராஜும் உட்கார்ந்து எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டோம்.

"நான் இந்தப் படத்தோட விலகிக்கிட்டு, தனியா படம் பண்ணப்போறேன்'’என ரங்கராஜும், மணிவண்ணனும் உறுதியோடுச் சொன்னார்கள்.

என் முன்னால் என் எதிர்காலம் குறித்து ஒரு பெரிய கேள்விக்குறிதான் தோன்றியது.

அந்தக் கேள்விக்குறி என்னன்னா....

"நாம உண்மையிலேயே தனியா டைரக்ஷன் பண்றதுக் கான வொர்த்தோட இருக்கோமா? கெப்பாஸிடி இருக்கா? பாரதிராஜாங்கிற பெரிய டைரக்டர்கிட்ட நல்லா ட்ரெய்ன் ஆகித்தான் வந்திருக்கோம். ஆனாலும் நமக்கு டைரக்டர்ங்கிற அந்தஸ்து கிடைக்குமா?ன்னு' மனதில் ரொம்ப குழப்பமாக இருந்தது.

பாரதிராஜா சாரோட தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி ஆபீஸ்லருந்து அப்படியே எதிர்காலத்தை யோசிச் சுக்கிட்டே பைய்ய... பைய்ய நடந்தேன் எல்டாம்ஸ் ரோடு வழியா.

ஆழ்வார்பேட்டை கமல்ஹாசன் வீட்டுக்குப் போனேன். தனியா டைரக்ஷன் பண்றது குறித்து அவர்கிட்ட கேட்டேன்.

"அதான் நல்லா தயார் ஆகிட்டியே, தைரியமா முடிவு எடு. தனியா படம் பண்றதுனு முடிவெடுத்துட்டா அதுல உறுதியா இரு. ஆனா... ஒரு நல்ல கதையை செலக்ட் பண்ணி படம் பண்ணு''’என்றார்.

மணிவண்ணன் என்னிடம் ஒரு கதை சொல்லியிருந்தார்.

"அந்தக் கதையை நான் படம் பண்ணிக்கவா?''’என்று கேட்டேன்.

"என்னா மனோ... உனக்கு இல்லாததா? தாராளமா பண்ணு...''”

dd

"வசனமும் எழுதித் தர்றியா?''”

"எழுதித் தர்றேன்''’என்றார் மணிவண்ணன்.

டிஸ்கஷனுக்கு ரங்க ராஜும் வந்தார். ஆனால் அடுத்த இரண்டு, மூன்று நாட்கள் வரவில்லை. அப்போ தெல்லாம் செல்போன் ஏது?

மூன்று நாள் கழித்து வந்த ரங்கராஜ், "நெஞ்சமெல் லாம் நீயே'’என்கிற படத்தை (மோகன் -ராதா -பூர்ணிமா ஜெயராம் நடித்தது) படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத் திருப்பதாகச் சொன்னார்.

அந்த வகையில் ரங்க ராஜுக்குத்தான் முதலில் டைரக்டராகும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒரே நேரத்தில் நான், ரங்கராஜ், மணிவண்ணன் என மூன்றுபேர்களும் எங்க குருநாதர் பாரதிராஜாவை விட்டு, தனித்தனியாக படம் பண்ண வந்துவிட்டதால், டைரக்டருக்கு வருத்தம்.

ரங்கராஜும், மணி வண்ணனும் டைரக்டரை போய்ப் பார்க்கவேயில்லை. ஆனால் நான், டைரக்டரை சந்தித்து, "சார்... எனக்கு தனியா படம் பண்ண வாய்ப்பு வந்திருக்கு. நான் டைரக்டரா ஆனாலும் எப்பவுமே உங்க அஸிஸ்டெண்ட்தான். நீங்க எப்ப கூப்பிட்டாலும் உடனே ஓடி வந்துடுவேன்''’எனச் சொல்லி டைரக்டரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வந்தேன்.

அடுத்ததாக நேராகப் போய் இளையராஜாவை சந்தித்து, அவரிடம் எனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சொல்லி, ஆசிர்வாதம் வாங்கினேன். என்னை ஆசிர்வதித்த இளையராஜா, “"பாரதிகிட்ட சொல்லியாச்சா? ஆசிர்வதிச்சாரா? அவங்க ரெண்டுபேரும் கூட (ரங்கராஜ், மணிவண்ணன்) வெளியில வந்துட்டாங்கபோல. இப்படி ஒரே நேரத்துல மூணு பேரும் வந்தா எப்படிய்யா?''’எனக் கேட்டார் இளையராஜா.

"என்ன சார் பண்றது... அவங்கவங்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கே...''’என இளையராஜாவை சமாதானப்படுத்தும் வகையில் சொன்னேன்.

பாக்யராஜின் "அந்த ஏழு நாட்கள்'’படத்தை தயாரித்த நாச்சியப்பன்தான், எனக்கு முதல் புரொடியூஸரா கிடைச்சார்.

ராஜசேகர் (ராபர்ட்-ராஜசேகர்) என்னோட நெருங்கிய நண்பர். அந்த அடிப்படையில் ராபர்ட்-ராஜசேகர் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, மணிவண்ணன் கதை-வசனம், ஹீரோ கார்த்திக், ஹீரோயின் சுஹாசினி, கவுண்டமணி, வடிவுக்கரசி... இப்படி மொத்த யூனிட்டும் எனக்கு முன்பே பரிட்சயமானவர்களாக இருந்ததால் எனக்கு சிரமம் இல்லை.

கவிதா ஹோட்டலில் ரூம் போட்டு பட வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில்தான் படபூஜையுடன் ஷூட்டிங் தொடங்கியது. ‘"ஆகாய கங்கை'’படத்துக்குப் பேர். எங்க காம்பினேஷனே அப்போ எதிர்பார்ப்போட பேசப்பட்டது. பரபரப்பா வேலை நடந்துக்கிட்டிருந்தது.

கார்த்திக்கைப் பற்றி ஒரு செய்தி உண்டு. அதாவது ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவார், கால்ஷீட் சொதப்புவார் என்று.

ஆனால் பின்னாளில் அப்படி இருந்ததா என்பதுகூட எனக்குத் தெரியாது. நான் அவரை வைத்து படம் இயக்கும்போது, மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் ஒரே நேரத்தில் நிறையப் படங்களில் நடித்த போதும்... எனக்கு கொடுத்த கால்ஷீட்படி, மிகச்சரியாக படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். ‘பாலா... பாலா...’ என என்னிடம் உசுரை விடுவார், மிக நட்பாக பேசுவார் கார்த்திக்.

யூனிட் முழுக்க எனக்கு நன்கு தெரிந்தவர்களே அமைந்ததால் "ஆகாய கங்கை'’படப்பிடிப்பு சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது.

எனக்கு கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு, மணிவண்ணனுக்குப் போனது...

(பறவை விரிக்கும் சிறகை)