(84) சிலுக்கு கணிப்பு!
வீரப்பதக்கம்'’ படத்துல நானும், காந்திமதியும் ஜோடி. எங்களுக்கு பொண்ணா நடிக்குது சிலுக்கு. கதைப்படி நாங்க கழைக் கூத்தாடி குடும்பம். ஒரு பஜார்ல கயித்துமேல சிலுக்கு நடக்கிற ஸீன் எடுக்கணும்! அது ஒரு பாட்டு ஸீனும்கூட. மனுஷப்பய வாழ்க்கையே தினமும், கயித்து மேல நடந்து சாகசம் பண்ற மாதிரிதானே.
படத்துக்காக போடப்பட்டிருந்த கடைகள்ல, சின்னப் பிள்ளைங்க சமையல் செஞ்சு விளையாடுறதுக்காக அடுப்பு, சமையல் பாத்திரங்கள்லாம் விற்கிற கடையில, அந்த விளையாட்டுச் சாமான்களை சிலுக்கு வாங்கிக் கிட்டிருந்தார்.எதுக்கு இது?னு நான் கேட்டப்போ... "எனக்கு இந்த மாதிரி குட்டி குட்டி பொருட் கள்னா உசுரு. போற இடங்கள்லயெல்லாம் இந்த மாதிரி பொருட்களை வாங்கி, வீடு முழுக்க சேர்த்து வச்சிருக்கேன்'' என்றார்.
குழந்தைத்தனம் மாறாத தென்னகத்து கனவுக்கன்னியின் செயல் எனக்கு வியப்பளித்தது.
மானிட்டரில் எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோது, சிலுக்கு பாடலுக்கு வாயசைக்காதது தெரியவந்தது.
உடனே ஒரு உதவி இயக்குநர் வந்து, “"மேடம்... நீங்க லிரிக்குக்கு வாயசைக்கலயே... திரும்ப எடுக்கணுமாம்''’எனச் சொன்னார்.
தனக்கே உரிய உதட்டை கோணிச் சுழித்து, ஒரு சிரிப்பு சிரித்த சிலுக்கு "யோவ்.... நான் லிரிக்குக்கு வாயசைக்க லைன்னா என்னா? படம் பார்க்க வர்றவங்க என்னோட வாயையா பார்க்ப் போறாங்க? எதைப் பார்ப்பாங்கன்னு தெரியாதா? போ... கண்டுக்காமப் போ...'' “ என்றார். சிலுக்கு சொன்ன தில் உண்மைதான் இருக்கு.
சிலுக்கு ஸ்மிதாவோட உடல் வனப்பும், வளைவு, நெளிவும் அந்த அனாடமி... அதைத் தாண்டி, சிலுக் கோடா ட்ரெஸ் சென்ஸ்... இதெல் லாம் தானே அவரை கனவுக்கன்னியா ஆக்குச்சு. சிரிக்கச் சிரிக்க சிலுக்கு இப்படிப் பேசியதன் யதார்த்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நான் மட்டு மல்ல... சிலுக்கை கனவில் காண்பவர் கள் கூட, ‘சிலுக்கு இன்னும் ஓரிரு நாளில் செத்துப் போய்விடப் போவ தாக’ கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.
சிலுக்குவின் மரணச் செய்தியைக் கேட்டதுமே அதிர்ந்து போனேன்.
எப்படி ஆச்சு? அந்தப் பொண்ண இந்த முடிவை நோக்கி எது தூண்டிச்சு?’
சிலுக்கு இல்லை’ என்பது உண்மைதான். ஆனாலும் இன்னமும்கூட என்னால் சிலுக்கின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சில்க் ஸ்மிதா என்று அனைவராலும் அறியப்படும் கவர்ச்சி நடிகை சிலுக்குவின் சொந்தப் பெயர் விஜயலட்சுமி. ஆந்திர மாநிலம் ஏலூருவில் 1960ம் ஆண்டு பிறந்தவர். சிலுக்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால் நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில் லை சிலுக்கால். சென்னைக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடினார். எங்க டைரக்டர் பாரதிராஜா "அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கதாநாயகி ராதாவுக்கு அண்ணியாக விஜயலட்சுமியை தேர்வுசெய்து நடிக்கவைத்தார். நான் தமிழில் சொல்லும் வசனங்களை, இரண்டு லைட்மேன் தெலுங்குத் தொழிலாளர்கள் தெலுங்கில் சிலுக்கிடம் சொல்வார்கள். இப்படித்தான் அவருக்கு கதாபாத்திரத்தையும், வசனத்தையும் புரிய வைத்தேன். ஆனால் "அலைகள் ஓய்வதில்லை' படத் திற்கு முன்பாக நடிகரும், கதாசிரியருமான வினுசக்கரவர்த்தி எழுதிய ‘"வண்டிச் சக்கரம்'’ படத்தில் சாராயக்கடையில் வேலை பார்க்கும் "சிலுக்கு'’ என்ற கேரக்டரில் அறிமுகமாகி புகழ் பெற்றதால் "சிலுக்கு ஸ்மிதா'வாகி, செல்லமாக ரசிகர்கள் ‘"சிலுக்கு'’ என அழைத்தனர்.
கவர்ச்சியான தோற்றத்தாலும், நடனத் தாலும் அனைவரையும் ஈர்த்த சிலுக்கு, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து 80களில் தென்னிந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னியாக வலம்வந்தார்
கவர்ச்சி நடிகை என்பதால் மற்றவர்கள் தன்னை பலவீனமாக நினைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்காகவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் பல சமயங்களில் ஒருவித இறுக்கமான நிலையையும்கூட கடைப்பிடித்தார். ஆனால் சிலுக்கு, கால்மேல் கால் போட்டுக் கொண்டு, இறுக்க மான பாவனையில் இருந்ததை புதிதாகப் பார்த்த பலரும், குறிப்பாக பத்திரிகைகளும், ’சிலுக்கு தலைக்கனம் பிடிச்சவர்’ என்று கூட சொன்னது உண்டு. ’அந்த இமேஜ் அப்படியே இருக்கட்டும்’ என சிலுக்கும், பதில் விளக்க மெல்லாம் சொல்லவில்லை.
குறைந்த வருஷங்களிலேயே, சுமார் ஐநூறு படங்களில் நடித்துவிட்ட சிலுக்கு, 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி தன்னுடைய 35-ஆவது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார்
சிலுக்குவை, அவர் இருந்தபோது "டர்ட்டி கேர்ள்' ஆகவே பார்த்தார்கள். ஆனால் அவரின் மறைவுக்குப் பின், "தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக எடுத்தார்கள். சிலுக்குவாக வித்யாபாலன் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு ‘"இந்தியாவின் சிறந்த நடிகை-2011' என்கிற தேசிய விருது தரப்பட்டது.
அட்லாண்டிக் ஹோட்டலில் எங்க டைரக்டர் பாரதிராஜாவின் படத்திற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருந்த சமயம் அது.
கதை விவாதம் முடிந்து வந்த நான் லிஃப்ட்டில் ஏறியபோது... அழுதுகொண்டே ஓடிவந்து லிஃப்டில் ஏறி னார் ஷோபா. மறுநாள்....... அவரின் மரணச் செய்தி வந்தது.....
(பறவை விரிக்கும் சிறகை)