(68) பொழுதும் போக்கணும் பழுதும் நீக்கணும்!
கவிஞர் வாலி முன்னமே சில படங்களுக்கு பாட்டெழுதினாலும், அவரோட பாடல்ல வந்த முதல் படம் "கற்பகம்'.
"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு', "அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா', "பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்', ‘"மன்னவனே அழலாமா'’என அந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் சூப்பரோ சூப்பர் ஹிட்.
கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்த சமயம்தான்... ‘"கற்பகம்'’ படத்திற்கு வாலியை பாடல் எழுத வைத்தார் விஸ்வநாதன். முதலில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வாலிக்கு. மற்ற பாடல்கள் கண்ணதாசனுக்கு என்றுதான் நினைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் வாலியின் வார்த்தைகளில் சொக்கிப்போய், எல் லாப் பாடல்களையும் எழுத வைத்துவிட்டார்.
சென்னை திரும்பிய கண்ணதாசனுக்கு விஷயம் தெரிந்தது.
"என்னடா விசு... நான் ஊர்ல இல்லாத நேரம் பார்த்து, யாரையோ வச்சு பாட்டெழுத வச்சியாமே...''”
"என்னை விட்டுட்டு, வேற மியூஸிக் டைரக்டர்கள்ட்ட நீங்க பாட்டெழுதுறீங்க, அது மட்டும் செய்யலாமா? அதனாலதான், நான் வேற பையனை வச்சு எழுத வச்சேன்''’என தமாஷாகச் சொன்ன எம்.எஸ்.வி., “"நீங்க அந்தப் பையன் எழுதின பாட்டைக் கேளுங்க... சும்மா பிச்சிட்டான்''’எனவும் சொன்னார்.
"கற்பகம்'’ டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்குச் சொந்தமான "சாரதா ஸ்டுடியோ' வில் பாடலைக் கேட்டார் கண்ண தாசன்.
"விசு வா... வந்து கார்ல ஏறு. முதல்ல அந்தப் பையனை பாராட் டிட்டு வரணும். என்ன பிரமாதமா எழுதியிருக்கான்''’என வியந்தார் கண்ணதாசன்.
மைலாப்பூரில் ஒரு மாடி அறையில் "அக்கடா'னு தூங்கிக்கிட்டிருக்கார் வாலி.
யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து, கண்ணைத் திறந்து பார்த்த வாலிக்கு... அதிர்ச்சி, இன்ப அதிர்ச்சி, வியப்பு...! நிஜமா? என்கிற கேள்வி வேறு.
கண்ணதாசனைக் கண்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு, எழுந்தார் வாலி.
"கவிஞரே நீங்க இங்க வருவீங்கன்னு நான்...''”
"என்னய்யா பாட்டு எழுதியிருக்க? பிரமாதம் போ... இனிமே சினிமாவுல உன்னோட ஆட்சி தான்... இது தொடரட்டும், நல்லா எழுது. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., சாதாரணமா ஒருத்தரை ஓ.கே. பண்ண மாட்டார். அவரே அறிவிச்சிட்டார். நீ உயர்ந்த இடத்துக்கு வருவ''’என மனதார வாழ்த்தினார் கண்ணதாசன். அவரின் பெருந்தன்மையால் நெகிழ்ந்துபோனார் வாலி.
ஊருக்கே திரும்பிப் போயிடலாம்னு இருந்த வாலியின் மனதை மாற்றியது "மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?'’என்கிற கண்ணதாசனின் பாடல்.
"இதேபோல பெரும் துயரப்பட்டு, வாய்ப் புக் கிடைக்காமல் ஊருக்கே போய் விடலாம் அல்லது தற் கொலை செய்து கொள்ளலாம்' என முடிவெடுத்த என்னுடைய மனதிற்கு உத்வேகம் கொடுத்து மாற்றியது... ‘"காலமகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கவலைப்பட்டு ஆவதென்ன சொல்லய்யா'’என்கிற கண்ணதாச னின் பாடல்தான்.
ஆக... "ஒரு திரைப்படத்திற்கு பாடல் என்பது வெறுமனே இருந்துவிடக்கூடாது. பொழுது போக்குவதாகவும் இருக்கவேண்டும்... கேட்பவனின் துவண்டுவிட்ட மனதின் கவலைகளை போக்குவதாகவும் இருக்க வேண்டும். தனிமனித, சமூக பழுது நீக்குவ தாகவும் இருக்கவேண்டும். நமது இலக்கு நோக்கி நம்மை நகர்த்துவதாகவும் இருக்க வேண்டும்.'
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தனது படங்களில் பாடல்களை அமைத்துக்கொண்ட விதத்தைச் சொல்லலாம். எம்.ஜி.ஆரை ஒரு லட்சிய இலக்கு நோக்கித் திருப்பியது பாடல்கள்தான்.
குறிப்பாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எம்.ஜி. ஆருக்காக எழுதிய பாடல் களைச் சொல்லலாம்....
"பாச வலை'’ எனும் படத்திற்காக ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்து முடித்திருக் கிறார் எம்.எஸ்.விஸ்வ நாதன். அப்போது மேனே ஜர் உள்ளே வந்து “"உங்களிடம் பாடல் எழுத சான்ஸ் கேட்டு ஒரு பையன் வந்திருக்கிறார்' எனச் சொல்ல... “"புதுக் கவிஞர்களை வச்சு பாட்டெழுதி மல்லுக்கட்ட நேரமில்லை. ஏற்கனவே பிரபலமா இருக்க ஒரு கவிஞரை கூட்டி வாங்க'’என எம்.எஸ்.வி. சொல்ல... வெளியே வந்து அந்த புது கவிஞரிடம் சொல்கிறார் மேனேஜர்.
"அய்யா என்னை பார்க்க வேண்டாம். என்னோட கவிதையை மட்டும் பார்த்தா போதும்''’என்றபடி எதையோ எழுதி நீட்டுகிறார் கவிஞர்.
மேனேஜர், அதை எம்.எஸ்.வி.யிடம் கொடுக்க.... அதைப் படித்துப் பார்த்து வியப்பும், அதிர்ச்சியும் அடைகிறார்.
உடனே அழைக்கப்படு கிறார் வளரும் கவிஞர்.
அப்படித்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.எஸ்.வி.க்கு அறிமுகமானார். பட்டுக் கோட்டையார் எழுதிக் கொடுத்த வரிகள் பாட்டானது.
குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர்
கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி
பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான்
சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ
உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
"திருடாதே பாப்பா திருடாதே'’ என்கிற பாடலை எம்.ஜி.ஆருக்காக ‘"திரு டாதே'’படத்தில் எழுதினார்.
"மகாதேவி'யில் ‘"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்'’ பாடல், "நாடோடி மன்னன்' படத்தில் ‘"தூங்காதே தம்பி தூங்காதே'’என பட்டுக் கோட்டையாரின் தத்து வார்த்தப் பாடல்களை தனது கோட்பாடாக திரையில் வெளிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவராகி, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது... "இந்த முதலமைச்சர் நாற் காலியின் நான்கு கால் களில் ஒன்று பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் அமைந்தது'' எனச் சொன்னார்.
தனி மனிதரின் மனமாச்சரியங்களுக்கு மட்டுமல்ல... சமூக அரசியல் ஆச்சரியங்களையும் கூட உண்டாக்கும் வலிமை கொண்டதாக இருந்தது பாடல்கள்.
அப்படியான பாடல் களை நமக்குத் தந்த தமிழ்க் கவிஞர்களை போற்றுவோம். சினிமாப் பாடல்களை சமூகத்திற்கானதாக மீண்டும் மாற்றுவோம்.
(பறவை விரிக்கும் சிறகை)
___________
வடிவேலுவின் ரசனை!
பழைய சினிமாப் பாடல் களின் பல்லவியை மட்டும் பெரும் பாலும் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் பாடல்களின் முழு வரி களையும், ஒரு பாடலின் அத்தனை சரணங்களையும், சரளமாகப் பாடக் கூடியவர் நடிகர் வடிவேலு. குறிப்பாக கண்ணதாசன் பாடல் கள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இரவு நேரத்தில் வடிவேலுவும், நானும் அமர்ந்து பேசிக்கொண் டும், பாடிக்கொண்டும் இருப் போம். திடீரென பாடல் சம் பந்தமாகவே இருவருக்கும் இடையே மோதல் வரும்.
"மனோ... கிளம்பி என்கூட வா...'' என அர்த்தராத்திரியில் காரில் என்னை அழைத்துச் செல்லுவார். தி.நகரில் இருக்கும் கவிஞர் கண்ணதாசன் சிலை அருகே காரை நிறுத்திவிட்டு இறங்குவோம்.
"யோவ்... கவிஞரே... ஒவ்வொரு பாடலையும் உசுர உருக்குற மாதிரி எழுதிட்டு, எல்லாரையும் தூங்கவிடாமச் செஞ்சிட்டு, நீ நிம்மதியா தூங்குற''’எனச் சொல்லிக்கொண்டு சிலையின் அடியில் போய் அமர்வார். என்னையும் அமரச் சொல்லுவார்.
சிறிதுநேரம் உட்கார்ந்து எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவோம்.