(57) ரஜினியை வைத்து எடுக்கத் தயங்கிய காட்சி!

த்யா மூவீஸ் தயாரிப்பில், ரஜினியை வைத்து நான் இயக்கிய ‘"ஊர்க்காவலன்'’படத்தின் க்ளைமாக்ஸ் குதிரை சண்டைக் காட்சிகளை பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் பப்புவர்மா பிரமாண்டமாக எடுத்துக் கொடுத்தார்.

க்ளைமாக்ஸில் உச்சகட்டத்தில் பாண்டியன், மலேசியா வாசுதேவன் ஆகியோருடன் கிராம மக்கள் தீப்பந்தங்களுடன் திரண்டுவந்து வில்லன் ரகுவரனை முற்றுகையிடும் காட்சி எடுக்க வேண்டும்.

"அவ்வளவு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் வேணும்'னு எப்படி கேட்பது?

Advertisment

இருந்தாலும் கேட்டேன்.

இங்குதான் ஆர்.எம்.வீரப்பன் ஒரு உத்தியை கையாண்டார்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்களுக்கு தகவல் சொல்லி, எதிர்பார்த்ததைவிட பெருங்கூட்டத்தையே திரட்டிட்டார். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இருப்பாங்க.

Advertisment

சென்னை ராஜாஜி ஹால்லதான் அந்த இறுதிக் காட்சி ஷூட்டிங் நடந்தது.

manobala

ரெண்டாயிரம் பேர் கைல தீப்பந்தங்கள் கொடுத்தாச்சு. அவங்களுக்கு சினிமா ஷுட்டிங் அனுபவம் இருக்காதில்லையா? அதனால "நாமளும் சினிமாவுல நடிக்கிறோம்'னு சொல்லி, குஷியில குதிச்சுக் குதிச்சு வர்றாங்க.

அப்போ அனௌன்ஸ்மெண்ட் பண்றதுக் கான மைக் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயன்படுத்துற வழக்கம் இல்லை. நான் ராஜாஜி ஹால் படியில உட்கார்ந்து அவங்களுக்கு காட்சியோட தன்மையை விளக்கினேன்.

"இது வில்லனோட கொடுமை எல்லை மீறியதுனால, கிராம மக்கள் கொதிச்சுப் போய், கோபமும், ஆவேசமுமா வர்ற சீன். அதுக்குத் தகுந்த மாதிரி நீங்கள்லாம் வரணும்''னு’விளக்கிச் சொன்னேன். அதைப் புரிந்துகொண்டார்கள். அதன்பிறகு அந்தக் காட்சியை எடுத்தோம்.

"ஊர்க்காவலன்'’படத்துல இப்படி எத்தனையோ அனுபவங்கள் எனக்கு. அதிலும் கடைசி ஒரு ரீலை சினிமாஸ்கோப்பாக மாற்றினார் ஆர்.எம்.வீரப்பன்.

மரியாதைக்குரிய பெரியவர் ஆர்.எம்.வீரப்பன் சாருக்கு நன்றி!

"ஊர்க்காவலன்'’படம் வெளியானது.

எனக்கு இந்தப் படம் மூலம் ரொம்பப் பெரிய பேர் கிடைத்தது. அதே சமயம்... மறக்க முடியாத கெட்ட பேரும் கிடைத்தது.

ஒரு காட்சியில் ரகுவரன் ஜீப்ல வருவார். வந்து, சேலஞ்சிங்கா பேசிட்டு, ஜீப்பை ஸ்டார்ட் பண்ணுவார். ஆனால் ஜீப் நகராது. ஜீப்போட பின் பக்கத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி, இன்னொரு முனையை ரஜினி சார் காலில் கட்டியிருப்பார். இதனால் ஜீப் நகராது.

இந்த ஷாட்டை எடுக்க எனக்கு உடன்பாடில்லை.

"சார்... பக்கத்துல இருக்க மரத்துல கயிறோட மறு முனையை கட்டிடலாம். நீங்க மரத்த ஒட்டி நின்னா போதும்''’என்றேன்.

"இல்ல... இது நல்லாருக்கும்... நல்லாருக்கும்... என்னோட ஃபேன்ஸுக்கு பிடிக்கும்''’என்றார் ரஜினி.

"சார்... நான் பாரதிராஜா கிட்ட ட்ரெய்ன்-அப் ஆகி வந்தவன். நாங்க இந்த மாதிரி மிகை யான காட்சியெல்லாம் எடுக்கமாட்டோம். ஆனா... நீங்க உங்க ஃபேன்ஸ் விரும்புவாங்கனு சொல்றீங்க... ஓ.கே. சார்''’எனச் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் அந்த ஷாட்டை எடுப்பதில் எனக்கு தயக்கம் இருந்துகொண்டேயிருந்தது. கேமராமேன் லோகநாதனிடம், "சார்... அந்த ஷாட்டை நீங்களே எடுங்க''’என்றேன். அவரும் எடுத்தார்.

லஞ்ச் பிரேக்!

"என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என் மேல கோபமா?''’என்று கேட்டார் ரஜினி.

"என்ன சார்... இது ஏதோ காதுல பூ சுத்துற வேலையா இருக்கு''’என்றேன்.

"உங்களுக்குத் தெரியாது மனோபாலா. என் ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு தியேட்டர்ல போய் பாருங்க. படம் வெளியானதும் லதாம்மாகூட நீங்களும் தியேட்டர் விசிட் போங்க. ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ஷோ பாருங்க... என் ரசிகர்களைப் பத்தி தெரிஞ்சுக்குவீங்க''’ என்றார்.

"ஏதோ... என்னை சமாதானப்படுத்த அப்படிச் சொல்றார் ரஜினி'’என அதை நான் பெரிதுபடுத்த வில்லை.

படம் வெளியானது! எல்லா ஸீனுக்குமே ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அந்த ஜீப் ஸீன் பார்த்ததும் தியேட்டரே அதிருகிற மாதிரி விசில் பறக்குது. காசை அள்ளி வீசுறாங்க. அப்பத்தான் ரஜினி ரசிகர்கள் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்.

படத்துல காமெடி ஸீனும் பேசப்பட்டது. ஃப்ர்ஸ்ட் ஆஃப்லதான் காமெடி வர்ற மாதிரி எடுத்திருந்தோம். ஆனா... ‘செகண்ட் ஆஃப் ரொம்ப இறுக்கமா போகுது. "ரிலாக்ஸேஷனே இல்ல...'’எனச் சொல்லி, காமெடி காட்சிகளை பின் பாதி படத்தில் சேர்த்தார் ஆர்.எம்.வீரப்பன். அது படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்தது.

"தில்லுமுல்லு'’படத்துல ரஜினி நல்லா காமெடி பண்ணியிருப்பார். ஆனால்... "ஊர்க் காவலன்' கதை சீரியஸானது என்பதால்... "ஃபுல் லென்த் காமெடி நான் பண்ணினா எடுபடுமா?''’ என ரஜினி கேட்டுக்கொண்டே இருந்தார்.

"காமெடியன், காமெடி பண்றதைவிட, ஹீரோ காமெடி பண்ணினா இன்னும் நல்லா இருக்கும் சார்''’என்று சொல்லி, அவரை நடிக்க வைத்தேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து தனது சீரியஸான கதைப் படங்களிலும் முன்பாதி படத்தில் ரஜினி காமெடி செய்வது வழக்கமாகிவிட்டது.

"நாம பெரிய நடிகர்... படத்தை முடிச்சுக் கொடுத்துட்டோம்... நல்லா ஓடுது''’ அப்படியெல்லாம் ரஜினி நினைக்கமாட்டார்.

புதுமுகம் போலவே "மக்கள் இந்தப் படத்துல எந்தெந்த காட்சிகளை ரசிக்கிறாங்க' என விசாரித்து தெரிந்துகொள்வார்.

"ஊர்க்காவலன்'’பெரும் வெற்றியாக அமைந்ததால், என்னை இரண்டு மூன்று முறை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் ரஜினி.

ரஜினி, கமல் மாதிரி பெரிய ஆர்டிஸ்ட்டுகளை வைத்து தொடர்ச்சியா கமர்ஷியல் படம் கொடுத்த ஜாம்பவான் யாருன்னா... டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார்தான்.

ரஜினிய வச்சு ஒரு படம். அடுத்து கமலை வச்சு ஒரு படம்னு ஹிட் கொடுத்திட்டே இருந்தார். நான் அவர்கிட்ட “"உங்களுக்கு ஏது சார் நேரம்? எப்படி ஆக்ஷன் ஹீரோக்களை கையாள்றீங்க? கதையை எங்க புடிக்கிறீங்க?''’எனக் கேட்டேன்.

"மனோபாலா சார்... நாம கதையை ரெடி பண்ணீட்டுத்தான் ஷூட்டிங் போகணும்னா, வருஷத்துக்கு ரெண்டு படம்தான் பண்ண முடியும். லொகேஷன் போய்ட்டு, கதையை டெவலப் பண்ணி எடுத்தாத்தான் இது சாத்தியப்படும்''’எனச் சொன்னார்.

எஸ்.பி.முத்துராமன் போன்ற ஆக்ஷன் மூவி டைரக்டர்களுக்கு ஹீரோக்களோட ஒத்துழைப்பும் கிடைக்கும்.

உச்சகட்டமா ஒரு வருஷத்துல ரஜினி 28 படங்கள் பண்ணீருந்தார். இது எனக்கு வியப்பா இருந்துச்சு. அவர்கிட்டயே கேட்டேன்.

"நாமளா கதை பண்றோம். யாரோ எழுதுற கதை. நல்லா இருந்தா நடிக்க வேண்டியது தான். அப்புறம் எஸ்.பி.முத்துராமன், கே.பாலசந்தர்... இவங்ககிட்டவெல்லாம் கதை கேட்கவே மாட்டேன். அவங்களுக்குத் தெரியும், என்னை எந்த மாதிரி காமிச்சா ரசிகர்கள் ரசிப்பாங்கன்னு. சிலரை நாம நம்பித்தான் போகணும். அதனால்தான்... இவ்வளவு படங்கள் ஒரே வருஷத்துல நடிக்க முடிஞ்சது''’என்றார் ரஜினி.

கதாசிரியரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் என்கிட்ட சொன்ன ஒரு அருமையான விஷயத்தைச் சொல்றேன். இது இன்றைய டைரக்டர்களுக்கும் ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்.

"பாதி படம் பஞ்சு அருணாச்சலம்' என ஏளனப்படுத்தப்பட்ட பஞ்சு அருணாசலம், ஒரு கட்டத்தில் வெற்றியைத் தவிர வேறு எதையும் காணாதவராகத் திகழ்ந்தார்.

பஞ்சு சார் சொன்ன ‘சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்...

(பறவை விரிக்கும் சிறகை)