dd

(52) எம்.ஜி.ஆர் தரப்பும், கலைஞர் தரப்பும் ஒரே நேரத்தில் விடுத்த அழைப்பு!

விஜயகாந்த் -ராதிகா -பேபி ஷாலினியை வைத்து "சிறைப்பறவை'’படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த செகண்ட் ஆஃப் காட்சிகளில் பெரும்பாலானவற்றை தூக்கி கடாசச் சொன்ன கதாசிரியர் கலைமணி, அதற்குப் பதிலாக செகண்ட் ஆஃப்பை கோர்ட் ஸீன்களாக மாற்றி பிரமாதப்படுத்தியிருந்தார்.

Advertisment

ஏவி.எம். ஸ்டுடியோவில் இருந்த நிரந்தர கோர்ட் ஸீன் செட்டில் படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில், தான் எழுதிக் கொடுத்திருந்த சுமார் நாற்பது பக்கங்கள் கொண்ட வசன பேப்பர்களை என்னிடமிருந்து வாங்கிய கலைமணி அதை நாலா, மூணா கிழித்துப் போட்டுவிட்டு, "நீங்க போய் ஷூட்டிங் ஏற்பாடு களைக் கவனிங்க... மாத்தி எழுதப் போறேன்... என் அஸிஸ்டெண்ட் கிட்ட ரெண்டு ரெண்டு பேப்பரா எழுதி எழுதி குடுத்துவிடுறேன்...''” என்றார்.

விஜயகாந்த், ராதிகாவுடன் வக்கீல் வேஷத்தில் நடிக்க வந்த லட்சுமியும் மேக்-அப் போட்டு தயாராக காத்திருக்க... "இந்த நேரத்தில் கலைமணி சார் இப்படி பண்ணீட்டாரே... லட்சுமி மேடம் மூணுநாள் கால்ஷீட்தான் கொடுத்திருக் காங்க. அதுக்குள்ள அவங்க ஃபோர்ஷனை முடிச் சிட முடியுமா?'’என நான் திகைத்துப் போய் நிற்க...

"போங்க டைரக்டரே, போய் ஷூட்டிங்கை கவனிங்க.... பின்னாலேயே டயலாக் பேப்பர் வரும் பாருங்க''’என்றார் கலைமணி.

Advertisment

நான் கோர்ட் செட்டுக்குள் நுழைந்து காட்சி களை எங்கிருந்து ஓபன் செய்வது, க்ளோஸ்-அப் உள்ளிட்ட ஷாட்களை டிஸ்கஸ் செய்துகொண்டி ருக்க, கலைமணியின் உதவியாளர் இரண்டு ஏ-4 ஷீட்டுகளுடன் வந்தார். அதில் டயலாக் எழுதப் பட்டிருந்தது.

அந்த இரண்டு பேப்பரில் இருந்த டயலாக்கை சம்பந்தப்பட்ட ஆர்டிஸ்ட்டுகளை வைத்து எடுத்து முடிக்க... அடுத்த ரெண்டு பேப்பர் வந்தது.

இப்படியே... மூன்று நாட்களும் ரெண்டு, ரெண்டு பேப்பராக டயலாக் வர வர... அதை வைத்து படப்பிடிப்பை நடத்தினேன்.

முன்கூட்டியே டயலாக் ரெடியாகாமல் உடனடியாக எழுதி வருவதை லட்சுமி, ராதிகா உள்ளிட்ட யாருமே கண்டுபிடிக்கவில்லை. ஆனால்... ஒரே ஒருவர் கண்டுபிடித்து கேட்டுவிட்டார்.

"என்ன டைரக்டர் சார்... வடை சுடச்சுட ரெடியாகி வருதுபோல...''’எனக் கேட்டார்.

கண்டுபிடித்தவர்... விஜயகாந்த்.

ராதிகாவிற்காக ஜெயிலில் இருக்கும் விஜயகாந்த்தை, ராதிகாவுடன், வக்கீலாக நடித்த லட்சுமி ஜெயிலுக்குச் சென்று பார்ப்பதாக ஒரு ஸீன். ஆனால் நாங்கதான் ஏற்கனவே பெங்களூரு வில் ஜெயில் ஸீன்களை எடுத்து முடிச்சிட்டோமே.

இனி இந்த ஒரு ஷாட்டுக்காக பெங்களுரூ போய், பெர்மிஷன் வாங்கி எடுப்பது லேசான காரியமில்லை. அதனால், ஏவி.எம். கார்டனிலேயே விஜயகாந்த், ராதிகா, லட்சுமி ஆகிய மூவரையும் வைத்து ஒரு காம்பினேஷன் ஷாட் எடுத்து, ஜெயிலில் பார்ப்பதுபோல மேட்ச் பண்ணினேன்.

dd

இந்த ஸீனைப் பார்த்துவிட்டு, கலைமணி என்னை ரொம்பவும் பாராட்டினார். மொத்தத்தில் ‘"சிறைப்பறவை' படம் கும்முனு அமைஞ்சது.

என்னோட படங்களுக்கு பிறமொழியில் நல்ல வரவேற்பு இருந்தது. ரிலீஸுக்கு முன்னாடியே பிறமொழி ரைட்ஸ் விற்பனை ஆகிடும். அதனால் "சிறைப்பறவை'’படத்தின் கதை ரைட்ஸை தெலுங்கிற்கு நடிகர் மோகன்பாபு கேட்டிருந்தார். அவருக்கு கொடுப்பதாக இருந்தோம். அதற்குள் இன்னொரு தெலுங்கு புரொடியூஸர் வந்து கலைமணி யிடம் பேசி உடனே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

தெலுங்கில் சோபன்பாபுவும், ராதிகாவும் நடித்தார்கள்.

கதையை இந்தியில் எடுக்கும் உரிமையை தயாரிப்பாளர் பொக்காடியா வாங்கினார்.

"படத்தை மனோபாலாவே இந்தியில் இயக்கட்டும். ஹீரோயின் கேரக்டர் பவர் ஃபுல்லாக இருப்பதாக முதலில் ஸ்ரீதேவி யிடம் பேசுவோம். அவர் ஓ.கே.ன்னா, அடுத்து ஹீரோ யார்னு பேசுவோம்'' என்றார் பொக்காடியா.

இங்கேயே படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திப் பட முக்கிய வர்த்தகர்கள் சிலரும், ஸ்ரீதேவியின் அம்மாவும் படம் பார்த்தார்கள்.

"சிறைப்பறவை’படத்தில் இண்டர் வெல்லயே வில்லன் செத்துப் போவான். பிற்பாதி கோர்ட் விவாதங்களால் முன்பாதி யைவிட செம ட்விஸ்ட்டாக இருக்கும். ஆனால், பாதியிலேயே வில்லன் செத் துட்டா... அப்புறம் படம் எப்படி ஓடும்? பாலிவுட்ல பிரான், ஓம்புரினு பெரிய பெரிய வில்லன் ஆர்டிஸ்ட்டுகளுக்கு ரசிகர் கள் பட்டாளம் உண்டு. அவங்க இருந்தாத்தான் படம் பிசினஸ் ஆகும்'’எனச் சொன்னார்கள்.

"வில்லனை க்ளை மாக்ஸ் வரை கொண்டு வர்ற மாதிரி கதை இருந்தாத்தான் படம் ஓடும். ஓடுற படத்துலதான் என் பொண்ணு நடிப்பா'’என ஸ்ரீதேவியின் அம்மா சொன்னார்.

இதையெல்லாம் கவனித்த பொக்காடியா, “"கலைமணி சார், கதையில் வில்லன் ஃபோர்ஷனை டெவலப் பண்ணலாமா?''’எனக் கேட்டார்.

"நீங்க கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துடு றேன். என் கதையை இஷ்டத்துக்கு மாத்த நான் விரும்பல''’எனச் சொல்லிவிட்டார்.

இனி கலைமணி மனம் மாற வாய்ப்பில்லை என்று உணர்ந்துகொண்ட பொக்காடியா “"இந்தக் கதையோட ரைட்ஸ் நான் வாங்கிட்டேன். அது என்கிட்டவே இருக் கட்டும். இப்போ நான் அதை படமா எடுக்கமாட்டேன். பின்னாள்ல சந்தர்ப்பம் அமைஞ்சா எடுத்துக்கிறேன்''” எனச் சொல்லிவிட்டார். அதனால்தான் அந்தக் கதை இன்றுவரை இந்தியில் எடுக்கப்படவில்லை.

"சிறைப்பறவை'’ படம் ரிலீஸ் நேரம். கொஞ்சம் டென்ஷனான சூழல். விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்த ரும் என்னுடன் இருந்து நல்லபடியாக ரிலீஸாகும்படி பார்த்துக் கொண்டார்கள். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பொதுவாக இரு விஷயம் சொல்கிறேன்...

விஜயகாந்த் ஆக்ஷன் ஹீரோ என்பதால் இளைஞர்கள் மத்தியில் அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், விஜயகாந்த் -மனோபாலா -கலைமணி என்கிற கூட்டணியும், விஜயகாந்த் -ஆர்.சுந்தர்ராஜன் என்கிற கூட்டணியும்தான், விஜயகாந்த் படங்களுக்கு லேடீஸ் ஆடியன்ஸை தியேட்டர்களுக்கு வரச் செய்தது. பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு உயர்ந்தது.

அந்த வகையில் "சிறைப்பறவை'’படமும் பெரும் வெற்றிபெற்றது. விஜயகாந்த் ரசிகர்களுக்கும் திருப்தி. லேடீஸ் ஆடியன்ஸுக்கும் படம் மிகவும் பிடித்துப் போனது. படம் ஹிட்டாச்சு. அடுத்த படத்தை சூட்டோட ஆரம்பிக்கணுமே.

கலைமணி சாரிடம் பேசினேன்.

குற்றாலத்தில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யமாக இரண்டு பெரிய நிறுவனத்திலிருந்து போன் வந்தது.

என்னோட டைரக்ஷனில் படம் பண்ண, அரசியலின் இரு சிகரங்களாகத் திகழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்தும், டாக்டர் கலைஞர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்தும் அழைப்பு.

யாருடைய வாய்ப்பை மறுப்பது? யாருடைய வாய்ப்பை ஏற்பது?

நான் தவிக்க...

என் தவிப்பை ரசித்துக்கொண்டிருந்தார் கலைமணி!

(பறவை விரிக்கும் சிறகை)