manobala

(17) அறை எண் 510-ல் பாக்யராஜ்!

குருநாதர் பாரதிராஜாவுக்கும் சிஷ்யர் பாக்யராஜுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாக்யராஜை வெளியே போகச் சொல்லிவிட்டார் பாரதிராஜா.

Advertisment

பாரதிராஜாவிடம் அசிஸ்டெண் டாக சேர வந்து இரண்டரை மணி நேரத்திலேயே குருநாதரின் சம்மதத்துடன் சிஷ்யரை அழைத்து வந்துவிட்டேன்.

இது எனது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், கூப்பிட்டு வரச்சொன்ன பாரதிராஜாவும், குருநாதர் அழைப்பை நிராகரிக்கக்கூடாது எனக் கிளம்பி வந்த பாக்யராஜும் பெருந்தன்மையுடன் இருந்ததால்தான் என்னால் இந்த வேலையைச் செய்ய முடிந்தது.

நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஓட்டலில் இருந்து ஆட்டோவில் கிளம்பிப் போய் தி.நகர் சுதாரா ஹோட்டலில் தங்கியிருந்த பாக்யராஜை அழைத்துக்கொண்டு அதே ஆட்டோவில் பாம்குரோவ் வந்தேன்

Advertisment

அறை எண் 410-க்குள் நுழைந்தோம். பாரதிராஜா புன்னகை பூத்தார். உள்ளே இருந்த கதாசிரியர் முகம் சிறுத்துப் போய்விட்டது.

"பாக்யராஜை வச்சு கதை பண்ணப் போறாங்களா? இல்ல... நம்மள வச்சு ஸ்கிரிப்ட் பண்ணப் போறாங்களா?' என கதாசிரியருக்கு சின்னதாய் சந்தேகமும், குழப்பமும்.

தனியா படம் பண்ணப்போன பாக்கியராஜை, "நம்ம குருநாதர் முதல்முதலாக தயாரிக்கிற படத்துல நீங்க இருக்கணும்' என சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டி வந்தது நானாச்சே. அதனால் என் மீது லேசான கடுப்பில் இருந்தார் அந்த கதாசிரியர்.

சூழ்நிலையின் தட்பவெப்பம் கதாசிரியருக்கு கொஞ்சம் சங்கடம் ஏற்படுத்தியதால், "நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்'' என்றார்.

டைரக்டர் கார் கொடுத்து அனுப்பினார்.

அறை எண் 410-க்கு நேர் மேலே அறை எண் 510-ஐ புக் பண்ணினார் டைரக்டர். அந்த டைரக்டர் மற்றும் பாக்கியராஜுடன் நான் மூவரும் சென்று அறையில் அமர்ந்தோம்.

"கதாநாயகியோட பேரு ஜோதி. "ஜோதியை என்னைக்கா இருந்தாலும் அணைப்பேன்'னு சொல்ற வில்லன்... இதுதான் சார் கதை. உங்களுக்கு என்ன தோணுது?'' எனக் கேட்டார் டைரக்டர்.

"சரிங்க சார்... விடுங்க! இதை வைச்சே கதை பண்ணிடலாம்'' என்றார் பாக்யராஜ்.

ff

எனக்கு பிரமிப்பு.

"என்னடா இது, டைரக்டர் ஒரே ஒரு வரிதான் சொன்னாரு. அதை வச்சு ஸ்கிரிப்ட் பண்ணிடலாம்னு பாக்யராஜ் சொல்றாரே. அவனவன் குமுறக் குமுற... கதை பண்ணினாலே "ஒண்ணும் சரியில்லை'ன்னுட்டுப் போறாங்க. இவரு ஒரு வரிய வச்சுக்கிட்டு எப்படி கதை பண்ணுவார்?'' என பிரமித்தேன்.

இந்த பிரமிப்பும், அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணப்போற ஆர்வமும் என்னை ஒருவித பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக் கும் ஆளாக்கிவிட்டது.

"பாலா மட்டும் உங்ககூட இருக்கட்டும், மத்தவங் கள்லாம் கீழ் ரூம்லயே இருக்கட்டும்'' என்றார் டைரக்டர்.

பாக்யராஜை அழைத்து வந்ததற்காக, டைரக்டர் எனக்கு கொடுத்த கிரெடிட்! நான் 410 மற்றும் 510 ரெண்டு அறைகளுக்குள்ளும் போவேன்... வருவேன்

"வீட்டுக்கு போயிட்டு வர்றதாச் சொன்ன கதாசிரியர் ரெண்டு, மூணு நாட்களாகவே வரவில்லை. அவருக்கு மனச்சடவோ அல்லது "நாம சொன்ன கதையோட "நாட்' மட்டும் எடுத்துக்கிட்டு வேறொருத்தரை வச்சு கதை பண்றாங்க'' என நினைத்துவிட்டாரோ என்னமோ?

சப்பணங்கால் போட்டு மடியில் தலையணை வைத்து அதன்மேல் ரைட்டிங் பேடை வைத்து எழுதிக்கொண்டிருந்தார் பாக்யராஜ்.

மூன்றே நாட்கள்தான்.

டைரக்டரிடம் "கதை ரெடி சார்'' என்றார் பாக்யராஜ்.

எனக்கு நிஜமாகவே அதிர்ச்சி! "கதை ரெடியா? மூணே நாள்லயா? அதெப்படி மூணே நாள்ல ஸ்கிரிப்ட் பண்ணமுடியும்?' என அதிர்ச்சி விலகாமல் பார்த்தேன்.

"கதை கேட்க எல்லோரையும் கூப்பிடுறீங்களா? இல்ல நீங்க முதல்ல கேட்குறீங்களா?'' என பாக்யராஜ் கேட்க...

"நான் கேட்கிறேன்... கூட பாலாவும் கேட்கட்டும், மத்தவங்க அப்புறமா கேட்கட்டும். கதையை சொல்லுய்யா...'' என்றார் டைரக்டர்.

bb

கதையைச் சொல்லத் தொடங்கிய பாக்யராஜ், ஒரு முழு படம் பார்ப்பதுபோல இரண்டே கால் மணி நேரம் தொய்வில்லாமல் சொன்னார்.

கதையை கேட்கக் கேட்க எனக்கு ஒவ்வொரு ஸீனும் லட்டு லட்டா இருக்கு. "எப்படி ஒரு சின்ன வரியை வச்சுக்கிட்டு ஃபுல் ஸ்கிரீன் ப்ளே உருவாக்க முடியும்? அதுவும் கதாசிரியர் சொன்ன "ஜோதியை அணைக்காம விடமாட் டேன்' என்கிற "நாட்' திரைக்கதையில் மிஸ் ஆகாமல் எப்படி பண்ண முடியும்?'' என பாக்யராஜை மனதிற்குள் வியந்து தள்ளி விட்டேன்.

கிளைமாக்ஸ்!

"ஜோதியை என்னைக்கா இருந்தாலும் அணைப்பேன்'னு வில்லன் சொல்றான்.

அன்னிக்கு ஹீரோயினும் வில்லனும் வீட்டுல சந்திக்கிறாங்க. வில்லன் தன் மனைவியோட புடவையைக் கொடுத்து "கட்டிட்டு வா'ன்னு சொல்றான்.

அவளும் அந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு, குத்துவிளக்கு ஏத்தி வச்சிட்டு... ஏதோ ஒரு முடிவோட காத்திருக்கிறா...

-இப்படி கிளைமாக்ஸை பாக்யராஜ் சொன்னதும், என்னை கண்ட்ரோல் பண்ணிக்கொள்ள முடியாமல் என்னை மீறி கை தட்டினேன்.

நான் கை தட்ட... டைரக்டர் ரொம்ப குஷியாகிவிட்டார்

பாக்யராஜைப் பார்த்து, "ராஜன் நீ... நீதான்யா... என்னமா கதை பண்ணிட்ட. எனக்கே இப்பதான்யா நம்பிக்கை வருது'' எனப் பாராட்டினார்

"சரி... சரி... எல்லாரும் கிளம்பலாம். நாளைக்கு ஸாங் ரெக்கார்டிங் முடிஞ்சதும் நாளைக்கு நைட் ஜெயராஜ் (பாரதிராஜாவின் தம்பி), நீ, ஹீரோயின் ரத்தி, அவங்க அம்மா... எல்லாரும் கிளம்பி வைகை டேம் போயிடுங்க. இன்னிக்கு சாயங்காலம் ராஜாவோட (இளையராஜா) ரூம்ல சாங் கம்போஸிங் இருக்கு, கண்ணதாசன் வர்றார்'' என்றார் டைரக்டர்.

"என்னோட கனவு நாயகன் கவியரசர் கண்ணதாசன், நம்ம படத்துக்கு பாட்டெழுத வர்றாரா?'' என சிலிர்த்துப் போனேன்

வந்தார் கண்ணதாசன். வான் மேகமாய் பொழிந்தார் சொற்களை....

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்