ஊரடங்கு நேரத்திலும் மக்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது வடசென்னை சி.பி.எம். கட்சி. முகநூல்-இணையம் வழியாக பல்துறை ஆளுமையினர் தினமும் கருத்துகளைப் பரப்ப ஏற்பாடு செய்து, 100வது நிகழ்வில் சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றதுடன், முந்தைய நிகழ்வுகளில் பங்குபெற்றவர்களையும் கட்சித் தலைவர்களையும் பாராட்டி தனது உரையைத் தொடங்கினார்.
""பெரிதும் அறியப்பட்ட ஆளுமைகளான சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், பிரபல பத்திரிகையுலக ஜாம்பவான் (Veteran)நக்கீரன் கோபால், தாவூத் மியாகான், சுபவீரபாண்டியன், திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் கோபிநயினார் இவர்களெல்லாம் பரந்த அளவிலான மக்களிடம் இந்நிகழ்வை எடுத்துச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.''
பின்னர் நாட்டின் நிலவரம் குறித்து பேசத் தொடங்கியவர்,
""பிரதமர் மோடியின் திட்டமிடப்படாத, தன்னிச்சையான தேசந்தழுவிய மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகும், நாம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் காண்கிறோம். மத்திய அ
ஊரடங்கு நேரத்திலும் மக்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது வடசென்னை சி.பி.எம். கட்சி. முகநூல்-இணையம் வழியாக பல்துறை ஆளுமையினர் தினமும் கருத்துகளைப் பரப்ப ஏற்பாடு செய்து, 100வது நிகழ்வில் சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றதுடன், முந்தைய நிகழ்வுகளில் பங்குபெற்றவர்களையும் கட்சித் தலைவர்களையும் பாராட்டி தனது உரையைத் தொடங்கினார்.
""பெரிதும் அறியப்பட்ட ஆளுமைகளான சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், பிரபல பத்திரிகையுலக ஜாம்பவான் (Veteran)நக்கீரன் கோபால், தாவூத் மியாகான், சுபவீரபாண்டியன், திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் கோபிநயினார் இவர்களெல்லாம் பரந்த அளவிலான மக்களிடம் இந்நிகழ்வை எடுத்துச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.''
பின்னர் நாட்டின் நிலவரம் குறித்து பேசத் தொடங்கியவர்,
""பிரதமர் மோடியின் திட்டமிடப்படாத, தன்னிச்சையான தேசந்தழுவிய மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகும், நாம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் காண்கிறோம். மத்திய அரசு இந்தத் தொற்றை அடக்கத் தவறிவிட்டது. பொறுப்பையும் நம் தலையில் சுமத்திவிட்டது.
கோவிட் சூழலில் நாளுக்கு நாள் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே வருகிறது. பிரதமர் அறிவித்த திட்டங்கள் போதுமானவையல்ல. அவை வெறும் 13 சதவிகிதத்தினரை மட்டுமே சென்றடைந் துள்ளன. இந்தியாவிலுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் ஆறு மாதத்திற்கு மாதம் 7500 ரூபாய் வழங்கவேண்டுமென்று நாம் சொல்லுகிறோம்.
பிரதமர் இந்த நோக்கத்துக்காக நிதி திரட்டுகிறார். அதில் ஆயிரக்கணக்கான கோடிகளும் சேர்ந்துள்ளன. ஆனால் அது வெளிப்படையானதாகவோ, கணக்குக் காட்டுவதாகவோ, தணிக்கைக்கு உட்பட்டதாகவோ இல்லை. இந்த பணமெல்லாம் எங்கே போனது?
இந்தக் காலகட்டத்தில் 15 கோடி மக்கள் வேலையிழந்து இருக்கிறார்கள். இன்றைக்கும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு அடிப்படையான விஷயங்கள் கிடைக்கவில்லை. மக்களுக்கான அடிப்படை விஷயங்களிலேயே சிரத்தை காட்டாதவர்கள் தங்களுக்கான சொந்தக் கொள்கைகளை- தனியார்மயம், தொழிலாளர் அமைப்புகளை, தொழிலாளர்களுக்கான சட்டபூர்வமான உரிமைகளை பலவீனப்படுத்துதல், பொதுத்துறைப் பங்குகளை விற்றல் போன்றவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றனர். நோய்த் தொற்று காலத்தில் ஒற்றுமைதான் மிகத் தேவையான விஷயம். இருந்தும் மக்களை மதரீதியாக துருவப்படுத்தப் பார்க்கின்றனர்.
மூன்றாவதாக அரசுக்கு எதிரான கருத்து களைச் சொல்பவர்களை, மக்களுக்காகப் போராடு பவர்களை, குரல்கொடுப்பவர்களை, அவர்களது கொள்கைகளோடு ஒத்துவராதவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம், உபா, தேசத்துரோகச் சட்டத் தில் கைதுசெய்து முடக்கப் பார்க்கின்றனர். பீமா குரேகான் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, சி.ஏ.ஏ. எதிர்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கு இதுதான் நடந்தது. ஆனால், சிறுபான்மை, தலித் போன்றவர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு, கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறார்கள். இதன்மூலம் ஜனநாயக உரிமை மீது பேரளவிலான தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
நான்காவதாக இந்திய கூட்டாட்சி அமைப்பு, மத்திய- மாநில உறவு போன்றவற்றை பலவீனப் படுத்தி, பாராளுமன்றம், தேர்தல் கமிஷன், சி.பி.ஐ, நீதிமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகளை, அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தி, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பணியில் சேர்த்து ஒரு இந்துத்துவ ராஜ்யத்தை நிலைநிறுத்த அவர்கள் திட்டமிடு கிறார்கள்.
எல்லையில் இந்திய சீனாவுக்கிடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசின் பக்கம் முழுமையாக நிற்பதாக கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்க முன்வந்தது. இருந்தும், அவர்கள் மீது அவதூறு களை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். சீனாவை கம்யூனிஸ்ட் கட்சி ஏன் கண்டிக்கவில்லையென போலியான கேள்விகளை எழுப்புகிறார்கள். நாங்கள் கண்டிப்பது இருக்கட்டும், பிரதமர் மோடி சீனாவைக் கண்டித்தாரா?
யாருமே இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ இல்லையெனச் சொன்னார்கள், அப்புறம் ஏன் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல். பிறகு சீனப் படை பின்வாங்கியதாகச் சொன்னார்கள். என்ன நடந்ததென முழுமையான தகவல்களைக் கொடுங்கள் என்றால் பதிலில்லை.
நமக்கு முன்னால் மிகப் பெரும் சவால் உள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் வேலைவாய்ப்பிழந்து நிற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதேநேரம், ஆளுபவர்களின் ஜனநாயகமற்ற கருத்துகளிலிருந்து பாதுகாப்பதும் முக்கியமானது. ஆனால், அவர்கள் இந்த நேரத்திலும் மக்கள் வாக்களித்து தேர்வுசெய்த ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முயல்கிறார்கள், ராஜ்யசபாவில் கூடுதலாக ஒரு சீட்டுக்காக எம்.எல்.ஏ.க்களை விலைகொடுத்து வாங்கமுயற்சிக்கிறார்கள்.
நாடு சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் சாகிறார்கள். பிழைப்புக்காக மக்கள் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் தங்களது கொள்கைகளில் கவனமாய் இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இதனை உணர்ந்து, மக்களுடன் தொடர்பை மேலும் மேலும் வலுப்படுத்த முயற்சியெடுக்கும் வடசென்னைக் குழுவுக்கும், கட்சிக்கும் அவர்களுது முயற்சியில் வெற்றிபெற மீண்டும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என நிறைவு செய்தார்.
-தொகுப்பு: சுப்பிரமணியன்