Skip to main content

ஆட்சி மாற்றமே "நீட்'டை விரட்டும்! - தி.க., தலைவர் கி.வீரமணி விளாசல்!

மூக நீதியைக் காப்பதற்காக இரண்டுமுறை அரசமைப்புச் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள போர்க்குணத்துடன் துணை நின்ற இயக்கம், திராவிடர் கழகம். ஆண்டுதோறும் உயிர்ப்பலி கேட்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி யிடம் அது தொடர்பான கேள்விகளை முன்வைத் தோம்...

நீட் தேர்வு முறையால் தமிழகத்தில் மூன்று மாணவிகளையும், இந்திய அளவில் இரண்டு மாணவர்களையும் இழந்திருக்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய உயிர்ப்பலிகளை தடுக்க வழியில்லையா?

கி.வீரமணி : நீட் தேர்வை தமிழகத்திலே திணிப்பதற்கு தார்மீக உரிமை மட்டுமின்றி, சட்ட உரிமையும் இல்லை. நுழைவுத்தேர்வு முறை கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களை வாய்ப்பற்றவர்களாக ஆக்கிவிடுவதை எதிர்த்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து 21 ஆண்டுகாலமாக போராடியது. ஜெயலலிதா ஆட்சியின் போது நுழைவுத்தேர்வு முறையை ரத்துசெய்ய, முறையான கல்வி நிபுணர் குழு அமைக்காமல் சட்டம் இயற்றியதால், அது நீதிமன்றத்தில் அடிபட்டுப் போனது. அதன்பின்னர் 2006-ல் கலைஞரின் ஆட்சி வந்தபிறகு, முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் முறையாக குழு அமைத்து கிராமப்புற மாணவர் களின் நலனை முன்னிறுத்தி அறிக்கை தயாரித்து முறைப்படி சட்டம் இயற்றப்பட்டது. இதன் காரணமாக நுழைவுத்தேர்வுகளில் இருந்து தமிழகம் விலக்கு பெற்றிருந்தது. ஆனால், கல்வி என்பது மத்திய- மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் "நீட்'டுக்கு என்று மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றி விருப்பம் இல்லாத மாநிலங்களின் மீதும் தற்போது திணித்து விட்டது. அதை எதிர்க்காத இந்த மாநில ஆட்சியை மாற்றியமைப்பதே நீட்டைத் தடுக்கும் ஒரே வழி.

நீட்டைத் தடுக்க ஏராள மான முயற்சிகளை மேற்கொண்ட தாக தமிழ்நாடு அரசு சொல்கிறதே?

கி.வீரமணி : நீட்டுக்கு மாநிலங்கள் விதிவிலக்கு பெறலாம் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு இங்குள்ள அரசை சட்டரீதியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ளு மாறு வலியுறுத்தினோம். முதல்வ ராக இருந்த ஓ.பி.எஸ். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரும் இரண்டு மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றினார். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த மசோதாக்கள் என்ன ஆகின என்பது தெரியவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நீட்டில் இருந்து விலக்கு பெற்றுவிடலாம் என்று அப்போது நம்பிக்கை தெரிவித்தார். அதுவும் நடக்கவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற்ற குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு தேவைப்பட்டது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருந்தும், இந்த ஆட்சியாளர் களுக்கு முதுகெலும்பும், மனசும் இல்லாமல் போனது. ஆகவேதான், நீட் தேர்வினால் தமிழகத்தில் நடந்த கொலைகளுக்கு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
 

veeramani


அரசு முயற்சி எடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் சேர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டாமா?

கி.வீரமணி : தொடர்ந்து போராடிக் கொண்டும், அரசின் மீது அழுத்தம் தந்துகொண்டும்தான் இருக்கிறோம். நீட்டுக்கு எதிரான போராட்டங்களின்போது காவிரி விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, நியூட்ரினோ மற்றும் ஹைட்ரோகார் பன் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் இருக் கிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றை முந்திக்கொண்டு வருகிறது. இப் போது நீட்டையே பின்னுக்கு தள்ளிக் கொண்டு குருகுலக் கல்விமுறை படையெடுக்கிறது. அதையும் எதிர்த்துப் போராடியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தொடர் போராட்டங்களே மாணவிகள் தற்கொலைக்கான காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுகிறதே?

கி.வீரமணி : எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருக்கு மென்று எதிர்பார்க்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்த குரல், நீட்டுக்கு எதிராக எழவில்லை. ஆனால், அனைவருக்குமான உரிமை கள் பறிக்கப்படும் சூழலை படிப்படி யாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கடைசி வீட்டில் தீப்பிடித்தால் எனக் கென்ன என பொதுமக்கள் இடையே நிலவிய அலட்சியம் இன்று குறைந் திருக்கிறது. நீட்டுக்கு எதிராக பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

நீட்டுக்கு எதிராக போராட்டங்களும் அழுத்தமும் கொடுக்கப்பட்டாலும், மாணவர்கள் மத்தியில் நீட்டுக்கு தயாராகும் மன நிலை வந்துவிட்டது. போராடிக் கொண்டிருக்காமல் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தினால் மட்டுமே தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று நிர்மலா சீதாரமன் கூறியிருக்கிறாரே?

கி.வீரமணி : தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா, மொழியாக்கத்தில் இருந்த பிழைகளுக்கு கிரேஸ் மதிப்பெண் கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக சி.பி.எம். மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொடர்ந்திருந்த வழக்கு, நீட் தேர்வு முடிவு அறிவிக் கப்பட இருந்த நாளில் விசாரணைக்கு வந்தது. அந்த விசா ரணைக்கு முன்பாகவே அவசர, அவசரமாக அவர்கள் தேர்வு முடிவை வெளியிடுகிறார்கள் என்றால், நீட் தேர்வில் எவ்வளவு சூழ்ச்சியுடன் செயல்பட்டு சங்கடத்தை ஏற்படுத்துகிறார் கள் என்பது புரியும்.

நீட்டை ரத்து செய்ய, ஆட்சி மாற்றம்தான் தீர்வு என்றால்; அது இப்போதைக்கு நடப்பதுபோல தெரியவில்லையே?

கி.வீரமணி : இவர்களால் எத்தனை காலத்திற்கு சட்டத்தை வளைக்கமுடியும்? என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நீட்டை திணிக்கிற மத்திய அரசை தோளில் சுமந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதன் தோளைப் பிடித்து ஆட்டு வதைவிட, காலைப் பிடித்து இழுத்தாலே இரண்டு பேரும் விழுந்துவிடுவார்கள்.

சந்திப்பு: ஃபெலிக்ஸ்
தொகுப்பு: ச.ப.மதிவாணன்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...