திண்டுக்கல் அருகே அடியனூத்தில் இருக்கிறது ஈழத்தமிழர்களுக்கான அகதிகள் முகாம். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திரிகோணமலை போன்ற பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்குதான் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்காக ஒன்பது ஏக்கர் நிலம் ஒதுக்கி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்குள்ள 170 குடியிருப்புகளில் 1,700 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளில் ஆரம்பத்தில் 10 சதுரடி இடம் ஒதுக்கி தார் அட்டையிலான மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் அவை வெயிலால் சேதமடைந்துவிட, மக்களே தென்னங்கீற்றால் குடிசையமைத்து பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருக்கின்றனர். அதேபோல், முகாமில் ஆழ்துளைக் கிணறு மூலம் சிண்டெக்ஸ் டேங்குகளை நிரப்பி, தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒன்பது மாதங்களாக இந்தக் கிணறுகளில் குடிதண்ணீர் கிடைக்காததால், பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கான தண்ணீருக்காக ஆறு கி.மீ. தொலைவிலுள்ள ரெட்டியபட்டிக்கு செல்லவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
முகாமில் துப்புரவு பணிசெய்யும் ஊழியர்கள் கடந்த ஆறு மாதமாக பணிக்கு வராததால், ஆங்காங்கே குப்பைகள் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகளும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. இதனால், அருகிலுள்ள காட்டுப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்திவரும் முகாமில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை. இதற்கிடையில், அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு பன்றிகள் இறந்து அழுகிய நிலையிலும், அதிகாரிகள் யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. இதனால், முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
""கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் வசித்துவரும் நாங்கள் குடிதண்ணீர், கழிப்பிடம் என எந்தவித அத்தியாவசிய வசதிகளும் இல்லாமல் தினந்தோறும் அவதிப்படுகிறோம். இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆழ்துளைக் கிணறுகள் வற்றி நீர் கிடைக்காமல், நாளொன்றுக்கு நாற்பது ரூபாய் வரை செலவுசெய்து தண்ணீர் வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் தண்ணீருக்கே பாதி பணத்தை செலவழித்தால் தாங்குமா? முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் நிவாரண உதவித்தொகையாக ஆணுக்கு ஆயிரம் ரூபாயும், பெண்ணுக்கு 750 ரூபாயும் வழங்கிவந்தது. அந்தத் தொகையையும் கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்படி தனித்து விடப்பட்டிருக்கும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக செயல்பட்டு, உதவவேண்டும்''’என வலியுறுத்துகிறார் அகதிகள் முகாமின் செயலாளர் ரஞ்சித்.
அகதிகள் முகாமைச் சேர்ந்த சசிகலா நம்மிடம், ""தண்ணீர் பிரச்சனைதான் பெரும் பிரச்சனையே. அதனால், நாங்கள் வாரத்திற்கு ஒருமுறைதான் குளிக்கவே செய்கிறோம், அவ்வளவு தட்டுப்பாடு. அதேபோல், கழிப்பிட வசதி இல்லாமல், பகலில்கூட திறந்தவெளிக்கு செல்கிறோம். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது கண்ணீருடன் இந்தியா வந்தோம். திண்டுக்கல்லில் தங்கும் இடம் கொடுத்தார்கள். ஆனால், இன்றுவரை எங்கள் கண்ணீரைத் துடைக்க நாதியில்லாமல் தவிக்கிறோம்''’என்றார் சோகமான குரலில்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் வினயிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம்.…"கலெக்டர் மீட்டிங்கில் இருக்கிறார். கொஞ்சநேரம் கழித்து பேசுங்கள்' என்று பதில் வந்ததே தவிர, எத்தனைமுறை தொடர்புகொண்டும் லைனில் பிடிக்கவே முடியவில்லை.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, தமிழர்களையே வஞ்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு துரிதமாக செயல்பட வேண்டும்.
-சக்தி