40 லட்சம் மக்களைத் திகைப்பிலாழ்த்தியுள்ளது, 1200 கோடி செலவில், 40,000 அரசுப் பணியாளர்களை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இரண்டாவது வரைவுப் பட்டியல். மொத்தமுள்ள 3.29 கோடி மக்களில், 2.89 கோடி பேர் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இதனை வாக்கு அரசியல் செயல்பாடென விமர்சித்ததோடு, மாநிலங்களவை யில் கடும் எதிர்ப்பையும் கிளப்பின.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பிரச்சினை யைப் புரிந்துகொள்ள, அஸ்ஸாமின் வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் சற்று தொட்டாவது பார்க்கவேண்டும். 1947-ல் இந்தியா சுதந்திர மடைந்தபோது வங்காளம் இரண்டாக உடைந்து இந்தியாவில் பாதியும் பாகிஸ்தானில் மீதியும் அமைந்தது. அப்போது இரு வங்கப் பகுதியிலும் ஏற்பட்ட கலவரங்களுக்கும் உயிர்ச்சேதங்களுக்கும் நடுவில் வங்கமக்கள் குடிபெயர்ந்தார்கள்.
கிழக்குவங்க மக்கள் புறக்கணிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்து தனி நாடு கோரியபோது பங்களாதேஷ் பகுதியை கொடுமையாக ஒடுக்கமுனைந்தது பாகிஸ்தான். 1971, பாகிஸ்தான் -வங்கப் போரால், கிழக்கு வங்கத்தி லிருந்து பெரும்பான்மையான மக்கள் போர் அச்சத்தில் மேற்குவங்கத்திலும், அஸ்ஸாமிலும் பெருவாரியாகக் குடியேறினர்.
இதனால் அக்காலகட்டத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அஸ்ஸாம், மேற்குவங்கத்தில் மக்கள்தொகை விகிதம் வேகமாக உயரத்தொடங்கியது. போர் முடிந்தபோது, தனிநாடான பங்களாதேஷை நட்பு நாடாக இந்தியா அங்கீகரித்ததால், இப்படிக் குடியேறியவர் களை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. போருக்குப் பின்பும் பங்களாதேஷிலிருந்து அஸ்ஸாமுக்கு மக்கள் குடியேறுவது முடிவுக்கு வராததால், அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் கூட்டமைப்பு, இந்திராவிடம் முறையிட்டது. இதையடுத்து 1983-ல் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களைக் கண்டறிவதற்கான சட்டம் இயற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையில் திருப்தியடையாத மாணவர்கள் அமைப்புகளும், அஸ்ஸாம் கண சங்ராம் பரிஷத்தும் நீண்ட வன்முறைப் போராட் டத்தில் இறங்க, மத்திய அரசு இறங்கிவந்து, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற 1985-ல் அஸ்ஸாம் மாநிலத்துடன் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டது. பல்வேறு சட்ட நடைமுறை களுக்குப்பின், 2013-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. மே 2015 முதல் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதற்கிடையில் 2016 சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியை, உள்ளூர் கட்சிகளு டன் கூட்டணியமைத்து வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது பா.ஜ. காங்கிரஸ் தயங்கிய பணியில், பா.ஜ.க. சுறுசுறுப்பு காட்டியது. 2018, ஜனவரி 1-ல் என்.ஆர்.சி.யின் முதல் வரைவுப் பட்டியல் வெளியாக, கிட்டத்தட்ட ஆறுமாத இடைவெளியில் இரண்டாவது வரைவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
என்.ஆர்.சி.யின் மாநில ஒருங்கிணைப்பாளரான பிரதீக் ஹஜேலா, ""பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இவ்வருடம் செப்டம்பர் 28-வரை அவகாசம் அளிக்கப் படும். இறுதிப் பட்டியல் வெளிவரும்வரை அவர்கள் இந்திய குடிமக்களாகவே கருதப்படுவர். சந்தேகத்துக் குரிய வாக்காளர்கள், பிறநாட்டவரின் வம்சாவழியினர், குடியுரிமை தொடர்பாக வெளிநாட்டில் நடைபெறும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது குழந்தைகள் போன்றோரின் பெயர் இடம்பெறவில்லை''’எனத் தெரிவித் திருக்கிறார்.
மாநிலத்தில் வசிக்கும் வங்காள முஸ்லிம்களின் குடியுரிமையை மறுக்கவும், முடியுமானால் அவர்களை நாடு கடத்தவும் இந்தப் பட்டியலைப் பயன்படுத்துவதே மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கமென மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆளும் பா.ஜ.க. அரசின் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத்தே இவ்விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ரூதின் அலி அகமத்தின் மருமகனான பக்ரூதின் அஜ்மலின் பெயர் இந்தப் பட்டியலில் விடுபட, உச்சநீதிமன்றம் தலையிட்ட பின்பு சேர்த்துக்கொள்ளப் பட்டதிலிருந்தே கணக்கெடுப்பு எப்படி நடந்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள லாம் என்கிறார்கள். இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ""உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாதவர்கள்மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது. மேலும் இது இறுதிப் பட்டியல் அல்ல''’’ என நிலைமையின் தீவிரத்தைத் தணிக்கமுயன்றுள்ளார்.
எது எப்படியிருந்தாலும், பட்டியலில் இடம்பெறாதவர்களில் 75 சதவிகிதம் பேர் வங்கமொழி பேசும், கூலித் தொழில்செய்யும் சிறுபான்மை முஸ்லிம்கள். மொத்தமுள்ள இரண்டரை லட்சம் கூர்க்காக்களில் 1 லட்சம் பேர் பட்டியலில் விடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதன் சொந்தக் குடிமக்கள் அகதிகளாகியுள்ளனர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சிறப்பு நீதிமன்றங்களின் மூலம் ஏற்கெனவே குடியுரிமையற்றவர்களென ஆயிரக்கணக்கான பேர் தனி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பட்டியலில் இடம் பெறாதவர்களின் உடைமைகள், சொத்துகளை வன்முறை யாளர்கள் பறித்துக்கொள்ளக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
விடுபட்ட 40 லட்சம் பேர் பிற மாநிலங்களுக்கு ஊடுருவாமல் தடுக்க, அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைத் திரட்ட யோசித்துவருவதாக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பதே அதன் நோக்கத்தை உணரப் போதுமானது.
-க.சுப்பிரமணியன்