(7) கூலி ஒரு தடவைதான்
தலைப்பைப் படிச்சதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவுக்கு வந்து, இந்த பொன்விழா ஆண்டில், ஆகஸ்ட் 14-ல் ரிலீசாகியிருக்கும் ‘கூலி’ படத்தைப் பத்தி எழுதப்போறாரா? 50 வருசத்துக்கு முன்னால சினிமாவுக்கு வந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்கிட்ட உதவி இயக்குனரா இருந்த ஷாலப்பனுக்கும் இப்ப ரிலீசாகியிருக்கும் "கூலி'க்கும் என்ன சம்பந்தம்னு நீங்க யாரும் நினைக்க வேண்டாம். சூப்பர் ஸ்டாரின் அருமை பெருமைகளை பின்னால் சொல்றேன்.
இப்ப நான் சொல்லப்போறது, கடந்த அத்தியாயத்தின் இறுதியில் சொன்ன தயாரிப் பாளரால் மாறிய பாட்டு உரிமை பற்றிய சங்கதிகளைத்தான்.
எனது மதிப்பிற்குரிய தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுதான், திரு.ஏ.பி.நாகராஜனை "மாங்கல் யம்'’என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.பி.என்.தான், பின்னாட்களில் டைரக்டராக மாறி காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும் "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்', "கந்தன் கருணை', "திருமால் பெருமை', "திருமலை தெய்வம்', "அகத்தியர்'’போன்ற பக்தி சினிமாக்களைப் படைத்து ‘"தெய்வீக இயக்குனர்'’ என அழைக்கப் பட்டார்.
அதேசமயம் "ராஜ ராஜசோழன்', "தில்லானா மோகனாம்பாள்', "நவராத்திரி' போன்ற சமூக படங்களையும் டைரக்ட் பண்ணி சகலகலா கதாசிரியராக இப்போதும் பேசப்படுகிறார். அப்படிப்பட்ட மாபெரும் இயக்குனரான ஏ.பி.என். கதை-வசனம்-டைரக்ஷனில் 1964 இறுதியில் ‘"சிவலீலா'’என்ற படத்திற்கு பூஜை போட்டு ஒரு பாடலையும் ரிகார்டிங் பண்ணிவிட்டார் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு. ஷூட்டிங் தொடங்க சில நாட்கள் இருக்கும்போது, வேணுவிடம் தயங்கித் தயங்கி வந்து நின்றார் ஏ.பி.என். சில நிமிடங்கள் எதுவுமே பேசாமல் நின்று கொண்டி ருந்த ஏ.பி.என்.னைப் பார்த்து.. "என்ன நாகராஜா…நீ வந்து பத்து நிமிசத்துக்கு மேலாச்சு. எதுவும் பேசாம அப்படியே நின்னுக்கிட்டிருக்க. "சிவலீலா'வின் ஸ்கிரிப்ட்டில் எதாச்சும் மாத்தணுமா? இல்ல வேற எதுவும் பிரச்சனையா? எதா இருந்தாலும் தயங்காம சொல்லுப்பா''’என்றார் வேணு.
அதன் பிறகு தயக்கம் விலகி, நிதானமாக பேசினார் ஏ.பி.என். "அண்ணே தப்பா நினைச்சுக்கிடாதிக. இப்ப நீங்க ஆரம்பிச்சிருக்கிற "சிவலீலா'’படத்தை என்னோட நண்பர் ஒருவருடன் சேர்ந்து நானே தயாரித்து டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு உங்களோட சம்மதமும் ஆசியும் வேணும்''’என வேணுவிடம் சொன்னார் ஏ.பி.என்.
"அடடா இது நல்ல யோசனையா இருக்கப்பா. தாராளமா நீயே பண்ணுப்பா. எனக்கு பரிபூரண சம்மதம்ப்பா. இதுவும் கடவுள் சிவனின் லீலைதாம்பா''’என சந்தோஷமாக ஒத்துக் கொண்டார் வேணு. அதன்பின் படவேலைகள் ஜரூராக நடந்தன. பரஞ்ஜோதி முனிவ ரின் ‘"திருவிளை யாடல் புராணம்'’ என்ற பக்தி இலக் கியத்தை அடிப்படை யாக வைத்து கதை- திரைக்கதையை எழுதியிருந்ததால், "சிவலீலா'வை ‘"திருவிளை யாடல்'’என பெயர் மாற்றினார் ஏ.பி.என்.
இன்னும் இருநூறு, முன்னூறு ஆண்டு களானாலும் மதுரையை ஆண்ட பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனுக்கெதிராக கர்ஜிக்கும் கடவுள் பரமசிவனாக நடிகர் திலகத்தின் சிம்மக்குரல் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.
சரி, நாம் இப்ப மெயின் சங்கதிக்கு வருவோம்.
"திருவிளையாடல்'’ படத்தின் ஷூட்டிங் மொத்தமும் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் முடித்து, ரிலீஸ் தேதியையும் முடிவு பண்ணிவிட்ட ஏ.பி.என்., தனக்கு இந்த தங்கமான வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுவுக்கு படத்தைப் போட்டுக் காட்ட ஆசைப்பட்டார். இதப்பத்தி வேணுவிடமே சொல்லி அழைத்தார் ஏ.பி.என். சொன்னபடியே வந்தார் வேணு.
படம் முழுவதையும் பார்த்த வேணுவின் முகம் மாறியது. தியேட்டரில் லைட்டைப் போட்டதும் வேணுவின் முகத்தைப் பார்த்த ஏ.பி.என்.னின் முகமும் வெளிறியது.
"அண்ணன் முகம் இப்படி மாறிருக்கே. படத்துல எதுவும் தப்பு பண்ணிட்டனா கடவுளே..பரமசிவனே…என்னைக் காப்பாத்துப்பா'” என மனசுக்குள் ஏ.பி.என். வேண்டிக்கொண்டார் போல. அவரின் வேண்டுதல் உடனே பலித்தது.
"நாகராஜா.. படத்தை முதல்ல இருந்து இன்னொரு வாட்டி போடு''’என்றார் வேணு.
வேர்த்துக் கொட்டியது ஏ.பி.என்னுக்கு. இருந்தாலும் சமாளித்தபடி, ஆபரேட்டரைப் பார்த்து சிக்னல் போட்டார் ஏ.பி.என். மொத்த லைட்டையும் ஆஃப் பண்ணிவிட்டு, மீண்டும் படத்தைப் போட்டார் ஆபரேட்டர்.
டைட்டில் ஓடிக்கொண்டிருந்தபோதே... "படத்தை நிப்பாட்டுப்பா''’என சவுண்ட் கொடுத்தார் வேணு.
"என்னண்ணே என் னாச்சு... தப்பா எதுவும் வந்துருச்சா?''ன்னு’கேட்டார் ஏ.பி.என்.
"ஆமாப்பா…நான் "சிவ லீலா'வை ஆரம்பிக்கும்போது கவிஞர் கா.மு.ஷெரீப்பை வச்சு, கடவுள் பரமசிவன் பாடும் "பாட்டும் நானே பாவமும் நானே'’என்ற பாட்டை ரிக்கார்டிங்கும் பண்ணிட்டேன். ஆனா இப்ப என்னடான்னா டைட்டிலில் கா.மு.ஷெரீப் பேருக்குப் பதிலா கவிஞர் கண்ணதாசன் பேரு வந்துருக்கு. இது சரியாப்பா? சரி... இருந்தாலும் நடந்தது நடந்து போச்சு. நீ உடனே கிளம்பிப் போய் கவிஞர் கா.மு.ஷெரிப்பை பார்த்து நடந்த தப்பைச் சொல்லிட்டு அந்த பாட்டுக்காக இரண்டாயிரம் ரூபாயையும் கொடுத்துட்டு வந்துரு. இதான் நீ பண்ண தப்புக்கு பரிகாரம்''’என்றார் வேணு.
"மன்னிச்சிருங்கண்ணே.. தெரியாம தப்பு நடந்துப் போச்சு. உடனே போய் கவிஞர் கா.மு.ஷெரீப்பை பார்த்து, நீங்க சொல்றபடியே செஞ்சுர்றேன்''’எனக் கூறிவிட்டு, மனசை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கிளம்பினார் ஏ.பி.என்.
கா.மு.ஷெரீப்பின் முன்னால் போய் நின்றார் ஏ.பி.என்.
"என்ன நாகராஜன் "திருவிளையாடல்'’ரிலீஸ் தேதி நெருங்கிருச்சு. இந்த நெருக்கடியான நேரத்துல என்னைத் தேடி வந்தி ருக்கீக... என்ன விசயம்?'' ’என்றார் கா.மு.ஷெரீப்.
"அண்ணே என்னை மன்னிச்சுட்டேன்னு முதல் சொல்லுங்க. அப்புறமா நான் வந்த விசயத்தைச் சொல்றேன்''’என்றார் ஏ.பி.என்.
"மொதல்ல விசயத்தைச் சொல்லுங்க, மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்''’என ஆறுதல்படுத்தினார் கா.மு.ஷெரீப்.
"அது வந்துண்ணே.. "பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டை நீங்க எழுதி அது ரிக்கார்டிங்கும் ஆன பிறகுதான் "திருவிளை யாடல்'னு டைட்டிலை மாத்தி படத்தை வேணு அண்ணனின் ஆசியுடனும் அனுமதியுடனும் நான் தயாரிக்க ஆரம்பிச்சேன். ஆனால் இப்ப படத்தின் டைட்டில் கார்டில் உங்க பேருக்குப் பதிலா கவிஞர் கண்ணதாசன் பேர் வந்துருச்சு. இதை வேணு அண்ணன் பார்த்துட்டு, உங்களைப் பார்த்து இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துட்டு மன்னிப்பும் கேட்டுட்டு வரச் சொன்னாரு. நான் பண்ணிய தப்புக்கு இதான் பரிகாரம்னு சொன்னாருண்ணே. தயவு செஞ்சு இந்த தொகையை நீங்க வாங்கிக்கிட்டாத்தான் எனக்கும் நிம்மதியா இருக்கும்''’என்றார் ஏ.பி.என்.
"அட நீங்க வேற நாகராஜன். இதுக்கெல் லாமா பதறியடிச்சு ஓடிவர்றீக. அந்தப் பாட்டை எழுதுனத்துக்கு நான் ஏற்கனவே வேணுகிட்ட முன்னூறு ரூபாய் கூலி வாங்கிட்டேன். ஒரு பாட்டுக்கு ஒருதடவை கூலி வாங்குறதுதான் என்னோட பழக்கம். அதனால் இந்த ரெண்டாயிரம் ரூபாயை நான் வாங்கமாட்டேன். வேணும்னா நானே வேணுகிட்டே பேசிடுறேன். நீங்க கவலைப்படாம போங்க. யாரு பேருல பாட்டு வந்தா என்ன? இப்ப ஜனங்க எல்லாரும் அந்தப் பாட்டைத்தான் பாடிக்கிட்டிருக்காங்க. இது போதும்ங்க எனக்கு. நீங்க போய் நிம்மதியா ரிலீஸ் வேலையப் பாருங்க நாகராஜன்''’என மகிழ்வுடன் சொல்லி மலையளவு உயர்ந்து நின்றார் கவிஞர் கா.மு.ஷெரீப்.
1965-ல் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது ‘"திருவிளையாடல்'.’இந்தப் படத்தில் நம் தமிழ் மண்ணுக்கே உரிய உயரிய குணமும் இருக்கு. அதாவது கடவுள் பரமசிவனின் ‘திருவிளை யாடலில்’"பாட்டும் நானே பாவமும் நானே'’ பாடலை எழுதியவர் கா.மு.ஷெரீப் என்றால், படத்தை ஏ.பி.நாகராஜனுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.எம்.ஷாகுல் ஹமீது... இதான்யா தமிழ்நாடு!
சம்பூர்ண ராமாயணம்’ பார்த்துவிட்டு தந்தை பெரியார் போட்ட போடு..
(வெளிச்சம் பாயும்)