(2) அது என்ன லட்சியம்?

சேடபட்டி சூரியநாராயணன் ராஜேந்திரன் என முழுப்பெயர் கொண்ட (எஸ்.எஸ்.ஆர்.)  “"லட்சிய நடிகர்' என அழைக்கப்பட்டார். எங்கள் குடும்ப நண்பர் எஸ்.எஸ்.ஆர்.தான் என் வேண்டுகோளின்படி டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் என்னை உதவியாளராக சேர்த்துவிட்டவர்.  எஸ்.எஸ்.ஆர். பெரியார் மீது மிகுந்த அன்புகொண்டவர். பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்துதான் எஸ்.எஸ்.ஆரின் அரசியல் பயணம் தொடங் கியது.

"ஏண்ணே உங்களை "லட்சிய நடிகர்'னு சொல்றாங்க?'' என ஒருமுறை அவரிடம் கேட்டேன்.

Advertisment

"நான் ஒரு நடிகன் தம்பி. நாடகத்துல, சினிமாவுல பலவித மான கேரக்டர்கள்ல நடிக் கிறேன். நடிப்புன்னாலும் அதுல சில கோட்பாடுகள் எனக்கு இருக்கு. நடைமுறை வாழ்க்கை யில நான் ஒரு டாக்டரைப் பார்க்கிறேன்; டாக்டரா நடிக் கிறேன். ஒரு வக்கீலைப் பார்க் கிறேன்;  வக்கீலா நடிக்கிறேன். ஒரு உடல் உழைப்புத் தொழி லாளியைப் பார்க்குறேன்; தொழிலாளியா நடிக்கிறேன். ஒரு முதலாளியைப் பார்க்குறேன்; முதலாளியா நடிக்கிறேன். இப் படி பலதரப்பட்ட மனிதர்களை பார்ப்பதால் அவர்களை என் னால் திரையில் கதாபாத்திரத் தில் நடிக்கவைக்க முடிகிறது. ’

ஆனால் கடவுளை நான் பார்க்காததால் கடவுளர்கள் வேஷத்தில் நடிப்பதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்கேன்'' -இப்படி ஒரு விளக்கம் சொன்னார் எஸ்.எஸ்.ஆர். அதனால்தான் கடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட பெரியார் "லட்சிய நடிகர்' எனும் பட்டத்தை தனக்குத் தந்ததாகவும் சொன்னார். 

"எப்படிண்ணே... கடவுள் மறுப்புக் கொள்கைல உங்களுக்கு ஈடுபாடு வந்துச்சு?'' எனக் கேட்டேன்.

Advertisment

"வத்தலக்குண்டுவில் நான் சின்னப் பையனா இருக்கும்போது "பாமா ருக்மணி' படம் பார்த்தேன். பாமா வீட்டுக்குப் போய்விட்டு வந்தால் கிருஷ்ணனை தன் வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டாள் ருக்மணி. இவளுடைய வீட்டுக்கு கிருஷ்ணன் போய்விட்டு வந்தால், தன்னோட வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டாள் பாமா. கடவுளாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் வீட்லயே சக்களத்திச் சண்டை... அப்படின்னா கடவுளும் சராசரி மனுஷன்தானே?ங்கிற கேள்வியும், அதுக்கான பதிலும் எனக்குள்ள உண்டாச்சு. அதனாலதான் நான் நாத்திகனாயிட்டேன்'' -இப்படி தன்னோட கடவுள் மறுப்பிற்கு காரணம் சொன்னார் எஸ்.எஸ்.ஆர்.

"நான் ஆத்திகனானேன்

அவன் அகப்படவில்லை;

நான் நாத்திகனானேன்

அவன் பயப்படவில்லை'

-என்கிற எஸ்.எஸ்.ஆர். படப் பாட்டுதான் என் நினைவுக்கு வந்தது.

reel1

என்னோட சினிமா ஆசான்கள்ல ஒருவரான எம்.ஏ.வேணு அவர்கள் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஆர். -தேவிகா நடிச்ச படம் "முதலாளி'. இந்தப் படத்துலதான் தேவிகா அறிமுகமானார். "முக்தா' சீனிவாசன் டைரக்டராக அறிமுக மானார். இந்தப் படத்துக்கு பெரிய பெருமை ஒன்று கிடைத்தது. ஆமாம்... முதன்முதல்ல ஜனாதிபதி விருது பெற்ற படம் எஸ்.எஸ்.ஆரோட "முதலாளி' படம். 

நடிகர் திலகம் சிவாஜிகணேசனால் வசன உச்சரிப்பிற்காக பாராட்டப்பட்ட; வியக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர்., சினிமாவில் பல சாதனைகளைப் படைத்தவர்.

"சிவகங்கை சீமையிலே' படம் எஸ்.எஸ்.ஆரின் வசனத் திறமைக்கு முக்கியமான சான்று. ஒரு காட்சியில் 900 அடி நீளம் (ரீல் கணக்கில் 1000 அடி கொண்டது) கொண்ட வசனத்தை ஒரே ஷாட்டில் எடுத்தனர். அதை ஒரே "டேக்'கில் பேசி அசத்தினார். இப்போதும் அந்தப் படத்தைப் பார்த்தால், அந்தக் காட்சி புல்லரிக்க வைக்கும்.

பின்னாளில் "இயக்குநர் திலகம்' என புகழப் பெற்ற எனது ஆசான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கவிஞராகவும், கதாசிரியராகவும் இருந்தார். தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் கே.எஸ்.ஜி. ஒரு கதையைச் சொன்னார். அவருக்கு கதை மிகவும் பிடித்துப்போனது. "எஸ்.எஸ்.ஆரிடம்  போய் இந்தக் கதையைச் சொல்லிட்டு வாங்க'' என அனுப்பிவைத்தார்.  ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே வசனங்களுடன் கதை சொன்னார் கே.எஸ்.ஜி. 

"யாரு டைரக் டர்?''

"புரொடியூஸர் உங்ககிட்ட கதையைச் சொல்லச் சொன்னார், டைரக்டர் யாருனு தெரியல''

"ம்... நீங்களே டைரக்ட் பண்ணுங்க; புரொடி யூஸர்கிட்ட நான் பேசுறேன்'' என்றார் எஸ்.எஸ்.ஆர்.

அதன்படி "சாரதா' படத்தின் மூலம் இயக்குநரானார் கே.எஸ்.ஜி.

-இப்படி திறமையாளர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கச் செய்த பெருந்தன்மையான மனிதர் எஸ்.எஸ்.ஆர்.

"சாரதா' படத்தின் படப்பிடிப்பு (1962) பாதி அளவுதான் நடந்து முடிந்திருந்தது. அந்தச் சமயம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தற்போது தேனி தொகுதியாக இருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் எஸ்.எஸ்.ஆர். தீவிர தேர்தல் பிரச்சாரத் தில் இருந்ததால், "சாரதா' படப்பிடிப்பு தடைபட்டது. 

"தான் முதன்முதலாக இயக்கும் படத்துக்கு இப்படியொரு சிக்கலா? எஸ்.எஸ்.ஆர். ஜெயிச் சுட்டா நாடாளுமன்றம் போயிரு வாரே' என ஃபீல்பண்ணினார் கே.எஸ்.ஜி. 

உலக சரித்திரத்தில் ஒரு சினிமா நடிகர் தேர்தலில் நின்று  எம்.பி.யாக ஜெயித்த வரலாறு எஸ்.எஸ்.ஆருக்கே உண்டு. வெற்றி பெற்று சென்னை வந்த எஸ்.எஸ்.ஆரை சந்தித்த கே.எஸ்.ஜி. "நீங்க ஜெயிச்சதுக்கு வாழ்த்துகள், ஆனா நீங்க தோத்துப்போகணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன்'' என்றார்.

"அடப்பாவி... ஏன் இப்படி ஒரு வேண்டுதல்?''

"நீங்க ஜெயிச்சுட்டா பாராளுமன்றம் போயிருவீங்க. படப்பிடிப்பு நின்னுபோயிரும். நான் முதன்முதலா டைரக்டராகிற, உங்களால டைரக்டராக்கப்பட்ட எனக்கு மனக்கஷ்டம். அதனாலதான் இந்த வேண்டுதல்'' என கே.எஸ்.ஜி. சொன்னபோது... கன்னம் குழிவிழ சத்தமாகச் சிரித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். 

reel2

"இந்தப் படத்தை இரவும் பகலும் ஷூட்டிங் நடத்தி முடிச்சுத் தர்றேன்'' எனச் சொல்லி, அதன்படியே முடித்துக் கொடுத்தார்.  "சாரதா' படம் பம்பர் ஹிட். படத்தின் வசனங்கள் பிரமாதமாக சிலாகிக்கப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1980ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் எஸ்.எஸ்.ஆர்.

என் அப்பா அமீர்பாட்ஷாவும், எஸ்.எஸ். ஆரின் மாமா கருப்பையா சேர்வையும் சாதி -மதம் -பேதம் பார்க்காத நண்பர்கள். இப்படித்தான் இரு சமூக பெரியோர்களும் சுமுகமாக இருந்தார்கள். ஆனாலும் சாதி -மதப் பிரிவினையால் எங்க ஊரான போடிநாயக்கனூர் ரெண்டுபட்டுக் கிடந்தது. எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ்.ஆர். போடியில் முகாமிட்டு இரு சமூக மக்களின் பூசலைத் தீர்த்து ஒற்றுமையாக இருக்கச் செய்தார். 

எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா ஆகியோருடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோது... என்.எஸ்.கே., ஒரு டெஸ்ட் வைத்தார். "உங்க மூணு பேர்ல யாரு  டைரக்டராவீங்க?ன்னு தெரிஞ்சுக்கத்தான் இந்த டெஸ்ட்'' எனச் சொல்லியிருக்கிறார். அவர் வைத்த டெஸ்ட்டில் பாஸானவர் எஸ்.எஸ்.ஆர். மட்டுமே!

"அல்லி', "மணிமகுடம்', "தங்க ரத்தினம்' படங்களை நான் இயக் கினேன். சிவாஜியோ, எம்.ஆர். ராதாவோ டைரக்டர் ஆக வில்லை'  எனச் சொன்ன எஸ்.எஸ். ஆர்., "அதே டெஸ்ட்டை உனக்கு நான் வைக்கிறேன். ஒரு அழகான பெண், மேடையில் பரதநாட்டியம் ஆடுகிறாள். நீ ஒரு டைரக்டராக இருந்தால் கேமராவை எந்த இடத்தில், எப்படி ஃபிக்ஸ் பண்ணச் சொல்லுவாய்?''

"என்னோட ரெண்டு கண்களும் எதை ரசிக்குதோ... அந்த இடத்துல கேமராவை வைப்பேண்ணே'' என்றேன் நான்.

என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்ட எஸ்.எஸ்.ஆர்., "ஷாலப்பா... நிச்சயம் ஒருநாள் நீ டைரக்டராவே'' என்றார். எஸ்.எஸ்.ஆரின் வாக்கில் எனக்கு பாதி பலித்தது. பல படங்களில் நான் இணை இயக்குநரா வேலை செஞ்சேன். "இளமை ஒரு ரோஜா' என்கிற படத்தைத் தொடங்கி பாதி படம் இயக்கிட்டேன். ஆனா பல்வேறு சூழ்நிலைகளால படம் அப்படியே நிக்குது.

நாடே பரபரத்த ஒரு பிரச்சினை. ஆனால்... அந்த நேரம் பாத்ரூமில் போய் ஒளிந்துகொண்டார் எஸ்.எஸ்.ஆர்.

அது...                 

(வெளிச்சம் பாயும்)