(15) அதிர்ச்சியான நடிகர்திலகம்!
தயாரிப்பாளரான சின்னப்பா தேவர்!
எனது குரு கே.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டு, எனது சினிமா வாழ்க்கைக்கு வித்திட்டவர் அருமை அண்ணன் எஸ்.எஸ்.ஆர்.தான் என்பதை தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கேன். ஆனா அவரிடம் சேர்வதற்குள் எஸ்.எஸ்.ஆர். என்னை ரொம்பவே பாடாய்ப்படுத்திவிட்டார். இல்லயில்ல.. சோதித்தார்னு சொன்னாத் தான் கரெக்டா இருக்கும்.
எனது மாமாவும் எஸ்.எஸ்.ஆரும் உறவுமுறை சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். இந்த கெத்துடன் தான் நான் எஸ்.எஸ்.ஆரை பார்க்க தினந்தோறும் காலையிலேயே போய் அவர் வீட்டு வாசலில் நிப்பேன். ஷூட்டிங்கிற்கு அவர் கிளம்பிப் போகும்போது என்னைப் பார்த்துக்கிட்டே போவார். மாலையில் வீட்டுக்குள் போகும்போதும் பார்த்துக் கிட்டே போய்ருவார்.
பகலில் வெயிலில் வெளியே காய்ந்துகொண்டிருந்த எனக்கு அண்ணனின் மனைவி புண்ணியவதி விஜயகுமாரி தான் அப்பப்ப தண்ணீர் கொடுப்பார், டீ-காபி கொடுத்து ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவார். இப்படியே ஒரு மாசத்துக்கும் மேல அவரின் வீட்டு வாசல்லயே என் பொழப்பு படுத்துக்கிடந்துச்சு.
இதையெல்லாம் பார்த்த விஜயகுமாரி, பொறுக்கமாட்டாமல் ஒரு நாள் எஸ்.எஸ்.ஆரிடம், “"ஏங்க அந்தச் சின்னப்பையனைப் பார்க்க பாவமா இருக்கு. ஆனா நீங்க பார்த்தும், பார்க்காதது மாதிரி போறீங்க. அவனை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்து றீங்க. யாராவது ஒரு டைரக்டரிடம் சீக்கிரம் அவனை சேர்த்துவிடுங்க''’என எனக்காக பரிதாபப்பட்டு பேசியிருக்கார்.
அதற்கு எஸ்.எஸ்.ஆரோ, “"நான் ஈவிரக்கமில்லாம அப்படிப் பண்ணலம்மா. சினிமாவைப் பொறுத்தவரை சுலபமாக கிடைக்கும் எதுவும் நிரந்தரமாகத் தங்காது. மற்றவர்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளமாட்டான். மண்டைக்குள் அகம்பாவம் ஏறும். அதுவே அவனை சீக்கிரமே சினிமாவிலிருந்து காணாமல் போகச் செய்துவிடும். அதனால் கஷ்டங்களையும் வேதனை களையும் தாங்கும் பொறுமை அவனுக்கு இருக்கான்னு பார்க்க நான் வச்ச சோதனை தான், நான் அவனைக் கண்டுகொள்ளாமல் போனது. அந்தச் சோதனையில் அவன் ஜெயிச்சுட்டான். இப்ப நீயே அவனுக்கு நல்ல மார்க் போட்டுட்டே. உடனே கே.எஸ்.ஜி.யிடம் சேர்த்துவிடுறேன்'' எனச் சொன்னாராம் அண்ணன் எஸ்.எஸ்.ஆர்.
நான் கே.எஸ்.ஜி.யிடம் சேர்ந்து சில படங்களில் வேலை செய்து, நல்ல பேர் வாங்கிய நிலையில், ஒரு நாள் என்னிடம் இதை அண்ணன் எஸ்.எஸ்.ஆரே சொன்னார்.
சிவாஜியை வைத்து ‘"சம்பூர்ண ராமாயணம்'’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே, எஸ்.எஸ்.ஆரை வைத்து ‘"முதலாளி'’ படத்தையும் ஆரம்பித்தார் வேணு. ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததால் பரபரப்பு, விறுவிறுப்பு, சிடுசிடுப்பு என வேணு சுழன்று கொண்டேயிருந்தார். இரண்டு படங்களின் ஷூட்டிங் நடக்கும் ஃப்ளோர்களில் சின்ன தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் கொதித்து கொந்தளித்துவிடுவார். செட் அசிஸ்டெண்டி லிருந்து டைரக்டர், கேமராமேன், ஹீரோ, ஹீரோயின் வரை எல்லோருமே சொன்ன டயத்துக்கு வந்துரணும். ஃப்ளோருக்குள் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து டைரக்டர் கேமரா ஆங்கிள் வைப்பதற்குள் நடிகர்- நடிகைகள் மேக்கப் போட்டு ரெடியாக இருக்கணும்.
"ஷாட் ரெடி'ன்னு டைரக்டரின் சவுண்ட் கேட்டதும், கேமராமேன் பொசிஷன் பார்க்கணும், “"டேக்'’னு சொன்னதும் கேமரா ரோல் ஆன் ஆகணும், சீன் ஆரம்பமாகணும். இதான் வேணுவின் ஷூட்டிங் பாலிஸி, ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.
ஒரு நாள் ‘"சம்பூர்ண ராமாயண'த்தின் ஷூட்டிங்கிற்கான வேலைகளை ஃப்ளோரில் செக் பண்ணிவிட்டு, கேமரா ஆங்கிள் வைக்கவும் ஓ.கே. சொல்லிவிட்டார் டைரக்டர் கே.சோமு. அந்த சீனில் நடிக்கவேண்டிய பத்மினி மற்றும் சில நடிகர் -நடிகைகள் மேக்கப்புடன் ஃப்ளோருக்கு வந்துவிட்டனர். நடிகர் திலகம் சிவாஜி மட்டும் வரவில்லை. அந்த நேரத்தில் ஃப்ளோருக்கு வந்த வேணு டைரக்டர் சோமுவிடம், "மணி ஒன்பதாச்சு. ஏன் இன்னும் சீன் எடுக்க ஆரம்பிக்கல?''”
"நாங்க ரெடியாத்தான் இருக்கோம். சிவாஜி தான் இன்னும் மேக்கப் போடவேயில்ல''’ -வேணுவிடம் சோமு இப்ப டிச் சொன்னதும் "சுர்ர்ர்..' ரென கோபம் ஏறியது வேணுவுக்கு. அதே "சுர்ர்ர்'ரு டன் சிவாஜியின் மேக்கப் ரூமுக்குப் போனார். அங்கே சிலருடன் செம ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்தார் சிவாஜி. இதைப் பார்த்ததும் மேலும் உஷ்ணமான வேணு, "என்ன கணேசா… உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருகே? லட்சக்கணக்குல பணத்தைக் கொட்டி, அடிவயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்ட மாதிரி நான் இருக்கேன். அங்க ஃப்ளோர்ல எல்லாரும் ரெடியா இருக்காங்க. இங்க நீ என்னடான்னா ஜாலியா அரட்டையடிச்சுக்கிட்டிருக்கே. இன்னும் கொஞ்ச நேரத்துல நீ மேக்கப் போட்டுட்டு ஃப்ளோருக்கு வரணும். அப்படி வரலே...''’என மிரட்டலாக சொல்லிட்டு, கதவை படாரென ஓங்கி மிதித்து சாத்தினார்.
வேணுவின் இந்த அதிரடியால் அதிர்ச்சி யானாலும், தன் மீது தவறு இருப்பதை அறிந்து, உடனே மேக்கப்புடன் ஃப்ளோருக்கு வந்தார் நடிகர் திலகம்.
"மன்னிச்சுருங்கண்ணே''’-இது நடிகர் திலகம்.
"பரவாயில்ல கணேசா.… நானும் கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்கிட்டேன். நீயும் என்னை மன்னிச்சிரு''’-இது வேணு.
இதான் அப்போதிருந்த தயாரிப்பாளர் என்ற முதலாளிக்கும் சம்பளம் வாங்கும் தொழிலாளியான ஹீரோவுக்குமிடையில் இருந்த உறவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, விசுவாசம், தொழில் பக்தி.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தபோதும், இப்போது தனியாக கம்பெனி ஆரம்பித்த பின்பும் வேணுவின் தடாலடியையும் அதிரடியையும் கேள்விப்பட்டவர் சாண்டோ சின்னப்ப தேவர். வேணுவிடம் நெருங்கிப் பழகியவர். சினிமா தயாரிப்புன்னா இப்படித்தான் இருக்கணும் என்ற தொழில் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டவர்.
தானும் ஒரு தயாரிப்பாளராக வேண்டும் என முடிவு செய்ததுமே வேணுவிடம் வந்தார் தேவர். "அண்ணே கையில கொஞ்சம் காசு இருக்கு. அதனால் படம் தயாரிக்கலாம்ணு இருக்கேன். உங்க ஆலோசனையும் அறிவுரை யும் எனக்குத் தேவை. யாரை ஹீரோவாகப் போடலாம்னு நீங்களே யோசனையும் சொல்லுங்கண்ணே''’என தேவர் கேட்டார்.
யோசனையே பண்ணாமல் வேணு சொன்ன ஹீரோ எம்.ஜி.ஆர்.தான்.
"நீ போடப்போகும் பணத்துக்கு எம்.ஜி.ஆர்.தான் நூறு சதவிகிதம் க்யாரண்டி. என்ன ஒண்ணு அப்பப்ப கொஞ்சம் கால்ஷீட் ‘டிஸ்டர்ப்’ பண்ணுவாரு. அதை நீ சமாளிச்சுட் டேன்னா… அதற்குப் பிறகு சினிமாவில் உன்னோட சாம்ராஜ்யம்தான், நீ தான் ராஜா. உடனே போய் எம்.ஜி.ஆரைப் பாரு, பட வேலைகளை ஆரம்பி. பூஜைக்கு நான் வர்றேன்'' எனச் சொல்லி தேவரை உஷார்படுத்தியும் உற்சாகப் படுத்தியும் அனுப்பி வைத்தார் வேணு.
வேணுவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, எம்.ஜி.ஆரிடம் ஏற்கனவே தனக்கிருந்த நட்புரிமையுடன் ‘"தாய்க்குப் பின் தாரம்'’ என்ற தனது முதல் தயாரிப்பை 1956-ல் பூஜையுடன் இனிதே தொடங்கினார் சின்னப்ப தேவர். வாக்கு கொடுத்தபடி பூஜைக்கு வந்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார் வேணு.
அப்பப்ப ‘டிஸ்டர்ப்’ பண்ணிய எம்.ஜி.ஆருக்கு, வேணு பாணியில் தேவரும் ‘டஃப்’ கொடுத்த கதைகளெல் லாம் இருவரின் மறைவிற்குப் பிறகு பலவிதங்களில் பரவியது, பரவிக் கொண்டுமிருக்கிறது.
எம்.ஜி.ஆரின் ‘வள்ளல்’ ரகசியம். எச்சரித்த மெய்யப்பச் செட்டியார்…
(வெளிச்சம் பாயும்)