நான் ஷாலப்பா. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் என் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் ஊர்க்காரரும், உறவினருமான அப்துல்லா, டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். 

அப்துல்லா ஒருமுறை ஊருக்கு வந்திருந்தபோது... "சினிமா ஷூட்டிங்கை பார்க்க வேண்டும்' எனச் சொன்னேன். சென்னைக்கு அழைத்து வந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடப்பதைப் பார்த்தேன். எனக்கு சினிமா ஆசை தொற்றிக்கொண்டது. அந்த ஆசையை அழுத்தி வைத்துக்கொண்டே ஊர் திரும்பினேன்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனாகிய எஸ்.எஸ்.ஆர். எங்கள்  குடும்ப நண்பர். சென்னையிலிருந்து அவரின் ஊரான சேடப்பட்டிக்கு வந்தால்... எங்கள் ஊருக்கும் வருவார். என் உறவினர்களுடன் அளவளாவி மகிழ்வார். எஸ்.எஸ்.ஆரிடம் எனது சினிமா ஆசையை, டைரக்டராகும் விருப்பத்தைச் சொன்னேன்.

Advertisment

reel1

1979ஆம் ஆண்டில் "இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் என்னை உதவியாளராகச் சேர்த்துவிட்டார் இலட்சிய நடிகர். அன்றிலிருந்து தொடங்கிய எனது சினிமா பயணம், இந்த நிமிஷம் வரை நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. 

Advertisment

நடிப்பிற்கு சிவாஜி!

சிரிப்பிற்கு வீரப்பா!

வசன உச்சரிப்பிற்கு எஸ்.எஸ்.ஆர்!

இப்படியொரு ஸ்லோகம் திரைத் துறையில் இருந்தது. இன்றும்கூட அது உண்மைதானே!

"என்னைக் காட்டிலும்  வசன உச்சரிப்பில் ராஜிதான் பெஸ்ட்'' என "சிம்மக்குரலோன்' சிவாஜியால் புகழப்பட்டார் எஸ்.எஸ்.ஆர். அவருடன் பழகிய நாட்கள் மறக்கவே முடியாதவை.

"இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வழியாக...

நான் பார்த்த
நான் உணர்ந்த
நான் கேட்ட
நான் அறிந்த...
திரைக்குப் பின்னால் நிகழ்ந்த 
நிழலுலக நிஜங்கள்...
திகைப்பானவை!
தித்திப்பானவை!
வியக்க வைப்பவை!
வியர்க்கவும் வைப்பவை!
மக்கள் திலகம்
நடிகர் திலகம்
இயக்குநர் திலகம்
சூப்பர் ஸ்டார்...

இப்படியான இன்னும் பல திரைப் பிர பலங்களைப் பற்றிய சுவாரஸ்ய சங்கதிகளை இன்று நினைத்தாலும் இனிக்கும்.

அந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கும் நமது "நக்கீரன்' பத்திரிகைக்கும், ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

வாசகர்களே...

நேற்றின் விஷயங்களை

வரும் இதழிலிருந்து என்னோடு அசைபோட வாருங்கள்...!