(6) எம்.ஜி.ஆரை கொண்டாடிய "இசை முரசு'வின் பாட்டு!

ம்.ஜி.ஆரை யாருக்குத்தான் பிடிக்காது.... தி.மு.க.வில் அவர் தீயாய் வேலை செய்துகொண்டிருக் கும்வரை. நாகூர் ஹனிபா பிரபல பாடகர். அவரின் குரல் வளம் அலாதி யானது; கம்பீரமானது. அதனால்தான் இசை உலக திறமையாளர்களுக்குத் தரப்படும் இசைப் பட்டங்களின் விதிகளை நொறுக்கும்விதமாக "இசை முரசு' என பட்டம் அளிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு உழைத்தது நாகூராரின் இசைத்தொண்டு. 

Advertisment

"எங்கள் வீட்டுப் பிள்ளை, ஏழைகளின் தோழன்' இந்தப் பாடலை எழுதியவர் நாகூர் சலீம். "இதற்கு மேல் எம்.ஜி.ஆரைப் பற்றி வேறு யாரும் எழுதிவிட முடியாது' என்பதாக அமைந்த பாடல் இது

"காய்ந்து சிவந்தது சூரியகாந்தி 
தணலில் தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் 
ஆய்ந்து சிவந்தது அறிஞர்தம் நெஞ்சம் 
தினம் ஈந்து சிவந்தன எம்.ஜி.ஆர் இருகரமே...'

என்கிற அருமையான தொகையறாவிலேயே நாகூர் ஹனிபாவின் குரல் வளம் அள்ளும்.

"எங்கள் வீட்டுப்பிள்ளை; ஏழைகளின் தோழன் தங்க குணமுள்ள கலைமன்னன் மக்கள் திலகம் எங்கள் எம்.ஜி.ஆர். அண்ணன்'  இந்தப் பாடல் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும்,  தி.மு.க.வின் தலைவர்களாலுமே ரசிக்கப்பட்டது.

Advertisment

"என் கிளுதகை நண்பர் ஹனிபா' என கலைஞர் சொல்லுவார். கிளுதகை நண்பர் என்றால் குழந்தைகள் கிலுகிலுப்பை வைத்து விளையாடு வார்களே... அந்த அளவு காலத்தில் இருந்து நட்பு என்பதைக் குறிக்க இப்படி சொல்லுவார்.

எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப் பட்டதும் நாடு முழுக்க கொந்தளிப்பு நிலவியது. அந்த காலகட்டங்களையொட்டி நடந்த அ.தி.மு.க. கட்சி மேடைகளில் "எங்கள் வீட்டுப் பிள்ளை... ஏழைகளின் தோழன் பாடலை மட்டும் பாடுமாறும், அதற்குரிய தொகையை மதிப்போடு தருவோம்' என்றும்  கேட்டார்கள். ஆனால் "எம்.ஜி.ஆருக்காக இனி இந்தப் பாடலை மேடை களில் பாடமாட்டேன். எம்.ஜி.ஆர். நல்லவராக இருக்கலாம், ஆனால் கலைஞர் என் உயிர் நண்பர். நான் அவருக்காக இதைக்கூட செய்யவேண் டாமா?'' எனச் சொல்லி மறுத்துவிட்டார்.

நாகூர் ஹனிபாவின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்கள் கடந்து போயிருக்கிறது. இன்று இசையுலகின் இசை ஞானியாகப் புகழப்படும் இளையராஜாவிற்கு முதன்முதலில் இசையமைக் கும்  வாய்ப்பைத் தந்தவர் நாகூர் ஹனிபாதான்.

Advertisment

reel1

நான் எப்போது நாகூர் ஹனிபாவை பார்க்கச் சென்றாலும், விடாப்பிடியாக என் பையில் ஐந்தாயிரம் ரூபாயை வைத்து அனுப்புவார். அத்துடன் விலைமதிப்பற்ற களஞ்சியங்கள் போன்ற அனுபவத் திரட்டுகளையும் சொல்லுவார். அப்படி அவர் சொன்ன விஷயம்தான் இது. 

"ஒருநாள் என் வீட்டுக்கு மூணு பசங்க வந்தாங்க. கிட்டத்தட்ட மூணுபேரும் ஒரே மாதிரி கருப்பா இருந்தாங்க. "உங்களோட ஆன்மீகப் பாடல்களுக்கு இசையமைக்க ஆர்வமாய் இருக்கோம். எங்களை சோதித்துப் பார்த்துவிட்டு வாய்ப்புக் குடுங்க'னு சொன்னாங்க. எனக்கு அவங்க மேல நம்பிக்கை வரல. ஆனாலும் "நல்ல வாய்ப்பு அமையும்போது சொல்லியனுப்புறேன்' எனச் சொல்லியனுப்பிட்டேன் ஷாலப்பா. ஆனாலும் கம்பத்துல முக்கிய புள்ளியப் புடிச்சு சிபாரிசு வாங்கி வந்துட்டாங்க. இளையராஜா -பாஸ்கர் -கங்கை அமரன் ஆகிய மூவரும்தான் அவங்க.''

இளையராஜா ஆர்மோனிய பெட்டி மீது கைவைக்க... தென்றல் தவழ்ந்தது.

"தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு -எங்கள்
திருநபியிடம் போய் சொல்லு
சலாம் சொல்லு'

அப்படீங்கிற நான் பாடிய அந்தப் பாடல்தான் இளையராஜா இசையமைத்த முதல் பாடல். -இசைஞானி பற்றி இசை முரசு சொன்ன அரிய தகவல் இது.

இளையராஜா இசையில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த படம் "ராமன் அப்துல்லா'. இதில் மிக அருமையான பாடல் ஒன்று உண்டு. கவிஞர் வாலி எழுதியது.

"உன் மதமா? என் மதமா?
ஆண்டவன் எந்த மதம்?
நல்லவங்க எம்மதமோ
ஆண்டவன் அந்த மதம்'

என்கிற இந்தப் பாடலில் "உன் கடவுள் என்ன கிருஸ்தவனா? முஸ்லீமா, இந்துவா? நல்லவன்தான் கடவுள்' என வாலி எழுதியிருப்பார்.

"அனைத்திலும் உயர்ந்தவன் அல்லா'  என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட முஸ்லீம் களால் இதை எப்படி ஏற்கமுடியும்? ஆனால் தொடங்கிய நொடியே அது அமைதியாகிவிட்டது.

இந்தப் பாடலை வேறு எந்த பாடகர் பாடினாலும் எதிர்த்திருப்பார்கள். ஆனால் எங்கள் இசை முரசு நாகூரார் பாடியதால் இஸ்லாமிய தோழர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள்.

"அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக் கின்றார் அண்ணா' என்றொரு கவிதை, அண்ணா மறைந்தபோது ஒரு தினத்தாளில் வெளிவந்தது. இந்தக் கவிதை படித்தோர் எல்லோரின் உள்ளத் தையும் உலுக்கி எடுத்துவிட்டது. எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துப்போனதால், "இந்தப் பாடலை தி.மு.க.வின் மேடைப் பாடலாகச் சேருங்கள்' என்று சொல்லி அதற்கான பண ஏற்பாடுகளையும் செய்யத் தயாராயிருந்தார். நாகூர் ஹனீபா பாடுவதாக இருந்தது. நாளை காப்புரிமை சட்ட பாதுகாப்பு சிக்கல் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதால் கவிதை சம்பந்தப்பட்டவரைப் பற்றிய தகவல் கிடைக்குமா என அந்த         பத்திரிகை அலுவலகத்தைத் தொடர்புகொண்டனர். ஆனால் அனுப்பியவர் பெயர் மட்டும் தான் இருந்தது, முகவரி இல்லை யென சொல்லிவிட்டார்கள். நவீன வசதிகளற்ற அந்தக் காலத்தில் அந்தக் கவிஞரை தேடிப்பிடிப்பதும் மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் எம்.ஜி.ஆர். "இந்தப் பாடலைப் பற்றி பிறகு யோசிப்போம்'' என தள்ளி வைத்துவிட்டார். ஆனாலும் நாகூர் ஹனிபா துணிந்து முடிவெடுத்தார். இது பாட்டாகி வெளிவந்த பிறகு அந்த கவிஞர் உரிமைத் தொகை கேட்டு வந்தால் கொடுத்துவிடுவோம் என்று சொன்னதோடு, கவிஞரை கண்டுபிடித்துத் தருபவருக்கு 1 ரூபாய் பரிசு தருவதாகவும் அறிவித்துட்டார் நாகூர் ஹனிபா. இதைத் தொடர்ந்து "அம்மையப்பன்' படத்தில் இந்தப் பாடல் இணைக்கப்பட்டது.

யாருடைய வேலைக்கும் பரிந்துரை செய்யமாட்டார் நாகூர் ஹனிபா. ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் நேர்மையானவர்.  

ஒருமுறை நான் இறை தூதரைப் பற்றி 20 பாடல்கள் எழுதி, சங்கர்-கணேஷ் இசையில் ஹனிபா பாட, ஏவி.எம்.மில் ரிக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அன்றைய அமைச்சர்கள் பொன்முடி, ரகுமான்கான் ஆகியோர் வந்தனர். 

அப்போது என்ன நடந்தது?

"ஷாலப்பா என்னை நீ நன்றாக அறிவாய். நான் எவ்வளவு நேர்மையாவன் என்று உனக்குத் தெரியும். சுயமரியாதைதான் முக்கியம். யாருக்கும் சிபாரிசு செய்யமாட்டேன். ஒருமுறை நாகூர் குளம் நாறுது... இதைச் சரிசெய்யணும் என கலைஞருக்கே போன் போட்டேன். நான் ஊருக்குத் திரும்புவதற்குள் ஒருமணி நேரத்தில் தூர் வாருவதற் குத் தேவையான இயந்திரங்களை இறக்கி வேலையை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டார் கலைஞர். பொதுப்பிரச்சினை என்றால் சிபாரிசு செய்யலாம். தனிப்பட்ட விஷயங்களுக்காக செய்யமாட்டேன்'' என்றார். 

அப்போது அங்கேயிருந்த ஹனிபாவின் மகன் நாசர், என்னிடம் "இப்படித்தான் எனக்கும் உதவி செய்யவில்லை, என் அக்காவின் கணவருக்கும் டிரான்ஸ்பர் வாங்கித் தர மறுத்துவிட்டார். "கவர்மெண்ட் சம்பளம் வாங்குறீங்கள்ல... அப்ப நீங்க கவர்மெண்ட் சொல்ற இடத்துக்கு வேலைக்குப் போங்க' எனச் சொன்னவர் வாப்பா.''

அமைச்சர்கள் பொன்முடி, ரகுமான்கான் இருவரும்  நாகூர் ஹனீபாவை சந்தித்துப் பேசுகையில், "அண்ணாவைப் பற்றிய உங்களின் கச்சேரி கலைஞர் அரங்கத்துல ஏற்பாடாகியிருக்கு. அதுக்கான அட்வான்ஸ் இந்தாங்க''ன்னு பணத்தைக் கொடுத்தாங்க. 

ஹனிபா பொதுவாக தாராளமாக தர்மம் செய்பவர்.  ஆனால், தனக்கு பேசிய சம்பளத்தில் ஒரு ரூபாய் குறைந்தாலும் வாங்கமாட்டார். அதற் குக் காரணம்... அவரின் தொழில் நேர்மைதான்!

reel2

"நாங்கள் பேசிய பணத்திற்கு கூடுதலாகவும் தரவில்லை, குறைவாகவும் தரவில்லை...'' எனச் சொல்லி கச்சேரிக்கான அட்வான்ஸை கொடுத்த அமைச்சர்கள், "அண்ணே உங்களுக்கு அஞ்சு லட்சு ரூபாய் பொற்கிழி கொடுக்கணும்னு கழகம் முடிவு செஞ்சிருக்கு. அதை நீங்க ஏத்துக்கணும்'' என்றனர். 

அதற்கு ஹனீபா, "நான் அரசியலில் தொடுக்கிக்கொண்டிருப்பதற்குக் காரணமே என் ஆருயிர் நண்பன் கலைஞர்தான்'' என்றார். 

ரகுமான்கானோ, "அண்ணே... நீங்க கட்சிக்கு எவ்வளவோ சேவை செஞ்சிருக்கீங்க. இந்த முடிவை எடுத்ததே தலைவர் கலைஞர்தான்...'' எனச் சொன்னார்.

"ஓ... கலைஞர் சொன்னாரா? முதலமைச்சர் போடுற சட்டத்தை விட, நட்பா நான் போடுற சட்டம் பெருசு. அதனால அந்த பொற்கிழிய நான் வாங்கமாட்டேன்'' எனச் சொல்லியனுப்பினார். 

ரெக்கார்டிங் முடிந்ததும், கலைஞரின் வீட்டுக்குச் சென்று "எனக்கு பொற்கிழி வழங்கப்பட வேண்டாம்'' என உறுதிபடச் சொல்லிவிட்டு வந்துவிட்டார் ஹனிபா.  

இன்றளவும் புகழ்பெற்ற ஒரு பாடலின் உரிமை, தயாரிப்பாளரால் தடம் மாறியது...

அது...!

(வெளிச்சம் பாயும்)

படம் உதவி: ஞானம்