(8) தந்தை பெரியார் போட்ட போடு!

"திருவிளையாடல்'’ படத்தின் டைட்டில் கார்டில் கவிஞர் கா.மு.ஷெரீப் பின் பெயர் விடுபட்டதைக் கவனித்த எம்.ஏ.வேணு, டைரக்டர் ஏ.பி.நாக ராஜன் பண்ணிய தப்புக்கு பரிகாரம் பண்ணச் சொன்னதை கடந்த அத்தி யாயத்தில் சொல்லியிருந்தேன். ‘அதெப் படி கா.மு.ஷெரீப் பெயர் விட்டுப் போச்சு. அப்படின்னா திட்டமிட்டே அந்த தப்பை ஏ.பி.நாகராஜன் பண்ணு னாரா? சினிமான்னாலே அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படித்தான் தில்லாலங்கடி விளையாட்டு நடக்கும் போல. அதுல ஒண்ணுதான் ’"திருவிளை யாடல்'’ படத்துல டைட்டில் விளை யாட்டு நடந்திருக்கு போலன்னு வாச கர்கள் நினைச்சுக்கூடாதுங்கிறதுக்காக இந்த விளக்கத்தை சுருக்கமாக சொல் லிட்டு, தந்தை பெரியார் விசயத்துக்கு வந்தாதான் நல்லாயிருக்கும். 

Advertisment

ஏ.பி.என்.னை "மாங்கல்யம்'’ படத்துல ஹீரோவா அறிமுகப்படுத்தி னது எம்.ஏ.வேணுதான் என்பதையும் பதிவு செஞ்சிருந்தேன்.  அதனால் அவர் மேல இருந்த அன்பாலும், பாசத்தாலும் ‘"திருவிளையாடல்'’ படத்தின் “"பாட்டும் நானே…பாவமும் நானே'’ பாட்டு மட்டும் ரிக்கார்டிங் முடிந்த நிலையில்தான் ஏ.பி.என்.னுக்கு கைமாற்றிவிட்டார் வேணு. அதன்பின் படத்தின் பாடல்கள் மொத்தத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதினார். இதனால் "பாட்டும் நானே பாவமும் நானே'” பாட்டை எழுதினது கவிஞர் கா.மு.ஷெரீப்தான்ங்கிறத சுத்தமா மறந்துட்டாரு ஏ.பி.என். அதனாலதான் ஷெரீப்பின் பெயர் டைட்டிலில் மிஸ்ஸாகிப் போச்சே தவிர, இந்தத் தப்பை திட்டமிட்டே ஏ.பி.என். பண்ணல. அப்படி அவர் பண்ணக்கூடிய வருமல்ல. சொந்தமா பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் பட்டியலில் இருந்தவர்தான் அண்ணன் ஏ.பி.என். 

இப்ப ‘சம்பூர்ண ராமாயணம்’ சங்கதிக்கு வருவோம்.…

மார்கழி மாசத்துல ‘வைகுண்ட ஏகாதசி’ நாள் என்பது சிறப்பு வாய்ந்தது. பெருமாள் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப் பைக் காண்பது புண்ணியம் என்பது இறை நம்பிக்கையாளர்களி டையே இன்றளவும் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு தான் அந்த நம்பிக் கைக்கு சாட்சி. எல்லா பெருமாள் கோவில்களிலும் இந்த சீர்மிகு வைபவம் சிறப்புடன் நடக்கும். அப்படிப்பட்ட வைகுண்ட ஏகாதசியன்று மதியத்திலிருந்தே விரதத்தை ஆரம்பித்து, விடிய விடிய முழித்திருந்து அதிகாலையில் சொர்க்கவாசலைப் பார்த்த பிறகுதான் காலை ஆகாரத்தையே உண்பார்கள் ஆன்மீக அன்பர் கள். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் விடிய விடிய முழிச்சிருக்கணும்னா வீட்டில் பல பெண்கள் தாயம் விளையாடு வார்கள். கடவுள் கதைகளைப் பேசி பொழுதைக் கழிப்பார் கள். ஆண்களோ…"ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் காண்பிக் கப்படும்'’என்ற நோட்டீஸ் விளம்பரத்தைப் பார்த்து சினிமா கொட்டகைகளுக்கு கூட்டம் கூட்டமாகப் போவார்கள். 

reel1

Advertisment

மொத ஆட்டம், ரெண்டாவது ஆட்டம் என இரண்டு ஆட்டங்களிலும் பக்திப் படங்களைத்தான் சினிமா கொட்டகைக்காரர்கள் போடுவார்கள். ரெண்டாவது ஆட்டம் ‘"சம்பூர்ண ராமாயணம்'’ மூன்றரை மணி நேரம் ஓடி முடிஞ்சதும் பொழுது விடிஞ்சிரும். அதுக்கு முன்னால ‘"ஹரிதாஸ்',’"காளிதாஸ்'’ படங்கள் மூணேமுக்கால் மணி நேரம், நாலு மணி நேரமெல்லாம் ஓடுச்சு. இப்பல்லாம் அந்தக் காலம் மாதிரி வைகுண்ட ஏகாதசிக்கு யாரும் முழிச் சிருக்கிறதில்ல. முழிக்கக் கூடிய சூழலும், நேரமும் மக்களுக்கு இல்ல. 

அப்படிப்பட்ட பெரு மைக்குரிய ‘"சம்பூர்ண ராமாயணம்'’ படத்தை  எம்.ஏ.வேணு தயாரித்தார். 1958 ஏப்ரல் மாதம் 14-ஆம்        தேதி ரிலீசான இப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன், தெலுங்கு சினிமாவின் பெரிய ஹீரோவான என்.டி.ராமாராவ், பத்மினி, டி.கே.பகவதி, வி.கே.ராமசாமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.என்.ராஜம். உட்பட பலர் நடித்திருந்தனர். கே.சோமு தான் படத்தை டைரக்ட் பண்ணியிருந்தார். வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படை யாக வைத்து   ஏ.பி.நாகராஜன் திரைக்கதை எழுதிய  இப்படத்தில் ராமனாக ராமாராவும், பரதனாக நடிகர்திலகமும் நடித்திருந்தனர். கே.சீனிவாசன் என்பவர் என்.டி.ஆருக்கு தமிழில் குரல் கொடுத்திருந்தார்.   

இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது வேணுவை அழைத்த ஏவி.மெய்யப்பச் செட்டியார், “"ராமாயணம் மட்டும் எடு. சம்பூர்ண ராமாயணம்னா செலவு கொஞ்சம் ஜாஸ்தியாகும்'’எனச் சொல்லியிருக்கிறார். 

Advertisment

"இல்லேண்ணே…சம்பூர்ணம்னா முழுமைன்னு அர்த்தம். நான் தயாரிக்கப் போறது ராமனின் கதை மட்டுமல்ல. அதற்கு முந்தையதையும் சேர்த்து முழுமையா எடுக்கப்போறேன்''’என கனிவுடன் மறுத்து விட்டார் வேணு. 

அப்படிப்பட்ட ‘"சம்பூர்ண ராமா யணம்'’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பின், இப்போது போலவே அப்போதும் சினிமா புள்ளிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் படத்தைப் போட்டுக்காட்டி புரமோட் பண்ணும் வேலைகள் நடக்கும். அந்த வகையில ‘சம்பூர்ண ராமாயணத்தை தனக்கு நெருங்கிய நண்பரான ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி.க்கு போட்டுக் காட்ட விரும்பினார் வேணு. அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ம.பொ.சிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால், அவரையும் படம் பார்க்க அழைத்து வரமுடியுமா? என்ற பிட்டையும் ம.பொ.சி.யிடம் போட்டார் வேணு. 

"அதுக்கென்ன வேணு, தாராளமா கூட்டிடுட்டு வர்றேன். தேதியும் நேரமும் அவரிடம் கேட்டுச் சொல்றேன். அதுக்குப் பிறகு ஏற்பாடு பண்ணு''’என ம.பொ.சி.யும் சிக்னல் போட்டுவிட்டார். அதுக்குப் பிறகுதான் வேணு ஒரு வேலையப் பண்ணுனாரு. நடிகவேள் எம்.ஆர்.ராதாவிடம் போய் நின்னாரு.

"என்னடா வேணு…என்ன திடீர்னு'' ’-எம்.ஆர்.ராதா.

"உங்களால ஒரு பெரிய காரியம் ஒண்ணு நடக்கணும்னே. இப்ப நான் சம்பூர்ண ராமா யணம்னு ஒரு படத்தைத் தயாரிச்சு முடிச்சு ரிலீஸ் பண்ணப்போறேன். படத்தைப் பார்க்க முதல்வர் ராஜாஜியும் ம.பொ.சி.யும் சம்மதிச்சுட்டாங்க. இவர்களுடன் அய்யா பெரியாரும் படத்தைப் பார்த்து கருத்து சொன்னா நல்லாயிருக்கும். நீங்க கூப்பிட்டா அய்யா வரு வாருண்ணே''”-எம்.ஏ.வேணு. 

reel2

"ஏண்டா டேய் ஒனக்கு எவ்வளவு தைரி யம் இருந்தா, ராமாயணம் பார்க்க அவரைக் கூப் பிடுவ. அதுவும் ராஜாஜி யுடனும் ம.பொ.சி.யுட னும். அந்தக் கிழவன் ஊர் ஊராப் போய் ராமா யணத்தையும், ராமனை யும் டார் டாரா கிழிச்சிக் கிட்டிருக்காரு. இந்த டைம்ல ராமாயணம் பார்க்க அவரையே கூப்பி டுற... நல்லா யோசிச்சுக்க''” -எம்.ஆர்.ராதா. 

"பரவாயில்லண்ணே, அய்யா வந்து படத்தைப்  பார்த்து  நாலு வார்த்தை பேசுனா போதும். நீங்க ஏற்பாடு பண்ணுங் கண்ணே''”-எம்.ஏ.வேணு. 

"ரைட்டு விடு... நீ இவ்வளவு தூரம் கேக்குற, நானும் அவர்ட்ட பேசிப் பார்க்குறேன். ஆனா ஒண்ணு காசு விசயத்துல கிழவன் ரொம்ப கறார் பார்ட்டி. அவர்கிட்ட போட்டோ எடுக்கணும் னாலே காசு வாங்குவாரு. நீ என்னடான்னா நாலு மணி நேரம் ஓடுற சினிமா பார்க்க கூப்பிடுற அதனால் நீ ஐயாயிரம் ரூபாய் ரெடி பண்ணிக் கொடு. அதை அவர்ட்ட கொடுத்தாத் தான் உன்னோட "சம்பூர்ண ராமாயணம்'’ பார்க்க வருவாரு. படத்தைப் பார்த்துட்டு என்ன வேணும்னாலும் பேசுவாரு. அதுக்கும் தயாரா இருந்துக்க, அதுக்குப் பிறகு உஷாரா இருந்துக்க, படத்தை ரிலீஸ் பண்ணிக்க''”-எம்.ஆர்.ராதா. 

நடிகவேள் போய் ஐயாயிரம் கொடுத்ததும் படம் பார்க்க சம்மதித்தார் தந்தை பெரியார்.

சென்னை தியாகராய நகரில் இருந்த பிரிவியூ தியேட்டருக்கு  ராஜாஜியும் ம.பொ.சி.யும் வந்த பின் தந்தை பெரியாரும் எம்.ஆர்.ராதாவும் வந்தனர். படம் ஓட ஆரம்பித்தது. தியேட்டருக்கு வெளியே பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். 

படத்தின் இடைவேளை விட்டதும்.. "படம் முடிஞ்சதும் உங்க கருத்தைக் கேட்க பத்திரிகை யாளர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். எப்படியும் பெரியாரிடமும் கருத்துக் கேட்பார்கள். அதனால் நீங்க சுருக்கமா சொல்லிட்டு சீக்கிரம்  கிளம்பிருங்க''” என ராஜாஜியை தயார் நிலையில் வைத்துவிட்டார் ம.பொ.சி.

அதேபோல் படம் முடிந்து வெளியே வந்த ராஜாஜியின் முன்பாக பேனா வுடன் நின்ற பத்திரிகையா ளர்களிடம், "பரதன்  நடிகர்திலகம் சிவாஜி வாழ்க', "எம்.ஏ.வி. பிக்சர்ஸ் வாழ்க'” என ரெண்டே வரிகளைச் சொல்லிவிட்டு கிளம்பினார் முதல்வர் ராஜாஜி. 

அடுத்து வந்த பெரியா ரிடம், "அய்யா நீங்கதான் ராமாயணத்தை கடுமையா எதிர்ப்பவராச்சே. இப்ப சம்பூர்ண ராமாயணம் பார்க்க வந்திருக்கீங்களே?'' என்றனர் பத்திரிகையாளர்கள்.

"வேணுவுக்காக என்கிட்ட ராதா வந்தாரு. ராதாவுக்காக நான் வந்தேன். இந்தப் படத்துல நம்ம சிவாஜி நல்லா நடிச்சிருந்தாரு. என்.டி.ஆரும் பத்மினியும் நல்லா நடிச்சிருந்தாங்க. அதை நான் சொல்லியாகணும்ல. மத்தபடி கட்டுக்கதை ராமா யணத்துக்கு நான் எதிரிதான்''’-இப்படி ஒரு போடு பெரியார் போடுவார்னு யாருமே எதிர்பார்க்கல.

சம்பூர்ண ராமாயணத்தால் வழக்கிலிருந்து தப்பித்த வேணு...!…           

 (வெளிச்சம் பாயும்)

தொடர் சம்பந்தமாக என்னுடன் பேச விரும்புவோர் 98413 28257 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்! -ஷாலப்பா