(18) கற்பக விருட்சம், அட்சய பாத்திரம்!
கும்பகோணம் சீனிவாசன் கோபாலகிருஷ்ணன். சுருக்கமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சினிமாவில் எனக்கு வெளிச்சம் தந்த அருள்ஜோதி, கருணைக்கடல், சினிமா கற்றுத்தந்த பேராசான்.
கே.எஸ்.ஜி.க்கு ஏழெட்டு வயதிருக்கும்போதே நவாப் ராஜமாணிக்கம் நாடக சபாவில் சேர்ந்து சின்னச் சின்ன வேஷங்கள் போட ஆரம்பித்தார். ஒருமுறை ‘பக்தபிரகலாதன்’ நாடகத்தில் பிரகலாதன் வேசம் போட்டு நடித்தபோது, தலையில் வைத்திருந்த விக்கில் இருந்த தேள் கொட்டியிருக்கிறது. தேள் கொட்டிய வலியைவிட, வாத்தியார் நவாப் ராஜமாணிக்கம் அடிக்கும் அடி ரொம்ப வலிக்கும் என்பதால், தேள் கடியைத் தாங்கிக்கொண்டு வசனம் பேசி நடித்து முடித்ததும் மயங்கிச் சரிந்திருக்கிறார்.
நவாப் ராஜமாணிக்கம் நாடக சபாவிற்கு அடுத்து ஸ்ரீதேவி நாடக சபாவில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் நாடகங்களில் நடித்த அனுபவம், வசனம் பேசிய அனுபவத்துடன் சினிமா வாய்ப்புத் தேடி இறங்கினார். நாடகங்களில் நடிக்கும் போதே சினிமா இயக்குனர்கள், கதாநாயகர்கள் சிலரின் அறிமுகமும் பழக்கமும் இருந்ததால், அவர்களின் சிபாரிசுடன் 1960-களிலேயே சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘"தெய்வப் பிறவி'’, ஜெமினி கணேசன் -சரோஜாதேவி நடித்த ‘"கைராசி'’, எஸ்.எஸ். ஆர். நடித்த ‘"குமுதம்'’ ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதினார். வங்காள மொழி படமொன்றின் ரீமேக் ரைட்ஸை வாங்கி நடிகர்திலகம் சிவாஜியை வைத்து ‘"படிக்காத மேதை'’ என்ற காவியத்தை டைரக்ட் பண்ணினார் ஏ.பீம்சிங். இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏ.பீம்சிங்கிற்கு உதவியாக இருந்ததுடன் படத்தின் வசனத்தையும் கே.எஸ்.ஜி.தான் எழுதினார்.
இப்படி தொடர்ச்சியாக கே.எஸ். ஜி.யின் கதை ஆற்றலையும் வசனத் திறமையையும் பார்த்த பின்புதான் ஏ.எல்.சீனிவாசனிடம் சொல்லி, 1962-ல் ‘சாரதா’ மூலம் கே.எஸ். ஜி.யை இயக்குனராக்கி அழகு பார்த்தார் அண்ணன் எஸ்.எஸ்.ஆர். அந்த எஸ்.எஸ்.ஆரே பெருமிதம் பொங்க, கே.எஸ்.ஜி.யின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
இரண்டாவது படமான ‘"கற்பகம்'’ படத்தில் கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தினார். படத்தில் ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, முத்துராமன் போன்ற சீனியர்கள் இருந்தாலும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் கவிஞர் வாலி எழுதிய "அத்தைமடி மெத்தை யடி'’பாடலின் மூலம் ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தார் கே.ஆர்.விஜயா. தனது தம்பி கே.எஸ். சபரிநாதனை கற்பகம்’ மூலம் தயாரிப்பாளராக் கினார் கே.எஸ்.ஜி. படம் மாபெரும் வெற்றி பெற்று கலெக்ஷனை அள்ளியது.
இயக்குனராகி இரண்டே வருடத்தில் அதாவது 1964-ல் நடிகர்திலகம் சிவாஜியை வைத்து ’"கை கொடுத்த தெய்வம்'’படத்தை டைரக்ட் பண்ணும் வாய்ப்பு கே.எஸ்.ஜி.க்கு கைகூடியது. ஏ.பீம்சிங்கின் "படிக்காத மேதை'யில் கே.எஸ்.ஜி.யின் திரைக்கதை -வசனத்தின் வீரியத்தைப் பார்த்திருந்ததால் இந்த வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர்திலகம். இதிலும் எஸ்.எஸ்.ஆர்., சாவித்திரி, கே.ஆர்.விஜயா நடித்தனர்.
அதற்கடுத்து 1966-ல் அண்ணன் வி.கே.ராம சாமி தயாரிப்பில், நடிகர் திலகம் சிவாஜி, கே.ஆர். விஜயா ஜோடியை வைத்து "செல்வம்'’ படத்தை டைரக்ட் பண்ணினார் கே.எஸ்.ஜி. இந்தப் படத்தில் “"அவளா சொன்னாள்…இருக்காது, அப்படி எதுவும் நடக்காது'…என்ற பாடல் காட்சி சீன். பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் சிவாஜி மாடிப்படி ஏற வேண்டும். சில வினாடிகள் இசை நின்றதும் அடுத்தபடி யில் அடுத்த ஸ்டெப்பை வைத்து நிற்கவேண்டும். ஆனால் நடிகர் திலகமோ…பாடல் ஒலிக்க ஆரம்பித்த தும் மாடிப்படிகளில் வேகமாக ஏற ஆரம்பித்துவிட்டார்.
"கட்...…கட்...'…என்றார் கே.எஸ்.ஜி.
"ஏம்பா டைரக்டர் என்னாச்சு? கரெக்டாத்தானே நடிச்சேன்''’-இது நடிகர்திலகம்.
"இல்லண்ணே, "அவளா சொன்னாள்…இருக்காது...'…இந்த இடத்தில் சில வினாடிகள் இசை நின்னதும்... நீங்களும் நிக்கணும், அதான்ணே நல்லா ருக்கும்''”-இது கே.எஸ்.ஜி.
"இத மொதல்லயே நீ சொல்லிருந்தா அப்படியே பண்ணிருப்பேன். ரைட் விடு, எப்படி மாடிப்படி ஏறணும்னு நீ ஏறிக்காட்டு, மறுபடியும் ஆக்ஷன் சொல்லு. நீ சொன்ன மாதிரியே நடிக்கிறேன்'' ’எனச் சொல்லிவிட்டு அதைவிட அம்சமாக நடித்து அசத்தியிருக்கார் நடிகர்திலகம்.
1983-ல் "நீதிபதி' படத்தில் நடிகர் திலகம் நடித்தபோது, ஒரு காட்சியில் நீதிபதி சிவாஜி நடக்கும் சீனில் "கட்' சொன்னார் டைரக்டர் பில்லா கிருஷ்ணமூர்த்தி.
அப்போது நடிகர்திலகம், " "செல்வம்' படத்துல மாடிப்படி ஏறும்போது எப்படி ஏறணும்னு நடிச்சுக் காட்டுனான் கோபாலகிருஷ் ணன். அது மாதிரி உன்னால முடிஞ்சா நடந்து காட்டு நடக்குறேன்''”எனச் சொன்னதும்..
"பரவாயில்லண்ணே,… உங்க ஸ்டைலிலேயே நடங்க''’எனச்சொல்லி தப்பித்திருக்கிறார் பில்லா கிருஷ்ணமூர்த்தி.
இதெல்லாம் கே.எஸ்.ஜி.யிடம் நான் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு அவரே சொன்னது.
பணமா? பாசமா?வின் நிஜக்கதை
வாகினி ஸ்டுடியோவின் அதிபர் நாகிரெட்டியார் ரொம்பவும் கண்டிப்பானவர். ’ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் தலைமைத் தயாரிப்பு நிர்வாகியிலிருந்து செட் அசிஸ்டெண்ட் வரை, அனைவரும் கழுத்தில் அடையாள அட்டை அணிந்து வந்தால்தான் உள்ளே விடவேண்டும்’ என்பது வாட்ச்மேனுக்கு நாகிரெட்டி போட்ட கண்டிப்பான உத்தரவு. அதனால் ரெட்டியின் கண்டிப்பான இந்த உத்தரவை மிகக் கவன மாக பின்பற்றி னார் வாட்ச்மேன். ஒருநாள் அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார் நாகிரெட்டி. அப்போது வாட்ச்மேன் பாத்ரூமுக்குப் போகும்போது, வாசலில் தனது மகனை நிறுத்திவிட்டு, "அடையாள அட்டை இல்லாமல் யார் வந்தாலும் உள்ளே விடாதே' எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ரெட்டி வர... அவரிடம் அடையாள அட்டையும் இல்லை, அவரை யார் என்றே அடையாளமும் தெரியாததால் உள்ளேவிட மறுத்திருக்கிறான் அந்தச் சிறுவன்.
"நான்தாம்பா இந்த ஸ்டுடியோ ஓனரு''’என நாகிரெட்டி சொல்ல...…
"அதெல்லாம் எனக்குத் தெரியாது, அடையாள அட்டை இல்லேன்னா யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லிருக் காரு''’என சிறுவன் மல்லுக்கட்ட... இந்தச் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த வாட்ச்மேன், நாகிரெட்டியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
"உன் மகன் செஞ்சதுதாம்பா சரி...''’எனச் சொல்லி அந்த சிறுவனையும் வாட்ச்மேனையும் பாராட்டியுள்ளார் நாகிரெட்டி.
இந்த உண்மைச் சம்பவத்தைத்தான் "பணமா? பாசமா?' என்ற பெயரில், வாட்ச்மேனாக டி.கே.பகவதி, அவரது மகனாக ஜெமினிகணேசன், முதலாளியாக வி.எஸ்.ராகவன் மற்றும் சரோஜாதேவி ஆகியோரை நடிக்க வைத்து வெற்றிப் படமாக்கினார் கே.எஸ்.ஜி.
கே.ஆர்.விஜயா & ஜெயசித்ராவின் 100-ஆவது படம்
1963-ல் ‘"கற்பகம்'’ படத்தில் கே.எஸ்.ஜி.யால் அறிமுகமாகி, பத்தே ஆண்டுகளில் அதாவது 1973-ல் கே.ஆர்.விஜயாவின் 100-ஆவது படமான "நத்தையில் முத்து'வை கே.எஸ்.ஜி.தான் டைரக்ட் பண்ணினார்.
அதேபோல் கலைஞானத்திடம் எம்.ஏ.வேணு அறிமுகப்படுத்திய ரோகிணியை கலைஞானம் கதை எழுதிய ‘குறத்தி மகனில் ஜெயசித்ராவாக அறிமுகப்படுத்தியவரும் கே.எஸ்.ஜி. தான். ஜெயசித்ராவின் 100-ஆவது படமான ‘"நாயக்கர் மகள்'’ படத்தின் டைரக்டரும் கே.எஸ்.ஜி.தான்.
கே.எஸ்.ஜி. படங்களில் தொடர்ந்து நடித்து நல்ல ராசியான நடிகை என்ற ஹிட் சென்டி மெண்ட் கே.ஆர்.விஜயாவிடம் பெர்மனெண்டாக தங்கிவிட்டது. அதுதான் கற்பகம் ஸ்டுடியோவின் அதிபராக கே.எஸ்.ஜி.யை ஆக்கியது என்றுகூட சொல்லலாம்.
"புன்னகை அரசி'’ சொன்ன நிஜ ஃப்ளாஷ்பேக்
1982-ல் கே.ஆர்.விஜயாவை வைத்து கே.எஸ்.ஜி. டைரக்ட் பண்ணிய "தேவியின் திருவிளையாடல்'’என்ற பக்திப் படத்தில்தான் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அதற்கடுத்து 1985-ல் சிவாஜி -கே.ஆர்.விஜயா காம்பினேஷனில் "படிக்காத பண்ணையார்'’ படத்தை ஆரம்பித்தார் கே.எஸ்.ஜி. அந்தப் பட ஷூட்டிங்கின்போது ஒரு நாள் கே.ஆர்.விஜயா விடம், "நீங்க யாரும்மா? பழனில என்ன பண்ணிக்கிட்டிருந்தீக?''ன்னு’ கேட்டுப் புட்டேன்.
"ஷாலப்பா.. பழனில நான் கரகாட்டம் ஆடுனேன், ரிகார்ட் டான்ஸ் ஆடுனேன்னு ஆளாளுக்கு கட்டுக்கதைகளை சொல்லிக் கிட்டிருக்கானுக. ஆனா சாக்லேட் விளம்பர டப்பாவுல இருந்த என்னோட போட்டோவைப் பார்த்துதான் உங்க டைரக்டர் நடிக்க சான்ஸ் கொடுத்தாரு. நீ வேணா அவர்ட்டயே கேட்டுப்பாரு''’என்று நிஜ ஃப்ளாஷ்பேக்கைச் சொன்னார் புன்னகை அரசி.
"விஜயா சொன்னதுதாண்டா உண்மை'’ என்றார் கே.எஸ்.ஜி.
கே.ஆர்.விஜயா…"புன்னகை அரசி'’ மட்டுமல்ல...…கே.எஸ்.ஜி.க்கு லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்த பேரரசியும்கூட. வங்கியில் வாங்கிய கடனுக்காக கற்பகம் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்தபோது, கே.எஸ்.ஜி.யிடம் 25 லட்சத்தை அள்ளிக் கொடுத்த மகராசி கே.ஆர்.விஜயா.
இதேபோல் தனது மகன் வெங்கடேசை ஹீரோவாக்கி, ‘"அத்தைமடி மெத்தையடி'’ படத்தை எடுத்து முடித்துவிட்டு, ரிலீஸ் பண்ண மூன்று லட்சம் இல்லாமல் தத்தளித்தார் கே.எஸ்.ஜி.
அப்போது அவ ரிடம், "அண்ணே விஜயா கிட்ட கேட்டுப் பார்ப் போம்''’என்றேன் நான். "எவ்வளவுதாண்டா அந்தப் பொண்ணுகிட்ட கேட்குறது. நமக்கே கூச்சம் வேணா மாடா''’ன்னு தயங்கினார் கே.எஸ்.ஜி.
"அண்ணே படம் பார்க்க நான் கூப்பிடுறேன். மத்தது தானா நடக்கும்''’எனச் சொல்லிவிட்டு, விஜயாவை படம் பார்க்க அழைத்தேன். படம் முடிந்ததும் ரொம்ப ரொம்ப தயங்கி, மூன்று லட்சம் விஷயத்தைச் சொன்னேன்.
"எனக்கு வாழ்வு கொடுத்த அவருக்கு செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறேன். நீ உடனே கிளம்பி என்னோடு வா''ன்னு அவரின் வீட்டுக்குப் போய் மூன்று லட்சத்தைக் கொடுத்த புண்ணியவதிதான் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.
கற்பக விருட்சம், அட்சய பாத்திரமான புன்னகை அரசியின் பேருதவியால்தான், கே.எஸ்.ஜி., தனது ஆறு மகன்களுக்கும் கோடிக் கணக்கான சொத்துக்களை பிரித்துக் கொடுத்தார். கே.எஸ்.ஜி.யின் மனைவி திருமதி பாப்பா அம்மையார் சில வருடங்கள் கற்பகம் ஸ்டுடியோவை நிர்வாகம் பண்ணினார்.
(முற்றும்!)