(16) எச்சரித்த மெய்யப்ப செட்டியார்!    

னது ஆசான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து   இணை இயக்குன ராக உயர்ந்து, அதன்பின் அவரின் ஆசியுடன் ‘"இளமை ஒரு ரோஜா'’ என்ற படத்தின் டைரக்ட ராகி, அது பாதியிலேயே நின்றுபோனதை இத் தொடரின் ஆரம்பத்திலேயே எழுதியிருந்தேன். நான் கே.எஸ்.ஜி. படங்களின்  எடிட்டிங் வேலைகளுக்காக ரத்னா ஸ்டுடியோ செல்லும்போது வேணுவுடன் நட்பு ஏற்பட்டு, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இன்னும் சொல்லப்போனால் சென்னையில் அவரது இறுதி நாட்கள்வரை உண்மையுடன் அவரிடம் பழகியதால்தான், அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறேன். 

Advertisment

நான் ஏவி.எம் குடும்பத்திற்குள் நுழைய காரணமே வேணுதான். அது குறித்த சம்பவங் களையும், அதற்கான காரணங்களையும் அடுத்த அத்தி யாயத்தின் இறுதி யில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அதற்கு முன்னால் ஐயா மெய்யப்ப செட்டியார் எச்சரித்ததையும் மீறி, வேணு எடுத்த முடிவால், அவரது சினிமா வாழ்வே முடிவுக்கு வந்ததைச் சொல்வதும் எனது கடமை. 

1953-ல் எம்.ஏ.வி.பிக்சர்ஸை ஆரம்பித்து ‘"நால்வர்'’ படம் மூலம் தயாரிப்பாளரான முதலாளி வேணு ஏழே வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் கிட்டத்தட்ட 25 படங்களைத் தயாரித்தார். அனைத்துமே வெற்றிப் படங்கள்தான், நல்ல லாபத்தைத் தந்த படங்கள்தான். 

இதனால் மிகவும் மகிழ்ச்சியான வேணு, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் 12 கிரவுண்ட் நிலம் வாங்கி பிரமாண்டமான பங்களா கட்டினார். அப் போதே 17 லட்ச ரூபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார். சாலி கிராமம் பிரசாத் ஸ்டுடியோ எதிரே ‘சேலம் மாடர்ன் எடிட்டிங் தியேட் டர்’ ஒன்றைக் கட்டினார். அப் போது தயாரான பெரும்பாலான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களின் எடிட்டிங் அங்கே நடந்த தால் 24 மணி நேரமும் செம பிஸியாக இருக்கும் அந்த எடிட்டிங் தியேட்டர். இதன் மூலமும் வேணுவுக்கு நல்ல வருமானம் வந்தது. 

Advertisment

அப்போது மூன்று மொழி சினிமாவிலும் செம பிஸியான, ஷார்ப்பான எடிட்டராக இருந்தார் அம்பலம் என்பவர். பிரபல வில்லன் நடிகரும் சமீபத்தில்கூட உடல்நிலை மிகவும் மோசமாகி, சினிமா பிரபலங்கள் சிலரின் உதவியால் உயிர் பிழைத்தவருமான பொன்னம்பலத்தின் சொந்த அண்ணன்தான் இந்த அம்பலம்.  கோடம்பாக்கம் ஏரியாவில் வேறு சில எடிட்டிங் ஷூட்டுகள் ஃப்ரீயாக இருந்தாலும் வேணு மீதுள்ள மரியாதையால் சேலம் மாடர்ன் எடிட்டிங் தியேட்டரில்தான் எடிட்டிங் வேலைகளைச் செய்வார் அம்பலம். 

இப்படியெல்லாம் சினிமாவில் பல வகைகளில் சம்பாதித்து, செழிப்பாக இருந்த  வேணுவுக்கு பொல்லாத நேரம், வேண்டாத காலம் பாகவதரால் வந்ததுன்னுதான் சொல்லணும். அதைச் சொல்லணும்னா… ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார், வேணுவை ஏன் எச்சரித்தார்ங் கிறதையும் சொல்லணும்ல. 

தமிழ் சினிமாவின் பிளாக் & ஒயிட் காலத்து ‘சூப்பர் ஸ்டார்’ எம்.கே.தியாகராஜ பாகவதர் என்பது சினிமாவைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். அந்த சூப்பர் ஸ்டாரை 1944ல்தான் எடுக்கப்போகும் ‘"ஸ்ரீவள்ளி'’ படத்திற்கு அட்வான்ஸ் தொகை ஒன்றைக் கொடுத்து புக் பண்ணினார் மெய்யப்ப செட்டியார். இதற்கடுத்த சில நாட் களிலேயே லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி.பாகவதரும், கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணனும் கைதாகி ஜெயிலுக்குப் போனார்கள். இதனால் ரொம்பவே அதிர்ச்சியானார் மெய்யப்ப செட்டியார். ஆனால் உடனே உஷாராகி, "ஸ்ரீவள்ளி’யிலிருந்து பாகவதரைத் தூக்கி விட்டு, அந்த கேரக்டருக்கு டி.ஆர் .மகாலிங்கத்தை கொண்டுவந்து, படத்தை முடித்து 1945-ல் ரிலீஸ் பண்ணிவிட்டார் செட்டியார். சினிமா என்பது ’ஹீரோ இமேஜ்’ என்ற பேஸ்மெண்டை நம்பி, லட்சக்கணக்கில் கொட்டி கட்டி முடிக்கப்படும் கட்டடம். அந்த ‘இமேஜ்’ ‘டேமேஜானால்’ கட்டடம் தரைமட்டமாகிவிடும். இதை நன்கு உணர்ந்தவர் மெய்யப்ப செட்டியார். 

Advertisment

 செட்டியார் உணர்ந்தது நடந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து 1947-ல் பாகவதரும் கலைவாணரும் விடுதலையான பிறகு, அவர்கள் இருவருக்குமே சினிமாவில் சரிவு ஆரம்பித்தது. கலைவாணராவது காமெடி நடிகராக இருந்தவர். ஆனால் பாகவதரோ சூப்பர் ஸ்டாராக இருந்தவர். அந்த அந்தஸ்திலிருந்து அவரால் இறங்கிவர முடியாது. எனவே விடுதலைக்குப் பின் அதே அந்தஸ்துடன், அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. அவரின் ‘இமேஜ்’ பேஸ்மெண்ட் ஆட்டம் காண ஆரம்பித்தது. 

இதெல்லாம் தெரிந்தும், ‘முத்தையா பிக்சர்ஸ்’ என்ற பேனரில் எம்.கே.டி.பாகவதர், ஜி.வரலட்சுமி ஆகியோரை ஜோடியாகப் போட்டு 1960-ல் "சிவகாமி'’என்ற படத்தை ஆரம்பித்தார் வேணு. ‘முதலாளி’ படத்திற்கு கதை எழுதிய அதே வெங்கடராமா னுஜம்தான் ‘"சிவகாமி'க் கும் கதை எழுதினார். கே.வி.மகாதேவன் இசையில் கா.மு. ஷெரீப்பும், பாபநாசம் சிவனும் பாடல்களை எழுதினார்கள். மித்ரதாஸ் என்பவர் டைரக்ட் பண்ணினார். 

"சிவகாமி'’ பட வேலைகளை வேணு ஆரம்பித்ததுமே, மெய்யப்ப செட்டியார் கூப்பிட்டு,  “"பாகவதர் ஜெயிலுக்குப் போய்ட்டு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எதுவுமே தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கல. முன்னமாதிரி அவருக்கு ஃபேஸ் வேல்யூ இல்ல. அதனால இந்த விபரீத விளையாட்டு வேணாம்பா வேணு''’எனச் சொன்னார். "இந்த மாதிரி நெருக்கடியான நேரத்துலதான் பாகவதருக்கு நான் உதவியாகணும். என்ன ஆனாலும் சரி, ’"சிவகாமி'யை எடுத்து ரிலீஸ் பண்ணப் போறேன்''’ என்றார் வேணு. 

சொன்னபடியே "சிவகாமி'யை ரிலீஸ் பண்ணினார். படம் படுதோல்வியடைந்தது. பல லட்சங்கள் கடனாளியானார் வேணு. ‘என்ன ஆனாலும் சரி, என்ற வேணுவின் தைரியம்தான் சினிமாவில் அவருக்கு மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தியது. சரியும் நேரம் வந்தால் சகலமும் சரியும் என்பார்கள். அதுதான் வேணுவுக்கும் நடந்தது. 

சிவகாமி’ மிகவும் சோதித்து விட்ட நேரத்தில்தான் ரத்னா ஸ்டுடியோ லீஸ் முடியும் நேரமும் வந்தது. சென்னையில் இருந்த சொத்துக்களை விற்று, ரத்னா ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர்கள், "சிவகாமி'’ படத்தில் வேலை பார்த்தவர்கள் என அனைவருக்கும் ஒரு பைசா சம்பள பாக்கி வைக்காமல் செட்டில் பண்ணிவிட்டார் வேணு. ஸ்டுடியோவை ஒரு தடவை ரவுண்ட் அடித்து, ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, வாசலுக்கு வந்ததும்தான் வாட்ச்மேனுக்கு 100 ரூபாய் சம்பளப் பாக்கி இருப்பது நினைவுக்கு வந்தது வேணுவுக்கு. உடனே தனது சைக்கிளை 100 ரூபாய் பாக்கிக்காக செட்டில்பண்ணினார் வேணு. மனம் கலங்கிய வாட்ச்மேனோ, "ஐயா அதெல்லாம் வேணாம்யா''’என்றார்.

"நான் கடன்காரனவே இருக்க ணும்னு நீ நினைக்கிறியாப்பா?''’என வேடிக்கையாகக்  கேட்டு, சைக்கிளைக் கொடுத்துவிட்டுத்தான் வந்தார் வேணு. சென்னை தியாகராய நகரில் சின்னதாக ஆபீஸ் போட்டார்.  

சைக்கிளில் வந்த ‘"இதயக்கனி'’ டைரக்டர்…

(வெளிச்சம் பாயும்)


____________
தேவகாந்தாரி ராகம்!

"முதலாளி' படத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் “"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே'…என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடலை எழுதினார். டூயட் சிச்சுவேஷனுக்கான இந்தப் பாடலுக்கு பல்வேறு ட்யூன்களைப் போட்டார் "திரை இசைத்திலகம்' கே.வி.மகாதேவன். வேணுவுக்கோ எதுவும் பிடிக்கவில்லை. கடைசியாக ஒரு ட்யூன் போட்டதும் “"இது சரியா வரும்ணே'’என்றார் வேணு. 

கே.வி.எம்.மோ, "அண்ணே இது தேவகாந்தாரி ராகம். சோக சிச்சுவேஷனுக்குத்தான் சரியா வரும். ஆனா படத்துல ஹீரோயினைப் பார்த்து ஹீரோ பாடுற டூயட்டுக்கு சரிப்பட்டு வருமா?''’என்றதும், "கொஞ்சம் ஹைபிட்ச்ல அண்ணன் டி.எம்.எஸ்.பாடுனா பாட்டு செம ஹிட்டாகும்ணே''”என்றார் வேணு. வேணு சொன்னது போலவே பாட்டை ரெக்கார்டிங் பண்ணினார் கே.வி.எம். டி.எம்.எஸ்.ஸின் குரலில் எப்போதும் இனிக்கும் அந்தப் பாட்டு.