(13) கன்ன’ சம்பவத்தால் கம்பெனி ஆரம்பித்தார் வேணு!
இரண்டு ‘கன்ன’ சம்பவங்களால் ரொம்பவே கவலைப்பட்டார் வேணு. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சில நடவடிக்கைகள் கம்பெனியின் விதிமுறைகளுக்கும் முதலாளி சுந்தரத்தின் ஒழுங்கு, நேர்மைக்கும் நேர் மாறாக இருந்ததால்தான், பாரதிதாசனுடன் சண்டையும் சச்சரவும் ஆரம்பித்து, அது கன்னத்தில் அறைவிழும் அளவுக்குப் போனது. முதலாளியின் மனசு அறிந்து, அவரின் குணமறிந்து, தான் நடந்துகொண்டது பெரிய குத்தமாகப் போனதில் மனம் குமைந்து போனார் வேணு.
அதிலும் அப்போது தன் மீது மிகவும் மரியாதை வைத்திருந்த எம்.ஜி.ஆரும் அந்த சம்பவத்தைப் பார்த்துவிட்டதால் மன சொடிந்துபோன வேணு, ‘"பொன்முடி'’ படம் முடிந்து ரிலீசாகும் வரை ஸ்டுடியோவில் யாரிடமும் பேசவில்லை. ரொம்பவும் அவசியம் ஏற்பட்டால் மட்டும் முதலாளி சுந்தரத்திடம் பேசுவார், அதுவும் தயாரிப்பிற் குத் தேவைப்படும் பணத்திற்காக.
"பொன்முடி'’ பட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே கலைஞரைக் கூப்பிட்டு, அடுத்த படத்திற்கான கதை டிஸ்கஷனை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டார் டி.ஆர்.சுந்தரம். கவிஞர்கள் கா.மு.ஷெரீப், மருதகாசி, சி.பி.சிற்றரசு ஆகியோருடன் டிஸ்கஷனில் உட்கார்ந்தார் கலைஞர். அப்போது ஸ்டுடியோவின் இன்னொரு ஃப்ளோரில் வேணு வாட்டமாக உட்கார்ந்திருப் பதைத் தெரிந்து, அவரை அழைத்துவரச் சொன்னார் கலைஞர்.
வேண்டா வெறுப்பாக வந்த வேணுவிடம், “"அடவிடுங்க வேணு, இதுக்கெல்லாமா இடிஞ்சு போய் உட்காருவீங்க. வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இடியைத் தாங்கணும், மின்னலை சமாளிக்கணும். நாளைக்கே நீங்க முதலாளியானா உங்க குணமும், சுந்தரம் குணம் போலத்தான் மாறும். இதெல்லாம் உலக நடப்புதானே. இப்ப டிஸ்கஷன்ல ரிலாக்ஸா உட்காருங்க. மனசு லேசாகிரும்''’என ஆறுதல்படுத்தினார் கலைஞர்.
அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் படங் களுக்குத் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த தால் தனது மனைவி பத்மாவதி, மகன் முத்துவுடன் சேலத்திலேயே தங்கியிருந்தார் கலைஞர். அதனால் தனது மகன் முத்துவை ஸ்டுடியோவிற்கு அடிக்கடி அழைத்து வருவார். அப்படித்தான் அந்த டிஸ்கஷன் நடக்கும்போதும் முத்துவை அழைத்து வந்திருந்தார்.
ஒரு கிராமத்தின் கோவில் திருவிழா, சாமி ஊர்வலம் பற்றிய சீன்களுக்கான டிஸ்கஷன் நடந்து கொண்டிருந்தது. கா.மு.ஷெரீப்பும், மருதகாசியும் சீனில் இருக்கவேண்டிய திருவிழாக் கடைகள், அலங்கரிக்கப்பட்ட தேரில், மிகவும் அலங்காரமாக உட்கார்ந்திருக்கும் சாமி, பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்கள் இதைப் பத்தியெல்லாம் பேசிவிட்டு, கடைகள் செட், பக்தர்களாக வரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக் கான செலவு குறித்து பேச...
"கடவுளுக்கு எதுக்கு இவ்வளவு ஆடம்பரம், கோவில் திருவிழா, அலங்காரம், ஊர்வலம்? கடவுளைத் தூக்கிட்டு வீதிவீதியா ஏன் சுத்தணும்? இதெல்லாம் பட்ஜெட்ல தாங்குமா?''’என கலைஞர் கேட்டிருக்கிறார்.
அதுவரை கம்முன்னு இருந்த வேணு, “"அய்யா கருணாநிதி (கலைஞரை அப்படித்தான் வேணு அழைப்பார்) அவர்களே, நீங்க ஈ.வே.ரா.வை ஊர் ஊராகக் கூட்டிப் போய் பிரச்சாரம் பண்றீங்க. அது உங்களுக்கு சரின்னா, கடவுளை நம்புகிறவர் களுக்கு இதான் சரி. கோவில் திருவிழாவில் ஏழை- பாழைகள் கடைகள் போடுவார்கள், வருமானம் வரும், அவர்களின் வயிற்றுப்பாடு தீரும். எல்லாமே கடவுளின் கருணை''’என வேணு பதில் சொல்ல...
"அப்படியா வேணு, இப்ப உங்களுக்கு நடந்தது கடவுளின் கருணையாலா? சுந்தரத்தின் சொரணையாலா?''’எனக் கேட்டுவிட்டு.. முத்துவைக் கூப்பிட்டு, “"டேய் முத்து கடவுள் எங்கிருக் கிறார்?''’என்றதும் முத்துவின் ஆக்ஷனைப் பார்த்து கவலை யை மறந்து சிரித்தார் வேணு. ஆனால் உடனே.. கலைஞரைப் பார்த்து, "சின்னப் பையனுக்கு இப்பவே இப்படி டிரெய்னிங் கொடுத்து அவனின் வாழ்க் கையை கெடுத்துராதீங்க''’என உரிமையுடன் சொல்ல...
"அதெல்லாம் சரியா வந்துருவான் வேணு. இப்ப நீங்க தெளிவாகிட்டீங்கன்னா சரிதான்''” என சட்டையராக கலைஞர் பேசியதும், ஸ்ட்ராங்கான ‘டிகாஷன்’ காபி குடித்த மாதிரி சுறுசுறுப்பானார் வேணு. ஆனால் அந்தப் படம் எடுப்பதற்கு முன்பாகவே மாடர்ன் தியேட்டர்ஸை விட்டு வெளியேறிவிட்டார் வேணு. வெளியேறு வதற்கு முன்பு சுந்தரத்தை பணிந்து வணங்கி விட்டுத்தான் வெளியேறினார்.
இளம் பிராயத்திலேயே ரவுடியாக இருந்த தனது வாழ்க்கைப் பாதையையே மாற்றி, இருபது வயதில் மாடர்ன் தியேட்டர்ஸின் கடைநிலை ஊழியராக சேர்ந்து, புரொடக்ஷன் மேனேஜர்வரை உயர்ந்து சுமார் 50 படங்களில் வேலைபார்த்த அனுபவத்துடன் 1950-ல் சுந்தரத்திடமிருந்து விலகி வந்துவிட்டார் வேணு.
மாடர்ன் தியேட்டர்ஸைவிட்டு வெளியே வந்தாச்சு. நமக்குத் தெரிந்த தொழில் சினிமா தான்னு ஆகிப்போச்சு. வாழ்வோ? தாழ்வோ? சினிமா கம்பெனி ஆரம்பிச்சுர வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்தார் வேணு. அப்போதெல்லாம் சினிமா கம்பெனி ஓனர்களெல்லாம் பெரும்பாலும் சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருப்பார்கள். ஏவி.மெய்யப்பச் செட்டியார், நாகி ரெட்டியார், கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ ரங்கசாமி நாயுடு, ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு & மொய்தீன் இவர் களெல்லாம் ஸ்டுடியோ ஓனர்களாக இருந்ததால்தான், தங்களது படங்களின் தயாரிப்பு வேலைகளை சுலபமாக முடித்தனர். இதுபோக வெளி கம்பெனிப் படங்களின் தயாரிப்பு வேலைகளும் அந்த ஸ்டுடியோக்களில் நடந்ததால் கூடுதல் வருமானமும் வந்தது.
இதெல்லாமே வேணுவின் கண்முன்னே வந்து நிழலாடியபோதுதான் காட்சிக்கு வந்தார் அதே சேலம் மாம்பாக்கத்தில் ரத்னா ஸ்டுடியோவை நடத்தி வந்த ரத்னம்பிள்ளை. மாடர்ன் தியேட்டர்ஸ் சுமார் 30 ஏக்கரில் இருந்தது. இந்த ரத்னா ஸ்டுடியோ 15 ஏக்கரில் இருந்தது. அப்போது கொஞ்சம் சின்ன பட்ஜெட் படங்கள், மாடர்ன் தியேட்டர்ஸில் ஃப்ளோர் கிடைக்காத படங்களின் ஷூட்டிங் ரத்னா ஸ்டுடியோவில்தான் நடக்கும். மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தபோதே ரத்னா ஸ்டுடியோ பற்றியும் ரத்னம் பிள்ளை பற்றியும் வேணுவுக்கு நன்றாகத் தெரியும். பலமுறை ரத்னம் பிள்ளையுடனும் பேசியுள்ளார்.
"பெருவெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் இந்த நேரத்தில் சின்ன மரக்கிளையாவது கிடைக்காதா?' என வேணு கவலைப்பட்ட நேரமும், ரத்னா ஸ்டுடியோ என்ற ஆலமரமே தத்தளித்த நேரமும் ஒன்றுகூடி வந்தது. ஷூட் டிங்குகள் சரிவர நடக்காததால் ஸ்டுடியோவை யாரிட மாவது லீசுக்கு விடலாம் அல்லது விற்றுவிடலாம் என்ற முடிவில் இருந்தார் ரத்னம்பிள்ளை. மாடர்ன் தியேட்டர் ஸில் வேணுவுக்கு நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு, வேணுவைத் தேடிவந்தார். ஸ்டுடியோ வின் நிலைமையைச் சொன்னார். சுமார் 30 ஆயிரம் ரூபாய்க்கு வேணுவிடம் ‘ரத்னா ஸ்டுடியோவை லீசுக்கு கொடுக்க சம்மதித்தார் ரத்னம் பிள்ளை.
வேணுவின் மனசெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. உடனே ‘எம்.ஏ.வி. பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை ஆரம்பித்தார். மேனேஜராக இருந்தவர் முதலாளியானார். இதெல்லாம் நடந்து முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. அதா வது 1950ல் மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து வெளியேறி, 1953ல் தனது ‘எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக ‘"நால்வர்'’ என்ற படத்தை ஆரம்பித்தார் வேணு. இப்படத்தின் இயக்குனர் வி.கிருஷ்ணன். என்.என்.கண்ணப்பா, குமாரி தங்கம், டி.பி.முத்துலட்சுமி ஆகியோருடன் ஏ.பி .நாகராஜன் முக்கிய கேரக்டரில் நடித்தார். படம் ரிலீசாகி நல்ல லாபமும் வந்தது.
இதனால் உற்சாகமான வேணு, அடுத்து 1954-ல் ஏ.பி.நாகராஜனை ஹீரோவாக்கி கே.சோமுவை டைரக்டராக போட்டு ‘"மாங்கல்யம்'’ படத்தை ஆரம் பித்தார். பி.எஸ்.சரோஜா ஹீரோயின். கே.வி.மகாதேவன் இசை.
1955-ல் ஏ.பி.நாகராஜன் கதை- வசனம் எழுத, கே.சோமு டைரக்ட் பண்ண, கண்ணாம்பா, பி.எஸ்.வீரப்பா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடிக்க "பெண்ணரசி' படத்தை ஆரம்பித்தார் வேணு. அதே 1955-ல் என்.என்.கண்ணப்பா, அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, டி.கே.ராமச்சந்திரன், எம்.என்.ராஜம் ஆகியோர் நடிப்பில் ‘"டவுண் பஸ்'’ படத்தை ஆரம்பித்தார் வேணு. இதற்கும் கதை-வசனம் ஏ.பி.நாகராஜன், டைரக் ஷன் கே.சோமு, இசை கே.வி.மகாதேவன்.
இப்படி வேணு விறுவிறுவென படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது வேணுவுக்கு உறுதுணையாக இருந்து எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களை வாங்கி வினியோகம் செய்தார் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ ரங்கசாமி நாயுடு.
"பெண்ணரசி'’ நடிகையை இல்லத்தரசியாக்கிய வேணு…
(வெளிச்சம் பாயும்)