(12) வெளிநாட்டுக் காரும் வேணுவுக்கு வந்த சோதனையும்!
"பொன்முடி'’ படத்தின் கதாசிரியரும் வசனகர்த்தாவுமான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம், வேணு ‘பளார்’ வாங்கிய பிறகு கலைஞரை அழைத்து மிச்சமிருக்கும் கால்வாசி படத்திற்கு டி.ஆர்.சுந்தரம் வசனம் எழுதச் சொன்னதை கடந்த இதழில் எழுதியிருந் தேன். அதைத் தொடர்ந்தும், அதற்கு முன்பும் பின்பும் நடந்த சில சம்பவங்களைச் சொல்லிவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து வேணு வெளியேறிய சம்பவத்தையும் சொன்னால் நல்லாயிருக் கும்னு நினைக்கிறேன்.
சம்பவம் 1 : ஒப்பாரி
கலைஞரின் "மந்திரி குமாரி'’நாடகத்தை கவிஞர் கா.மு.ஷெரீப் ஏற்பாட்டில் சுந்தரமும், வேணுவும் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் அதைப் படமாக எடுக்க முடிவு செய்து, சேலத்திற்கு கலைஞரை அழைத்து வந்தார் டி.ஆர்.எஸ். இந்தப் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். முழு ஹீரோவாக மாறினார். அதனால் கலைஞ ரிடம், வேணுவுக்கு நல்ல நட்பு உருவாக காரணமாக இருந்தது ‘"மந்திரிகுமாரி' தான். இதேபோல் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரை “"ராமச்சந்திரா'’என்றுதான் வேணு அழைப்பார். வேணுவை, எம்.ஜி.ஆர். "அண்ணே'…என்றுதான் கூப்பிடுவார். காலம் செல்லச் செல்ல... எம்.ஜி. ஆரின் கதாநாயக அந்தஸ்து உயர…உயர... இரு வருமே "அண்ணே'…என பரஸ்பரம் அழைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
கலைஞரும், வேணுவும் இதேபோல்தான் என்றாலும் அப்போதே கலைஞருக்கு தொழிலாளர் கள் என்றால் கூடுதல் பாசமும், பிரியமும் உண்டு. என்னதான் தயாரிப்பு நிர்வாகி என்றாலும் மாடர்ன் தியேட்டர்ஸ் ஓனர் சுந்தரத்திடம் சம்பளம் வாங்கும் தொழிலாளிதான் வேணு என்பதால் வேணுவிடம் மிகவும் நெருங்கிப் பழகுவார் கலைஞர்.
"பொன்முடி'’ படத்தில் ஒரு சாவு சீன். அதற் கான வசனங்களை ஒப்பாரிப் பாடல் ஸ்டைலில் எழுதிக் கொடுத்திருந்தார் கலைஞர். இதைப் படித்துப் பார்த்த டைரக்டர் எல்லீஸ் ஆர்.டங்கன் சுந்தரத்திடமும் கலைஞரிடமும், "என்னமேன் இது? சாவு வீட்ல எதுக்கு சாங்? ஒருத்தர் ’டெத்’ஆனா கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டு, அப்புறம் சுடுகாட்டுக்கு கொண்டுபோய் எரிக்க வேண்டி யதுதானே? இதென்ன பெண்கள் கூட்டமா உட்கார்ந்துக்கிட்டு அழுகிறது?, பாடுறது?’'ன்னு கேட்டாராம். உடனே டி.ஆர்.எஸ்.ஸும், கலைஞரும் “"டங்கன் சார்… இதெல்லாம் உங்க நாட்ல கிடையாது, அதனால் இதைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. எங்க தமிழ்நாட்ல சாவு வீட்ல பெண்கள் மாரடிச்சு ஒப்பாரிப் பாடல் பாடாம, ‘பாடி’ கிளம்பாது''” என விளக்கம் சொல்லியுள்ளார்கள்.
சம்பவம் 2 : சான்ஸ்’
தினசரி காலை மாடர்ன் தியேட்டர்ஸுக் குள் வேணு போகும்போதும், வெளியே வரும் போதும் ஒரு இளைஞன் கால் கடுக்க காத்திருப் பான். இது ஒரு வாரமாக தொடர... அந்த இளைஞனை வேணு அழைத்து விவரம் கேட்டார். “"நான் நல்லா நடிப்பேன்யா. நிறைய நாடகங்களில் நடிச்ச அனுபவம் இருக்கு. சினிமாவுல நடிக்க ஏதாவது ஒரு சான்ஸ் கொடுங்க''”எனக் கெஞ்சினான் அந்த இளைஞன்.
உடனே அவனை ஸ்டுடியோவுக்குள் அழைத் துப்போய் சில வசனங்களைக் கொடுத்துப் பேசச் சொல்லியுள்ளார் வேணு. நாடக அனுபவம் இருந்த தால், அந்த இளைஞனும் ஏற்ற, இறக்கங்களுடன் வசனங்களைப் பேசி அசத்தினான். இதனால் திருப்தியான வேணு, சுந்தரத்திடம் சொல்லி, அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் டைரக்ட் பண்ணிக்கொண்டிருந்த ‘"திகம்பர சாமியார்'’ என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க சான்ஸ் வாங்கிக் கொடுத்தார், 1950-ல் இப்படம் ரிலீசானது.
1951-ல் அதே மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரிப்பு & டைரக்ஷனில் வெளியான எம்.ஜி. ஆர். நடித்த ‘"சர்வாதிகாரி'’ படத்தி லும் அந்த இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வசனத்தை எழுதியவர் திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.வி.பி.ஆசைத்தம்பி.
அதன்பின் 1952-ல் வெளியான மற்ற கம்பெனிப் படங்களான ‘"ஷியாமளா', "ஜமீன்தார்' போன்ற படங்களில் நடித்த அந்த இளைஞனின் பெயர் 1955ல் ரிலீசான ஜெமினிகணேசன், சாவித்ரி, டி.எஸ்.பாலையா, சந்திரபாபு ஆகியோர் நடித்த "மாமன் மகள்'’ படத்தின் டைட்டில் கார்டில் வந்தது. 1956-ல் மீண்டும் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘"அலிபாபாவும் 40 திருடர்களும்'’ படத்தின் ஹமீது கேரக்டர் மூலம் ரொம்பவே பிரபலமானான் அந்த இளைஞன். 1950-ல் வெளியான ‘"பொன்முடி'’ படத்தை முடித்துவிட்டு வேணு மாடர்ன் தியேட் டர்ஸை விட்டு வெளியேறினாலும் சுந்தரத்திடம் காட்டிய பணிவு, நடிப்புத் திறன் இவற்றால் "அலிபாபாவும் 40 திருடர்களும்'’ படத்தில் பேர் சொல்லும் ஹமீது கேரக்டர் அந்த இளைஞனுக்குக் கிடைத்தது. இப்படி வேணுவால் கண்டறியப்பட்ட அந்த நடிக இளைஞன்தான் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள ஒத்தப்பட்டி ஐயத்தேவர் மகன் கருப்புத்தேவர் என்கிற ஓ.ஏ.கே.தேவர்.
சம்பவம் 3 : குதிரை வண்டி
சேலம் -ஏற்காடு சாலையில் உள்ளது மாடர்ன் தியேட்டர்ஸ். சுந்தரத்தின் வீடு சேலம் நகரில் இருந்தது. இந்த வீட்டின் அருகே பத்துப் பதினைந்து அறைகளு டன் கூடிய ‘ரிகர்சல் ஹால்’ என்ற பெரிய கட்டிடம் உள் ளது. காலையில் ஸ்டுடியோவி லிருந்து படத்தின் டைரக் டர், வசனகர்த்தா, நடிகர் -நடிகைகள், இசையமைப் பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என அனைவருமே ஒரே வேனில் கிளம்பி ‘ரிகர்சல் ஹாலுக்குப் போவார்கள். யாருக்கும் தனி வாகன வசதி கிடையாது. அங்கே உள்ள அறைகளில் அவரவர் களுக்கான வேலைகளை ரிகர்சல் பார்த்து டைரக்டர் ஓ.கே. சொன்ன பிறகுதான் ஸ்டுடியோவுக்கு வந்து கேமரா முன்பு நிற்கவேண்டும். இது சுந்தரத்தின் ‘ஸ்ட்ரிக்ட் ஆர்டர்’ & ’புரொஸீஜர்.
அதேபோல் ஸ்டுடியோவிலும் சரி, ரிகர்சல் ஹாலிலும் சரி... அனைவருக்குமே தையல் இலையில் தான் உணவு பரிமாறப்படும். விசேஷ நாட்களில் மட்டுமே வாழை இலையில் உணவு. ஆனால் எம்.ஜி.ஆரோ, ‘"சர்வாதிகாரி', "மந்திரிகுமாரி'’ படங்களின் மூலம் ஹீரோவாகி விட்டதால், அவரே வாழை இலை வாங்கி வந்துவிடுவார். அவரது காசு என்பதால் சுந்தரமும் எதுவும் சொல்வதில்லை.
அந்த வகையில் ’ரிகர்சல்ஹால்’ போவதற்கு தனக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யும்படி வேணுவிடம் கேட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் வேணுவோ, கம்பெனியின் ரூல்ஸைச் சொல்லி மறுத்துவிட்டார். உடனே எம்.ஜி.ஆர்., "என்னோட காசுல நானே வாடகை குதிரை வண்டி ஏற்பாடு பண்ணிக்கிறேன், இதை முதலாளி சுந்தரத்துக்கிட்ட நீங்க சொல்லிருங்க'’என்றார். வேணு இதைச் சொன்னதும், "ராமச்சந்திரன் காசுல வந்துட்டுப் போகட்டும், எனக்கு ஆட்சேபனை இல்லை'’என சுந்தரமும் ஓ.கே. சொல்லிவிட்டார். அதன்பிறகு தனது சொந்தக் காசில் வாடகை குதிரை வண்டி மூலம் ‘ரிகர்சல்ஹால்’ போக ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.
சம்பவம் 4 : லைட்டும்’வெயிட்டும்
ஸ்டேண்டர்டு ஹீரோ’ லெவலுக்கு வந்ததும் தனக்கேயுரிய சின்னச் சின்ன ‘டிஸ்டர்ப்களைச் செய்து தயாரிப்பாளர்களின் ‘பல்ஸ்’ பார்ப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். அப்படித்தான் ‘"அலிபாவாவும் 40 திருடர்களும்'’ படத்திற்கு அப்பப்ப ‘கால்ஷீட் டிஸ்டர்ப்’ செய்து சுந்தரத்தை ‘பல்ஸ்’ பார்க்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால் சுந்தரமோ, கொஞ்சமும் ‘பல்ஸ் ரேட்’குறையாமல், "ஓஹோ கதை அப்படிப் போகுதோ...'’என கணக்குப் போட்டு, எம்.ஜி. ஆருக்கு ‘டூப்’ போடும் நடிகரை வைத்து ஷூட்டிங் நடத்துவார். இதைத் தெரிந்து பதறியடிச்சு ஓடிவருவார் எம்.ஜி.ஆர்.
"பரவாயில்ல ராமச்சந்திரா,… நீங்க இல்லாமலே உங்க ஸீன்களை எடுத்துட்டேன். அடுத்த ஷெட்யூலுக்கு கரெக்ட்டா வந்துருங்க''’என கூலாகச் சொல்வார் சுந்தரம்.
அப்பப்ப இப்படி எம்.ஜி.ஆர். ‘லைட்டாக ‘பல்ஸ்’ பார்த்துக்கொண்டேயிருந்ததால் படத்தின் க்ளைமாக்ஸ் ஸீனையே எம்.ஜி.ஆரின் டூப்பை வைத்து எடுத்து, தனது ‘வெயிட்டைக் காட்டினார் சுந்தரம்.
சம்பவம் 5 : வெளியேறிய வேணு
"பொன்முடி'யால் பாரதிதாசன் விட்ட ’பளார்’அதிர்ச்சியிலிருந்து மீண்ட வேணு, கலைஞரிடம் அனுசரணையாக இருந்து படத்தை முடிக்கும் நேரத்தில் சுந்தரம் வெளியூர் போயிருந்தார். அப்போது ஸ்டுடியோவில் நின்றிருந்த சுந்தரத்தின் வெளிநாட்டுக் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியில் போய் வந்திருக்கிறார் வேணு.
இதை ஸ்டுடியோ ஆட்கள் சிலர் சுந்தரத்திடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். இதனால் சுந்தரத்திற்கு கோபம் ‘சுர்ரென ஏறியது. உடனே வேணுவைக் கூட்டிவரச் சொன்னார். “"ஆஃப்ட்ரால் நீ ஒரு மேனேஜர். உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என்னோட ஃபாரின் காரை எடுத்துச் சுத்துவ...''’என சுடுசொல்லால் சுட்டதுமில்லாமல், கன்னத்திலும் ‘பளார்’விட்டார். இந்த சம்பவம் நடந்தபோது அங்கே வேறொரு ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆரும் இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்.
இப்படி இரண்டு ‘பளார்களாலும் வேதனைப்பட்ட வேணுவுக்கு வெளிநாட்டுக்காரால் சோதனை வந்து மாடர்ன் தியேட்டர்ஸை விட்டு வெளியேறினார்.…
(வெளிச்சம் பாயும்)