(11) பளார்’ விட்ட பாரதிதாசன்! வந்தார் கலைஞர்!
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத் தின் சுடுசொற்களால் எம்.ஏ.வேணுவுக்கு கோபம் வந்தது குறித்து கடந்த அத்தியாயத்தின் இறுதியில் எழுதியிருந் தேன். அந்த ‘சுடுசொல் சம்பவத்தைப் பார்ப்பதற்கு முன்னால், மாடர்ன் தியேட்டர்ஸில் நடந்த பல சூடான சம்பவங்களையும் சுவையான சங்கதிகளையும் இன்றைய ‘டிஜிட்டல்’ தலைமுறையினர் தெரிந்து கொள்ள எழுதினால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தாலும் அந்த இயக்கம் இந்த சமூகத்தில் குறிப்பாக அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத் திய தாக்கத்தாலும் ஈர்க்கப்பட்டவர். தனது கவிதைகளா லும் சிறுகதைகளாலும் சுயமரியாதை இயக்க பிரச்சாரக் களத்தின் முன்னெத்தி ஏர்களில் ஒருவராக இருந்தவர் புரட்சிக் கவிஞர். மேடை நாடகங்கள், சினிமாக்கள் மூலம் திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நெருக்கமானார்கள். தங்களது இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.
அந்த வரிசையில்தான் புரட்சிக் கவிஞரும் சினிமாவுக்குள் வந்து பாடல்களையும் வசனங்களையும் எழுத ஆரம்பித்தார். ‘பாலாமணி’ (1937), ஸ்ரீராமானுஜர் (1938), ‘காளமேகம்’ (1940) படங்கள் மூலம் பாடல்கள் எழுத ஆரம்பித்தவர், ‘சுபத்ரா’(1946), ‘சுலோச்சனா’(1947), ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ (1947), ‘பொன்முடி’(1950), ‘வளையாபதி’ (1952) உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதினார் புரட்சிக்கவிஞர். அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு'’(1951) படத்தில் புரட்சிக் கவிஞரின் “"துன்பம் நேர்கையில்..'’என்ற கவிதை இடம் பெற்றது.
பாரதிதாசன் மறைந்த பிறகு வெளி யான எம்.ஜி.ஆரின் "கலங்கரை விளக்கம்' (1965) படத்தில் “"சங்கே முழங்கு'” பாடலும் ‘"பஞ்சவர்ணக் கிளி'’(1965) படத்தில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் குரலில் “"தமிழுக்கும் அமுதென்று பேர்'” என்ற பாட லும் இடம் பெற்றன. 2006-ல் வெளியான "சிவப்பதிகாரம்'’ படத்தில்கூட "கொலை வாளினை எடடா'’என புரட்சிக் கவிஞர் எழுதிய உணர்ச்சிமிகு பாடலை மிகச்சரியாக பயன்படுத்தியிருந்தார் டைரக்டர் கரு.பழனியப்பன்.
இப்படியெல்லாம் சினிமாவில் பாட்டுக்கட்டி, வசனம் எழுதி கொடிகட்டிப் பறந்த புரட்சிக் கவிஞரின் "வளையாபதி', "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி', "பொன்முடி'’ ஆகிய படங்களைத் தயாரித் தவர்... சாட்சாத் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்தான். தான் எழுதிய ‘"எதிர் பாராத முத்தம்'’ என்ற நாவலை சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘"பொன்முடி'’ என்ற தலைப்பில் படமெடுக்க முன்வந்ததால் சம்மதித்து, படத்தின் வசனத்தையும் தானே எழுதுவதாகவும் சொன்னார் பாரதிதாசன். இதனால் சுந்தரமும் மிக மகிழ்ச்சியானார். "பொன்முடி'’ படத்தின் ஹீரோவாக பி.வி .நரசிம்ம பாரதி, ஹீரோயினாக ஜி.மாதுரி தேவி நடித்தனர். படத்தின் முற்பகுதி காட்சிகளின் வசனங்களை பாரதிதாசன் எழுதி, ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.
எம்.ஏ.வேணுவின் மேற்பார்வையில் ஷூட்டிங்கும் நல்லாத்தான் போய்க்கிட்டிருந் துச்சு. அந்தந்த சூழலுக்கு ஏற்ப வசனங்கள் எழுதிக் கொடுத்துக்கிட்டிருந்தார் பாரதிதாசன். முக்கால்வாசிப் படம் முடிந்த நேரத்தில்தான் பெரும் சிக்கல் ஒண்ணு வந்துச்சு. வேணுவை சோதனைச் சுழலில் சிக்க வச்சிருச்சு.
ஒரு காட்சிக்கு பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேச கொஞ்சம் திணறிவிட்டார் ஹீரோ நரசிம்மபாரதி. இன்னும் சொல்லப் போனால் பாரதிதாசனின் தமிழைப் படிக்க சிரமப்பட்டார். இதே நிலையில்தான் மாதுரிதேவியும் இருந்தார். இந்த சிரமத்தை டி.ஆர்.சுந்தரத்திடம் சொல்ல இருவருக்கும் பயம். ஏன்னா பாரதிதாசன்... அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய நட்புகொண்டு, அவர் களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சினிமா வாசலைத் திறந்துவிட்டவராச்சே சுந்தரம். அப்படிப்பட்டவரிடம் போய் பாரதிதாசனின் வசனம் குறித்து குறைசொன்னால், “"அவரோட வசனத்தையே மாத்தச் சொல்ற அளவுக்கு உங்களுக்குத் துணிச்சல் வந்துருச்சா? உங்க ரெண்டு பேரையும் படத்திலிருந்தே தூக்கிரு வேன்'’ என சுந்தரம் சொல்லிருவாரோ? என பயந்த நரசிம்ம பாரதியும் மாதுரிதேவியும் வேணுவின் உதவியை நாடினார்கள்.
"இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்ல நான் வச்சதுதான் சட்டம், சொல்றதுதான் தீர்ப்பு. இதுக்கு அப்பீலே கிடையாது. அதனால நீங்க ரெண்டு பேரும் கவலையேபடாதீங்க. அவர்கிட்ட நான் பேசி வசனத்தை மாத்துறேன்''’என நரசிம்மபாரதிக்கும், மாதுரிதேவிக்கும் தைரியம் ஊட்டினார் வேணு.
அதே கெத்துடன் பாரதிதாசன் அறைக்குப் போனார்.
"வாப்பா வேணு,… முக்கால்வாசிப் படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்துட்டேன். இன்னும் கொஞ்சம்தான் பாக்கி இருக்கு. படவேலைகளெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு?’ -பாரதிதாசன் ரொம்ப சகஜமாக பேசினார்.
"தயாரிப்பு வேலைகள் நல்ல படியா போய்க்கிட்டிருக்குண்ணே. சொன்ன நாளில் ரிலீஸ் பண்ணிர லாம். அதுக்கு முன்னால உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும். இதக்கேட்டு நீங்க கோவிச்சுக்கக் கூடாது''’என இழுத்தார் வேணு.
"பரவாயில்ல சும்மா சொல் லுப்பா. ஆனா எனக்கு கோவம் வராதபடி சொல்லுப்பா''” என்றார் பாரதிதாசன்.
"அது ஒண்ணுமில்லண்ணே… நீங்க எழுதுன சில வசனங்கள் நரசிம்மபாரதிக்கும், மாதுரிதேவிக் கும் புரியல. உங்க தமிழை படிக்கிறதுக்கே சிரமமா இருக்குன்னு சொல்றாங்க. இதை டி.ஆர்.எஸ்.கிட்ட சொல்ல பயந்துபோய் என்கிட்ட சொன்னாங்க. அதனால அந்த வசனங்களை மட்டும் மாத்திக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்...''’என வேணு சொன்னது தான் தாமதம்...…
புரட்சிக் கவிஞருக்கு வந்ததே கோவம், "ஓஹோ…சுந்தரத்தைவிட நீ பெரிய ஆளா? எனக்கு கோவம் வராதபடி சொல்லுடான்னா,… என்னோட தமிழ் புரியலன்னு அந்த ரெண்டு பேரும் சொன் னாங்கன்னு நீ வந்து என்கிட்ட சொல்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா? நான் எழுதுன வசனத்தை பேச இஷ்டமிருந்தா பேசச்சொல்லு. இல்லையா படத்திலிருந்து ரெண்டு பேரையும் விலகச் சொல்லு''’என கோவத்தின் உச்சிக்கே போனார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆனாலும் வேணு, விடாப்பிடியாக வற்புறுத்த ஆரம்பித்ததும்.., கொந்தளித்துவிட்டார் பாரதி தாசன்.
"நீ ஒரு தயாரிப்பு நிர்வாகி.… நீ சொல்லி வசனத்தை மாத்தி நான் எழுதுணுமா? மொதல்ல என்னோட அறையிலிருந்து வெளியே போடா''’என உக்கிரமாகி, வேணுவின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டார் பாரதிதாசன்.
இதனால் வெலவெலத்துப் போன வேணு, அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை. மறுநாள் டி.ஆர்.எஸ்.ஸிடம் போய் கண்ணீர்விட்டுக் கதறியபடி நடந்ததைச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு டி.ஆர்.எஸ்., “"ஏண்டா அவரு எவ்வளவு பெரிய கவிஞர், எப்பேர்ப்பட்ட மனுசன். சில விசயங்களை மாத்தச் சொல்ல நானே தயங்கு வேன். ஆனா, நீயோ அவரோட வசனத்தையே மாத்தச் சொல்லிருக்க. உனக்கு இந்த துணிச்சல் வந்ததுக்கு, இந்த கம்பெனியில் நான் உனக்கு கொடுத்த இடம்தான்டா காரணம். நேரா அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டுட்டு, பட வேலைகளைப் பாரு. இருக்குற வரைக்கும் நல்ல பேரைச் சம்பாரிக்கப் பாரு''’எனச் சொல்லி வேணுவை விரட்டியடித்துவிட்டார் டி.ஆர்.எஸ்.
இது நடந்து இரண்டு நாட்கள் ஆனது. மனசைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாரதிதாசனிடம் மன்னிப்புக் கேட்க முடிவு செஞ்சார் வேணு. ஆனால் புரட்சிக் கவிஞரோ டி.ஆர்.எஸ்.ஸிடம் போய், "இனி இங்கே எனக்கு வேலை இல்லை. வேலை பார்ப்பதிலும் அர்த்தமில்லை. என் தமிழைக் குறை கூற யாருக்கும் தகுதியில்லை''’என சூடாகப் பேசிவிட்டு மாடர்ன் தியேட்டர்ஸை விட்டு வெளியேறினார்.
சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் பண்ண முடியாதோ என ரொம்பவே கவலைப்பட்டார் டி.ஆர்.சுந்தரம். படத்தின் டைரக்டரான எல்லீஸ் ஆர்.டங்கனுக்கும் இதே கவலைதான். “"இனி யார் போய் அழைத்தாலும் பாரதிதாசன் வரமாட்டார், வசனம் எழுதித் தரமாட்டார். எல்லாம் இந்த வேணுப் பயலால வந்த வினை'” என நொந்தபடி இருந்தவரின் மனசுக்குள் சட்டென நினைவுக்கு வந்தவர் கலைஞர்தான். அதே 1950-ல் தனது கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘"மந்திரிகுமாரி'’ படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியிருந்ததால், உடனே அவரைத் தொடர்பு கொண்டார் சுந்தரம்.
"பாரதிதாசனிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்...'’என்ற கலைஞர், சுந்தரம் தன்னிடம் சொன்னதை பாரதிதாசனிடம் சொல்லி சம்மதம் கேட்டிருக்கிறார்.
"முக்கால்வசிப் படத்துக்கு நான் வசனம் எழுதிட்டேன். மீதிப் படத்துக்கு நீங்க எழுதுறதுல எனக்கு ஆட்சேபனை இல்லை. தாராளமாக எழுதுங்க. ஆனா படத்தின் டைட்டிலில் உங்க பேர் போடமாட்டாரே சுந்தரம்?''’என்றிருக்கிறார் புரட்சிக் கவிஞர்.
"கால்வாசிப் படத்துக்கு காசு வந்தா போதும், பேர் வராட்டா பரவாயில்ல''’என தனக்கேயுரிய பாணியில் கலைஞர் சொன்னதும்... புன்னகையுடன் சம்மதம் சொல்லியிருக்கிறார் புரட்சிக் கவிஞர். அதன் பின் தனது பாணியில் கலைஞர் வசனம் எழுத, சுந்தரம் பாணியில் சுறுசுறுப்பாக ஷூட்டிங் முடிந்து சொன்ன தேதியில் படமும் ரிலீசானது.
(வெளிச்சம் பாயும்)