(10) மாணிக்கமும் பாட்ஷாவும்!
நான் சொல்லப்போகும் சேதி பாட்ஷாவாக இருந்து மாணிக்கமாக மாறிய எம்.ஏ.வேணுவைப் பற்றியது.
சேலம் டவுனில் பிறந்தவர் எம்.ஏ.வேணு. இவருக்கு ராதா, சுந்தரேசன் என இரு தம்பிகள். வீட்டிற்கு மூத்தபிள்ளை என்பதால் அவரது பெற்றோர் அதிக செல்லம் கொடுத்தனர். நல்ல கல்வியையும் கொடுக்க நினைத்தனர். ஆனால் வேணுவோ மூணாவது படிக்கும்போதே படிப்புக்கு முழுக்குப் போட்டார். மூத்த மகனால் மனம் கலங்கிய அவரது பெற்றோர், மற்ற மகன்களை நன்றாகப் படிக்கவைக்கும் முயற்சியில் இறங்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
மூணாவதோட படிப்பு நின்னு போச்சுன்னா என்னாகும்? சேரக்கூடாத சேர்க்கையெல்லாம் தேடிவரும். ஆகாத காரியமெல் லாம் அதுவா நடக்கும். அதுதான் வேணுவுக்கும் நடந்துச்சு. பத்து, பன்னிரெண்டு வயசுலேயே பகலில் ஊர் ’சுற்றியானார் வேணு. உடன் சுற்றியவர்களோ… இவரைப் போலவே படிப்புக்கு பால் ஊற்றியவர்கள், ஊதாரிகள். ராப்பொழுதுதான் வீட்டுக்கு வருவார் வேணு. இவரை நினைத்து வெறுப்பிலும் வேதனையி லும் கைபிசைந்து நின்றனர் பெற்றோர். ராப்பொழுது வீட்டுக்குள் நுழைந்ததுமே அடாவடியை ஆரம்பித்துவிடுவார் வேணு.
தம்பிகள் ரெண்டு பேருக்கும் சோற்றில் பருப்புடன் நெய் ஊற்றி பெற்றோர் பிசைந்து கொடுக்க, வேணுவுக்கு வெறும் சோறு, மோர், ஊறுகாய்தான். "ஏம்மா எனக்கு மட்டும் இப்படி?'’என வேணு கேட்டால்...… "ஆமா நீ கெட்டகேடுக்கு நெய் ஒண்ணுதான் கேடு. காலையில வீட்டைவிட்டுப் போற. கண்ட காலிப்பயலுகளோட சுத்திட்டு ராத்திரியானதும் வீட்டுக்கு வர்ற. ஒனக்கு வெறும் சோறும் மோருமே ஜாஸ்தி. இத திங்கிறதுன்னா தின்னு, திங்காட்டி போ'’என அம்மாவிடமிருந்து ஆவேச வார்த்தைகள் கொட்டும்.
"ஓஹோ…கதை அப்படிப் போகுதோ…. கொஞ்சோண்டு நெய் சோத்துக்கு இம்புட்டுப் பேச்சு, காலிப்பய பட்டம் வேற. நெசமாவே நாம காலிப்பயலாகிட்டா நெய் சோறென்ன, பால் சோறு, தேன் சோறே சாப்பிடலாம்...'’என மனசுக்குள் கணக்குப் போட்ட வேணு, பதினேழு, பதினெட்டு வயசுல உண்மையான ரவுடியாகவே மாறிவிட்டார்.
சேலம் நகரில் இவர் ஒரு ‘செலக்டிவ்’ ரவுடி. இதனால் பல சில்லறை ரவுடிகளும் வேணுவிடம் வந்துசேர, அவர்களின் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. வேணு ஆசைப்பட்டது போலவே விரும்பிய சோறும் சாப்பிட்டார், வேண்டாத வேலைகளையும் செய்ய ஆரம்பித்தார். இப்படியே நாலஞ்சு வருசம் போன நிலையில், ரவுடிகள் ராஜ்ஜியத்தின் மீது வெறுப்பு வந்து ஞானம் பெறுவதற்காக ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ என்ற போதி மரத்தின் கீழ் ஒதுங்கினார் வேணு.
அவ்வளவு சீக்கிரம் அந்த மரத்தின் கீழே உட்கார்ந்துர முடி யுமா? ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ அதிபர் டி.ஆர்.சுந்தரம் என்ன அம்புட்டு லேசுப் பட்ட ஆளா? லேசுல உட்கார விட்ருவாரா? மாடர்ன் தியேட்டர் ஸுங்கிறது மிலிட்டரி காம்பவுண்ட் மாதிரி. அதுல டி.ஆர்.எஸ். ட்ரில் வாங்கும் டிரெய்னிங் ஆபீசர். அங்கே என்ட்ரி யாகும் ஹீரோ -ஹீரோயின்களே சுந்தரத்தைக் கண் டாலே கப்-சிப்பாகி விடுவார்கள்.
ஆக்ஷனெல்லாம் சர்வாதிகாரி போல இருந்தாலும் அரவணைப்பில் சிறந்த ஜனநாயகவாதி என்பதால் மாடர்ன் தியேட்டர்ஸின் கடைநிலை ஊழியர்களிலிருந்து அங்கே சம்பளம் வாங்கும் ஹீரோ, ஹீரோயின்கள் வரை சுந்தரத்தின் மீது சுத்தமான மரியாதை வைத்திருந்தார்கள். இப்படிப் பட்ட ஜனநாயக சர்வாதிகாரி சுந்தரத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தார் வேணு. அதிகாலை மாடர்ன் தியேட்டர்ஸுக்குள் சுந்தரம் நுழைவதிலிருந்து இரவு வெளியேறும் வரையும் வெளியே காத்திருந்து ‘வாட்ச்’ பண்ணினார். அதன்பின் ஸ்டுடியோவின் வாட்ச்மேனிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து ஸ்டுடியோவுக்குள் சுந்தரத்தின் நடவடிக்கைகளையும் பக்காவாகத் தெரிந்துகொண்டார்.
இதையெல்லாம் சுந்தரமும் ‘வாட்ச்’ பண்ணாம இருப்பாரா?
"யாரு இவன், காலையிலேயே வந்து ஸ்டுடியோ கேட்ல நிக்கிறான். ராத்திரி நாம போற வரைக்கும் நிக்கிறான்'’என நினைத்தபடியே ஸ்டுடியோவுக்குள் போயிருப்பார் போல. போனதும் வாட்ச்மேனைக் கூப்பிட்டு விவரம் கேட்க, நடந்ததை வாட்ச்மேனும் சொல்ல... “"இப்ப அவன் அங்க நின்னுக்கிட்டிருந் தான்னா உடனே உள்ளே வரச்சொல்லு'’என உத்தவிட்டார் சுந்தரம்.
விழுந்தடித்து ஓடி வந்தார் வாட்ச்மேன். “"தம்பி உன்னை ஐயா கூப்பிடுறாரு'’என வாட்ச்மேன் சொன்னதுமே சிட்டாகப் பறந்து போய் சுந்தரத்தின் முன்னால் கைகட்டி நின்றார் வேணு.
ஏகப்பட்ட கேள்விகள், சோதனைகளுக்குப் பிறகு ஸ்டுடியோவில் தயாரிப்பு உதவியாளராக வேணுவுக்கு வேலை கொடுத்தார் டி.ஆர்.சுந்தரம். தனது சுறுசுறுப்பாலும், விசுவாசத்தாலும் தொழில் பக்தியாலும் விறுவிறுவென வளர்ந்து தயாரிப்பு மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார் வேணு. இன்னும் சொல்லப்போனால் டி.ஆர்.சுந்தரத்திற்கு அடுத்து ‘மாடர்ன் தியேட்டர்ஸில் வேணுதான் ட்ரில் மாஸ்டர், ’ஸ்ட்ரிக்ட்’ ஆபீசர். சுந்தரத்தைவிட வேணுவைப் பார்த்தாலே எல்லோருக்கும் வேர்த்துக் கொட்டிவிடும். அது ஆபீஸ்பாயாக இருந்தாலும் சரி, ஆகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, வேணு சொல்லுக்கு வேறு சொல் பேசக்கூடாது.
பாட்ஷாவாக இருந்து ‘மாணிக்கமாக மாறிய பின்புதான் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ தயாரிப்பில் கலைஞர் வசனத்தில் ‘"மந்திரிகுமாரி'’ மூலம் எம்.ஜி.ஆரை ஹீரோவாக்கினார் வேணு. குண்டலகேசி காப்பியத்தைத் தழுவி கலைஞர் வசனம் எழுதி பலமுறை அரங்கேறிய நாடகம் "மந்திரிகுமாரி'. தனது 25-ஆவது வயதில் கலைஞர் எழுதிய வசனங்களால் ‘"மந்திரிகுமாரி'’ நாடகம் மகத்தான சாதனை வெற்றி பெற்றது.
அப்போது எம்.ஜி.ஆர். சிறு, சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம். வேணுவைப் பார்க்க மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அடிக்கடி வருவார் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. அப்படி வரும்போதெல்லாம் “"தம்பி ராமச்சந்திரன் கதாநாயகனாகுறதுக்கு நீங்கதான் மனசு வைக்கணும்ணே'’என வேணுவிடம் கேட்டுக் கொண்டே இருப்பார் சக்கரபாணி.
ஒருநாள் வேணுவைச் சந்தித்த கவிஞர் கா.மு.ஷெரீப், "மந்திரி குமாரி'’நாடகத்தைப் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசிவிட்டு, “"நீங்களும் டி.ஆர்.சுந்தரமும் அந்த நாடகத்தைக் கண்டிப்பா பார்க்கணும்'’எனச் சொல்லிவிட்டார்.
வேணு இதைப் பத்தி சுந்தரத் திடம் சொல்ல, சுந்தரமும் சம்மதம் சொல்லிவிட்டார். நாடகம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் கா.மு.ஷெரீப். சுந்தரம், வேணு, கா.மு.ஷெரீப் ஆகிய மூவரும் நாடகத்தைப் பார்த்தனர்.
பார்த்து முடித்ததுமே கலைஞரைக் கூப்பிட்ட சுந்தரம், அதை சினிமாவுக்காக மாற்றி எழுதும்படி சொல்ல, அதன்பின் தயாரான "மந்திரிகுமாரி'யில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கினார் வேணு. சக்கரபாணியின் மனசெல்லாம் சந்தோஷம்.
முதன்முதலில் ஹாலிவுட் டைரக்டர் எல்லீஸ் ஆர்.டங்கனை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் டி.ஆர்.சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் பல படங்களை டைரக்ட் பண்ணினார் டங்கன். 1950 ஜூன் மாதம் வெளியான ‘"மந்திரிகுமாரி'தான் எல்லீஸ் ஆர்.டங்கனின் கடைசிப்படம். இதை சுந்தரமும் டங்கனும் சேர்ந்து டைரக்ட் பண்ணியிருந்தார்கள்.
ஒரு நாள்... சுந்தரத்தின் சுடு சொற்களால் சுரீரென கோபம் வந்துவிட்டது வேணுவுக்கு. அதுக்குப் பிறகு...?
(வெளிச்சம் பாயும்)
_________
நக்கீரன் ரீல்’-மோடிக்கு மெயில்
4-ஆவது அத்தியாயத்தில் மரவேலை செஞ்சுக்கிட்டி ருந்த ஒரு தொழிலாளியை டி.ஆர்.சுந்தரம் செருப்பால் அடித்ததை எழுதியிருந்தேன்லயா. கடந்த வாரம் அதே சேலத்திலிருந்து எனது செல்போனுக்கு வந்தவர், ‘"அய்யா என்பேரு பாலசுப்பிரமணியன். சுந்தரம் அய்யாவிடம் செருப்படி வாங்கியது நான் தான். அப்ப அவர் செஞ்ச காரியம் எனக்கு கோபத்தை ஏற்படுத்துச்சு. ஆனா ஆடம்பரம் பத்தி அவர் சொன்னது என் மனசுக்குள்ள மாற்றத்தை ஏற்படுத்துச்சு. ஆடம்பரத்தைக் குறைச்சு, அவசியத்திற்கு மட்டும் பணம் செலவழிச்சதால் என் பிள்ளைகளை நல்ல படியா படிக்க வச்சேன். இப்ப நிம்மதியா இருக்கேன்'’என்றார்.
இதேபோல் 7-ஆவது அத்தியாயத்தில் ‘திருவிளை யாடல்’ படத்தில் கடவுள் பரமசிவன் பாடும் "பாட்டும் நானே... பாவமும் நானே...' பாடலை கவிஞர் கா.மு.ஷெரீப் எழுதியதையும் படத்தின் இணைத் தயாரிப்பாளராக ஏ.எம்.ஷாகுல் ஹமீது என்பவர் இருந்ததையும் எழுதி, ‘இதான்யா தமிழ்நாடு’ என்பதை பதிவு செய்திருந்தேன்.
இதழ் வெளியான மறுநாளே மதுரையிலிருந்து தொடர்புகொண்ட வக்கீல் ஒருவர், “"அண்ணே நீங்க எழுதுனதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செஞ்சு பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பிச்சுட்டேன்'’என்றார். அந்த வக்கீல் இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ அல்ல.