தமிழகத்தின் முக்கியமான பெண் அரசியல் தலைவராக விளங்கும் தி.மு.க.வின் மகளிர் அணிச் செயலாள ரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை நக்கீரனின் சிறப்பு நேர்காணலுக் காக சந்தித்தோம்.
தி.மு.க.வின் முப்பெரும் விழாவை முன்னிட்டு நீங்கள் வெளியிட்ட காணொலியில், திராவிடம்கிறது ஒரு இயக்கம், எண்ணம் என்பதைத் தாண்டி அது ஒரு வாழ்க்கை முறை என சொல்லியிருக்கிறீர்கள். திராவிட வாழ்க்கை முறை என்றால் என்ன?
எந்த ஒரு கருத்தியலும் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கை முறையாகத்தான் மாறுது. கேப்பிடலிசமாக இருந்தாலும், சோசியலிசமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாழ்க்கை முறையாக மாறவேண்டும்; அரசியலமைப்பாக மாற வேண்டும் என்பதுதான் அந்த கருத்தியலின் அடிப்படை. திராவிடம் என்பது சமூக நீதி, சமத்துவம், எல்லோருடைய வாழ்க்கை நெறிமுறைகள், அரசியலை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதனால்தான் திராவிடம்கிறது வெறும் நிலப்பரப்பினை சார்ந்தது மட்டுமல்ல; அதைத்தாண்டி அது ஒரு வாழ்வியல் முறை என்கிறோம்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வளர்த்த திராவிடம், இன்றைக்கு உங்களிடமும் உங்கள் சகோதரர் (மு.க.ஸ்டாலின்) கைகளிலும் வந்துள்ள நிலையில், இன்றைய இளைஞர்களிடம் அதை எப்படி கொண்டுசெல்லப் போகிறீர்கள்?
சித்தாந்தமும், கருத்தியலும் யாருடைய கைகளுக்குள்ளேயும் வந்துவிடு வது கிடையாது. சமூக நீதி, சுய உரிமை பேசிய பெரியார்கூட, திராவிடம் தனது கைகளுக்குள் இருப்பதாகச் சொல்லவில்லை. சமத்துவம் பேசிய அம்பேத்கரும் தங்களின் கருத்தியல் தனது கைகளுக்குள் இருப்பதாக சொல்லவில்லை. அது மக்கள் இயக்கம். அவர்கள் முன்னெடுத்துச் செல்லக் கூடிய விசயம். அதற்கு தூண்டுகோலாக இயக்கத்தின் தலைவர்கள் இருக்கமுடியும். அதனை நெறிப்படுத் தக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இருக்கமுடியுமே தவிர, மற்றபடி அது மக்களிடமும் எதிர்கால தலைமுறையினரிட மும்தான் இருக்கிறது. அந்த வகையில், அவைகளை நிறைவேற்றக்கூடிய, செய லாக்கக்கூடிய, சட்டமியற்றக்கூடிய இடத்தில் முதல்வர் தளபதி இருக்கிறார். அதனை செய்துகொண்டுமிருக்கிறார்.
அப்படியானால் திராவிடம் புதிய பரிணாமத்தை அடைந்திருக்கிறதா? அதன் தேவை இருக்கிறது என உணர்கிறீர்களா?
எந்த ஒரு விசயமாக இருந்தாலும் காலத்தின் போக்கில் தேங்கிவிடக் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பற்றி தெரியாமல் இருந்தது. இன்றைக்கு ஆதாரங்களோடு அதன் தொன்மையைப் பெருமையாக பேசுகிறோம். பெருமை என்பதைத் தாண்டி அறிவியல் ஆதாரங் களோடு பேசுகிறோம். அதேபோலத்தான் ஆதிச்சநல்லூராகட்டும், சிவகளை ஆகியவையும். 50 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகளை, திருநம்பிகளை, மாற்றுத்திறனாளிகளை பற்றி யாரும் பேசவில்லை. தலைவர் கலைஞர்தான் அவர்களைப் பற்றிப் பேசினார். எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது புதிய பரிணாமத்தை அடைவதும், அதன் தேவைகள் இருப்பதும் இயல்பானது தான்.
சட்டமன்றத் தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் உங்களின் பிரச்சாரத்தை பார்க்க முடிந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் உங்களை பார்க்க முடியவில்லையே?
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அனைத்து செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு தேர்தல் பணி செய்திருக்கிறேன். அதேபோல, புதிதாக பிரிக்கப்பட்ட தென் மாவட்டங்களிலும் நடந்த செயல்வீரர் கூட்டங்களில் கலந்துகொண்டும், மாவட்ட மக்களை சந்தித்தும் பேசியிருக்கிறேன்.பொதுவாக, உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அந்தந்த பகுதியிலுள்ள தி.மு.க.வினர் கவனித்துக்கொள்கிறார்கள். பொறுப் பாளர்களும் நியமிக்கப்பட்டதால் அவர்களும் கவனித்துக்கொள்வார்கள்.
சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அந்த சான்றிதழ் கிடைக்கச் செய்கிறீர்கள்; மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு உதவி செய்து மீட்கிறீர்கள். இந்த தகவல் களெல்லாம் ஆட்சியாளர்களுக்கு கிடைப்பதற்கு முன்பே உங்களுக்கு கிடைக்கிறதே, எப்படி?
ஊடகங்களில் பதிவாகும் செய்திகள் மூலமாகவும், எனது போன் நெம்பர் எல்லோரிடமும் இருப்பதால் பலரும் என்னை தொடர்புகொண்டு சொல்வதன் மூலமாகவும் தகவல்களை பெற முடிகிறது. இதைத்தாண்டி, பத்திரிகை நண்பர்கள், தொகுதி மக்கள் என பலரும் என்னிடம் தெரிவிக்கிறார்கள். அதனால், இதற்காக தனியாக எந்த வழிமுறைகளும் கிடையாது.
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நீங்கள், சமீபத்தில் கூட உங்கள் தொகுதிக் குட்பட்ட மறுவாழ்வு முகாம்களில் ஆய்வு செய்து அவர்களின் பிரச்சினைகளை முதல்வரிடம் எடுத்துச் சென்று தீர்வு கண்டிருக்கிறீர்கள். அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என தி.மு.க. அரசு மாற்றியது உள்ளிட்ட மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
முகாம்களில் நான் மட்டுமல்ல; கலைஞர் ஆட்சியின்போதே ரவிக்குமார் போன்றவர்கள் ஆய்வு நடத்தி அவர் களின் பிரச்சினைகளை கொண்டு சென்றுள்ளனர். முகாம்களில் உள்ள மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக் கிற இயக்கம்தான் தி.மு.க. அந்த வகையில் என் தொகுதியிலுள்ள முகாம்களை ஆய்வு செய்து அந்த மக்களின் பிரச் சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வது எனது கடமை. முகாம்களுக்கு அவர்கள் வந்து எவ்வள வோ நாட்கள் ஆயிடுச்சு. குடும்பம் பெரிதாகிவிட்டது. நிறைய பிரச்சினை களை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளை அறிந்த முதல்வரும் கவனம் செலுத்தி, அதிகாரி களுடன் விவாதித்து முகாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காகவும் சட்ட மன்றத்திலேயே பல அறிவிப்புகளை செய்தார்கள். இதுநாள்வரை அவர்கள் தவித்த வாழ்க்கை முறைகளுக்கு ஒரு தீர்வை முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில் நீங்கள் நடத்திய "சென்னை சங்கமம்', மறைந்து கொண்டிருந்த பல கலைகளுக்கு உயிர் தந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்திருக்கும் சூழலில், மீண்டும் "சென்னை சங்கமம்' நடத்தும் திட்டம் இருக்கிறதா?
முதலமைச்சரிடம் இதுபற்றி நிச்சயம் பேசுவேன். கோவிட் காலகட்டமென்பதால் இந்த வருடம் அது சாத்தியமான்னு தெரியலை. அடுத்த ஆண்டு நடத்துவதற்கு நிச்சயம் முயற்சிப்பேன்.
தி.மு.க. என்கிற மிகப்பெரிய இயக்கத்தின் மகளிர் அணி செயலாளராக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
இந்தி எதிர்ப்பு காலகட் டத்திலேயே தி.மு.க.வைச் சேர்ந்த பெண் கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை மறுதலித்துவிட முடியாது. ஆனால், அரசியலில் அதற்கான அங்கீகாரமும் இடமும் கிடைத்திருக்கிறதா என்றால் இன்னும் இல்லை. அப்படிப்பட்ட பெண்களுக்காக உழைக்கும் வாய்ப்பாகத்தான் இந்த பதவியைப் பார்க்கிறேன்.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக் கீட்டிற்காக நாடாளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்துக்கொண்டுதானிருக்கிறீர்கள். ஆனால், அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடிய வலிமையான விசயங்களை தி.மு.க. எடுக்கவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ராஜ்யசபாவில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டபோது அதனை நிறைவேற்று வதற்கு முழுமையாக ஆதரித்து வாக்களித்தது தி.மு.க. டெல்லியில் மிகப்பெரிய பேரணியை இதற்காக தி.மு.க. நடத்தியிருக்கிறது. தி.மு.க.விடம் மெஜாரிட்டி இருந்தால் நிச்சயம் நிறைவேற்றியிருக்க முடியும். ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறது. இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாதுன்னு பா.ஜ.க.வும் சொல்லிட முடியாது. ஆனாலும் இது நிறைவேறாமல் இருப்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இந்த விசயத்தில் 25 ஆண்டுகளை கடந்து விட்டோம். ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை நக்கீரன் மூலமாகவும் வைக்கிறேன். பெண்களின் அரசியல் ஈடுபாடு எல்லா இயக்கத்திலும் இருக்கும் நிலையில் இந்த சட்டம் நிறைவேறுவது அவசியம்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது தி.மு.க. எடுக்கும் வலிமையான உரிமைப் போராட்டங் களையும் பிரச்சினைகளையும் ஆளும்கட்சியாக வரும்போது மென்மையாக கையாளுகிறது என்கிற குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்? குறிப்பாக நீட் தேர்வு?
நீட் தேர்வு கோர்ட்டில் இருக்கக்கூடிய விசயம். அந்த வழக்கைக்கூட அ.தி.மு.க. அரசு ஒழுங்காக நடத்தவில்லை. வழக்கை முறையாக நடத்தி நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். நீட் தேர்வுக்கு எதிரான ஒத்த கருத்துடைய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் தளபதி. நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையையும் எல்லா முதல்வருக்கும் கொடுக்க வைத்திருக் கிறார்கள். அதனால், ஆட்சிக்கு வந்ததும் வலி யுறுத்தி வந்த விசயங்களையெல்லாம் விட்டு விட்டோம் என்பது கிடையவே கிடையாது. ஆனால், ஒரேநாளில் முடித்துவிடுவோமா என்றால் நிச்சயம் முடியாது. சில பிரச்சினைகளில் சட்ட சிக்கல்கள் இருக்கலாம்; தடைகள் இருக்கலாம். ஆனால் வலியுறுத்தி வந்த பிரச்சினைகளில் வெற்றி பெறுவோம். சட்டப் பிரச்சனைகளை சட்டத்தின் வழியாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இட ஒதுக்கீடு கொள்கையில் தி.மு.க.வின் போராட்டங்களும் சாதனைகளும் முக்கியமானவை. அந்த வகையில் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதனை தி.மு.க. எப்படி சரிசெய்யப் போகிறது?
அ.தி.மு.க ஆட்சியில் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட கடைசி நிமிட சட்டம் இது. ஆனால், எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆரம்பித்தால் பல தடைகளை சந்திக்கக்கூடிய சூழல்கள் உருவாகிவிடுகிறது. எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் உளப்பூர்வமான உழைப்பு, இருக்கும் சட்டச் சிக்கல்களை களைந்து கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பது நீதிமன்ற தடையால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதை சரி செய்யக் கூடிய எல்லா முயற்சிகளையும் தி.மு.க. அரசு எடுக்கும். மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு விசயத்தையும் சரிசெய்து நிறைவேற்றுவார்.
இன்னும் இரண்டு வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இது குறைந்த காலம்தான். இந்த நிலையில், மோடி அரசை வீழ்த்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இல்லை. ஒன்றிணைவதில் தடைகள் இருக்கின்றன. மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட ஸ்டாலின் முயற்சி எடுப்பாரா?
எதிர்க்கட்சிகளிடத்தில் ஒற்றுமையில்லை என்பதை நான் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் பல பிரச்சனைகளின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்துள்ளன. ஒன்றாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறோம். தேர்தல் அரசியலில் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணிகள் வலிமையாக உருவாகும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகள் சாத்தியப்படும். கருத்தியல் ரீதியாக ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டுகுகொண்டுதான் இருக்கிறார்கள்.
உங்களின் அரசியல் ஆசானாகவும் குருவாகவும் இருந்தவர் கலைஞர். அவர் இல்லாத சூழலில் உங்களின் வாழ்க்கை எப்படி நகர்கிறது?
தலைவர் இல்லைங்கிறது நிரப்ப முடியாத ஒரு வலியை, உணர்வைத்தான் தருகிறது. ஆனால், காலம்கிறது அதை ஏற்றுக்கொண்டு அதனைத் தாண்டிச் செல்லவேண்டிய கட்டாயத்தையும் உருவாக்குது. பல நேரங்களில் தலைவர் கலைஞர் இப்படிப்பட்ட சூழலை எப்படி கையாண்டிருப்பார்? அவருடைய வழி என்னவாக இருந்திருக்கும்? அப்படி சிந்தித்துதான் இயக்கமும் நாங்களும் இயங்குகிறோம்.
-சந்திப்பு: இரா.இளையசெல்வன்
படங்கள்: ஸ்டாலின்