பெண்களின் சமூக உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளில், சமூக சிந்தனையாளர்களின் போராட்டங்களும், சட்டங்களும், மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய விவாகம் ஒழிப்பு, பெண்களுக்கான சொத்துரிமை எனப் பெண்களின் உரிமைக்கான பல்வேறு மைல்கற்களைக் கடந்துவந்திருக்கிறோம். சமீபத்தில் வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பளிக்கும் விதமாக, பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டு, அதில் மத்திய அரசின் கருத்துக்களைக் கேட்டுள்ளது.
அவர்கள் அளித்துள்ள உத்தரவுகளில் முக்கியமான சில... 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாகப் பார்க்க முடியாது. பாலியல் தொழிலும் ஒரு ப்ரொபஷனல்தான், ஆனால் பாலியல் கூடங்களை நடத்துவது சட்டவிரோதம். ரெய்டு செய்யும்போது பாலியல் தொழிலாளிகளைக் கைது செய்வதோ, அபராதம் விதிப்பதோ, அவர்களைத் துன்புறுத்துவதோ கூடாது. இதுகுறித்து காவல்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபட்டு, கைதாகும் பெண்களின் அடையாளம், பெயர், புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிடக்கூடாது. பாலியல் தொழிலாளியிட மிருந்து அவரது குழந்தையைப் பிரிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளிகள் தரும் பாலியல் வன்கொடுமைப் புகார்களைப் புறந்தள்ளக்கூடாது. அவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்கவேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி பாலியல் தொழிலை அங்கீகரிப்பது, இத்தொழில் மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமையுமோ என்ற கேள்வியை பரவலாக எழுப்பியுள்ளது. அதேவேளை, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், மறைமுகமாக ஈடுபட்டு வருவதால், இதில் ஈடுபடும் பெண்களை காவல்துறையினர் மிரட்டி, தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. அத்தகைய முறைகேட்டுக்கு தற்போது நீதிமன்றம் கடிவாளம் போட்டிருக்கிறது. அதேபோல, பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்கும் பெண்களுக்கும் சட்டப்பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இதில் முக்கியமான ஓர் அம்சம், ரெய்டில் கைதாகும் பெண்களின் விவரங்களை வெளியிடுவதைத் தடுப்பதன் மூலம், அவர்களின் குழந்தைகள், உறவினர்கள், இச்சமூகத்தால் இழிவுபடுத்தப்படுவதைத் தடுக்க முடியும்.
நீதிமன்ற உத்தரவின் சாதக பாதகங்கள் குறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறுகையில், "பாலியல் வணிகத்தைப் பொறுத்தவரை, வேறு வழியில்லாமல் தள்ளப்படும் பெண்கள்தான் இதில் ஈடுபடுகிறார்கள். பாலியல் வணிகத்தில் ஈடுபடும் பெண்களிடம் காவல்துறை, வன்முறையைப் பிரயோகித்து மிகவும் மோசமாக நடந்துகொள் கிறது. பாலியல் வணிகத்தின் பின்னணியில், தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள், புரோக்கர்கள் எனப் பெரிய வளையம் இருக்கிறது. ஆனால் காவல்துறையின் கைது நடவடிக்கையில் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. இதில் ஈடுபடக்கூடிய பெண்களை மட்டுமே கைது செய்கிறார்கள். இப்படி, பாலியல் வணிகத்தில் ஈடுபடும் பெண்களை மட்டுமே கைது செய்யக் கூடாது, துன்புறுத்தக்கூடாது என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறோம்.
பாலியல் வணிகத்தை தொழிலாகப் பார்ப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இதில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்குள் சங்கம் வைத்து, தங்களுக்கு எதிரான தொந்தரவுகளிலிருந்து பாதுகாப்பைத் தேடிக்கொள்வதில் சிக்கல் இல்லை. இதில் தள்ளப்பட்டவர்களை மீட்டெடுத்து, மாற்று ஏற்பாடு செய்துகொடுப்பது குறித்து ஏற்கெனவே கோரிக்கைகளாக வைத்துவருகிறோம். அப்படியான சூழலில், இதனைத் தொழிலாக அங்கீகரிப்பது, அவர்களை மீட்டெடுப்பதற்குப் பாதகமாகக்கூடும்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான மருத்துவ வசதி யை அளித்தல், அவர்களைக் கைது செய்யும்போது வன்முறையைக் கையாளக் கூடாது, கண்ணியமாக நடத்த வேண்டும், அது குறித்து காவல்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற நீதிமன்றக் கருத்துக்களை ஆதரிக் கிறோம். அனைத்து மக்களின் பொருளாதார மேம்பாடு, நாட்டின் வளங்களை அனைவருக்கும் சொந்தமாக்குவது, தரமான கல்வி, வேலைவாய்ப்பு, வருமானத்தை உருவாக்குவது போன்றவற்றில் மேம்பாடு கண்டால்,பாலியலில் ஈடுபடுவது குறையும். எனவே நீதிமன்றங்கள் இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடும் பார்க்க வேண்டும்" என்றார்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நலனுக்காகப் போராடிவரும் சமூக ஆர்வலர் மதுமிதா இதுகுறித்து கூறுகையில், "சந்தர்ப்ப சூழ்நிலைதான் இந்த தொழிலுக்குள் பெண்களைத் தள்ளுகிறது. இதில் ஈடுபடும் பெண்களுக்கு ரவுடியிசம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பாலியல் சுகத்துக்காக கஸ்டமர் போல வந்து, பெண்கள் அணிந் திருக்கும் நகைகள், செல்போன்கள், பணம் என அனைத்தையும் மிரட்டி பிடுங்கிக்கொள் கிறார்கள். இதில் ஈடுபடும் பெண்கள், காவல்துறையில் புகாரளிக்கத் தயங்குவார்கள் என்ற காரணத்தால்தான் துணிந்து இப்படிச் செய்கிறார்கள். அதேபோல், காவல்துறையினர் இப்பெண்களைக் கைது செய்யும்போது மிகவும் தரக்குறைவாகப் பேசுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவதில் ஈடுபடுகிறார்கள். தற்போது தனிநபர் பாலியலை அங்கீகரிப்பதாக நீதிபதிகள் கூறியிருப்பது, இதில் தள்ளப்பட்ட பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பளிப்பதாக உள்ளது'' என்றார்.
பாலியல் தொழிலைப் பொறுத்த வரை, அந்த நெட்வொர்க்கின் அடிமட்டத்தி லிருக்கும் பெண்கள் மட்டுமே திட்டமிட்டு குற்றவாளியாகக் காட்டப்படுகிறார்கள். சமூகத்தின் பார்வையும், தேவையும் மாறாத வரை, இந்த உத்தரவுகள், இத்தொழில் சார்ந்த பெண்களுக்கு ஆறுத லான ஒன்றாக அமையும்.