"கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்' என்பார்கள். ரஃபேல் விவகாரத்தில் அதிகார உச்சத்திலிருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்திருக்கிறது. முதல்கட்ட தேர்தல் தொடங்கி விட்ட நிலையில், புதிய ஆவணங்களை ஏற்றுக்கொண்டு ரஃபேல் விவகாரத்தில் மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் முடிவெடுத்திருப்பது பா.ஜ.க.வுக்கு பின்னடை வாக மாறியுள்ளது.
கடந்த 2014-ல் காங்கிரஸ் பதவியிறங்க, பா.ஜ.க. பதவிக்கு வந்தது. கடந்த ஆட்சியில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட ரஃபேல் கொள்முதலுக்கான பேச்சுவார்த்தையை ரத்துசெய்துவிட்டு, பிரான்ஸ் சென்றிருந்த மோடி தலைமையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெட் நிறுவனத்தைக் கழட்டிவிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொண்டதில் தொடங் கிய விமர்சனம், மெல்ல மெல்ல ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக விஸ்வரூபமெடுத்தது.
பழைய ஒப்பந்தத்தில் 126 ஆக இருந்த விமானங்கள் மோடி மேற்கொண்ட ஒப்பந்தத் தில் 36 விமானங்கள் ஆனதும், விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கு ரிலை யன்சுக்கு 30,000 கோடி ஒப்பந்தம் வழங்கப் பட்டிருப்பதும், பழைய ஒப்பந்தத்தைவிட புதிய ஒப்பந்தம் ரூ 58,000 கோடி அதிகரித்திருப்பதும் கவனத்துக்கு வந்தன. கூடவே பாதுகாப்புத் துறைக்கான தளவாட கொள்முதலுக்கான விதிமுறைகளும் மத்திய அரசால் வளைக்கப் பட்டிருப்பதும் மீள மீள ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டன.
இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். விலைவிவரங்கள் உள்ளிட்டவை தேசப்பாதுகாப்புடன் தொடர்புடையது என திரும்பத் திரும்ப மத்திய அரசு வலியுறுத்திய தால், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவரங்களை மூடி உறையிலிட்ட கவரில் தாக்கல்செய்ய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். வழக்கை விசாரித்த பின், 2018, டிசம்பர் 14-ஆம் தேதி எந்த முறைகேடும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
"ரஃபேல் விமான விவரங்களை மத்திய தணிக்கைக் குழுவிடம் அளித்துவிட்டோம். அதனை பாராளுமன்ற தணிக்கைக் குழு அங்கீகரித்துவிட்டது' என உச்சநீதிமன்றத்துக்கு அளித்த விவரங்களில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால் பாராளுமன்ற தணிக்கைக் குழுவோ, ரஃபேல் விமான விலை தொடர்பாக எந்த விவரமும் சி.ஏ.ஜி.யால் அளிக்கப்படவோ, அதை தாங்கள் அங்கீ கரிக்கவோ செய்யவில்லையென மறுத்து அறிக்கைவிட்டது.
மேலும் மத்திய அரசு கோரியிருந்த விவரங்களையும் மூடி உறையிலிட்ட கவரில் அளிக்கவில்லை என சர்ச்சையெழ, அதேசமயம் தி இந்து பத்திரிகையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகள் வெளியாகத் தொடங் கின. மத்திய அரசு பதறியடித்துக்கொண்டு "இந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டவை. இதை வெளியிட்டதால் அஃபிஷியல் சீக்ரெட் ஆக்ட்-டின்கீழ் தி இந்து பத்திரிகையின்மேல் நடவடிக்கை எடுக்கலாம்' என மிரட்டல் விடுத்தது.
அதைத்தொடர்ந்து யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டுமென மனு கொடுத்தனர். ரஃபேல் விவகாரத்தில் புதிய சான்றாதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு வழக்கறிஞரிடமிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
முதலில் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் திருடப் பட்டதாக வாதிட்ட தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பின் அவை திருடப் படவில்லை பாதுகாப்புத் துறை ஆவணங் களிலிருந்து நகலெடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார். கசியவிடப்பட்ட ரகசிய ஆவணங்களைக் கொண்டு மறுசீராய்வு மனு தாக்கல்செய்யப்பட்டிருப்பதால், தேசநலனுக்கு ஆபத்து எனவும் இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 123-ன் கீழும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) (ஏ) படியும் ஆதாரங் களாக பரிசீலிக்கப்பட முடியாதெனவும் வாதங்களை முன்வைத்தார்.
எனினும் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி கே.எம். ஜோசப் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மீண்டும் விசா ரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் விசா ரணை தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என ஒருமித்த தீர்ப்பளித்தனர். "ரஃபேல் விமானத்தின் விலை மட்டுமின்றி, இந்திய பங்குதாரர்கள் தேர்வுசெய்யப்பட்ட நடைமுறை குறித்தும் ஆய்வுசெய்யப்படும்' எனவும் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்துக்கு தமது தீர்ப்பில் பதிலளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், “""அதிகாரப்பூர்வ ரகசிய சட்டமோ அல்லது வேறெந்த சட்டமோ ஊடகங்கள் இத்தகைய ஆவணங்களை பதிப்பிப்பதையோ, நீதிமன் றங்கள் அவற்றை ஆய்வுசெய்வதையோ தடுக்கவியலாது''’என்று ஊடகங்களின் சுதந்திரத்தை தன் தீர்ப்பில் வலியுறுத்திப் பேசினார்.
மோடியின் நிர்வாகம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியிருக்கிறது, ரஃபேல் விவகாரம். சேதார விவரங்கள் தேர்தலுக்குப் பின்புதான் தெரியவரும்.
-க.சுப்பிரமணியன்